ஆதித் தேடலும், செட்டிக்கடை வட்டியும் புலன்களுக்கு சிக்காத எதுவொன்றும் நம்மை அச்சமூட்டக்கூடியவை. அதுவே ஐம்புலன்களின் ஆளுகைக்குள் உட்படும் போது அச்சம் நீங்கி ஆளுகை செய்ய வேண்டும் என்ற ஆவல் மேற்கொள்கிறது. நாம் எவ்வளவு தீரர்கள் என்பது பொருட்டல்ல. நம்முடைய பிரக்ஞையில், உணர்வுகளில் உட்படும் போது அது நமதாக மாறிவிடுகிறது. வானத்தின் உயரமும் கடலின் ஆழமும் நம்மை எப்போதும் பிரமிக்க வைக்கக்கூடியவைகள். யாரேனும் ஒருவர் அவைகளின் எல்லையைத் தொட்டுவிட்டு வரும் போது அந்த ஒருவரின் அனுபவம் நம் அனைவரின் அகந்தையாக மாறிவிடுகிறது. அந்த ஒருவரின் எல்லையைப்பற்றியக் கண்டுபிடிப்பு நம்முடையதாகவும் மாறிவிடுகிறது. காரணம் இதுதான்: அதுவரை எல்லையே ஒன்று கிடையாது என்ற சூட்சமத்தில் வாழ்ந்துவந்தோம் அதனால் அச்சம் பீடித்திருந்தது. எல்லை ஒன்று உண்டு என சொன்ன பின்பு அச்சம் நீங்கி “இப்பிரபஞ்சம் என்னுடையது” என்ற கர்வம் ஏற்படுகிறது. முடிவே இல்லாத ஒன்றில் நம் அச்சத்தை எப்போதும் வைத்திருக்கிறோம். முடிவற்றதின் எல்லையைக் கண்டடையும் போது அதுவரை நாம் வைத்திருந்த அனைத்துக் கற்பிதங்களும் தகர்ந்து தர்க்கத்திற்கு உள்ளாகிறது. புலன்களுக...