இப்போது வாசிக்க அமைந்த நாவலான Picture of Dorian Gray பல நாட்களுக்கு முன்பே வாசிக்க வேண்டும் என்று விரும்பிய நாவல். என்றாலும் உடனே எடுத்து வாசிக்க முடியாத நாவலாக அது இருந்தது. வாசிப்பின் தொடர்ச்சியில் அதற்கென்று ஓர் இடம் இருக்கிறது. Dorian Grayவை வாசிக்க தூண்டுதலாக அமைந்த அதன் முந்தைய நாவல் Pinocchio. பொம்மைச் சிறுவன் பொய் பேசும் போதெல்லாம் மூக்கு நீளமாகும் மேஜிக் கதைதான் Pinocchio. அனைவருக்கும் மிகவும் தெரிந்த கதை. உயிர் கொண்ட மர பொம்மை ஒன்று உழைப்பு மற்றும் கல்வியின் மூலம் மனிதன் என்ற உயர்ந்த நிலையை அடைகிறது. இந்த உருமற்றம்தான் Pinocchioவின் ஆழ்ந்த கதை என்பது நாவலின் அடுத்த பரிமாணம். கல்வி மற்றும் உழைப்பு பற்றின வாழ்க்கை தரிசனத்தை முன் வைப்பதனால் சிறுவர்களுக்கான இந்த கதை நாவல் என்ற நிலையை அடைந்து விடுகிறது. இந்த வாழ்க்கை தரிசனம் மட்டும் இல்லை எனில் Pinocchio வெறும் சிறுவர் கதை அவ்வளவே.
காரணம் எதுவும் இன்றி Pinocchio நாவல், Dorian Gray நாவலை வாசிக்க வழி வகுத்து விட்டது. இரண்டுக்கும் என்ன தொடர்பு என்பது பற்றியெல்லாம் எதுவும் கூற இயலாது. ஏதோ ஒரு வகையில் இந்த நாவல் அந்த நாவலுக்கான வாசலைத் திறந்து விட்டுவிட்டது.
மர பொம்மையாக இருந்து கனவானாக மாற்றமடையும் சிறுவனைப் பற்றி யோசிக்கும் போது அதற்கு நேரிடையில் கல்லம் கவடு அற்ற ஒருவன் மனிதத் தன்மை அற்ற ஒருவனாக, அதுவும் மற்றவர்களின் வலிகளை உணர முடியாத கொடூர மனிதனாக மாறும் ஒருவரின் உருமற்றத்தைப் பற்றியும் யோசிக்க வேண்டி உள்ளது. Pinocchioவுக்கு எதிர் நிலையில் இருக்கும் Dorian Gray அப்படிப்பட்டவன். உண்மையில் Pinocchio போன்று Dorian Grayவில் எந்த உரு மாற்றமும் நிகழவில்லை. உரு மாற்றம் நடந்தது எல்லாம் உயிர் உள்ள மனிதனில் அல்ல மாறாக ஓவியமாக தீட்டப்பட்ட அவனுடைய உருவப் படத்தில். கிரேவின் உருவப் படம் அவனது ஓவிய நண்பர் ஒருவரால் வரையப்பட்டது. ஓவிய நண்பர் பெயர் Basil Hallward.
வரைந்து முடிக்கப்பட்ட உருவப்படம் Grayவிடம் காண்பிக்கப்படுகிறது. அதனைக் கண்ட உடனே அவனுக்குள் பேராசை ஒன்று உருவாகிறது. காலத்தால் தன்னுள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து அழிந்து போகப்போகிற தன்னுடைய இளமையின் சிதைவு அனைத்தும் அந்த உருவப்படத்திற்கு அளிக்கப்பட்டு உருவப்படத்தில் உள்ள அழியாது நிலைத்து நிற்கும் அந்த இளமை தனக்குள் கடத்தப்பட்டு என்றும் நிலைத்து இருந்து விடக் கூடாதா என்பதுதான் அந்த பேராசை.
அந்த விருப்பம் வேண்டுதலுக்கான பதில் போன்று அவனையும் அறியாமல் வரமாக பலித்து விடுகிறது. தனக்கும் தன் உருவ படத்திற்கும் இடையே ஏற்பட்ட மேஜிக்கை ஆரம்பத்தில் அவன் உணரவில்லை. உருவ படத்தின் அழியாத இளமை அப்படியே Grayவுக்கு கடத்தப்பட்டு விடுகிறது. Gray அழிவற்றவனாகிவிடுகிறான். அவனுக்கு ஏற்படும் மூப்பும், பலவீனமும் உருவ படத்திற்கான அனுபவங்களாக ஆகிவிடுகின்றன. அதே போன்று தான் செய்யும் அனைத்து தீமைகளும் அவைகளின் விளைவுகளான பாதிப்புகளும் அந்த உருவ படத்திற்கு கடத்தப்பட்டு விடுகின்றன. அவனுக்கு என்று மிச்சம் இருப்பது அவனது இளமையும் அதன் மகிழ்ச்சியும் மாத்திரமே.
தான் செய்யும் தீமைகள் அனைத்தினாலும் ஏற்படும் மனதின் குரூரங்கள் எவ்வளவு என்பது ஆரம்பத்தில் அவனுக்கு தெரியாமல் போகிறது. தான் எந்த அளவு வெறுக்கத்தக்கவன் என்பதை அவன் பார்க்கக் கூடிய நேரம் ஒன்று அவனுக்கு அமைகிறது. தன் காதலியின் தற்கொலைக்கு தானே காரணமாக அமைகிறான். அவள் இறந்த பிறகு வருத்தத்துடன் தன் உருவ படத்தை அவன் பார்க்கிறான். தன் உருவப்படத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட உடன் அதிர்ச்சியில் Gray உறைந்து போகிறான். அவன் பார்த்த உருவ படம் அதன் இளமையின் பொலிவில் இருந்து மாறுபட்டு கொடூரமான கொலைகாரனின் முகமாக அது உருமாறியிருப்பதை அவன் முதல் முதலில் பார்க்கிறான். படத்தில் இருந்த மாற்றத்தில் சிறு வேறுபாடு கூட அவனிடம் இல்லை. பாதிப்பு அனைத்தும் அந்த ஒவியத்திற்கு மட்டும்தான். அவனுக்கு இல்லை. தீமைகளின் பாதிப்புகள் அனைத்தும் உருவப்படத்திற்கு கடத்தப்பட்டு விட்டது. அழிவற்ற நிலையான இளமையை கிரே அடைந்து விட்டான்.
Gray வெறும் கதையின் நாயகனாக மட்டும் இல்லாமல், முழு ஐரோப்பியர்களின் பிரதிநிதியாகவும் இந்தக் கதையில் அவனை வாசிக்க முடியும். ஒரு ஐரோப்பியனுக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டு கொடுத்த மாபெரும் பரிசு அவன் முழு உலகத்தையும் அதன் செல்வங்கள் அனைத்தையும் ஆண்டு அனுபவிக்க முடியும் என்பதுதான். உலகத்தின் அத்தனை செல்வங்களையும் ஒருவன் அனுபவிக்க வேண்டும் எனில் அவனுக்கு குன்றாத வயதும், அழியாத இளமையும் வேண்டும். அந்த வகையில் Dorian Gray, Oscar Wilde மூலமாக மொத்த ஐரோப்பாவும் கண்ட கனவு நாயகன் என்று கற்பனை செய்து கொள்ளலாம். உலகத்தின் அனைத்து செல்வங்களையும் அதிலும் குறிப்பாக கீழைத்தேய நாடுகளின் செல்வங்கள் அனைத்தையும் ஆண்டு அனுபவிக்க குறைந்த ஆயுளைக் கொண்ட மனிதன் எவ்வளவு போதாமைக்கு உரியவன்! அதற்கு Dorian போன்று அழிவில்லாத ஒருவன் தேவைப் படுகிறான்.
அழிவற்றவன் கிரே. இருப்பினும் Dorianக்கான அழிவு அவனைத் தவிர வேறு எவராலும் சாத்தியம் இல்லை. தன் உருவப்படம் இருக்கிற வரை Dorian அழிவற்றவன். எந்த துயரமும் பாதிக்க முடியாத அவனை குற்ற உணர்வு ஒன்று விஷக் கிருமி போன்று தொற்றிக் கொள்கிறது. காதலியின் தற்கொலைக்கு தான்தான் காரணம் என்று அறிந்த பின்பும் கூட அது குறித்து அவனுக்கு கொஞ்சமும் துயரமோ குற்ற உணர்வோ ஏற்படவில்லை. ஆனால் தன் அழிவின்மைக்கு காரணமான தன் ஒவிய நண்பனை Dorian Gray கொன்று விடுகிறான். மற்ற கொலைப் பழியைக் காட்டிலும் தன் அழிவின்மையின் சிருஷ்டி கர்த்தாவைக் கொன்ற கொலைப் பழி குற்ற உணர்வாக அவனை தொற்றிக் கொள்கிறது. காதலியின் தற்கொலைக்கு காரணமான கொலைப் பழி கூட அவனை எந்தவித பாதிப்புக்கும் உள்ளாக்கவில்லை. காரணம் பாதிப்புக்கள் அனைத்தையும் அந்த உருவப்படம் எடுத்துக் கொண்டது. ஆனால் தற்போது உருவப்படமோவெனில் நேரடியாக அவன் செய்த கொலைப் பழிக்கான குற்ற உணர்வை எற்றுக் கொள்ள முடியாமல் போகிறது. கொலைப் பழியின் முழு மொத்தத்தையும் தனக்கு சொந்தமாக எடுத்துக் கொள்ள உருவப்படம் திறன் அற்று போகிறது. கொலைப் பழிக்கான குற்ற உணர்வு முழுவதையும் உருவப்படத்தோடு சேர்ந்து அவனும் அனுபவிக்கிறான். அவனுக்கு வேண்டியது எல்லாம் அந்த இரத்த கரையையை எப்படி கழுவி வெளியேற்றுவது என்பதுதான்.
ஓர் இரவில் தனது ரகசிய அறையில் Dorian Gray தன் ஓவிய நண்பன் பேசிலைக் கொலை செய்து விட்டு வெளியில் வரும் போது Oscar Wilde ஆகாசிறந்த படிமம் ஒன்றை கதையில் உருவாக்குகிறார். அந்த இரவு உணர்வுகள் அற்ற Grayயின் மனசாட்சி குற்ற உணர்வு கொண்டதாக விழிப்படையும் தருணம். விழிப்படைந்த உணர்வையும், இரவின் அந்த நேரத்தையும் உருவப்படுத்தும் படிமம் அது. இந்த படிமத்தை காட்டிலும் வேறு எந்த இலக்கிய உத்தியாலும் அந்த குற்ற மனசாட்சியை சித்திரப்படுத்திவிட முடியாது.
மயில் தன் தோகையை விரிக்கும் போது அதில் இருக்கும் எண்ணற்ற கண்கள் வானத்தின் நட்சத்திரங்ளாக வானத்தில் விரிவதை கிரே உணர ஆரம்பிக்கிறான் என்கிறார் Wilde. மயில் தொகையின் கண்கள் நட்சதிரங்களாக மாறுவதும், கோடி நட்சத்திரங்கள் விழிப்படைந்த கண்களாக அவனையே உற்றுப் பார்ப்பதையும் இந்த விரிந்த மயில் தோகையின் கண்கள் என்ற படிமத்தின் வழியே உணர முடிகிறது.
இந்த நாவலின் கதை அதன் உச்சத்தை தொட்டு திருப்புமுனை அடைவது இந்த படிமத்தின் வழியாகக் கூட என்று சொல்லலாம். மொத்த நாவலுக்கும் இந்த படிமம் ஒன்றே போதுமானது.
கொலை செய்து விட்ட பின்பு அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. குற்ற உணர்வு அவனை பின் தொடருகிறது. வாழ்க்கையில் தான் செய்த குற்றங்கள் அனைத்திற்குமான பாதிப்புகள் அனைத்தையும் தன் உருவ படத்திற்கு கடத்த முடிந்த Grayவால் கொலைக்கான குற்ற உணர்வை மட்டும் தன் உருவப்படத்துடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. கடைசியில் தன் குற்ற உணர்வே அவன் அழிவுக்கு காரணமாக அமைத்து விடுகிறது. அழிவின்மையை அளிக்கும் தன் உருவ படத்தின் மீதே அவனுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. தன் நண்பனை கொலை செய்தது போன்று தனக்கு வெறுப்பை உண்டாக்கும் தன் உருவ படத்தையும் அவன் கொலை செய்ய முற்படுகிறான். அவ்வாறு செய்வது தன்னையே கொலை செய்து கொள்வது என்பதை அவன் உணரவே இல்லை. கத்தியினால் உருவப்படத்தை குத்திவிடுகிறான். உருவப்படத்தின் இதயத்தில் குத்தப்பட்ட கத்தி நிஜத்தில் தன் இதயத்தின் மீதே குத்தப்படுகிறது. Gray இறந்த பின்பு உருவப்பபடத்தின் முதுமை அனைத்தும் உயிரற்ற Grayவின் சடலத்திற்கு கடத்தப்பட்டு விடுகிறது. நாவலின் இறுதியில் உருவப்படம் வரையப்பட்ட போது எவ்வாறு இருந்ததோ அதே இளமையின் பொலிவில் நிற்பதை Grayவின் வேலைக்காரன் காண்கிறான்.
கொலை செய்த பின்பு Gray தன் குற்ற உணர்வில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என்று மட்டும் தான் ஆசைப்பட்டானே ஒழிய அதற்கு பிராயச்சித்தமான தண்டனையை ஏற்றுக் கொள்ள அவனுக்கு மனம் இல்லை. குற்ற உணர்வில் இருந்து ஆன்மாவின் விடுதலைக்கான வழி அதற்கான பிராயச்சித்தமான தண்டனையாகத்தான் இருக்க முடியும். ஒருவேளை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை என்றாலும் கூட குற்ற உணவர்வின் பிடியில் இருந்து ஒருவன் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. கிரே அதற்கு தயாராக இல்லை. அவனுக்கு வேண்டியது எல்லாம் இறுகப் பிடித்த பிடியில் இருந்து விடுதலை. பிராயச்சித்தத்தைத் தேடுவது அல்ல. பிராயச்சித்தத்தைக் கண்டடையும் போது கிரே ஒருவேளை தன் விடுதலையடைந்த ஆன்மாவையும் கண்டடைந்து இருக்க முடியும். கிரேவின் ஆன்மா பிராயசித்தம் அல்லாத விடுதலையை மட்டுமே தேடும் சீரழ்ந்த ஆன்மா. மேலும் கிரே ஒட்டு மொத்த ஐரோப்பியர்களின் பிரதிநிதி என்று கதையில் வாசித்தால் இலக்கியங்களில் அவர்கள் கண்டறிவது தங்களது சீரழிந்த ஆன்மாவைத்தான். தான் செய்த குற்றத்திற்கு பிராயச்சித்தமாக தண்டனையைப் பெற்றுக் கொள்ள நாடும் மனிதனே உன்னத ஆன்மாவாக இருக்க முடியும். குற்றத்திற்கான விடுதலை உண்மையில் அதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்வதுதான். அதாவது பிராயச்சித்தத்தை. அதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வது அல்ல.
No comments:
Post a Comment