Skip to main content

அதிமேதாவி குஞ்சிதபாதம்



அகட விகடம் பத்திரிக்கையில் தனக்கு ஒரு பத்தியை ஆசிரியர்கள் ஒதுக்கியது தனது பூர்வ ஜென்மத்துப் பலன் என்று எழுத்தாளர் கட்டியங்காரன் தன்னைப் பற்றி சுமார் ஒரு மணி நேரத்திற்கு தம்பட்டம் அடித்துக் கொண்டார். எரிச்சல் தாங்க முடியவில்லை. பொதுவாக எழுத்தாளர்களின் படைப்பு என்னவோ மகா அற்புதம் ஆனால் அவர்களை நேரில் சந்தித்தால் தான் ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது. பளார் என்று ஒரு அரை விடவேண்டும் போல் தோன்றும். தாங்கள் தான் இந்த பூமியில் வாழும் ஒரே ஜீவ ராசி என்றும் தாங்கள் மாத்திரம் தான் புதிதாக சுவாசிப்பது போலவும் வாழ்வது போலவும் மற்றவர்கள் வெறும் ஜடங்கள் போலவும் நினைத்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் எழுத்தாளர்களின் நட்பு முகவும் முக்கியம். அதனால் ஏதாவது நமக்கும் கொஞ்சம் அறிவு ஊற்றெடுக்கும். நம்ம ஊர் பேராசிரியர்களுக்கு தற்பெருமை படைப்பாளிகள் எவ்வளவோ மேல். சிறிதும் எதிர்ப்புக் காட்டாமல் மௌனமாக கட்டியங்காரன் பேசியதற்கு எல்லாம் மாடு போல் தலையாட்டினேன்.


குஞ்சிதபாதத்தின் அடுத்த தொடருக்கான தலைப்பு, கருப்பொருள் என்ன என்று விசாரித்தேன். சிறிது நேரம் அமைதியானார். ஏதோ ஆழ்ந்த யோசனை. யோகிகளையும் சரி படைப்பாளிகளையும் சரி அந்த ஆழ்  யோசனையில் இருந்து டிஸ்டர்ப் செய்யவேக் கூடாது. அப்படி செய்தால் காரியம் கெட்டுவிடும். ஒன்றும் இல்லை பேசிய தலைப்பை மறந்து விடுவார்கள் அவ்வளவுதான். அவர் பாட்டிற்கு யோசனையில் அவரை மிதக்கவிட்டேன்.

ஏதோ ஞானம் பெற்றது போன்று யோசனையில் இருந்து வெளிவந்து தலையை ஆட்டினார்.

“என்னுடைய கதாநாயகன் குஞ்சிதபாதத்தை நினைக்கும் போதெல்லாம் எனக்கு தாஸ்தாவஸ்கியின் அல்யோஷா தான் நினைவிற்கு வருகிறான். அல்யோஷாவை வாசிக்கும் போதெல்லாம் மனிதன் யார் என்ற விசாரணையை நாம் மேற்கொள்கிறோம். மனிதன் என்றால் என்ன அவன் யார் என்ற மிகப் பெரிய தேடுதலை தாஸ்தாவஸ்கி அவன் மூலம் பரிசோதனை செய்திருக்கிறார்”.
நான் குறுக்கிட்டு ”ரஸ்கோல்நிக்கொவைப் பற்றி என்ன நினைக்கிறீங்க” என்று கேட்டேன்.

”அட அவன் ஒரு பைத்தியக்காரப் பயல்” தாஸ்தாவஸ்கியின் ஆரம்பகால படைப்பு அவன். அவனிடத்தில் எந்தத் தேடலுக்கும் பதில் கிடைக்காது. சொல்லப் போனால் அவன் மேற்கத்திய அப்சர்ட் கேரக்டர். அவன் ஒரு சுரைக் குடுக்கை ஒன்றுக்கும் உதவமாட்டான். தேடுதலில் ஆழம் அற்றவர்கள் தான் அவனை வாசிப்பார்கள். அவனை வைத்து நாடகம் கூட போடுகிறார்கள். ஸ்டேஜ்ல அவன நடக்க விட்டு அப்படியே வெடிக்கை பார்ப்பாங்க போலிருக்கு. ஆனால் அல்யோஷா தான் மிக முக்கியமானவன். உலக இலக்கியத்தின் உச்சகட்டம் அவன். இருப்பினும் அது வெறுமனே பரிசோதனை மாத்திரமே. தாஸ்தாவஸ்கிக்கு பதில் கிடைக்கவே இல்லை. அவர் பதிலைவிட தேடலைத்தான் அதிகம் விரும்பினார். ரஷ்யக் கிறிஸ்தவம் அவருக்கு தேவையான பதிலை பூரணமாக வழங்கவில்லை. பதில் அவர்களுக்கு சாத்தியம் இல்லை.

பதில் நம்மிடம் தான் இருக்கிறது. நம்முடைய இந்திய சித்தாந்தத்தின் அடிப்படையிலும் மேற்கத்திய கிறிஸ்தவ மத போதனையின் அடிப்படையிலும் (ஒன்றாகக் குழைத்து) இந்தத் தேடலை ஆரம்பித்து இருக்கிறேன். இதில் நம்முடைய புதுமைப்பித்தனின் “உபதேசம்” கதையை விட என்னால் சற்று சிறப்பாக என்னுடைய அடுத்தத் தொடரை வடிவமைக்க முடியும் என்று நினைக்கிறேன். முதல் தேடலுக்கே பதில் கிடைத்து விட்டது. அதனை குஞ்சிதபாதம் என்ற ஆளுமையின் மூலம் கடைந்தெடுத்திருக்கிறேன். தலைப்பு “அதிமேதாவி குஞ்சிதபாதம்”.

”பேஷ் பேஷ். தலைப்பே இவ்வளவு கேட்சியாக இருக்கிறதே” என்று நான் புலங்காகிதப்பட்டுக் கொண்டேன்.
இருப்பினும் உள்ளூர பொறாமைத் தீ காட்டியங்காரன் மீது ஏற்பட்டது. அவருக்கு போட்டியாக எப்படியாவது ஆங்கில நாளிதழின் எடிட்டோரியல் பத்தியில் நானும் காட்டுரைகளை எழுதி….” அதெல்லாம் எங்கு நடக்கப் போகிறது.

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச் (imitate) செய்யும் சொற்கள் இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள் என்று குறைவு பட்டுக் கொண்டிருப்பார். இதனால் மற்ற எழுத்தாளர்களை திட்டவும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இதனைக் கேட்க்கும் போது உள்ளூர குற்ற உணர்வு ஏற்படும். எழுதுவதற்கு தயக்கமும் ஏற்படும். எழுத்தை வீணடிக்கக் கூடாது என்று இமையம் சொல்லும் போது அவர் எதை அர்த்தப்படுத்தி பேசினார் என்பது இன்றைக்கு அவருடைய பேட்டியை இந்துவில் படித்த பின்புதான் புரிந்து கொண்டேன். இமையம் தன் எழுத்திற்கென்று சமீப காலங்களாக ஒரு கோட்ப்பாட்டை முன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். இதனை கோட்பாடு என்று சொல்வதற்கு கூட பயமாய் இருக்கிறது. காரணம் கோட்பாடு என்ற வார்த்தை முழுவதும் இப்போது தவறாக அதுவும் கல்வி புலங்களில் பேராசிரியர்களால் அறைகுறையாக புரிந்து கொள்ளப்பட்டு போதிக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இமையம் உருவாக்கும் தன்னுடைய விழுமியங்கள் (இந்த வார்த்தை கூட கொஞ்சம் சிக்கலான வார்த்தை தான்) முற்றிலும் தன்னுடைய படைப்பு சார்ந்ததாகவே இருக்க செய்கின்றன. படைப்பில் இருந்து உருவாக்கப்படும் ...