கனவில் தோன்றி ஆழ் மனதில் பதிந்த காட்சிப் பதிவுகள் போன்று வாழ்வின் சில நிகழ்வுகள் எங்கோ மனதின் ஆழத்தில் பசுமையாக தங்கி விடுகின்றன. ஆண்டுகள் பல கடந்தாலும் அந்நிகழ்வுகளின் பதிவு மாத்திரம் மனதில் இருந்து அகலாமல் அப்படியே உறைந்து போய் விடுகிறது. சுவற்றில் வரையப்பட்ட அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களைப் போன்று. வாழ்வின் முக்கியமான பெரும் சம்பவங்கள் கூட காலத்தால் மனதில் இருந்து அழிக்கப்பட்டு விடுகின்றன. சிறு சிறு நிகழ்வுகள் மாத்திரம் ஏன் அப்படியே மனதில் பல வண்ணங்களில் சித்திரமாக படிந்து போய் விடுகின்றன என்று தெரியவில்லை. பல வருடங்களின் இடைவெளிக்கு பின்னர் அவைகளின் இருப்பும் மதிப்பும் எந்த ஒரு பெரும் கலைஞனாலும் தூரிகைக் கொண்டு தீட்டிவிட முடியாத ஓவியத்தைக் காட்டிலும் விலை உயர்ந்ததாக அவைகள் மாறிவிடுகின்றன. என்றைக்கோ கண்ட அதே இடம் அதே மனிதர்கள் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும். இன்று இருக்கும் அவர்கள் அல்லது அந்த இடம் என்றோ மனதில் பசுமையாய் படிந்து போனவர்களைப் போன்று இன்று இல்லை. அன்று ஆழ் மனதில் புகுந்து நிலை கொண்ட அந்த இடமும் மனிதர்களும் இன்றைய வாழ்வில் நம்மிடம் இருப்...