Sunday, June 20, 2021

தொண்டப்ப நல்லூர்

 

கனவில் தோன்றி ஆழ் மனதில் பதிந்த காட்சிப் பதிவுகள் போன்று வாழ்வின் சில நிகழ்வுகள் எங்கோ மனதின் ஆழத்தில் பசுமையாக தங்கி விடுகின்றன. ஆண்டுகள் பல கடந்தாலும் அந்நிகழ்வுகளின் பதிவு மாத்திரம் மனதில் இருந்து அகலாமல் அப்படியே உறைந்து போய் விடுகிறது.  சுவற்றில் வரையப்பட்ட அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களைப் போன்று. வாழ்வின் முக்கியமான பெரும் சம்பவங்கள் கூட காலத்தால் மனதில் இருந்து அழிக்கப்பட்டு விடுகின்றன. சிறு சிறு நிகழ்வுகள் மாத்திரம் ஏன் அப்படியே மனதில் பல வண்ணங்களில் சித்திரமாக படிந்து போய் விடுகின்றன என்று தெரியவில்லை. பல வருடங்களின் இடைவெளிக்கு பின்னர் அவைகளின் இருப்பும் மதிப்பும் எந்த ஒரு பெரும் கலைஞனாலும் தூரிகைக் கொண்டு தீட்டிவிட முடியாத ஓவியத்தைக் காட்டிலும் விலை உயர்ந்ததாக அவைகள் மாறிவிடுகின்றன. என்றைக்கோ கண்ட அதே இடம் அதே மனிதர்கள் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும். இன்று இருக்கும் அவர்கள் அல்லது அந்த இடம் என்றோ மனதில் பசுமையாய் படிந்து போனவர்களைப் போன்று இன்று இல்லை. அன்று ஆழ் மனதில் புகுந்து நிலை கொண்ட அந்த இடமும் மனிதர்களும் இன்றைய வாழ்வில் நம்மிடம் இருப்பவர்கள்தான் என்றாலும் இவர்கள் அவர்கள் அல்ல. அவர்கள் ஆழ் மனதில் தங்கிய மிகவும் நேசத்திற்கு உரியவர்கள். இன்று இவர்கள் நம்மை வெறுக்கிறவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. மனதில் எங்கோ ஒரு மூலையில் அவர்களின் நேசம் இன்றும் நம்மை அரவணைத்துக் கொண்டிருக்கிறது.

அன்று மாலையில் தொண்டப்ப நல்லூரில் திருமணம் ஒன்று நடக்க இருந்தது. அம்மா, பெரியம்மா அக்காகக்கள், அண்ணன்கள் என பெரிய கூட்டமே கல்யாணத்திற்கு போக தயாராகிக் கொண்டிருந்தார்கள். தொண்டப்ப நல்லூர் பாலாற்றுக்கு தெற்கே கரையோரத்தில் அமைந்திருக்கும் ஊர். பெயர் என்னவோ கேட்டவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர் போன்று தொனிக்கும். வரலாற்று முக்கியத்துவமும் இருக்கக் கூடும். ஆனால் பல்லவ நாடு சோழ நாட்டைப் போன்று இல்லை, தொண்டப்ப நல்லூரின் இந்த பாலாற்றங்கரையும் காவிரிக் கரையைப் போன்று இல்லை. இலக்கியம் பாடாத ஊர்கள் பல்லவ நாட்டின் ஊர்கள். பாலாறும் கூட. ஆற்றைக் கடந்து வடக்கே கொஞ்சம் தூரம் நகர்ந்தால் அங்கே இப்படி ஒரு நதி இருப்பதற்கான சுவடே தெரியாது. வறட்சியும் இல்லாமல், செழுமையும் இல்லாமல் ஏதோ ரெண்டான் கெட்டானாக இருக்கும் ஊர்கள் அவைகள். புதுப்பட்டினம் தொடங்கி சென்னை வரை அவைகள் விரிந்து காட்சி தரும். ஏரி மற்றும் கிணற்று பாசனமே முக்கிய ஆதாரம் அவைகளுக்கு. ஆற்றின் தெற்கே இதற்கு நேர் எதிர். எங்கும் பசுமை. பசுமையான தமிழ்நாட்டை வறட்சியான அதன் வடக்கு பகுதியில் இருந்து பிரித்துக் காட்டும் நிலவியல் கோடு பாலாறு என்று கூட சொல்லலாம். ஓர வஞ்சனைதானே இது.

தெற்கே பாலாற்றின் கரையிலேயே கிராமம் ஒன்று அமைந்திருக்குமானால் செழிப்பைப் பற்றி சொல்லவா வேண்டும்.  தொண்டப்ப நல்லூர் எவ்வளவு செழிப்பான ஊர் என்பதை பற்றி இப்போதைக்கு வருணிக்க முடியாது. காரணம் அந்த ஊரை சுமார் முப்பத்து ஒரு வருடங்களுக்கு முன்பு ஐந்து வயது கூட நிரம்பாத சிறுவன் ஒருவன் கண்கள் வழியே கண்டது. ஐம்புலன்கள் வழியே என்று சொல்ல வேண்டும். அதே சிறுவனின் விழிகளின் பார்வையும், செவிகளின் கேட்கும் திறனும், மனதின் பிரக்ஞையின் விஸ்தாரமும் இந்த முப்பத்து ஒரு வருடுடங்களில் வளர்ச்சி அடைந்து புற உலகத்தை துட்சமாக காணும் அலட்சியம் இப்போது அவைகளுக்கு உண்டாகி இருக்கிறது. இமய மலையின் விஸ்தாரமும் அதில் இருந்து பொங்கி பெருகும் கங்கையின் பிரவாகமும் அதற்கு காட்சியாக தேவைப்படுகிறது. இருப்பினும் பாலாற்றின் மணற்பரப்பின் நடுவே நிற்கும் போதுதான் தெரியும் அது கொடுக்கும் பிரமிப்பு என்னவென்று. அன்று வளர்சியடையாத அச்சிறுவனின் ஐம்புலன்கள் அடைந்த புற உலகைப் பற்றின வியப்பு இன்றைக்கும் அழியாமல் மனதில் நிலைத்திருக்கிறது. 

தொண்டப்ப நல்லூர் சென்றடைவதற்குள் இருட்டி விட்டதா அல்லது அசதியில் அந்த நான்கு வயது சிறுவனின் புலன்கள் அயர்ச்சியுற்று தூங்கி விட்டனவா என்பதெல்லாம் தெரியாது. தொண்டப்ப நல்லூர் இன்றளவும் நாம் அறிந்திருக்கிறவரையில் பகலுக்கும் இரவுக்கும் இடையே பெரிய இடைவெளி எதுவும் இல்லாமல் திடீர் என்று பகல் இரவாக மாறிய மாய உலகம். கண்கள் விழிக்கும் போது இரவில் கல்யாண வீட்டில் சீரியல் லைட்டுகள் தொங்க விட்டப்பட்ட வண்ணமிகு அழகிய கோலம் பூண்ட ஊர் என கண் எதிரே காட்சியளித்தது தொண்டப்ப நல்லூர். திடீர் என்று கண் விழிக்கும் போது இருட்டும் அதில் வண்ண விளக்குகளும் ஜொலிக்கும் போது அது அந்த சிறுவனுடைய உள்ளத்தில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்!

அப்போதுதான் புதுப்பட்டினம் வரை இரண்டரை மைல்கள் கால் கடுக்க நடையாய் நடந்து வந்து டவுன் பஸ் ஒன்றை பிடித்தார்கள். பஸ் எப்போது கிளம்பும் என்றும் தெரியாது. புதுப்பட்டினம் பஸ்டேன்டின் அருகே அகலமான கால்வாயும் அதன் கரை ஓரத்தில் ஆள் உயர பெரிய இரும்பு குழாய் ஒன்றும் பூதம் போன்று நின்று கொண்டிருந்தன. ஏதோ அந்த கால்வாயும் அந்த குழாயும் தன்னை உள்ளே இழுத்து விழுங்கி விடுவது போன்ற அச்சம் அவைகளைப் பார்க்கும் போது சிறுவனுக்கு உண்டானது. பேருந்தும் கிளம்பவில்லை. எவ்வளவு நேரம் அந்த இரண்டு பூதங்களையும் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருப்பது. இரண்டரை மைல்கள் நடந்த அசதியில் தூக்கம் வந்திருக்க வேண்டும். அனைத்தும் மாயமாய் மறைந்து விட்டன. பஸ் எப்போது கிளம்பியது எவ்வளவு தூரம் பயணித்தது என்பதெல்லாம் அவனுக்கு தெரியாது.  விழித்துப் பார்த்தால் வண்ண லைட்டுகளால் ஆன இந்த அழகிய கோலம் பூண்ட ஊர். இரவில் ஜொலிக்கும் திருமண வீட்டைப் போன்று அவ்வளவு அழகானது இந்த உலகில் வேறெதுவும் இருக்க முடியாது.

பெரியம்மா சிறுவனையும் அம்மாவையும் சொந்தக்காரர் ஒருவர் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். கூரை வீட்டின் முன் திண்ணையில் டீயூப் லைட்டின் வெண்மையான வெளிச்சத்தில் சொந்தக்காரர்களை நீண்ட நாட்களுக்கு பின் அதுவும் கல்யாண நாள் ஒன்றில் பார்க்கும் போது அவர்களிடையே பொங்கிப் பெருகும் அன்புக்கும் பிரியத்துக்கும் அளவே கிடையாது. அன்று உணர்ந்த அந்த மனிதர்களின் நேசம் இன்று இல்லை. பாலாற்றின் வடபகுதியைப் போன்று வறட்சியும் இல்லாமல் செழிப்பும் இல்லாமல் எனோ தானோவென்று இருக்கிறது.

”கல்லயாணத்தில் சப்பாடு போட நேரம் ஆகும் போல. குழந்தைக்கு அவ்வளவு நேரம் பசி தாங்காது. சாப்பாடு போட்டு தூங்க வை” என்றது  பெரியம்மாவின் குரல்.

எப்போது சாப்பிட்டான் எவ்வளவு நேரம் பேச்சு தொடர்ந்தது என்று எதுவும் தெரியாது.  அன்றைய நாளின் முழுமையும் சிறுவனின் தூக்கம் என்னும் கருப்பான இராட்சதன் வாயில் விழுங்கப்பட்டுவிட்டது. புதிய நாள் ஒன்று மறுபிறவி எடுத்தாக வேண்டும். அப்போது புதிய நாளின் வெளிச்சம் என்னும் தேவதையின் கரங்களில் மீண்டும் ஒரு புதிய பிறப்பு உண்டாகும்.

இரவும் கடந்தது, கல்யாணமும் முடிந்துவிட்டது. ஊர் திரும்பியாக வேண்டும். திரும்பவும் அந்த பெரிய தண்ணீர் குழாயும், சாக்கடை ஓடும் பெரிய கால்வாயுமா? என்ற பீதி இப்போது இல்லை. ஊர் திரும்புவதற்கு பயணத்தின் வழியை மாற்றிக் கொண்டார்கள். பெரியவர்கள் சிலர் எளிதில் சென்றடையக் கூடிய குறுக்கு வழியை சொல்லியிருக்க வேண்டும்.

“ ஏன் அந்த சுத்து வழி. இதோ ஆத்த கடந்தா உங்க ஊரு வரப்போகுது. அத விட்டுட்டு ஏன் தேவையில்லாத அலைச்சல்.”

எளிதில் சென்று கடக்க வேண்டிய தூரத்தை வலிமிகுந்த நெடிய பயணமாக நேற்று மாற்றி விட்டார்கள். வெண் மணல் நிறம்பிய பாலாற்றை அன்றுதான் அந்த சிறிய உடல் முதலும் கடைசியுமாக தொட்டு ஸ்பரிசித்தது. முழுமையாக.

இரண்டு அதிசயங்கள் அப்போது அச்சிறுவனுக்கு ஆற்றங்கரையில் காத்திருந்தன. முதலாவது கிணறுகளே இல்லாமல் நீர் இறைக்கும் எஞ்ஜின்கள். பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் எஞ்ஜின்கள் ஆங்காங்கே தென்பட்டன. அந்த எஞ்ஜின்கள் அவன் அப்பா பெரியப்பாக்கள் தங்கள் நிலத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் எஞ்ஜினைப் போன்றே இருந்தது. நம்ம எஞ்ஜின் என்று ஆவலோடு அருகே சென்றால் கிணற்றைக் காணவில்லை. இரும்பு குழாய் ஒன்று ஆத்து மணலுக்குள் புதைக்கப்பட்டிருந்தது. எப்படி கிணறே இல்லாமல் மண்ணுக்குள் இருந்து தண்ணீர் வருகிறது என்பது அவனை ஆச்சரியப்படுத்தியது. அந்த எஞ்ஜின்கள் இறைக்கும் அவ்வளவு நீரும் ஆற்று மணலுக்குள் இருந்தா வருகிறது என்பது அவனுக்கு பேராச்சரியமாக இருந்தது.

ஆங்காங்கே நெரிஞ்சி முட்கள் பிஞ்சு பாதங்களை பொத்தலிட்டன. வலி பொறுக்க முடியவில்லை. ஆத்து மணலில் சிறுவனை சுமந்து கொண்டு நடப்பது அம்மாவுக்கு சாத்தியம் இல்லை. மணலில் நடக்கும் போது இலவம் பஞ்சு கூட பெரும் பாரமாகத்தான் இருக்கும். வேறு வழியில்லை நடந்துதான் அவன் பாலாற்றின் மணல் திட்டைக் கடக்க வேண்டும்.

இரண்டாவது அதிசயம்: அன்று முதன் முதலில் கண்ட மருந்துவ செடியும் அதில் திரண்டிருந்த காய்களும். அப்படியே தரைப்பூசனி கொடியை போன்று அந்த செடி ஆற்று மணலில் படந்திருந்தது. விதையிட்டு, நீர் ஊற்றி காவல் காத்து வளர்த்த பின்பு செடி தரும் பழத்தை சாப்பிடுவது எப்படிப்பட்டது. விளைந்த அந்த பழம் உழைப்பின் விளைவு. அல்லது காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவது. உழைப்போ விலையோ இல்லாமல் உணவு என்பதே இல்லை போலும். அதுவே அனாமத்தாக கேட்பாரற்று விளைந்து கிடந்தால் உரிமையோடு பறிக்க தைரியமாக கை நீளும். அப்போது அது நாம் எதிர்பார்த்த பழமோ செடியோ அல்ல என்ற ஏமாற்றம் உண்டானால் எப்படி இருக்கும். இது அதை போன்று தோற்றமளிக்கும் செடிதான் ஆனால் வேறொன்று என்றால் அத்தனை ஆசையும் ஏமாற்றத்தில் போய் முடிந்துவிடும் அல்லவா. அச்சிறுவனுக்கும் அப்படித்தான் இருந்தது. ”ஐ, பிச்ச பழம்,” என்று பறிக்க ஓடியவனிடம் பெரியம்மா “டேய் நில்லுடா அது பிச்ச பழம் இல்ல. ஆத்துமுட்டிக் (ஆற்று தும்மட்டி) காய் டா அது. கசக்கும்” என்று சொல்லும் போது ஏமாற்றமாகத்தானே இருக்கும். தரை பூசனியின் சுவையும் அதன் சிவப்பான இனிப்பு நீரின் இதமும் மனதில் இருக்க கையடக்கமாக சிறிய பந்து போன்ற தரைபூசனி போன்று இருக்கும் பழம் ஒன்று கசக்கும் என்றால் மனதில் ஏற்பட்ட சுவைக்கும் இதத்திற்கும் பெரிய எமாற்றம் தானே. அந்த ஆற்று தும்மட்டி காயை இன்று எங்கு பார்த்தாலும் அன்று அந்த செடி கொடுத்த ஏமாற்றம்தான் நினைவுக்கு வரும். காட்டு செடிகள் அனைத்தும் ஏன் கசப்பான மருத்துவ செடிகளாக இருக்கின்றனவோ. அவைகள் உணவுச் செடிகளாக இருந்தால் பயிரிட்டு பாடுபட்டு உழைக்க வேண்டிய அவசியம் ஏன். அனாமத்தாக அது விளைந்து கிடக்கிறது. நாமும் உரிமையோடு பறித்து உண்ண வேண்டியதுதான்.

ஆற்றை கடந்து வேலி காத்தான் மரங்களின் வழியே செல்லும் போது அந்த பாதை எங்கு வழி நடத்தி செல்கிறது என்பது புதிராக இருந்தது. கொஞ்சம் தூரம் நடந்தவுடன் நன்கு தெரிந்த முகங்கள் சில தென்பட்டன. ஊர்காரர்கள்தான். மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். நாராயணன் அண்ணன் குரல் மிகவும் பழக்கமான குரல். பேர் சொல்லி அழைக்கிறது. இப்போது எங்கு இருக்கிறோம் என்பது ஒன்றும் புரியவில்லை. கனவு களைவது போன்று இப்போது தொண்டப்ப நல்லூர் மெல்ல மெல்ல விலகி முழுமையாக அந்த ஆற்றங்கரையோடு முடிந்துவிட்டது . அந்த பசுமை இனி இல்லை. ஊர் வந்துவிட்டது. அதோ அங்கே நீண்டு வளைந்து கிடக்கும் பக்கிங்காம் கால்வாயை கடந்தால் ஊர் வந்துவிடும். பார்க்க படிகமாக தெரியும் தெளிவான நீர். தொட்டு ஒரு துளி வாயில் வைத்தால் உப்பு சுவை. தொடையளவு தண்ணீரில் வெள்ளையான வழவழப்பான ஜெல்லி மீன்கள்  தங்கள் அத்தனைக் கால்களையும் உதைத்து உதைத்து நீந்துவது தெளிவாகத் தெரிகிறது. பிடித்து பாறையில் வீசி எறிந்தால் பசையைப் போன்று பாறை மீது சிதறி கிடக்கும் மீன்கள் அவைகள். சிறுவர்கள் கொஞ்சம் பேர் கால்வாயில் மீன் பிடிக்கும் போது விளையாட்டுக்காக அவைகளை பிடித்து கற்பாறைகளின் மீது வீசி அறைந்து கொண்டிருதார்கள். சிவப்பு ரத்தம் இல்லாத அந்த வெண் திரவம் பாறையின் மீது ஒழுகும் போது பரிதாபமாக அல்ல வேடிக்கையாகத்தான் இருந்தது. கால்வாயில் இறங்கி அதனை கடக்கும் போது ஓரிரு ஜெல்லி மீன்களின் வழவழப்பை கால்களின் உணர முடிந்தது.    

முந்தை நாள் பஸ்ஸில் ஏறி அமர்ந்தது முதல் இன்று இந்த வழவழப்பான ஜல்லி மீண்கள் கல்களில் பட்டவுடம் அருவருப்பான உணர்வடையும் வரையிலும் அன்று கண்ட தொண்டப்ப நல்லூர் ஆழ் மனதில் இனி என்றும் அழியாத அழகிய கோலமாக வரையப்பட்டுவிட்டது.          

No comments:

Post a Comment

”இது கதையல்ல மெய்”

                                                               ”இது கதையல்ல மெய்”       ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். ஆசையை விடும...