இன்று காலையில் நடை பயணம் செல்லும் போது எருக்கஞ்செடி ஒன்று கண்ணில் பட்டது. நகரத்தில் செடிகளும் பறவைகளும் அபூர்வமாக கண்ணில் படும் போது அவைகள் அதி முக்கியமானவைகளாக மாறிவிடுகின்றன. அதுவே கிராமம் என்றால் அவைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இங்கே ஜன நெருக்கடியின் மத்தியில் ஒற்றை ஆளாய் இவைகள் முக்கியத்துவம் பெற்று தனித்து நிற்கின்றன. தனித்து நிற்பவர்களுக்கே எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நகரத்திலேயே பிறந்த ஒருவனுக்கு இவ்வளவு மக்கள் நெருக்கடியை பார்க்கும் போது அது புதிதானது அல்ல. கிராமத்தானுக்கு அது மிரட்சியை உண்டாக்கும். செடியும், பூவும், பறவைகளும் நகரவாசிகளுக்கு அபூர்வமானவைகள். எருக்கஞ்செடி இன்று கண்ணில் பட்டவுடன் அது அவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாகிவிட்டது. அதுவும் கடற்கரை ஓரத்தில் ஒரு செடி தனித்து நிற்கும் போது ”இங்கே ஒருவன் உன் பார்வைக்காக தனித்து நிற்கிறேன். என்னிடம் அருகில் வா. வந்து மலர்களையும், இலைகளையும், பிஞ்சு விட்டு இருக்கிற பச்சைக் காயையையும் கொஞ்சம் உன் கேமராவில் படம் எடுத்துக் கொள்” என்று அழைப்பு விடுப்பது போன்று இருந்தது.