வலிமை அற்ற எந்த ஒரு உயிர் ஒன்று தன் வாழ்க்கையைச் சாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள போறாடுகிறதோ அந்த உயிரின் இனப்பெருக்கம் பலமடங்கானது. வேட்டையாடும் வலிமை மிக்க உயிரினமோ பரிணாமத்தில் அழிந்து காணாமல் போய் விடுகிறது. மற்றொரு உயிரை கொன்றழித்து அதனை உண்டு வாழ வேண்டிய அவசியம் உள்ள உயிர்கள் உண்மையில் பரிதாபமானவைகள். வேட்டையாடப்பட்டு உணவாக உட்கொள்ளப்படும் உயிரினங்கள் ஒரு வகையில் அச்சமூட்டக்கூடிய பலுகிப் பெருகும் உயிர்கள். வலிமை மிக்கவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறவர்கள், அதிகாரம் மிக்கவர்கள் என்று பெரும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறவர்கள் பரிணாமத்தின் பெரும் பாதையில் தங்களுக்கான சுவடே இல்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். எளியவர்களும் வலிமைக் குறைந்தவர்களும் பரிணாமத்தின் முடிவு எல்லை வரை தொடர்ந்து பயணிக்கிறார்கள். உயிர் ஒன்று தாக்குதலுக்கு இலக்காகும் போது அது தன்னளவில் உயிர் தப்பி தொடர்ந்து வாழ்வதற்கு தன்னை தயார் செய்து கொள்கிறது. மேலும் அது இனப் பெருக்கத்தில் வளமிக்கதாகவும் ஆகிவிடுகிறது. பெருமாள் முருகனின் பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை மேற் சொன்ன பரிணாமம் பற்றின கருத்துக்கு முற்றிலும் பொருந்திப் போகிற கதை என்றாலும் அதற்கு ஆதாரமாக இருக்கிற பெருங்காமம் பற்றின கதை இந்த நாவல் என்று சொல்லலாம்.
காமத்தைப் பற்றி பேச முற்படும் மொழி கவிதை மொழியாக நம்மிடையே
அறியப்பட்டிருக்கிறது. அவ்வளவு எளிதில் அதனை மொழி கொண்டு பேசிவிட முடியாது. கொஞ்சம்
பிசகினாலும் மொழி ஆபாசமகிவிடும். காமம் முற்றிலும் அகம் சார்ந்த விசயம். அதற்கென்று
குறிப்பிட்ட மொழி ஒன்று தேவைப்படுகிறது. அது அசுத்தம் கலவாத கவிதை மொழி என்று சொல்லலாம்.
உரைநடையில் அதனை பேசு பொருளாக எடுத்துக் கொள்ளும் போது அது மிகவும் சிக்கலான காரியம்.
உரைநடை நமக்கு அருகில் இருக்கிற மிகவும் பரிச்சயப்பட்ட வாழ்க்கையை புனைவாக்குகிறது.
அதில் காமத்தை பேசு பொருளாக வைத்தால் தற்போது அதற்கு என்ன அர்த்தம் இருக்கிறதோ அதுவே
ஆபாசமாக காட்டப்படும். காமத்தை கவித்தும் நிறைந்த மொழியில் காட்ட அல்லது கவித்துவமாக
காட்ட நம் அருகில் இருக்கும் வாழ்க்கைக்கு சற்று விலக்கி தூர எடுத்துச் சென்று நாம்
அறியாத காலம், நிலம், மனிதர்கள் என்று வேறொரு உலகத்தில் அதனை வைத்து புனைவாக்க வேண்டியிருக்கிறது.
இதனை பூனாச்சி நாவலில் பெருமாள் முருகன் “புறம் கண்டே அதிசயம் என்கிறார்கள். அகம் கண்டு
அதிசயம் கொள்வது அத்தனை சுலபமா?” (134) என்று கேட்கிறார். புற வாழ்க்கையை கதையாக கட்டமைப்பது
எளிது அதில் அதிசயம் இல்லை. அக வாழ்க்கையை கவிதைப்படுத்துவதுதான் அதிசயம். அதிலும்
அக வாழ்க்கையை உரைநடைக்குள் புனைவாக கட்டமைப்பது அதிசயத்திலும் பெரிய அதிசயம். பூனாச்சி
அக வாழ்க்கையின் ஓர் அதிசயக் கதை.
புரட்சி பாடிய கவிஞன் ஒருவனை குயிலின் இசையையும் கடலின் ஓசையையும்
பாட ஏதோ ஒன்று உந்தி தள்ளியது போன்று பெருமாள் முருகனை புற வாழ்க்கையை நாவலில் புனைவாக்கும்
தேர்ச்சியில் இருந்து அக வாழ்க்கையின் அதிசயத்தை கட்டமைக்கும் கலை நயத்திற்கு புற சூழலில்
இருந்து வந்த எதோவொரு தாக்குதல் அவரை உந்தித் தள்ளியிருக்கிறது. இந்த நாவலில் அகத்தைக்
கட்டமைக்க அவருக்கு யதார்த்தத்தின் மனிதர்கள் தேவை இல்லை, வான் வாழ் தேவர்கள் அவசியம்
இல்லை. அசுரர்களும், ஆடு ஒன்றும் போதுமானது. நமக்கு அளிக்கப்பட்ட அகப்பாடல்களில் இருப்பது போல பூனாச்சியின் காலமும், மனிதர்களும், இடமும்
நம்முடைய நடைமுறையில் இருக்கிற புற உலகின் காலமோ, மனிதர்களோ, இடமோ இல்லை. அது புறத்தில்
நாம் மிகவும் பரிட்சயப்பட்ட வாழ்க்கையின் defamiliarization. இந்த
defamiliarization புறத்திற்கு அவசியம் இல்லை. பூனாச்சிக்கு அது மிகவும் அவசியப்படுகிறது.
ஏனெனில் பூனாச்சி அகவாழ்க்கையின் அதிசயம்.
மேலோட்டமாக இக்கதையை வாசித்தால் அது ஒரு வெள்ளாட்டின் கதை.
சற்று நுணுகி வாசித்தால் அதிகாரம் செலுத்தும் அதிகாரவர்க்கத்தை நய்யாண்டி செய்யும்
கதை. இதனை நாவலின் கதை அளவில் அதன் உள்ளடக்கமாகவும் அதன் குறிப்புணர்த்தும் செய்திகளாகவும்
வாசிக்கலாம். கதை கட்டமைப்பில் பெருமாள் முருகன் நாவலில் பெரும் அதிசயம் ஒன்றை நிகழ்த்துகிறார்.
அந்த அதிசயம் மனித மொழியை பூனாச்சியின் மொழியாக கதையில் புனைந்திருப்பதுதான். மனிதர்கள்
பூனாச்சியோடு உரையாடுகிறார்கள் அதனை புரிந்து கொள்கிறார்கள். பூனாச்சியும் அவர்களின்
மொழியைக் கொண்டு அவர்களுடன் உரையாடுகிறது. வாசிப்பவருக்கும் இருவரின் உரையாடல் நன்கு
புரிகிறது. புனைவு நுட்பத்தில் மொழியில் நடத்தும் இந்த அதிசயம் வைக்கம் முகமது பஷீருக்கு
இணையான சாதனை (பாத்துமாவின் ஆடு) என்று சொல்லலாம்.
புனாச்சியை குடியானக் கிழவன் ஒருவனிடம் நெடிந்துயர்ந்த அசுரன்
ஒருவன் பாதுகாப்பாக வளர்க்கும் படி வரமாகக் அதனை கொடுக்கிறான். பூனாச்சி ஏழு குட்டிகள்
ஈனும் வகையை சார்ந்த ஆடு. அவனுடைய ஆடு கடைசியாக ஈன்ற ஏழாவது குட்டிதான் பூனாச்சி. அதனால்
இந்த பூனாச்சியும் ஏழு குட்டிகள் ஈனும். அதனை வளர்க்கவோ விற்கவோ அவனால் முடியவில்லை.
மனதில்லை என்று சொல்ல வேண்டும். கடைசியாக குடியானக் கிழவனிடம் கொண்டு வந்து கொடுக்கிறான்.
கொடுக்கும் போதே அதன் சிறப்பைப் பற்றி சொல்கிறான் அசுரன். சாதாரணமாக வெள்ளாடு ஏழு குட்டிகள்
ஈனாது. மிஞ்சி போனால் ஐந்து குட்டிகள். ஆறு ஈன்றால் அதுவே அதிசயம். ஏழு குட்டிகள் ஈன்றால்
அது அசுர வித்தாகத்தான் இருக்க முடியும். செம்மறி ஆடு ஒரு ஈற்றுக்கு ஒரு குட்டி மாத்திரம்
தான் ஈனும். வெள்ளாடு அப்படி அல்ல. வெள்ளாடு
எண்ணிக்கையில் அடங்காமல் பலுகிப் பெருகும் உயிர். காரணம் அது இறைச்சிக்கும், பலிக்கும்,
வேட்டை விலங்குகளின் பசிக்கும் எப்போதும் தங்கள் உடலை தத்தம் செய்து கொண்டே இருக்கின்றன.
அசுரர்கள் எப்போதும் கொல்லப்படுவது போன்று.
பூனாச்சியைக் கொண்டு வந்து கொடுத்த நெடிந்துயர்ந்த மனிதன்
யார் அவன் எங்கிருந்து வந்தான் என்பது எதுவும் கிழவனுக்கு தெரியாது. அடையாளமற்ற அந்த
நெடிந்துயர்ந்த மனிதனை கிழவன் பகாசூரன் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறான். பூனாச்சி
பகாசூரனால் கிழவனுக்கு அளிக்கப்பட்ட ஒரே ஈற்றில் ஏழு குட்டிகள் ஈனும் வரம். வீட்டில்
பூனாச்சி கிழவனின் செல்ல மகளாக வாழ ஆரம்பிக்கிறாள். புழுவைப் போன்ற மிகச்சிறிய பூனாச்சியை
வளர்க்க கிழவனும் கிழவியும் படாத பாடு படுகிறார்கள். மற்ற ஆடுகள் அதற்கு பால் கொடுக்க
அருகில் அண்ட விடுவதில்லை. அந்த சின்ன ஜீவனுக்கு பால் தான் சரியான ஆகாரம். அதற்கு இப்போது
வாய்ப்பு இல்லை. சீக்கிரத்தில் பூனாச்சி சரியான ஆகாரம் இல்லாமல் செத்துப் போய்விடும்
என்று எல்லோரும் சொல்கிறார்கள். பகாசூரன் கொடுத்த வரத்திற்கு ஏது சாவு. வளர்ந்து தானாக
புற்கள் தழைகள் சாப்பிடும் வரை அதனை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். கிழவியின் பராமரிப்பில் பூனாச்சி எப்படியோ பாலுண்ணும்
குட்டியாக இருந்து பிழைத்துக் கொண்டு பருவமடைந்த மேய்ச்சல் ஆடாக வளர்ந்துவிடுகிறாள்.
பருவமடையும் பூனாச்சியைக் கொண்டு இந்த நாவல் காமத்தின் வகைமைகளையும்
அது நிகழ்தேறும் நில அமைப்புளையும் அது சார்ந்த பொழுதுகளையும் கதையாக கட்டமைக்கிறது.
பூனாச்சி பருவமடைந்த பின்பு அதன் காமத்தின் தேவையை உணர்ந்த கிழவன் பெரும் ஆட்டு மந்தைக்கு
சொந்தக்காரனிடம் சாசுக்கு கிடாய் சேர்ப்பதற்கு பூனாச்சியை கிழவன் அழைத்து செல்கிறார்.
துட்டுக்கு அழைத்து வரப்பட்ட கிடாய் மிகவும் வயதான சோர்வுற்ற கிடாய். நாவலில் பெருமாள்
முருகன் இதனை விளக்கும் போது அது கதையோட்டத்தில் பொருந்தா காமமாக உணர்த்தப்படுகிறது.
கொண்டுவரப்பட்ட கிடாய் கிழட்டு கிடா. பூனாச்சிக்கு அதன் முகத்தைப் பார்க்கவே அருவருபாக
இருக்கிறது. கண்களை மூடிக்கொண்டு நடுங்குகிறாள்.
கருவுற்று பூனாச்சி ஏழு குட்டிகள் ஈனுகிறாள். ஐந்து குட்டிகள்
ஈன்ற பிறகு இனி எதுவும் இல்லை என்று அனைவரும் முடிவுக்கு வருகிறார்கள். ஆடுகளுக்கு
பேறுகாலம் பார்க்கும் வல்லுநன் ஆறாவதாக ஒன்று இன்னும் இருக்கிறது என்று சொல்கிறான்.
அவன் சொன்னது போலவே ஆறாவதாக குட்டி ஒன்று வெளிவருகிறது. ஆறாவதாக வந்த குட்டியோடு எல்லாம்
சரி என்று அவனும் முடிவு கட்டி விடுகிறான். அவனே அதிசயிக்கும் வகையில் ஏழாவதாக புழுவைப்
போன்று சிறு குட்டி ஒன்று வெளிவருகிறது. பகாசூரனின் வரம் உண்மையாகிவிடுகிறது. ஏழாவது குட்டி ஊரில் அதிசயமாகிவிடுகிறது. வாங்குவதற்குத்தான் ஆள் இல்லை. பூனாச்சியின் அருமை அறிந்த
ஒருவன் எருமை கிடா பூட்டிய மாட்டு வண்டியில் வந்து பூனாச்சி ஈன்ற ஆடுகளை வாங்கி செல்கிறான்.
பகாசூரனை போலவே இவனுக்கும் கதையில் அடையாளமாக ஊரும் பேரும் எதுவும் இல்லை. எருமை மீது
வரும் தரும ராஜா போன்று அவன் இருக்கிறான்.
பருவம் எய்த பூனாச்சியின் காமத்திற்கு தேவையான துணை அந்த
கிழ கிடாய் அல்ல. கிழவியின் மகள் ஊரில் இருக்கும் பூவன் ஆடுதான். பூனாச்சி தான் மகிழ்ந்து
தன் அன்பை பரிமாறிக் கொண்டது தன் இணையான பூவனுடன் மட்டுமே. உடல் ரீதியாக மட்டும் அல்லாமல்
உள்ளத்தாலும் பூனாச்சி பூவனுடன் ஒன்றிணைந்துவிடுகிறாள். கிழவி தன் மகள் ஊருக்கு மற்ற
ஆடுகளோடு பூனாச்சியை அழைத்து செல்லும் காட்சி நாவிலில் இயல்பாக கட்டமைக்கப்படும் யத்தார்த்தவாதம்
சார்ந்த நிலமும் பொழுதும் அல்ல. அது காதல் நிமித்தம் ஆசிரியர் கட்டமைக்கும் இடம் பொழுது
சார்ந்த திணை பாகுபாடு. நாவலில் வரும் ஊர்களுக்கோ, மனிதர்களுக்கோ கூட பெயர்கள் எதுவும்
இல்லை. கிழவன் இருக்கும் ஊர் வறண்ட காடு அங்கே புற்கள் மாத்திரமே விளையும். அது மேய்ச்சலுக்கு
ஏற்றது. கதையில் கிழவனும் கிழவியும் அவர்களுடைய மகள் ஊருக்கு பயணிக்கும் இடம் விவசாயம்
சார்ந்த நிலம். போகும் வழியில் பூனாச்சி ஓரிடத்தில் காணாமல் போய் விடுகிறாள். அந்த
இடம் காட்டுப் பகுதி. பூனாச்சி அதுவரையில் கண்டிராத அழகிய இடம் அது. அங்கே அவள் தன்னையே
மறந்து விடுகிறாள். மலை பகுதி இல்லாமல் குறைந்தது நான்கு வகையான நிலப்பகுதிகளாவது நாவலில்
இடம் பெறுகிறது.
இந்த நான்கு நிலப்பகுதிகளிலும் பூனாச்சியின் காதல் பற்றியும்
துணை வேண்டி அவள் ஏங்கும் ஏங்ககங்கள் பற்றியும் வாசிக்க முடியும். அந்தந்த இடத்திற்கும்
அதன் பொழுதுகளுக்கும் ஏற்றார் போன்று பூனாச்சியின் காதலும் துணை வேண்டிய தேடலும் பொருந்திப்
போகிறது. கிழவனின் ஊர் புற்கள் நிறைந்த மேய்ச்சல் நிலமாக இருந்தாலும் பூனாச்சிக்கான
இணையின் கூடுதலுக்கு ஏற்ற இடமாக அது இருக்கவில்லை. நான்கு வகை நிலங்கள் வழியே பூனாச்சி
தன் துணையை தேடி பயணித்து இறுதியில் விவசாய நிலத்தில் பூவனோடு இணைகிறாள். பயணம் மீண்டும்
ஆரம்பித்த இடத்திற்கு வரும் போது மேய்ச்சல் நிலமாக இருந்த நிலம் பாலை நிலமாக மாறிவிடுகிறது.
இந்த பாலை நிலம் பஞ்சத்தால் உருவாகிறது. கதையில் நான்கு நிலப்பகுதிகளும் பஞ்சத்திற்குள்
சென்றாலும் இந்த மேய்ச்சல் நிலம்தான் அதிகம் பாதிக்கப்படுகிறது. பயணத்தில் ஊர் சென்று
சென்று திரும்பிய பூனாச்சி பூவனை தனக்குள் ஏழு குட்டிகளாக சுமந்துகொண்டு வருகிறாள்.
ஏழு குட்டிகளை தாங்கிய பூனாச்சிக்கு அங்கே இருக்கும் மேய்ச்சல் நிலம் மெல்ல மெல்ல பஞ்சத்தில்
பாலை நிலமாக மாறிக்கொண்டு வருகிறது. மனிதர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாமல் வயிற்றில்
ஈரத்துணியைக் கட்டும் நிலை வந்த பின்பு மற்ற வீட்டு விலங்குகளை பராமரிப்பது இயலாத காரியமாக
போய்விடுகிறது. கிழவனும் கிழவியும் இருக்கும் உணவை வைத்து கொண்டு பூனாச்சியை மாத்திரம்
கடைசி வரை வைத்துக் கப்பாற்றுகிறார்கள். பகாசூரன் கொடுத்த வரத்தை அவர்கள் பாதுகாத்தாக
வேண்டும். கடைசியில் பூனாச்சிக்கும் அதன் வயிற்றில் இருக்கும்
ஏழு குட்டிகளுக்கும் உணவு அளிக்க முடியாத நிலை வந்து விடுகிறது. பூனாச்சி நிற்க கூட
திடம் இல்லாமல் போய் விடுகிறது. கதையில் இறுதியில் அவள் உயிருக்கு தேவையான உணவு இன்றி கல்லாகி தெய்வமாகிவிடுகிறாள்.
பூனாச்சி
நாவலில் காதலும் காதல் பொருட்டு கட்டமைக்கப்பட்ட நிலம், பொழுது, மக்கள், விலங்குகள்
என அனைத்தும் திணை கோட்பாட்டிற்கு முற்றிலும் பொருந்திப் போகும் நாவலின் செய்முறை நேர்ந்தி.
புனைவு எழுத்தாளர் என்ற முறையில் நாவலுக்கான படைப்பு அம்சம் பெருமாள் முருகனின் இந்த
பூனாச்சி நாவலில் இயல்பாக முழுமைப் பெற்று இருந்தாலும் தமிழ் பேராசிரியர் என்ற முறையில்
திணை பற்றின அவருடைய பாண்டித்யம் அதனை நாவலின் முழுமைக்கும் உள் கட்டமைப்பு (Engineering)
செய்ய முடிந்திருக்கிறது. திணை பற்றின இந்த கோணத்தில் மீண்டும் ஒரு முறை பெருமாள் முருகனின்
மற்ற படைப்புகளையும் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. இது அவருக்கே உரித்தான அழகியல்
செய்நேர்த்தி.
No comments:
Post a Comment