நம்ம ஊர்க்காரர்கள் டை கட்டுவது பார்ப்பதற்கே
மிகவும் வேடிக்கையான காட்சி. நமக்கு கச்சிதமானது கதர் சட்டையும் வேட்டியும்தான். மிக
எடுப்பான உடைகள். சில காலங்களுக்கு முன்பு கோட்டை மாட்டிக் கொண்டு இடுப்பில் வேட்டியை
கட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த முட்டை போண்டா மாதிரியான தொப்பை உடலுக்கு கோட் என்பது
மிகவும் வேடிக்கையான உடைதான். இதையெல்லாம் நமக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள் என்பதுதான்
இன்னும் புரியவே இல்லை. இன்றைய சில வாலிபர்கள் கோட்டை அணிந்துக் கொண்டு டை கட்ட மறந்து
விடுகிறார்கள். எப்படியோ மேலை நாட்டு நாகரீகம் நமக்கு முற்றிலும் ஒத்து வருவதற்கு மறுக்கிறது.
அந்த உடை நாகரிகத்தைச் சரியாக கடைபிடிப்பவர்கள் சேல்ஸ் ரெப்ரெசென்டேட்டிவ்ஸ் என்றே
நினைக்கிறேன். அதுகூட தூரத்தில் இருந்து பார்க்கும் போது மாத்திரம் தான் மிக நாகரீகத்
தோற்றத்தைக் கொடுக்கிறது. மிக அருகில் சென்று பார்க்கும் போது பாவம் விதியே என்று இந்த
உடையை அணிந்து கொள்கிறார்கள் போலும் என்ற இரக்கம் மேலிட ஆரம்பித்துவிடுகிறது. பேண்ட்
இல்லாதக் கோட்டும், டை இல்லாத கோட்டும், முடிவாக கோட்டே இல்லாமல் வெறும் சட்டையின்
மீது டை கட்டிய நாகரீகமும் ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது. அதிகாரம் நம் மீது அதீதத்தில்
திணிக்கப்பட்டு அசௌகரியத்துக்காக எதிர்ப்பைக் காட்ட வேண்டுமே என்பதன் பேரில் கோட்டு
சூட்டுக்கான உடைகளில் ஒன்றை நிராகரித்து புரட்சியைக் காட்டி விடுகிறோம். இருப்பினும்
நீ எதையாவது மாட்டிக் கொண்டே ஆக வேண்டும் என்னும் அதிகாரத்தில் அதையும் கண்டு கொள்ளாமல்
விட்டுவிடுகிறது. நோக்கம் இதுதான். இந்த மேல் நாட்டு உடையில் எதாவது இரண்டு அம்சங்களாவது
நம் உடல் மீது இருந்தாக வேண்டும்.
இவைகளையெல்லாம் மீறி ஒருவர் ஜிப்பாவை
மாட்டிக் கொண்டு அலுவலகம் செல்கிறார் என்றால் அவர் நிச்சயமாக அதிகாரத்தின் மிக உச்சியில்
இருக்கிறவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பேராசிரியர்கள் கூட விதி
விலக்குக் கிடையாது. கண்டிப்பாக டக்இன் செய்துக் கொண்டாக வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள்
மதிக்க மாட்டர்கள். எல்லா சினிமா படங்களும் இந்த ஜிப்பாவை வைத்தே பேராசிரியர்களை கேலிக்கூத்தின்
சின்னமாக மாற்றி விட்டன. இதற்கு மீறி ஒருவர் அதுவும் புதிதாக வேலைக்கு சேரும் ஒருவர்
ஜிப்பாவை உடுத்துவார் என நினைக்கிறீர்கள்? அதற்குத்தான் எந்த வித சிரமமும் இன்றி கல்வி
நிறுவனங்களே கோட்டு சூட்டை கட்டாய உடையாக மாற்றி விட்டன. வகுப்பறை வரைக்கும் செல்லலாம்
சரி. அதற்கு மீறி அந்தக் கோடை மாட்டிக் கொண்டு கல்லூரியின் காம்பவுண்டை தாண்டினால்!
நம் உடலே அந்த உடையை தையிரியமாய் தாங்கி நிற்குமா என யோசித்துப் பாருங்கள். வெட்கம்
பிடிங்கித் தின்னும். அசிங்கமாக இருக்கும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதே
வெளிநாட்டில் நாம் வேட்டியும் சட்டையுமாக நகரத்தின் சாலையில் நடந்து செல்ல நம் மனது
ஒத்துக் கொள்ளுமா? எவ்வளவு சங்கோஜமாக இருக்கும். அவர்கள் உடையை இதே போன்று நாமும் நம்மூரில்
அணிந்து கொண்டு சென்றால் என்ன நியாயம். டிக்ஸ்னரி விற்க வரும் பையன்களைப் கொஞ்சம் பாருங்களேன்.
எப்படித்தான் அந்த ஆங்கிலத்தை கற்றார்களோ தெரியவில்லை. கையில் வைத்திருப்பது விலை மதிப்பற்ற
புத்தகம். அதற்கு ஏற்றார் போன்று ஓரளவிற்கான ஆங்கிலம். போதுமே. இதற்கு மேற்கொண்டு என்ன
வேண்டும். ஒரே ஒரு சின்னக் குறைதான். அனைத்தும் நடிப்பாக நடிக்கப்படுவதுதான் பார்பாதற்கே
பரிதாபமாக இருக்கும். அதில் அவர்கள் எந்தவித எதிர்ப்பையும் காட்டவே முடியாது. அததற்கு
அந்த அந்த இடம் அவசியம். என்னை எடுத்துக் கொள்ளுங்களேன். டையைக் கழுத்தில் கட்டிவிட்டு
என்னை அண்ணா சமாதியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடக்க சொன்னால் ஊரே என்னை அப்படியே
குருகுருவென்று பார்ப்பது போன்ற வெட்கம் ஏற்படும். நிர்வாணமாக நடப்பது போன்று இருக்கும்.
இத்தனைக்கும் டை என்பது கௌரவமான உடையின் ஒரு பாகம். ஏன் இந்த அசிங்கம். அதுதான் எனக்கே
புரிய மறுக்கிறது. இதனையே ஒரு மாபெரும் ஒரு விருந்து சாலையில் கோட்டு சூட்டுக்கான முழு
உடையையும் ஒன்று விடாமல் அணியச் சொன்னால் தாராளமாக அணிந்துக் கொள்வேன். அதில் ஒரு கௌரவத்தையும்
நிச்சயமாக உணருவேன்.
இவ்வளவு பேசுகிற நமக்கு கதர் ஆடை உடுத்துவது
மாத்திரம் என்ன இயல்பான காரியமா என்ன? அதுதான் இல்லை. கதர் என்பது இயல்பிற்கான உடையேக்
கிடையாது. அது நம் நாட்டின் மேல் வர்க்கத்தினரின் கௌரவ உடை. அதை பராமரிப்பதற்கே படாத
பாடு பட வேண்டும். தொடர்ந்து அதனை துவைத்து துவைத்து ஒரு மாதத்திற்கு உடுத்திவந்தால்
எல்லாம் முடிந்தது. நம்மைப் போன்ற பிச்சைகாரன் எவரும் கிடையாது என்ற நினைப்பு முதலில்
நமக்குத்தான் ஏற்படும். கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்று ஔவையார் கதரைத்தான் சோன்னரோ
என்னவோ? அந்தக் காலத்தில் எல்லாம் பீட்டர் இங்கிலாந்து எல்லாம் ஏது. எல்லாம் பருத்தி
நூல் ஆடைதானே.
எது எப்படி இருந்தாலும் அந்த கதர் ஆடைதான்
அதிகாரத்தின் பிம்பமும் எதிர்ப்பின் சக்தியுமாகும். இதில் இரண்டில் எது வேண்டுமானாலும்
நமக்கு அதிகம் கை கொடுக்கப் போவது இந்த கதர் ஆடைதான். எனவே யாரும் கதர் ஆடையை இயல்பில்
உடுத்தும் ஆடை என்று கூறிவிடமுடியாது. நான் ஒரு நிறுவனத்தையே எதிர்க்க வேண்டும் என்றால்
நிச்சயம் அந்த பொக்கை வாய் சத்தியாகிரகியின் இந்த ஆயுதத்தைத்தான் பயன்படுத்துவேன்.
இந்தக் கதரின் மீது எந்த ஒரு ஒரு மேலை நாட்டு ஆடையின் ஒரு பகுதி கூட தன் அதிகாரத்தை
காட்டவே முடியாது. கதர் ஆடை அணிந்துக் கொண்டு அதன் மீது யாருக்காவது டை கட்டவேண்டும்
என்ற உணர்வு ஏற்படுமா என்று கொஞ்சம் யோசித்து பாருங்களேன். விகாரமாக இருக்கும். பேண்டை
அணிந்துக் கொண்டு கதர் சட்டையை டக்இன் செய்து கொள்ள முடியுமா?
காட்டன் காட்டனோடுதான் சேரும். டெரி
காட்டன் டெரி காட்டனோடுதான் சேரும். இதில் ஒன்றோடு ஒன்றை கலக்கவே முடியாது. டெரி காட்டனோடு
நாம் எந்த விதமான மாறுதல்களையும் செய்து கொள்ளலாம். அதில் நம் மனசாட்சிக்கு எந்தவித
ஆட்சேபினையும் இருக்காது. ஒரு முறை கல்லூரி ஒன்றில் பணியாற்றும் போது கட்டளை ஒன்று
பிறப்பிக்கப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக டை கட்ட வேண்டும் என்பதுதான்
அந்தக் கட்டளை. என்னுடைய துறை தலைவர் என்னை வேலையில் வைத்துக் கொண்டதே இது போன்ற கட்டளைகளை
என்மூலம் செய்யவைத்துவிட்டு கடைசியில் துறைக்கு நல்ல பேரை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான்.
கோடி ஜனங்களின் குற்றத்தைக் கழுவ ஒரே ஒரு கடவுள் போதும். ரத்தம் சொட்ட சொட்ட தொங்கவிட்டுவிடலாம்.
என் ஒருவனின் சட்டத்தின் கீழ் படிதல் என்ன அப்படி ஒரு துறைக்கே நல்ல பேரை வாங்கித்
தந்துவிடப்போகிறது என்பது இன்றுவரை புரியாத புதிராக இருந்து கொண்டு வருகிறது.
வேலைக்கும் சம்பளத்திற்கும் கட்டாயம்
கோமாளி வேசம் போட்டாக வேண்டுமே என்பதற்காக கட்டளைக்கு இசைந்தேன். தலைவரே ஒரு டையை எனக்கு
கொடுத்தார். என்ன ஒரு தயாள குணம். மஞ்சல் நிற டை. பிரிட்டீஷ் நாட் எப்படி போடுவது என்பதையும்
அவரே கற்றுத்தந்தார். அப்படியே கற்பூரமாக பிடித்துக் கொண்டேன். சட்டம் நீர்த்து போய்
ஆறுமாதம் ஆகியும் தலைவர் என்னை விடுவதாக இல்லை. டையை நான் எப்போதும் அணிந்துக் கொண்டிருக்க
வேண்டும் என்பது அவருடையக் கட்டளை. அப்போதுதானே நிர்வாகம் பார்க்கும் போதெல்லாம். யார்
இது இவன் மாத்திரம் இன்னும் டை கட்டிக் கொண்டிருக்கிறானே என்ற கச முசா பரவும். பின்பு
அதுவே ஆங்கிலத்துறையின் பேரை நிலைக்கச் செய்துவிடும். காலப்போக்கில் அந்த மஞ்சல் நிற
டை எனக்கே மிகவும் பிடித்து போய் விட்டது. அவசரத்தில் நாட்டை போடுவதும் பின்பு கழட்டுவதும்
விளையாட்டாக எனக்கு மாறிவிட்டது. சொல்லப்போனால் அரைக்கைச் சட்டைக்குக் கூட டை கட்ட
ஆரம்பித்தேன்.
மிக எச்சரிக்கையாக இதையெல்லாம் கல்லூரி
வளாகத்திற்கு உள்ளேயே வைத்து செய்து கொண்டிருந்தேன். கல்லூரி முடிந்த உடன் கழட்டி வீசி
விடுவேன். அந்த டை நீண்ட நாட்களுக்கு பின்பு மிகவும் மானசீகமான ஒரு பொருளாக மாறிவிட்டிருந்தது.
No comments:
Post a Comment