நம்மை சுற்றின உலகத்தை கதைகளால் கட்டமைத்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் ஜேம்ஸ் ஜாய்ஸின் யுல்லிஸஸ் வாசிக்கும் போது ஏற்படுகிறது. கதைகள் மாத்திரம் அல்ல நம்பிக்கைகளாலும் அதனை கட்டமைத்து வைத்திருக்கிறோம். நம் முன்னோர்கள் உருவாக்கிய கதைகளைக் கொண்டும் நம்பிக்கைகளைக் கொண்டும் வாழ்வின் யதார்த்தத்தை அணுகுகிறோம். அல்லது இப்படியும் சொல்லலாம், வாழ்வின் யதார்த்தம் என்பதே நம்பிக்கைகள், கதைகளின் கூட்டுமொத்தம். இந்த மாயைக் கொண்டே வாழ்க்கையை அதன் பிறப்பு முதல் இறப்புவரை வாழ்ந்து முடித்துவிடுகிறோம். நம்மை சுற்றிலும் பிராண வாயு மூடியிருப்பது போன்று இந்த மாயை நம்மை ஆட்கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின், கதைகளின் கட்டமைப்பிற்கு எதாவது ஒரு ஒற்றை சொல் கொண்டு அழைப்பதற்கு வேறெதுவும் சொற்கள் அகப்படவில்லை. மாயை என்ற வார்த்தையும் அதிக மத நம்பிக்கையின் சாரம் ஏற்றப்பட்ட வார்த்தை. ஆங்கிலத்தில் உத்தேசித்த வார்த்தை என்னவோ illusion. இந்த ஜட உலகத்தை இந்த illusionனைக் கொண்டே புரிந்து கொள்கிறோம், வாழ்கிறோம். இறுதியாக இந்த illusionனைக் கொண்டே கடந்து செல்கிறோம்.