Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, August 29, 2016

வெற்றிடம் விழுங்கும் இராட்சத வார்த்தை



வெற்றிடம் விழுங்கும் இராட்சத வார்த்தை
எழுத்தாளனக்கு தேவையானதெல்லாம் தான் சுதந்திரமாக எழுதுவதற்கான ஒரு பத்தி அவ்வளவுதான். அதில் அவன் நினைப்பது அனைத்தும் எழுதப்படுகிறது. அந்தப் பத்தி எந்த ஒரு கட்டுப்பாட்டையும் எழுத்தாளன் மீது விதிக்காது. தன் சுதந்திரம் முழுவதும் அந்த குறிப்பிட்ட பத்திக்குள் கட்டற்று செயல்பட ஆரம்பிக்கிறது. பொதுவாக வார மற்றும் மாத பத்திரிக்கைகளில் ஒதுக்கப்படும் பத்திகள் சிறுகதைகளுக்காகவும், கட்டுரைகளுக்காகவும், கவிதைகளுக்காகவும், மற்றும் மதிப்புரைகளுக்காகவும் இருக்கின்றன. அந்த பத்திகள் சுதந்திர சிந்தனைக்கான அடக்குமுறையாகும். இவைகள் எழுத்தாளனை இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஒரு வடிவத்திற்குள் கட்டுப்படுத்துகின்றன. அவனை ஒரு வகையான எழுத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடைத்து விடுகின்றன. அதற்காக இவைகள் கூடாது என்றல்ல. இவைகள் கட்டாயமானவைகள். சுதந்திரமானவைகள் அல்ல. எனினும் படைப்பு என்பதை இந்த குறிப்பிட்ட வகைமையின் வடிவத்தில் தான் எழுத வேண்டும் என்று வற்புறுத்த முடியாது.
ஒரு பக்கத்தில் வடிவங்களுக்காக படைப்புகள் உருப்பெறுகின்றன. மற்றொரு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை நினைத்து எழுத்து அந்த வடிவத்தை நோக்கி பயணிக்கிறது. கடைசியில் அது அந்த முன் தீர்மாணிக்கப்பட்ட வடிவமாகிறது. முன் தீர்மாணிக்கப்பட்ட வடிவமும் சரி அல்லது எழுத்து தான் அடையப் போகும் வடிவமும் சரி அவைகள் எழுத்தாளனாள் தீர்மாணிக்கப்படுவது அல்ல. எழுத்து ஒரு கட்டுப்பாட்டில் தன்னை முடக்கிக் கொள்கிறது. உண்மையில் வார்த்தைக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. வார்த்தை கோருவதெல்லாம் ஒரு சுதந்திரமான வெற்றிடம். அங்கு சுதந்திர வெற்றிடம் அந்த வார்த்தை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. வார்த்தை தன்னளவில் கட்டற்ற நிலையில் ஒரு மாபெறும் பிரபஞ்சத்தை தன்னுள் வைத்திருக்கிறது. அது கோருவது ஒன்று மாத்திரமே ஒரு வெற்றிடம் அவ்வளவுதான். அந்த வெற்றிடத்தை நிறப்ப அந்த வார்த்தை தன்னை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுக்கும் விஸ்தரித்துக் கொள்கிறது.
எழுத்தாளன் தான் சாதிக்க தேவையானது ஒரு பிரம்மாண்டத்தை உருவாக்க ஒரு வெற்றிடம் மாத்திரமே. ஒரு சிறு அளவிலான இடத்தை ஒதுக்கி அதில் பிரம்மாண்டம் என்று ஒன்றை கட்டமைக்க சொன்னால் அதில் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுவிடும். பத்திரிக்கைகளில் இது போன்ற ஒரு வெற்றிடம் அவசியப்படுகிறது அதன் பெயர் என்னவென்று அவ்வளவு எளிதில் வவரையறுத்து சொல்லிவிடமுடியாது. அது கொடுக்கும் இடம் ஒரு நூறு வார்த்தைகளுக்கான இடமாகக் கூட இருக்கட்டும் ஆனால் அது வெற்றிடமாக இருக்கட்டும். அந்த வெற்றிடம் ஒரு ஜனநாயகத்தின் வெற்றிடமாக இருக்கட்டும். எழுதப்படும் நூறு வார்த்தைகள் சுதந்திரத்தின் வார்த்தைகளாக இருக்கட்டும். அது சட்டத்திற்கு கீழ்பட்டதாக இருக்க கூடாது. சட்டபுத்தகம் அதன் எழுத்து அளவில் கணிக்க முடியாதவை அங்கு வார்த்தைக்கு ஜனநாயகம் கிடையாது. அந்த வார்த்தை சட்ட வரையறைக்குள் மண்டியிட்டு கிடக்கும் அடிமை அவ்வளவுதான். ஆனால் இந்த வார்த்தை இயங்கும் மிகச் சிறிய வெற்றிடம் செயல்பாட்டில் இப்பிரபஞ்சத்தைக் காட்டிலும் மிகப் பெரிய உலகத்தை தன்னுள் வைத்திருக்கிறது.
தாஸ்தாவஸ்கிக்கு அப்படிப்பட்ட ஒரு வெற்றிடம் தரப்பட்டது. அதனை எதோ ஒன்றென்று பெயரிட்டு அழைத்தாக வேண்டுமே. எனவே அது எழுத்தாளனின் நாட்குறிப்பு என்று பெயர் வைத்து விட்டார்கள். அந்த சுதந்திர வெளிதான் அவரது வார்த்தைகள் வெறும் எழுத்து நிலையில் இருந்து படைப்பு நிலையை எட்டியது. அந்த வெட்டவெளிதான் இரண்டு நிலைகளிலான வார்த்தையை தீர்மானிக்கிறது. ஒரு நிலையில் அது வெறுமனே ஏதோ ஒன்றை குறிப்பிடப் பயன்படும் வார்த்தை. மற்றொரு நிலை கவிதையின் நிலை. அது ஒரு சொல்லாக இருக்கட்டும் வாக்கியமாக இருக்கட்டும் - அது கவிதை. அதை சாத்தியமாக்கியது அந்த வெற்றிடம். தனக்கு அந்த பத்திரிக்கையில் ஆசிரியர் பணி கிடைத்த உடன் தான் என்னவோ ஒரு மாபெரும் சீன சாம்சாஜ்யத்திற்கே அரசனானது போன்று பெருமைப் பட்டுக் கொண்டார். காரணம் தனக்கு கிடைத்திருக்கிற அந்த சுதந்திர வெளி அதில் அவர் எழுத்தை முழுவதும் கட்டுப்பாடின்றி உலாவவிட்டார். அந்த இடம் உருவாக்கியதுதான் இன்றைய நவீன பேரிலக்கியம். அது வடிவமற்றது. எனினும் அதை வார்த்தை என்றளவில் கவிதை என்று வறையறுத்து விட முடியும். அதில் அவர் ஒரு வடிவத்தை மனதில் கொண்டு படைப்பை உருவாக்கவில்லை மாறாக வார்த்தை தன் வடிவத்தை உருவாக்கி கொண்டது. வெண்ணிற இரவுகள் போன்ற கதைகள் இந்த சுதந்திர வெளியில் தான் தன் கவிதை என்ற வடிவத்தை உருவாக்கிக் கொண்டன.

இந்த எழுத்தாளனின் நாட்குறிப்பு பத்தி மாத்திரமே வார்த்தையை அதன் போக்கில் தன் வடிவத்தை தீர்மாணித்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது. வார்த்தைதான் அதன் வடிவத்தை தீர்மாணிக்க வேண்டும். அதற்காக அந்த நாட்குறிப்பு பகுதியில் அவன் செய்ய வேண்டியதெல்லாம் அந்தப் பகுதியில் தன் விருப்பு வெறுப்புகளை வார்தைப்படுத்தவேண்டும். திடீரென்று அது உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கும் மீறி உண்ணதமாக உருவெடுக்கும். அந்தத் தருணம் எப்போது நடைபெறும் என்பது எழுத்தாளனுக்கும் தெறியாது எழுத்துக்கும் தெரியாது. ஆனால் வார்த்தையில் காத்திருக்க வேண்டும். அந்த காத்திருப்பிற்கான இடத்தை பத்திரிக்கையின் மற்ற பத்திகள் அனுமதிக்காது. கூர்க்காவை போன்று துரத்தி அடித்து விடும். வேகமாக வேலையை செய்து விட்டு நேரம் முடிந்தவுடன் கடையைக் கட்ட வேண்டும்.   

Wednesday, July 27, 2016

மேற்கத்திய ஆளுமையில் சாதியைப் பற்றிய அறிவுசார் விசாரணை

மேற்கத்திய ஆளுமையில் சாதியைப் பற்றிய அறிவுசார் விசாரணை
கடர்கரையில் நண்பர்கள் அனைவரும் அம்பேத்கரின் முன்னுரைகளை மையமாக வைத்து அதில் எவ்வாறு இலக்கியம் தத்துவம் ஆகியவற்றின் தாக்கம் அவரில் மேலோங்கி நிற்கிறது என்பதைப் பற்றிய ஒரு விசாரணையில் வாசிக்க ஆரம்பித்தோம். இதுபோன்று மொட்டைத்தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சு போடுவது அபத்தமான காரியம் தான். எனினும் மறைக்கப் பட்ட உண்மையை பற்றி பேசும் போது இது போன்ற அபத்தம் என்னும் முற்று புள்ளி உண்மையை வெளிச்சப்படுத்துவதற்கு மிகம் பெரிய அபத்தம் ஆகும். அம்பெத்கருடைய கட்டுரைகளை வாசிக்க நேர்கையில் ஒரு பொருள் கொண்ட விசாரணைமாத்திரமே அவைகளில் இருக்கும். சாதியை பற்றிய எதிர்ப்பு குரள் மாத்திரமே அம்பேத்கரின் ஆய்வு பணி. இது அவருடைய ஆளுமை ஒரு சிறிய சட்டகத்திற்குள் சுருக்கி விடுகிறது. இதற்கு வெளியில் அவருடைய சக மனிதத் தன்மை அறிவு ஜீவி தன்மை என்பவைகள் முற்றிலும் அறியப்படாத ஒன்றாகும். சாலையின் முடிவில் இருக்கும் சிலையும் பாடபுத்தகங்களில் ஒரு கண்ணாடி அணிந்த உருண்ட முகமும் தான் அவருடைய அடையாளங்களாக இருகின்றன. இதற்கு மீறின அவருடைய வாழ்க்கை சார்ந்த குறிப்புகளில் அவருடைய ஆளுமையை தேடுவது மிக அறிது. இதற்க்காக அவருடைய கட்டுரைகளை விடுத்து விட்டு முன்னுரைகளை மாத்திரமே வாசிக்க ஆரம்பித்தோம்.

Monday, July 18, 2016

கிழவனும் கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம்

 கிழவனும் கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம்
இலக்கியத்தில் இசங்கள் பல வந்த பிறகும் ஹெம்மிங்வே மாத்திரம் தன்னை ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் தினித்துக் கொள்ளாமல் தனித்து நிற்கும் படைப்புகளை தந்தவர். ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்கள் தங்களுடைய புனைவுகளில் ஒரு குறிப்பிட்ட மனோவியல் உத்தியை கையாளாமல் இருந்திருந்தால் அவர்கள் படைப்புகள் ஆரம்ப நிலையில் இருந்த யதார்த்த புனைவுகளாக தான் இருந்திருக்கும். யதார்த்ததிற்கும் மீறிய பரிசோதனை முயற்சி மாத்திரமே அவர்களை தனித்து நிற்பவர்களாக காட்டியது. எட்மன்ட் வில்சன் என்ற விமசர்சகர் ஜாய்சின் யுல்லிசஸ் பற்றி விவாதிக்கும் போது, நனவோடை உத்தியை மீறி ஜாய்சிடம் இருப்பது வெறுமனே மேடம் பொவாரி கதை மாத்திரம் தான் என்று கூறுவார். இந்த மேடம் பொவாரி என்ற யதார்த்ததிற்கு மீறி யுல்லிசஸில் இருப்பது நனவோடை உத்தியால் மாத்திரமே. இதைப் பற்றி பேசுவதானால் நவீனத்துவம் என்ற ஒரு இயக்கத்தின் தீவிரத்தினால் ஏற்பட்ட இலக்கிய படைப்புகளை தாழ்த்தி பேசுவது என்பது அல்ல. மாறாக இவர்கள் தங்களுடைய படைப்பாற்றலை முற்றிலும் யதார்த்த வாழ்க்கைக்கு மிக தூரத்தில் வைத்துக் கொண்டார்கள் என்பதுதான். எனினும் அவருடைடய படைப்புகளில் இலக்கிய பரிசோதனையின் மேதாவித்தனம் தெரியாது. அவருடைய படைப்புகளில் வாழ்க்கை இலக்கியமாக்கப்பட்டிருப்பது மாத்திரமே புலப்படும்.

Tuesday, July 5, 2016

போரும் அமைதியும்: ஈடேறிய கனவு


ஞாயிறு இரவு ஒரு மணிக்கு போரும் அமைதியும் நிறைவுற்றது. இதை வாசித்து முடிப்பதே வாழ்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தேன். இப்போது பெரும் நிம்மதி. இனி அமைதியாக மற்ற பிரதிகளில் பயணம் செய்யலாம். இக்காவியத்தை வாசித்து முடிக்க எனது முதுகலை இரண்டாம் ஆண்டில் முயற்சி செய்தேன். நல்ல வேலை அது ஈடேராமல் போய்விட்டது. அப்போதைக்கு ஆறுதலாக  Dumasன் Count of Monte Cristoவை மாத்திரம் முழுவதுமாக வாசித்து முடிக்க முடிந்தது. அது ஒரு இளம் வாலிபனின் சாகசக் கதை. எனது வாசிப்பில் அது ஒரு மைல் கல். பல நீண்ட வருடங்களாக போரும் அமைதியும் ஒரு ஈடேராதக் கணவாகவே இருந்து வந்தது. பயணத்தின் அடுத்த சந்திப்பாக தாஸ்தாவஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் என்னை அதிகம் பாதித்தது. அது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் என்னை தாஸ்தாவஸ்கி பைத்தியமாக்கி விட்டது. காரணம் அது மனிதனின் ஆழத்தையும் அதின் நிஜத்தையும் பற்றிய ஒரு மாபெரும் தத்துவ அலசல்/தேடல். தாஸ்தாவஸ்கியின் உலகத்தை எட்டிப்பார்ப்பது என்பது பாதாளத்தின் ஆழத்தை எட்டிப் பார்ப்பது போன்றதாகும். அதில் பயணிக்க மரணம் என்ற நுழைவு வாயிலை நாம் கடந்தாக வேண்டும். உண்மையில் அது ஒரு எல்லையற்ற பாதாளம் அதில் விழுந்தால் நாம் நம்மையே தொலைத்து விடுவோம். நம் மனதின் எண்ண ஓட்டங்கள் கூட சலனமற்று ஒரு நிசப்தமான ஏகாந்தத்தில் திளைத்து விடும். என் பேராசிரியரிடம் கூறினேன் என் எல்லா பிரச்சனைகளுக்கும் அந்த அயோக்கியன்தான்/தாஸ்தாவஸ்கி (செல்லமாக) தான் காரணம் என்று புலம்பினேன். என் சலனமற்ற நிசப்தம் மற்றவர்களை அதிகம் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.

Thursday, June 16, 2016

டால்ஸ்டாய் என்கிற காந்தியப் புனிதம்


டால்ஸ்டாய் என்கிற காந்தியப் புனிதம்
நேற்று நண்பர் ராஜனுடன் டால்ஸ்டாய் பற்றி உரையாடிக்கொண்டிருந்தேன். ஒரு ரஷ்ய எழுத்தாளன் எவ்வாறு தன் படைப்புகளின் மூலம் இந்திய தேசத்தின் மகாத்மாவை உருப்பெறச் செய்தார் என்பதைப் பற்றியதாய் இருந்தது அந்த உரையாடல். மெல்ல பேச்சு அம்பேத்கரிடம் திரும்பியது. இதுவரை தலித்திய பார்வையில் அம்பேத்காரைக் கொண்டு காந்தியைக் கண்டவர்கள் அவரை ஒரு தீமையின் வடிவமாகத்தான் கண்டனர். இடது சாரிய பார்வைக்கு (பெண்ணியம் உட்பட) அவர் ஒரு தீமையின் உருவம் தான். எனக்கும் இதில் அதிக உடன்பாடு இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இம்மாமனிதனை என்னால் ஒரு சாதாரண மனிதனாக அடையாளம் காண முடியவில்லை. நம்முடைய பிழையெல்லாம் நாம் அவரை மகாத்மாவாக ஆக்கி விட்டதுதான். மகாத்மா தவறு இழைக்கும் போது நம் மனது இயல்பில் அம்மாமனிதனை தீமையின் உருவமாக கண்டு விடுகிறது.

Wednesday, July 15, 2015

விடுதலை கீதங்களின் தேசியத் தேடல்


விடுதலை கீதங்களின் தேசியத் தேடல்
செய்யுள் விதிகளுக்குட்பட்ட மரபுக் கவிதைகளையும், விதிகளைக் கலைந்த நவீனக் கவிதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொது ஒன்றையொன்று விரோதிக்கும் நிலையிலே அவைகள் முரண்பட்டு நிற்கின்றன, நவீனக் கவிதைகள் தங்களுக்கென்று எந்த விதிமுறைகளையும் கொண்டிருப்பதில்லை என்பது மரபுக்கவிதையின் குற்றச்சாட்டு. இதற்கு எதிரிடையாக மரபுக்கவிதைகள் தங்களுக்கென்று எந்த கவிதைத் தன்மையையும் செய்யுள் வடிவத்தில் கொண்டிருக்கவில்லை என்பது மரபுக் கவிதையின் மீதான நவீனக் கவிதையின் குற்றசாட்டு. நவீனக் கவிதைகள் மொழி அலங்காரங்களான பா வகைகளை முற்றும் களைந்து நிர்வாண  நிலையில் நிற்கின்றன. கவிதையின் தத்துவமும் உருவகங்களுமே இலக்கண  வறையறை அற்ற நவீனத்தை கவிதையாக சாத்தியப்படுத்துகிறது. நவீனக்  கவிதை இலக்கண விதிகளுகுட்படுமாயின்  தத்துவம் சார்ந்த தன் உயிரை இழந்து விடுகிறது. இலக்கண விதிமுறைகளுக்காகவே படைக்கப்பட்டு கவிதை தன் ஆன்மாவை தொலைத்துவிடுகிறது. நவீன வாசகனை அவைகள் கவருவதில்லை. அதே நேரத்தில் நவீனக் கவிதை என்ற தன் சுதந்திர நிலையில் கவிதை இலக்கண விதிமுறைகளை உதாசினம் செய்து இலக்கண மரபை காலத்தில் எடுத்து செல்லும் தன் பொறுப்பை இழந்து விடுகிறது. இவ்வாறு இலக்கணம் சார்ந்த கவிதைகள் மரபு சார்ந்த கவிதைகள் எனவும் நவீனக் கவிதைகள் தற்போதைய காலத்தின் அடையாளம் எனவும் தங்களை வேறுபடுத்திக் கொண்டு இருவேறு துருவங்களாகிவிடுகின்றன.

Thursday, April 9, 2015

பாலச்சந்திரனின் இறுதியுணவு: பாவக்கனி ருசித்த கலகக் குரல்


பாலச்சந்திரனின் இறுதியுணவு: பாவக்கனி ருசித்த கலகக் குரல்
இன்று நாம் குறிப்பிடும் கவிதை என்ற சொல் வெறுமனே ஒரு இலக்கிய வகைமையை  குறிப்பிடுகிறதா அல்லது வகைமைகளுக்கு மீறி  இலக்கியம் என்ற பொது தளத்தில் இயங்குகிறதா என்ற  கேள்வி  நவீனகவிதைகளை வாசிக்கும் போது ஏற்படுகிறது. இச்சொல் உரை நடை அல்லது  பாடல் என்ற வரைமுறையை மீறி  ஒரு பிரதிக்குள் இருக்கும் அழகியலையே குறிப்பிடுகிறது. ரஷ்ய இலக்கிய மேதை தாஸ்தாவஸ்கி தன் எழுத்துக்கள் உரைநடையாயினும்  பீட்டர்ஸ் பெர்க் கவிதைகள் என்றே அழைக்கிறார் . தன் கரமசாவ் சகோதரர்கள்  நாவலில் வரும் ஒரு பகுதியான கிராண்டு இன்க்விசிட்டரையும் கவிதை என்று தான் அழைக்கிறார். இங்கு மொழி  வடிவம் பற்றிய வரையறைகளைத்  தாண்டி பிரதியின் அழகியலை காண முனைகிறோம்.  பிரதிக்குள் கலைஞன் தான் அடைய முயற்ச்சிக்கும் அழகியலே அதனை கவிதை என அழைக்க நம்மைத் தூண்டுகிறது.

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜி...