மனிதனைத் தவிற வேறேந்த உயிரினமும் தம் ஐம்புலன்களைக் கொண்டு இந்த பிரபஞ்சத்தை உள்வாங்கி அதி உன்னத நிலையில் அதனை நுகர முடியுமா என்பது கேள்வியே. மனிதனின் ஐம்புலன்களும் பருப்பொருள் நிலையில் இருக்கிற இப்பிரபஞ்சத்தை கேட்டு, பார்த்து, நுகர்ந்து, மெய்யுணர்ந்து அதனை அனுபவமாக்குகின்றன. பிரபஞ்சத்தில் மனித உடல் என்பது அதிசயமான ஒன்று. அது முழு பிரபஞ்சத்தையே தனக்குள் உள்வாங்கி செறித்து மீண்டும் அதனை அதனிடத்திற்கே கழிவாக வெளியேற்றுகிறது. மனித உடல் மூலம் பிரபஞ்சம் தன்னை காலத்தின் பெரும் பயணத்தில் மறுசுழற்சி செய்து கொண்டே இருக்கிறது. மனிதனைக் காட்டிலும் மற்ற உயிர்களுக்கு இதில் பெரும் பங்கு இருக்கிறது என்றாலும் மனித உடல் மூலம் நடக்கும் இந்த மறு சுழற்சி போன்று அவைகள் அவ்வளவு வளம்மிக்கதாக (fertile) இருக்க முடியாது. வளம் மிக்கதான மறுசுழற்சியின் மனிதக் கழிவு உண்மையில் அருவறுக்கத்தக்கதும் கூட. ஆக அருவருக்கத்தக்க அழுக்கின் துர்நாற்றம் மனிதன். மனித உடல் அருவருப்பின் முழு மொத்தம். ஆதலால் அதுவே வளமானதாக இருக்கிறது. மனித மொழியும் கூட.
இந்த அருவருப்பின் உண்மை நிலையை இலக்கியத்தில்
காண நேருமானால் அது நாவல் வடிவத்தில் கண்டுணரலாம். கவிதையோ, நாடகமோ ஏன் நாவலிலே கூட
யதார்த்தவாதம் தவிர்த்து இலட்சியக் கதைகளான காதல் கதைகளோ ரொமாண்டிக் கதைகளோ இந்த அருவருப்பின்
உடலை அதன் உண்மை நிலையில் அருகில் சென்று பார்ப்பது இல்லை. யதார்த்தவாதத்தில் இது சாத்தியமகிறது.
இவ்வாறு சொல்லும் போது யதார்த்தவாதம் என்பது வழமையாக இன்று வரையில் பொருள் கொண்ட யதார்த்தவாதம்
அல்ல இது. உதாரணத்திற்கு மிகப் பெரிய இந்த பிரபஞ்ச வெளியில் அதன் வளமைக்கான ஆதாரமாக
இருக்கும் மனித உடலையே எடுத்துக் கொள்ளலாம். மிகச் சிறிய அளவில் அதன் இயல்பு நிலையில்
நாவலின் அது முன்நிறுத்தப்படுமானால் கதையில் அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருக்க முடியாது. அது யதார்த்தவாதத்தின் சித்தரிப்பாக இருந்தாலும் மனித உடலின் உண்மை
நிலை அல்ல அது. மனித உடலின் அருவருப்பின் முக்கியத்துவத்தை முன் நிறுத்திக் காட்ட அந்த
உடல் இந்த பிரபஞ்சம் அளவிற்கு பெரிதாக்கிக் காட்டப் பட வேண்டியிருக்கிறது. அப்படி அந்த
உடல் பெரிதாக்கப் பட்டு புனைவாக நாவலில் முன் நிறுத்தப்படுமானால் அது யதார்த்தவாதம்
நிகழ்த்தும் மாயக்கதையாக மாறிவிடும்.
தமிழில் எம். வி. வெங்கட்ராமின் ”காதுகள்”
நாவல் மனித உடலின் அருவருப்புகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்து மகாலிங்கம்
என்னும் மாலியின் உடலை மையமிட்டு அதன் உள்ளும்
புறமுமாக நடத்தும் ஜாலக் கதை. மேற் சொன்னபடி ஐம்புலன்களும் அவைகளின் இயல்பில் பிரபஞ்சத்தின்
பருப்பொருள் நிலையை கண்டு, கேட்டு, நுகர்ந்து, மெய்யுணர்கின்றன. இந்த பருபொருள் உலகத்தை
மீறி அவைகளால் வேறொரு உலகத்தை காண முடியாது. நிகழ்காலத்தின் இருக்கும் உலகத்தை மட்டுமே
அவைகளால் நுகர முடியும். ஆனால் மாலிக்கு மாத்திரம் பிரம்மை நிலையில் கடவுள்கள், பேய்கள்,
இறந்த காலம், பூர்வ ஜென்மம் என புலன்களுக்கு அப்பார்ப்பட்ட வேறொரு உலகம் ஒன்று நிகழ்காலத்தில்
வந்து அவனுடன் உரையாட ஆரம்பிக்கிறது. மாலி இரண்டு உலகங்களோடு பிணைக்கப்பட்டவராகிவிடுகிறார்.
முதலில் காதுகள் அந்த மாய உலகத்தின் வாசலை திறந்து வைக்கின்றன. பின்பு கண்களின் காட்சியாக,
மூக்கின் நுகர்வாக அது விரிவடைந்துவிடுகிறது. கதையின் போக்கில், மாகாலிங்கம் தன்னுடைய
உடலை மாலி என்பவரின் பிரிதொரு உடலாக உணர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். தன் உடல் பற்றின
பிரக்ஞை அல்லது தன்னைப் பற்றின பிரக்ஞை என்பது தன்னையே வேறொன்றாய் உணர்வதின் மூலம்
அவருக்கு உண்டாகிறது. மகாலிங்கம் தன்னைக் கண்டடையும்
தேடலில் கடைசியாக தன் ஜட உடலை அதுவும் நாற்றம் எடுக்கும் அருவருப்பான உடலை கண்டடைந்து
விடுகிறார். அந்த நாற்றம் எடுத்த உடலில் மாலிக்கு தரிசனமாவது தெய்வீகம் தவிர்த்த அனைத்து
அசிங்கங்களும்தான். அவருடைய ”அனுபவத்தில் தெய்வீகம் சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கு”
எந்த ”பிரமாணமும்” இல்லை. அது “புறம்போக்கு நிலத்தை வசதியுள்ளவர்கள் வளைத்துக் கொண்டு
வீடு கட்டிக் குடிபுகுந்து அட்டூழியம் செய்வது போல், தீய சக்திகள் அவருக்குள் புகுந்து வெறும் கோலாகலக் கும்மாளி அடிப்பதாக இருக்கிறது.
கடவுள் அல்லது தெய்வீகத்தைத் தேடியவரது
அனுபவத்தின் இறுதியில் அவருக்கு எஞ்சியது அகம் பிரம்மாஸ்மி என்ற “நான் என்னும் அவரது
சுயம்” கூட இல்லை. அவர் தன்னுடைய தேடலில் அல்லது போராட்டத்தில் இறுதியில் கண்டது தன்னுடைய
உடல் பற்றின பிரம்மாண்டமான தரிசனத்தை மட்டுமே. நாவலின் ’களைமேக்ஸில்’ தீய சக்திகளை
விரட்ட தெய்வங்கள் அவரது உடலில் புகுந்து அவைகளைத் தேட ஆரம்பிக்கிறார்கள். இவை எல்லாம்
மாலி கண்ட மாயத் தோற்றங்கள் அல்ல. மாலி என்னும் பிரிதொரு உடல் வழியே மகாலிங்கம் அடைந்த
அனுபவம் அது. ஒரு வேளை தீய சக்திகளால் அவர் பீடிக்கப்பட்டவராக இருந்திருந்தால் அவரது
நான் என்னும் சுயத்தில்தான் தெய்வங்கள் தீய சக்திகளை தேடி இருக்க வேண்டும். மாறாக அவர்கள்
தீய சக்திகளை தேடிய இடம் மாலியின் ரத்தமும் சதையுமான உடலில். மாலி கண்டடைந்தது தெய்வங்கள்
தேடலை நடத்தும் தன்னையே அல்லது தன் உடலையே. அவர் பார்த்தது உருவங்களற்ற அருவமான உலகத்தை
அல்ல. அப்படியே அவர் அதனை அருவமாகக் கண்டிருந்தால் அது வெறும் மாயத்தோற்றமாகத்தான்
இருந்திருக்கும். அது மனநோய். தன்னிலை இழந்த மனநோயாளிகளுக்கு தான் என்னும் பிரக்ஞை
இருப்பதில்லை. அதாவது தான் பைத்தியம் அல்லது பைத்தியம் அல்ல என்ற உணர்வு நிலை அவர்களுக்கு
இருக்காது. மகாலிங்கம் தன்னிலையை இழக்காமல் தெய்வங்கள் தீய சக்திகள் என அனைத்தினுடனும்
தன் உடலின் புலன்கள் வழியே உரையாட ஆரம்பிக்கிறார். மகாலிங்கம் அவைகளை ’தான்’ என்ற நிலையில்
இருந்து தன் உடல் வழியே பார்த்து கேட்டு அனுபவமாக்குகிறார். எப்படி இந்த பருப்பொருள்
உலகத்தை அவர் தன் புலன்கள் வழியாக கண்டு கேட்டு மெய்யுணர்கிறாறோ அதே போன்று தீய சக்திகள்,
முன் பிறவி மனிதர்கள், தெய்வங்கள் என அனைத்தையும் பார்த்து கேட்டு உணர்கிறார். ஆனால்
உடலின் புலன்கள் வழியே காணப்படுபவர்கள் பிரம்மாண்டமானவர்கள் அல்ல. சக மனிதர்களைப் போன்ற
உருவம் கொண்டவர்கள்.
அவர் கண்டு உணர்ந்த பிரம்மாண்டம் தன்னுடைய
பூதம் போன்ற உடல். அதற்குள் தெய்வங்களே வந்து தீய சக்திகளை தேட ஆரம்பிக்கிறார்கள்.
தேடுபவர்கள் பெருந்தெய்வங்கள் முதல் சிறுதெய்வங்கள் வரை.
நாவலின் முக்கிய பகுதியாக இருப்பது சிறுதெய்வமும்
பெருந்தெய்வமும் அவருடைய பிரம்மைக்குள் வந்து அவர் உடலுக்குள் நடத்தும் நாடகம்தான்.
அவர் நாசிக்குள்ளும் வாய்க்குள்ளும் ராமனும், கறுப்பனும் புகுந்து மாலியை தன் விருப்பப்படி
ஆட்டி வைக்கும் தீய சக்தியான காளியை தேட ஆரம்பிக்கிறார்கள். மாலியை ஆட்கொண்ட காளி உண்மையில்
மாலியின் நான் என்னும் சுயத்தில்தான் ஒளிந்திருக்க வேண்டும். அவர்கள் சென்றடைந்தது
மாலியின் ஆன்மாவுக்குள் அல்ல அவருடைய உடலுக்குள். அவரது பிரச்சனைகள் அனைத்தும் அவரது
உடலை சுற்றி மாத்திரமே இருந்தது. அவரது காதுகள், நாசி என எல்லா புலன்களும் தெய்வங்கள்
மற்றும் தீய சக்திகளின் கைவசமாகி விடுகின்றன. அவரது சுயம் என்னும் ‘நான்’ மட்டும் அவரது
வசத்தில் கட்டுக்குள் இருந்தது.
காதுகளின் கலகத்துக்கு பரிவு காட்டி,
மற்ற நாலு புலன்களும் அவற்றோடு ஒத்துழைத்து, அவற்றின் ஆணைக்கு அடங்கி நடப்பது போன்ற
ஒரு விசித்திரமான நிலை அப்போது உருவாகிவிட்டது. எந்த புலனும் வேலை நிறுத்தம் செய்யவில்லை.
மாறாக, அவை மிகை வேலை செய்தன. அது மட்டும் அல்ல: ஒவ்வொரு புலனுக்கும் ஒரு தனித்துவம்
ஏற்பட்டு, ஒவ்வொன்றும் தனக்கு இஷ்டப்பட்ட காரியத்தை தான் இஷ்டப்பட்ட போது செய்வது என்று
தீர்மானித்து விட்டாற்போல் இருந்தது. இந்த புலன்களின் சுயாட்சியை (authonomy of
sense organs எனலாமா?) யாரும் வழங்கியதாக தெரியவில்லை: தாமாகவே புலன்கள் தன்னாட்சியை
ஏற்படுத்திக் கொண்டுவிட்டன. மத்திய அரசை – மூளையின் நிர்வாகத்தை அவை அலட்சியம் செய்து
எதிர்க்கத் தொடங்கியிருந்தன.
நாவலில் காதுகள் என்னவோ மையமான பேசு பொருளாக
இருந்தாலும் மகாலிங்கத்தின் வாயும் நாசியும் மாபெரும் கற்பனயில் காதைக் காட்டிலும்
பிரம்மாண்டமாக நாவலில் புனைவாக படைக்கப்பட்டிருக்கின்றன. மகாலிங்கம் உறங்கும் போது
ராமனும், கறுப்பனும் அவருக்குள் இருக்கும் காளியைத் தேடி கண்டுபிடித்து வெளியே இழுத்துக்
கொண்டு போக வருகிறார்கள். ராமன் வாயின் வாசலில் காவல் காக்க உட்கார்ந்து விடுகிறார்.
கறுப்பன் மாத்திரம் முதலில் வாய்க்குள் புகுந்து காளியைத் தேட ஆரம்பிக்கிறார். மாலியின்
உடலின் உட்கூறு மிகப் பெரிய குகைப் போன்று கறுப்பனுக்கு தோன்றுகிறது. குடலுக்குள் உள்ளே
போக நெருங்கும் போது கறுப்பனுக்கு மாலியின் குடலின் நாற்றம் தாங்க முடியவில்லை. பின்பு
ராமனின் ஆணையின் பேரில் துர்நாற்றம் அதிகம் இல்லாத நாசி வழியாக உள்ளே புகுந்து காளியை
தேட ஆரம்பிக்கிறான். அவனுக்கு பெரிய பயம் என்னவென்றால் நாசியில் புகுந்து தேடுகிற நேரத்தில்
மாலி தும்மிவிட்டால் தன் கதி என்ன என்பதுதான். மூக்குக்குள் இருக்கும் மிகச் சிறிய
கறுப்பன் சுனாமியில் அகப்பட்டவன் போல் ஆகிவிடுவான் என்பதுதான் அந்த பயம்.
நெடுநேரம் தேடியும் காளி அகப்படவில்லை.
ஒரு வேளை அவள் பல் இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருந்தால் என்ன செய்வது என்று சுத்தியலைக்
கொண்டு ஒவ்வொரு பல்லாக தட்டும் படி ராமன் சொல்ல கறுப்பன் ஏணி வைத்து மாலியின் பற்களின்
இடுக்குகளில் காளி எங்கு இருக்கிறாள் என்று தட்டிப் பார்க்க ஆரம்பிக்கிறான். தூக்கத்தில்
மகாலிங்கத்திற்கு அந்த சத்தம் மிகவும் தொந்தரவாக இருக்கிறது. அதை உணர்ந்த கறுப்பன்
மாலியிடம் மன்னிப்பு கேட்டு விட்டு மெதுவாக ஒவ்வொரு பல்லாக தட்டி காளியை தேட ஆரம்பிக்கிறான்.
கடைசியில் காளியும் கிடைத்தப்பாடில்லை. நேரம் ஆக ஆக ராமன் வாயின் வழியில் தூங்கியேவிடுகிறார்.
விடியும் போது சத்தம் அடங்கி போகிறது. மகாலிங்கம் எழுந்து காலைக் கடன்களை முடிக்க செல்கிறார்.
அப்போது இருக்கும் அவரது அந்த உடல் இரவில் அவர் உணர்ந்து பிரம்மாண்டமான உடல் அல்ல.
நாவலின் மாலியின் உடல் பற்றின இந்த தரிசனம்
மிக பிரம்மாண்டமானது. அதனை மாலியின் கற்பனை என்றோ, அல்லது பிரமை என்றோ சுருக்கிவிட
முடியாது. அது மேற்கத்திய இலக்கியங்களுக்கு இணையாக எம்.வி வெங்கட்ராம் தமிழ் இலக்கியத்தில்
கட்டமைத்த பிரம்மாண்டமான தரிசனத்தில் விளைந்த உடல் பற்றின கொண்டாட்டம். அது அவருக்கு
தனிப்பட்ட அனுபவமாக துன்பத்தின் காட்சியாக இருந்தாலும் அதனை அவர் தான் அல்லாத வேறொருவனுடைய
அனுபவமாக அந்த உடலை புனைவாக்கியிருக்கிறார். கதையின் இறுதியில் தன்னையே இன்னொருவனாக
அவர் பாவித்து சில ஆலோசனைகளை வழங்குவதை கதையோட்டத்தில் பார்க்க முடியும்.
மாலி என்ற சுயத்தை அழியவிடாமல் பிரச்சனைகள்
அனைத்தையும் எதிர்கொள்ள தெய்வ சக்திகள் அவருக்கு துணைபுரிந்தனவா என்பது தெரியாது. ஆனால்
அவர் தன்னிலை இழக்காமல் தன்னை சுற்றி ஒரு மாய உலகம் உழல்வதை திடமாக எதிர்கொண்டு வாழ்ந்தது
இலக்கியத்தின் உதவியால் என்று சொல்லலாம். மேற்கத்திய இலக்கியம் தமிழ் இலக்கியம் என
தீராத வாசிப்பு அவரை அவராக வாழ வைத்திருக்கிறது.
No comments:
Post a Comment