மோகமுள் நாவலில் வரும் ரங்கண்ணாவுக்கு எப்பொழுதும் வீணையைச் சுருதி சேர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். இசை பயில வரும் மாணவர்களின் அனுதினக் கடமை அது. இல்லையெனில் தூர்வாசர் சாபம்தான். பாபுவைக் கண்டால் மத்திரம் உச்சிக்கு ஏறின கோபம் சட்டென்று தணிந்து விடும். சுருதி சேர்ந்த வீணையைக் கொண்டு ரங்கண்ணா பெரிய சச்சேரி ஒன்றும் செய்யப் போவதில்லை. வெறும் சாதகம் மாத்திரம்தான். அனுதின சாதகத்திற்கும் சரி என்றோ ஒரு நாள் அரங்கேற போகிற கச்சேரிக்கும் சரி வீணையைச் சுருதி சேர்த்து வைத்திருத்தல் அவசியம். எது எப்படியோ, நன்கு சுருதி சேர்த்து வசிக்கத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் வீணை பெறும் கலைஞன் ஒருவனுக்காகக் காத்திருக்கிறது. அல்லது ரங்கண்ணா போன்றவர்களின் இலக்கணம் மீறாத அனுதின சாதகத்திற்குக் காத்திருக்கிறது. கலைஞனின் விரல்கள் பட்டதும் இசை தன் இருத்தலைக் கண்டடைந்து விடுகிறது. விரல்களின் இயக்கம் இருக்கும் வரையில், சங்கீதம் உயிர்ப்போடு இருக்கிறது. விரல்களின் ஜாலங்கள் முடிந்தவுடன் இசையும் காணாமல் போய் விடுகிறது.