Sunday, August 25, 2024

”இது கதையல்ல மெய்”

                                                           


  ”இது கதையல்ல மெய்”

      ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். ஆசையை விடும் போது மனிதன் துன்பத்தின் பிடியில் இருந்து விடுபடுகிறான். இது என்றோ சொன்ன வாக்கானாலும் இன்றும் அதில் எவ்வளவு உண்மை பொதிந்து இருக்கிறது. இதனை மேலோட்டமாக ஒருவர் சொல்லக் கேட்கும் போது, ”ஆசை இல்லாத மனிதர் யாராவது உண்டா?” என்று நம்மிடம் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தின் மீதே எதிர் வாதம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். தங்கத்தை மையமாக வைத்து நிகழும் திரைக்கதை ஒன்றின் வழியே இந்த வாக்கியத்தை வாசிக்கும் போது அது ஏதோ துறவி ஒருவர் என்றோ சந்நதமாக உதிர்த்த வாக்கியமாக தோன்றவில்லை. அது சமூக யதார்த்தத்தில் நிலவும் அவலத்தை கண்டு வேதனையில் உதிர்த்த பரிவு மிக்க வார்த்தைகள் என்று திரைக்கதையை பார்கும் போது தோன்றுகிறது. தங்கத்தின் மீதான ஆசை மனிதனை எவ்வளவு பேராசை கொண்டவனாக ஆக்குகிறது! மேலும் அவனை அது வன்முறையாளனாகவும் மாற்றுகிறது. வரலாறு கூறவருவது; தங்கத்தின் மீதான பேராசையும், நிலத்தின் மீதான பேராசையும் மனிதர்களை காலங்கள் தோறும் வன்முறையாளர்களாக மாற்றிக் கொண்டே இருக்கின்றன என்பதுதான்.

      திரைக்கதையில் மின்னும் மஞ்சள் நிறத்தில் பேருருவாக படுத்துக் கிடக்கும் தங்கப்பாறை மனிதர்களை மயக்கும் ஒரு மாயக் கனவு. தூரத்தில் நின்று பார்த்தால் அது மின்னும் பொன் மலை. அருகில் சென்றால் உதிர்ந்து போகும் வெறும் மஞ்சல் நிற மண். அதனிடம் அருகில் செல்ல செல்ல அது தன்னிடம் வருகிறவர்களை வெறி பிடித்தவர்களாக மாற்றும் மாய பிம்பம். மனிதனுக்கு இதனால் ஏற்படும் துன்பம் நிவர்த்தி ஆகாத நோய். இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடரும் முடிவில்லா மானுட துன்பம் இது. இங்கே கேள்வி ஒன்று எழலாம். இந்த துன்பத்தின் வரலாறு வெறும் இரண்டாயிரம் ஆண்டுகள் தானா என்று. இதற்கு முன்பும் பல நூறு அல்லது பல ஆயிரம் ஆண்டுகளாக அது மானுட வாழ்க்கையின் ஆதிநிலைக்கு பின்னோக்கி போகலாம். இருப்பினும்  பெயர் தெரியா அந்த வேட்கைக்கு ஆசை என்று பெயர். அப்பெயரை வைத்தவர் வரலாற்றில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியிருக்கிறார். எல்லா துன்பங்களுக்கும் ஆசையே காரணம் என்கிறார் அவர்.

      மாயக்கனவான அந்த தங்க மலையிடம் வரும் ஒவ்வொருவரும் பேராசையுடன்தான் வருகிறார்கள். பேராசை அவர்களை இரத்தம் சிந்த வைக்கும் அளவுக்கு வன்முறையாளர்களாக மாற்றுகிறது. இந்த மாற்றம் ஒரு எல்லைக் கோட்டை தாண்டும் போது ஏற்படுகிறது. அந்த எல்லைக் கோடு சாத்தனின் சிலை. ஆசை வேண்டாம் என்று கூறும் எல்லைக் கோடு அது. அந்த எச்சரிப்பின் கோட்டை தாண்டும்போது ஆசை வன்முறை கொண்ட வன்மமாகிறது. விளைவு: நிலமெல்லாம் இரத்தம்.

      இரு கைகளை விரித்து நிற்கும் சிலை அது. சாத்தனின் விரிந்த அந்த கரங்கள் ஒருவேளை ஆசிர்வதிக்கும் கரங்களாக காட்சியளிக்கலாம். ஆனால் இந்த திரைக்கதையை பின்புலமாக வைத்து பார்க்கும் போது அது அப்படி தோன்றவில்லை. விரிந்த இரு கரங்களின் முத்திரைகள்  கூறவருவது:

      “போதும் இது மட்டிலும் போதும். மனிதர்களாகிய உங்களுக்கு இந்த தும்பமே போதும். அமைதியாகுங்கள். இதற்கு மேல் வன்முறை வேண்டாம். இதுவே போதும். வாழ்வின் இந்த தும்பமே போதும் இதற்கு மேல் வேண்டாம். அமைதலடையுங்கள்”.

      விரிந்த கரங்களின் முத்திரைகளுடன் நிற்கும் அந்த உயரமான மனிதனுக்குத்தான் இம்மானுடத்தின் மீது எவ்வளவு கரிசனை! போதும் மனிதர்களே இவ்வளவு துன்பம் மனிதனுக்கு வேண்டாம். இதுவே அதிகம். வேண்டாம் நிறுத்துங்கள் என்று அது பரிவோடு கெஞ்சுகிறது.

      அந்த பரிவின் கெஞ்சுதல் வர்ணத்தினருக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை. பேராசைக் கொண்டவர்கள் அவர்கள். ஆசை மேலும் பூர்த்தியடைய வன்முறை அவர்களுக்கு மிகவும் அவசிப்படுகிறது. எதிரிகள் பலரை கொன்றழித்து வீடு திரும்புகிறார்கள். போர் என்னும் வன்முறையின் மூலம் அடைந்த வெற்றி அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யவில்லை. மேலும் ஆசை, மேலும் வன்முறை, மேலும் தங்கம். தங்கத்தின் மீது தாங்கள் கொண்ட பேராசைசை பூர்த்தியடையச் செய்ய மேலும் வன்முறை. இன்னும் மேலும் மேலும் தங்களது ஆசையை பூர்த்தி செய்து கொள்ள வன்முறை அவர்களுக்கு அவசியப்படுகிறது. ஓர் அளவுக்கு மீறி செல்ல அவர்களுக்கு தடையாக இருப்பது அந்த சாத்தனின் சிலை. எல்லைக் கோடாக அவன் ஆசைக்கும் வன்முறைக்கும் நடுவே நிற்கிறான். வன்முறை வேண்டாம் என்று கெஞ்சுகிறான். வர்ணத்தினரை அந்த கெஞ்சுதல் எரிச்சல் அடையச் செய்கிறது. எச்சரிக்கும் அந்த எல்லைக் குறியை முதலில் அவர்கள் அகற்றியாக வேண்டும். ஆசை இன்னது என்றும் அது துன்பத்தில் கொண்டு போய் நிற்கச் செய்யும் என்றும் வரையறைகள் எதுவும் இல்லை எனில் பேராசைக்கு ஏது முடிவு. ஆனால் அச்சிலை ஆசை இன்னதென்று வரையறை செய்கிறது. இதற்கு மேல் சென்றால் அது வன்முறையாகிவிடும் என்று அது கெஞ்சுகிறது. அதை முதலில் அகற்றியாக வேண்டும். வெறும் சிலையே ஆனாலும் அதன் தலையை வெட்டியாக வேண்டும்.

      மனித வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் வன்முறை என்பது ஒருவர் மற்றோருவரை கொன்று இரத்தத்தை ஆறாக ஓடவிட்டதுதான் என்றாலும் மானுடத்தின் மீது பரிவோடு ”இதுவே போதும் மனிதர்களே” என்று கூறிய சாத்தன் சிலைகளின் தலைகளை வெட்டியதுதான் வன்முறைகளில் மாபெரும் வன்முறையாகும்.

 

No comments:

Post a Comment

”இது கதையல்ல மெய்”

                                                               ”இது கதையல்ல மெய்”       ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். ஆசையை விடும...