மராட்டின் மரணம்: கலை பிரச்சாரத்திற்கே மராட்டின் மரணம் என்ற ஓவியம் Slovene சிந்தனையாளர் Slavoj Zizekன் மூலம் அறிமுகமானது. மராட் பிரென்ச்சு புரட்சியின் அங்கத்தினன். கோர்டே என்ற பெண் இவனை சாகும்படி நெஞ்சில் கத்தியால் குத்திவிடுகிறாள். கொலை செய்த பின்பு தப்பி ஓடாமல் அங்கேயே படபடப்பில் நின்று கொண்டிருந்திருக்கிறாள். புரட்சியாளர்கள் அவளை பிடித்துக் கொண்டுபோய் கொன்றுவிடுகின்றனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு மராட்டின் நண்பனான ஓவியர் ழாக்-லூவிஸ் டேவிட் சம்பவத்தை ஓவியமாக தீட்டுகிறார். இந்த ஓவியம் பத்திரிக்கையாளன் மராட்டின் மரணம் என்றழைக்கப்படுகிறது. ஓவியர் டேவிட் ’ரோபஸ்பியரின் தூரிகை’ என்று செல்லமாக அழைக்கப்பட்டிருக்கிறார். மராட்டின் மரணம் இவரை பெரிதும் பாதித்திருக்கிறது. வெறுமனே தன்னுடைய நண்பனுடைய மரணம் என்பதாக அவர் இம்மரணச்சம்பவத்தை அணுகவில்லை. அது ஒரு புரட்சி சிந்தனையின் மரணமாக அவர் அதனை பார்த்திருக்கிறார். நண்பனுடைய மரணத்தை ஓவியமாக்குவதில் பிரச்சனை ஒன்றும் பெரியதாக இல்லை. அப்படியே சம்பவத்தை பத்திரிக்கை செய்தியை போன்று தத்ரூபமாக வரைந்துவிட்டுப் போய் இருக்கலாம். ழா...