Monday, December 16, 2024

 

 

வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த முதல் அடி அர்னால்ட் எழுதிய, ”Light of Asia” ஆகும். அது அவரைத் தேடி அவரிடம் தானாக வந்தடைந்த புத்தகம். கொஸாம்பி இதனை மராத்தி மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறார். இதனை மொழிபெயர்ப்பில் முழுமையாக வெளிப்படாத நூல் என்கிறார்கள். மூல நூலில் இருந்து ஆறில் ஒரு பங்கு மட்டுமே வெளிப்பட்ட அந்த மராத்தி மொழிபெயர்ப்பு நூல் கொஸாம்பியை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. மூல நூல் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கிலத்தையும் கற்க தயாராக இருந்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூல் கௌதம புத்தரின் வாழ்க்கையை விவரிக்கும் கவிதை நடையில் எழுதப்பட்ட கதைசொலல் ஆகும். மேலும் மேலும் பௌத்தத்தை பற்றி கற்க விரும்புகிறார். அதற்கு மொழி அவருக்கு ஒரு தடையாக இருந்திருக்கவில்லை. ஏற்கனவே அவர். இங்கே பூனேவுக்கு வந்த நோக்கமே எப்படியாவது சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்பதுதான். அதுகூட பௌத்ததை முழுமையாக் கற்பதற்குத்தானோ! பௌத்ததைப் பற்றி மேற்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இலங்கை அல்லது நேபாளத்திற்கு போக வேண்டும் என்கிறார்கள். எந்த வித தயக்கமும் இன்றி அந்த பெரும் பயணத்திற்கு அவர் தயாராகிறார்.

இங்கே இவர்கள் பௌத்ததை ஒரு மதமாக ஆங்கிலத்தின் வழியே கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதே கால கட்டத்தில் தமிழகத்தில்  பண்டிதர் ஒருவர் தமிழின் தொல் இலக்கியப் பிரதிகள் வழியாகவும் சடங்குகள் வழியாகவும் அதனை பண்பாடாக வாசித்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பதை பௌத்த வேட்கையை வாசித்துக் கொண்டிருக்கும் போதே அதனைக் காட்சிப்படுத்தி உணர முடிகிறது. நிச்சயம் கொஸாம்பி அந்த பண்டிதரை சந்திக்கத்தான் போகிறார்.  சொந்த மண்ணிற்கே ஒரு மதம் அந்நியமாகிக் கிடப்பது என்ன ஒரு நகை முரண்! இந்த மண்ணுக்கு உரிய மத்ததை அந்நிய மொழியின் வழியாக ஒருவர் கற்க வேண்டி இருக்கிறது. அதனுடைய இறுதி எச்சங்கள் இரண்டு இடங்களில் மாத்திரமே இருந்திருக்கிறது என்பது ஆச்சரியமளிக்கவும் செய்கிறது.

இந்த மண்ணில் தோன்றிய மதம் எப்படி அதன் சுவடுகளே இல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். அது வேரூன்றிய நிலத்தில் எப்படி  பிற்போக்கான சாதிய ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகம் அதனை இல்லாமல் செய்து அதன் இடத்தில் தன்னை இடம் மாற்றம் செய்திருக்க முடியும். நிச்சயமாக ஒருவர் சாதிய மன நிலையில் இருந்து பௌத்த்தை கற்க முன் வர வாய்ப்பே இல்லை. சரஸ்வத் பிராமணரான கொஸாம்பி பௌத்தத்தை அறிய முதலில் தன்னுடைய சாதிய அடையாளத்தில் இருந்து விடுதலையாக வருகிறார். ஒரே நேரத்தில் ஒருவர் சாதிய பிடிமானம் உடையவராகவும் பௌத்த வேட்கைக் கொண்டவராகவும் இருக்க முடியாது. பௌத்த வேட்கைக் கொண்டவர் நிச்சயமாக தன்னைத்தானே சாதியத்தில் இருந்தும் அதன் பிற்போக்கான பாரம்பரியங்களில் இருந்து தன்னை விடுவுத்துக் கொண்டவராக இருக்க வேண்டும். கொஸாம்பி சாதிய கட்டுகளில் இருந்து விடுதலையடைந்த பௌத்த பிக்கு. இப்படியும் சொல்லாம் பௌத்த்தின் தேடலே அல்லது வேட்கையே அவரை விடுதலை அடைந்தவராக ஆக்கி இருக்கிறது. ஒருவர் தனது பிற்போக்கு பாரம்பரியங்களில் இருந்து விடுதலை அடைந்தினால் பௌத்த்தை  நோக்கொ பயணித்தார் என்று சொல்ல முடியாது. பௌத்த்தை நோக்கிய பயணமே அவரை விடுதலையாக்கியிருக்கிறது.

பௌத்தத்தை அறிய அந்த பாதங்கள் பெரும் பயணத்திற்கு தயாராகி விட்டன.  

 

    வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த...