கதைக்கதையாம் காரணமாம் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மொழி எந்த அளவிற்கு போதாமைத் தன்மையை கொண்டிருக்கிறது என்பதை விளக்க மொழியியலாளரோ மானுடவியலாளரோ நமக்கு வேண்டியதில்லை. அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கும் உரயாடல்களை கவனித்தாலே போதும். அவைகளில் பாதி மொழியற்று இயங்கும் பரிமாற்றங்கள் என்பதை கண்டு பிடித்துவிடுவோம். மொழி என்பது தன்னுடைய நிலையில் பாதி அளவில் தான் உரையாடலை தொடர அனுமதிக்கும். அதற்கு மேல் நம்மால் கருத்துக்களை மற்றவர்களுடன் தொடர முடியாமல் போகிறது. மௌனங்களும் திக்கல்களும் ஒருவழியாக நம்மை காடைசியில் சொல்ல முற்படுவதை சொல்ல வைத்து விடுகின்றன. இதற்கும் மீறி ஒருவன் சரலமாக மொழியை மிக நீண்ட நேரம் கையாள்பவன் என்றால் நிச்சயம் அவன் அசாதாரண மனிதனாகத்தான் இருக்க முடியும்.