Tuesday, August 3, 2021

பரிணாமத்தின் பெரும்பாதையில் உயிரின் தொடர்ச்சி

 



பரிணாமம் பற்றின கருத்து எந்த அளவிற்கு நம்பகமானது என்பது தெரியாது. இருப்பினும் அதனைக் கொண்டு பூமியின் மீதான உயிரின் தொடர்ச்சியை அதன் முழுமையில் புரிந்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறார்கள். கருத்து ஏற்புடையதா அல்லவா என்பதை விட அதன் மூலம் கோடி கணக்கான வருடங்களில் உயிர் எப்படி பயணித்தது என்பது பற்றின தேடல் மிகவும் சுவாரசியமானது. இந்த பரிணாமப் பாதையில் மனிதனை எங்கு பொருத்துவது அல்லது இந்த பாதையில் மனிதன் எங்கு வருகிறான் என்பது பரம்புதிரான ஒன்று. இந்த பெரும் பாதையில் திடீர் என்று மனிதன் இடைச்செருகலாக வந்தான் என்று நம்புவோமாக. எனினும் மனிதனைத் தவிர்த்து உயிர்களின் தோற்றம் மற்றும் அவைகளின் வளர்ச்சியை சற்று உற்று கவனித்தால் எப்பேர்ப்பட்ட கால வெளியில் அவைகள் பயணம் செய்து இன்று இருக்கிற காலத்திற்கு நம்மிடம் வந்து சேர்ந்து இருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. இதில் எத்தனை ஊழிகள் வந்தனவோ எத்தனை வகையான உயிரினங்கள் அந்த ஊழியில் அழிந்து காணாமல் போயினவோ. அழிவுகள் அத்தனையும் தாண்டி சிலர் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மனிதனை இந்த பரிணாமத்தின் பாதையில் இருந்து விடுவித்து அவனை தனியாக வைத்து மற்ற உயிரினங்களை பற்றி பார்க்க வேண்டியதின் அவசியம் ஏன் என்றால் அவன் மாத்திரமே இந்த பெருங்கதையின் பரம்புதிரை பற்றி அறிந்து கொள்ள ஆசை படுகிறவன். ஆதலால் அவன் திரைக்கு வெளியே அல்லது நாடக மேடைக்கு வெளியே நின்று பார்வையாளனாக நாடகத்தை கண்டு ரசிப்பது நல்லது. அவனையும் நாடகத்தில் பங்கேற்பாளனாக வைத்து கொண்டு கதையைக் குழப்பக் கூடாது.

மனிதன் தவிர்த்து கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன, பறவைகள் இருக்கின்றன, தரைவாழ் விலங்குகள் பூச்சிகள் ஊர்வன போன்றவைகள் இருக்கின்றன. இவைகள் அனைத்தையும் முட்டையிடும் உயிரினங்கள், பாலூட்டிகள் என்று இருவகையாக பிரித்து வகைப்படுத்திக் கொள்ளலாம். முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவகைகள் காலத்தால் பரிணாமத்தில் முந்தினவைகள். ஆரம்பத்தின் நடுவில் இருந்தே அவர்கள் தொடர்ந்து பயணித்து வருகிறார்கள். பாலூட்டிகள் பிந்தினவைகள்.

ஊழிக்கு முந்தின கால கட்டத்தில் உயிர் ஒன்று ஒரு முறை முட்டையிட்டு விட்டால் முட்டையிட்ட உயிருக்கும் அந்த முட்டைக்கும் சம்பந்தமே இல்லை. ஊழிக்கு பின் ஒரு வேளை முட்டையிட்ட பறவையோ மீனோ தன்னுடைய முட்டையை பாதுகாத்து அடைகாக்க வேண்டும் என்று யோசனை செய்திருக்கலாம். இது பரிணாமத்தில் அழகிய தருணம். எப்போது ஒரு உயிருக்கு தன் முட்டையை பாதுகாத்து அடைகாக்க வேண்டும் என்று  யோசனை தோன்ற ஆரம்பிக்கிறதோ அப்போது அதற்கு சிந்தனை என்பது வந்துவிட்டது என்று சொல்ல வேண்டும். இது என் முட்டை இதனை நாந்தான் பாதுகாத்தாக வேண்டும் என்று எண்ணம் வந்து விட்ட பிறகு அங்கு அந்த உயிர் யோசிக்க ஆரம்பித்து விட்டது என்று பொருள். இதற்கு கிவி என்ற உயிரினத்தை மாத்திரம் சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இது பறவையும் அல்ல தரைவாழ் விலங்கும் அல்ல. இது பறவையும் அல்லாது விலங்கும் அல்லாது பரிணாமத்தில் ஒரு இடமாற்ற நிலையில் நின்றுவிட்ட விலங்கு போன்ற பறவை அல்லது பறவை போன்ற விலங்கு. பரிணாமத்தில் கிவி பறவையில் இருந்து விலங்கு இனத்திற்கான இடமாற்றம். ஆனால் இது பாலூட்டி அல்ல.  கிவி தான் இட்ட முட்டையை எப்போழுதும் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு சுற்றும் என்கிறார்கள். தன் முட்டையை தான் பெற்றெடுத்த குழந்தையைப் போன்று பாவித்து அதனை பாதுகாக்கிறது. இதன் தோல் அமைப்பும் கொஞ்சம் குறைய எலியைப் போன்று பாலூட்டிக்கான தோல். கிவிகள் கூடு கட்டி வாழ்வதில்லை எலியைப் போன்று பொந்துகள் தோண்டி அதில் வாழ்கின்றன. 

முட்டையை தன் குட்டி போன்று பாதுகாக்கும் கிவி பறவை நிலையில் இருந்து விலங்கு நிலைக்கு வரும் போது யோசனை என்ற புதிய அம்சம் ஒன்று அதன் மண்டைக்குள் உருவாகிவிடுகிறது. அது தான் இட்ட முட்டை தன்னுடையது என்ற பிரக்ஞை அதற்கு உண்டாகி விடுகிறது. மேலும் அது தன் இனத்தின் தொடர்ச்சி என்று கருதி அதனை பாதுகாத்தாக வேண்டும் என்ற எண்ணமும் அதற்கு உண்டாகி விடுகிறது. எனினும் பறவைக்கும் விலங்குக்கும் நடுவில் இருக்கும் இந்த கிவிக்கும் அதன் முட்டைக்குமான உறவு அவ்வளவு நெருக்கமானது அல்ல. ஒரு முறை முட்டை இட்டுவிட்டால் முட்டைக்கும் தனக்குமான உறவு முடிந்து விடுகிறது. என்னதான் தான் இட்ட முட்டை தன்னுடையது என்று அது நினைத்தாலும் உடலால் அவைகள் இரண்டும் பிரிந்தே இருக்கின்றன.

பாலூட்டிகள் இந்தில் முற்றிலும் வேறுபட்டவைகள். பரிணாமத்தில் உடலில் நிகழ்ந்த பெரும் மாற்றம் பாலூட்டிகளின் நிலை. இவைகள் முட்டை இட்டு இன பெருக்கம் செய்வதில்லை. புதிய உயிர் தனக்குள் கருவுற்று முழுமையடைந்த உடலாக உருவெடுக்கும் வரை அது தாயில் வயிற்றுக்குள்ளாக பாதுகாப்பாக இருக்கிறது. புதிய உயிருக்கு அதீத பாதுகாப்பு பாலூட்டியால் தரப்படுகிறது. முழு உடல் வளர்சியடைந்த பின்னரும் கூட உடல் ரீதியாக முற்றிலும் பிரிந்து போவதில்லை.  இரு உயிருக்கும் நெருங்கிய தொடர்பு தொடர்கிறது.  சிறு குழந்தை தாயைவிட்டு வெளியே வந்த உடன் கூட அது தன் தாயை சார்ந்து இருக்கிறது. உணவுக்காக அது தன் தாயைச் சார்ந்தே இருந்தாக வேண்டும். வளர்ந்த பின்னும் கூட அவைகளுக்கு மத்தியில் அங்கே ஒரு குழு ஒன்று உருவாகி விடுகிறது. இதனை சமூகக் குழு என்று சொல்லலாம்.

பாலூட்டிகள் என்ற நிலையில் உயிர்களின் யோசனை நிலை என்பது முட்டையிடும் உயிரினங்களின் இருந்து இன்னும் கொஞ்சம் வளர்ச்சியடைந்த நிலையில் இருக்கிறது. தாயை விட்டு பிரிந்த பின்னரும் கூட ஒரு குழுவாக வாழ வேண்டும் என்று அவைகள் யோசிக்கின்றன. இங்கே ஒருவரை ஒருவர் பார்த்து அவர்களின் பாவனைகளை அப்படியே குட்டிகள் பிரதிபளிக்கின்றன.

உணவுக்காக உடல் ரீதியாக ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்ற உயிர்களின் வாழ்க்கை நிலை பரிணாமத்தில் உட்சகட்ட நிலை என்றாலும் அதனை முடிவான நிலை என்று சொல்ல தோன்றவில்லை. உயிர் நிலையில் உடல் ரீதியாக இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று அல்லது ஒன்றுக்குள் ஒன்று ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் பரிணாம நிலை முடிவும் உச்சகட்டமானதுமான நிலை என்று எண்ணத் தோன்றுகிறது.   

 

No comments:

Post a Comment

”இது கதையல்ல மெய்”

                                                               ”இது கதையல்ல மெய்”       ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். ஆசையை விடும...