Wednesday, May 30, 2018

மராட்டின் மரணம்: கலை பிரச்சாரத்திற்கே

மராட்டின் மரணம்: கலை பிரச்சாரத்திற்கே
மராட்டின் மரணம் என்ற ஓவியம் Slovene சிந்தனையாளர் Slavoj Zizekன் மூலம் அறிமுகமானது. மராட் பிரென்ச்சு புரட்சியின் அங்கத்தினன். கோர்டே என்ற பெண் இவனை சாகும்படி நெஞ்சில் கத்தியால் குத்திவிடுகிறாள். கொலை செய்த பின்பு தப்பி ஓடாமல் அங்கேயே படபடப்பில் நின்று கொண்டிருந்திருக்கிறாள். புரட்சியாளர்கள் அவளை பிடித்துக் கொண்டுபோய் கொன்றுவிடுகின்றனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு மராட்டின் நண்பனான ஓவியர் ழாக்-லூவிஸ் டேவிட் சம்பவத்தை ஓவியமாக தீட்டுகிறார். இந்த ஓவியம் பத்திரிக்கையாளன் மராட்டின் மரணம் என்றழைக்கப்படுகிறது. ஓவியர் டேவிட்  ’ரோபஸ்பியரின் தூரிகை’ என்று செல்லமாக அழைக்கப்பட்டிருக்கிறார். மராட்டின் மரணம் இவரை பெரிதும் பாதித்திருக்கிறது. வெறுமனே தன்னுடைய நண்பனுடைய மரணம் என்பதாக அவர் இம்மரணச்சம்பவத்தை அணுகவில்லை. அது ஒரு புரட்சி சிந்தனையின் மரணமாக அவர் அதனை பார்த்திருக்கிறார். நண்பனுடைய மரணத்தை ஓவியமாக்குவதில் பிரச்சனை ஒன்றும் பெரியதாக இல்லை. அப்படியே சம்பவத்தை பத்திரிக்கை செய்தியை போன்று தத்ரூபமாக வரைந்துவிட்டுப் போய் இருக்கலாம். ழாக்-லூவிஸ் டேவிட் இம்மரணத்தை தன் நண்பன் புரட்சியாளனுடைய மரணத்தின் சம்பவமாக பார்க்காமல் அதனை காலங்கள் கடந்து தொடர்ந்து புரட்சி சிந்தனை சாகடிக்கப்பட்டதினுடைய தருணமாக ஓவியப்படுத்தியிருக்கிறார்.     
பிரென்சு புரட்சியின் அங்கத்தினன் மராட் சரும நோயால் வாதிக்கப்பட்டவன். சருமபிரச்சனையை மற்றும் அதன் வேதனையை சமாளிப்பதற்கு குளியல் தொட்டியில் இருந்தாக வேண்டியிருந்திருக்கிறது. இல்லையென்றால் சரும வேதனை வாதித்துக் கொண்டே இருக்கும். வேகும் உடலுக்கு குளிர் பதம் எப்போதும் அவசியப்பட்டிருக்கிறது. தன்னுடைய பெரும்பான்மையான நேரத்தை குளியல் தொட்டியில் அமர்ந்தவாரே கழித்திருக்கிறான். எழுத்துப் பணிகளைக் கூட தொட்டியில் இருந்தவாரே செய்திருக்கிறான். அப்படி எழுதிக் கொண்டிருந்த போது கோர்டே என்ற பெண் அவன் குளியல் அரையில் நுழந்து அவன் மார்பில் கத்தியை பாச்சியிருக்கிறாள். புரட்சியாளனின் மரணம் பயந்த ஒரு பெண்ணினால் நடத்தப்பட்டிருக்கிறது. அவனுடைய மரணம் பொருளற்ற மரணமாகிவிடுகிறது. நடு ரோட்டில் புரட்சியின் போது அவன் உயிர் போய் இருந்தால் அவன் மரணம் கொண்டாடப்படிருக்கும். குளிக்கும் அறையில் எழுதிக் கொண்டிருக்கும் போது பயந்த பெண் ஒருத்தியினால் கொல்லப்பட்டிருக்கிறான்.
சிந்தனையாளன், உடல் வலுவற்றவன், சருமப்பிரச்சனைக் கொண்டவன் சாதாரணமாக கத்தியை எடுத்து சிறுபையன் கூட கொன்றுவிடலாம். மிகவும் எளிமையான செயல். இதை எழுதியோ பேசியோ சென்சேஷனல் ஆக்கியிருக்க முடியாது. செய்தியை வெளியிட்டிருந்தால் ஒரு நாளைக்குக் கூட செய்தி சூடுபிடித்திருக்காது. எளிதில் ஒரே நாளில் மராட் மக்களால் மறக்கப்பட்டிருப்பான். நிச்சயம் ஓவியம் மாத்திரமே இம்மரணத்தைக் கவித்துவப்படுத்தமுடியும். அதுவும் யதார்த்த கலைவடிவத்தில். ஒரு மாதம் கழித்து ழாக்-லூவிஸ் டேவிட் இதனை காவியப்படுத்துகிறார்.
ஒருவேளை ஒரு நாவலாசிரியன் இதனை முதன்மைப்படுத்தி எழுத முயன்றிந்தால் நிச்சயமாக கதை முழுவதும் கோர்டேவின் பக்கம் திரும்பியிருக்கும். ஏன் இந்த அபலை இவனைக் கொன்றாள் அவளுடைய பின்புலம் என்ன இந்த பெண்ணுக்கு மராட் என்ன தீங்கு செய்தான்? என கேள்விகள் வளர்ந்து கதை நாவலாக வடிவெடுத்திருக்கும்.
புரட்சியாளன் ஏன் கொல்லப்பட்டான் என்பது விவாதப் பொருளாகவே மாறியிருக்காது. இப்போதும் கூட இந்த விவாதம் மராட்டுக்காக அல்ல ரொபஸ்பியரின் தூரிகைக்காக. மராட்டின் மரணம் டேவிட்டின் ஓவியத்தின் மூலமாம புரட்சி சிந்தனையின் மரணமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை இம்மரணக்காட்சி தினசரியில் வாசிக்கப்பட்டிருக்குமானால் அதில் எந்த வித ஈர்ப்பும் இருந்திருக்காது. பரிதாபமாக இரத்தம் தோய்ந்த தொட்டியில் உடல் மிதந்து கொண்டிருக்கும்.
டேவிட்டின் ஓவியம் அந்த நிஜத்தை முற்றிலும் அழகியல் ரசனைக்கு மாற்றிவிடுகிறது. இந்த ஓவியத்தில் நிஜ சம்பவத்தில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அவைகள் வெறுமனே மாற்றங்கள் என சொல்லிவிடவும் முடியாது. இந்த ஒரு நிஜத்தின் மையப்புள்ளிக்கு Neo-Classical ஓவியத்தின் கலை நுட்பங்களை பயன்படுத்தியிருக்கிறார். இதுவரையில் செவ்வியல் கலை நுட்பங்கள் கற்பனைவாதத்திற்குத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது கற்பனைவாதம் தூக்கியெறியப்பட்டு அனைத்து அழகியல் தொழில் நுட்பங்களையும் அர்ப்பமான யதார்த்தத்தின் மீது பாய்ச்சப்படுகிறது. ழாக்-லூவிஸ் டேவிட்ன் முந்தைய ஓவியங்கள் கிரேக்க, ரோமானிய நாயகர்களை வைத்து வரையப்பட்டவைகள். இப்போது தன் காலத்தின் நாயகனை வரைய இதுவரை தான் ஓவியத்தில் பிரயோகித்திராத செயல்முறையை நிகழ்த்தப் போகிறார். ஒன்று மாத்திரம்தான் இடம் மாற்றம் செய்யப்படுகிறது – கற்பனைவாதத்தின் இடத்தில் இப்போது யதார்த்தவாதம். இதுவரை பிரயோகித்த ஓவியக்கலையின் அனைத்து தொழில் நுட்பங்களையும் யதார்த்தம் என்ற புள்ளிக்கு கொண்டு வருகிறார். அதாவது மராட் என்கிற சமகால புரட்சியாளன்.  
முதலில் மராட்டின் உடல் சரும நோயால் பாதிக்கப்பட்ட உடல். இந்த ஓவியத்தில் அவனது உடல் மிகவும் மென்மையான உடலாக காட்சியளிக்கிறது. கொலை செய்த பெண் ஓவியத்தில் காட்டப்படவில்லை. வழக்கம் போல் வெளிச்சம் அதிகம் உடலின் மீது பாய்ச்சப்பட்டிருக்கிறது. அவன் படுத்திருக்கும் குளியல் தொட்டி குளியளறைக்குள் இருப்பதாகும் ஆனால் ஓவியம் குளியல் அறை என்ற புறக்காட்சியை நீக்கி விடுகிறது. ஜன்னல்கள் ஓவியத்தில் காணப்படவில்லை. மொத்தத்தில் குளியல் தொட்டி இருக்கும் இடம் குளியளறையின் இடம் அல்ல. வெறுமனே குளியல் தொட்டியும், அதனுள் கொலைசெய்யப்பட்ட மராட்டும் அவன் சாய்ந்து படித்திருக்கும் இடத்தில் ‘வெள்ளை துணியும்’ முன்பதாக எழுதுவதற்கு பலகையின் மீது போர்த்தப்பட்ட பச்சை துணியும் அதன் பக்கத்தில் பேனா மையும் காட்சிப்படுத்தப்படுகிறது. இது அப்பட்டமாக ஒரு பத்திரிக்கையாளனுடைய மரணத்தை மாத்திரமே பதிவு செய்யும் ஓவியம்.
யதார்த்தவாதத்தின் தத்ரூபத்தை தாண்டி இலட்சியப்படுத்த வேண்டியவைகளை முதன்மைப் படுத்தும் பிரச்சார ஓவியம் இது. வெள்ளைத் துணியில் இரத்தம் தோய்க்கப்பட்டிருக்கவில்லை. இரத்தம் அதிகம் இருந்தால் அது ஓவியம் ஓவர் ஆக்ட்டிங்காக மாறிவிடும். ஜன்னலும் இல்லை. வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்பதும் புதிர். ஒருவேளை அவன் உடளுக்குள் இருந்து ஒளிரும் வெளிச்சமாகக் கூட இருக்கலாம்.  
ஓவியத்தின் வரைபட நுணுக்கங்கள் இப்போதைக்கு விளங்கவில்லை. சரியாக கிடைமட்ட மேல் மட்ட கோடுகள் வைத்து வரையப்பட்டிருக்கிறது. எனினும் சாய்ந்து படுத்திருக்கும் அவனது உடலை பாக்கும் போது கிரேக்க சிந்தனையாளன் சாக்ரட்டீசின் விஷம் அருந்தி சரிந்து கிடக்கும் உடல் போன்று தோன்றுகிறது. ஆகவே மராட் சாக்ரடீஸ் போன்று ஓவியன் ழாக்-லூவிஸ் டேவிட் காலத்து நாயகன். அதுவும் புனிதமாக்கப்பட்ட நாயகன். அவன் உடலில் இருந்து ஒளிரும் வெளிச்சம் பிரென்சு புரட்சியின் புனித நாயகன் என்ற அந்தஸ்தைக் கொடுக்கிறது.
இந்த ஓவியர் ஒரு பிரச்சாரக் கலைஞன். இலட்சியங்களை பிரச்சாரமாக கலையைக் கொண்டு பரப்புகிறான். இவரது புகழ் பெற்ற ஓவியங்கள் என இரண்டை சொல்லலாம். ஒன்று சாக்ரட்டீசின் கடைசித் தருணம், இரண்டாவது குதிரையின் மீது வீர பயணம் மேற்கொள்ளும் நெப்போலியன். தன் காலத்து மகாமனிதனைக் காட்டிலும், கெரேக்கக் காலத்து சிந்தனையாளன் சாக்ரட்டீசைக் காட்டிலும், சமகாலத்து மராட்டை வரைவதுதான் ஓவியர் ழாக்-லூவிஸ் டேவிட் மாபெரும் சவாலாக இருந்திருக்கும். அதில் அவர் பெற்ற வெற்றியே ‘மராட்டின் மரணம்’ என்ற ஓவியத்தை புகழ் பெற்றதாக்கி இருக்கிறது. யதார்த்தத்தில் எளிமைகளின் மீது நடத்தப்படும் கலை பரிசோதனைகள் தான் உயர்ந்த கலையாக மாறுகிறது. கிரேக்க தத்துவ ஞானியும், பிரென்ச்சு எம்பரரும் ஏற்கனவே பெரும் பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையில் நடைபெரும் அவளங்களையும், Guernica போன்ற படுகொலைகளையும் காவியப்படுத்துவதுதான் கலைஞனுக்கான சவால். 


Guernica 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...