சந்தி கிழவனின் பாக்கு வெட்டி பித்தன் பாக்கு வெட்டியைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். கட்டுரை காணாமல் போன பாக்கு வெட்டியைப் பற்றியது. பாக்கு வெட்டி கவிஞரின் உதவிக்காரனா அல்லது உண்மையிலேயே பாக்கு வெட்டி வெறும் இரும்பு கருவியா என தீர்க்கமாக சொல்லாமல் கட்டுரையை சிறிய அளவில் மாபெரும் சூட்சமமாக நீட்டுகிறார் பித்தன். வாசிக்கும் நமக்கு “பாக்கு வெட்டி” என்ற வார்த்தை விளையாட்டு படு ஜாலியாக இருக்கிறது. முதல் முறை வாசிக்கும் போது பாக்கு வெட்டி என்ற கருவியை மனதில் பதிய வைத்துக் கொண்டு வாசித்தால் கட்டுரை முழுவதும் பாக்கு வெட்டியின் பிரஸ்தாபம் மேலிடுகிறது. வாசிப்பு மேலும் போக போக பாக்குவெட்டி கருவியில் இருந்து ஒரு நபராக உருவெடுக்கிறது. கட்டுரை முடியும் போது “பாக்கு வெட்டி என்பது ’அது’ அல்ல ’அவன்’ என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இவர் என்ன கட்டுரையில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டாரே என சிரிப்புத்தான் வருகிறது. கட்டுரைக்குள் கவிதை.