Tuesday, December 31, 2019

ஜேம்ஸ் ஜாய்ஸின் Ulysses: Hades

நம்மை சுற்றின உலகத்தை கதைகளால் கட்டமைத்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் ஜேம்ஸ் ஜாய்ஸின் யுல்லிஸஸ் வாசிக்கும் போது ஏற்படுகிறது. கதைகள் மாத்திரம் அல்ல நம்பிக்கைகளாலும் அதனை கட்டமைத்து வைத்திருக்கிறோம். நம் முன்னோர்கள் உருவாக்கிய கதைகளைக் கொண்டும் நம்பிக்கைகளைக் கொண்டும் வாழ்வின் யதார்த்தத்தை அணுகுகிறோம். அல்லது இப்படியும் சொல்லலாம், வாழ்வின் யதார்த்தம் என்பதே நம்பிக்கைகள், கதைகளின் கூட்டுமொத்தம். இந்த மாயைக் கொண்டே வாழ்க்கையை அதன் பிறப்பு முதல் இறப்புவரை வாழ்ந்து முடித்துவிடுகிறோம். நம்மை சுற்றிலும் பிராண வாயு மூடியிருப்பது போன்று இந்த மாயை நம்மை ஆட்கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின், கதைகளின் கட்டமைப்பிற்கு எதாவது ஒரு ஒற்றை சொல் கொண்டு அழைப்பதற்கு வேறெதுவும் சொற்கள் அகப்படவில்லை. மாயை என்ற வார்த்தையும் அதிக மத நம்பிக்கையின் சாரம் ஏற்றப்பட்ட வார்த்தை. ஆங்கிலத்தில் உத்தேசித்த வார்த்தை என்னவோ illusion. இந்த ஜட உலகத்தை இந்த illusionனைக் கொண்டே புரிந்து கொள்கிறோம், வாழ்கிறோம். இறுதியாக இந்த illusionனைக் கொண்டே கடந்து செல்கிறோம்.

Friday, December 13, 2019

எல்லையற்ற பிரபஞ்சம், முடிவற்ற காலம், கணக்கில் அடங்கா முகங்கள்


நம்மை சுற்றி எத்தனைவிமான முகங்கள். ஒன்று போல் மற்றொன்று இல்லை. அனைத்தும் வேறுபட்ட முகங்கள். ஏதோ இரண்டு மூன்று முகங்கள் கொஞ்சம் குறைய ஒற்றுமை கொண்டிருக்கும். அவைகளேக் கூட வித்தியாசப் பட்டவைகள். ஒரே மாதிரியாக சேர்ந்தாற்போன்று ஐந்து முகங்களை காண்பது அரிது. ஏன் இத்தனை வேறு பட்ட முகங்கள் என்று கேள்வி கேட்டுக் கொண்டதே இல்லை. இதைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை. ஒரே ஜாடையில் இரண்டு முகங்களை கண்டால் அது ஆச்சரியம். ஏதோ உலக அதிசயத்தை கண்டு விட்டது போன்றதொரு வியப்பு. ஜாடை ஒன்றாக இருப்பது என்னவோ இயல்புக்கு ஒவ்வாத ஒன்றுதான்.
ஒருவரை அழைத்து இந்த உககம் முழுவதும் சுற்றித் திரிந்து அனைத்து விதமான முகங்களையும் எண்ணிக் கொண்டு வா என்று பணித்தால் அந்த வேலை முடிவின்மைக்குள் சென்று முடியும். அத்தனை முகங்களையும் நினைவில் வைத்து கொள்ள மனதின் ஞாபகத் திறன் அவ்வளவு சக்தி வாய்ந்தது அல்ல. ஒருவேளை உலகில் உள்ள அனைத்து முகங்களும் நினைவில் வைத்துக் கொள்ள சாத்தியப்படுமானால் அது போன்ற அபாரமான சிந்தனா சக்தியை பாராட்டியே ஆக வேண்டும். சாத்தியப்படாத காரியம் இது.
வேறுபட்ட அத்தனை முகங்களையும் பார்க்க வேண்டுமானால் உலகம் முழுவதையும் சுற்றி அலைய வேண்டியதில்லை. எளிமையான வழி ஒன்று உள்ளது. தாம்பரத்தில் இருந்து சென்னை கோட்டை வரை ரயிலில் பயணித்தாலே போதும். அது முழு உலகத்தையே பயணித்தற்கு சமம். இப்போது இதுதான் சாவால். ஒரு வாரத்திற்கு நாள் தவறாமல் பயணிக்க வேண்டும். முதல் நாளில் எத்தனைபேரின் முகங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறோம் என்று ஒரு கணக்கு நமக்கு நாமே போட்டுக் கொள்ள வேண்டும். ஆண் என்றால் ஆண்களின் முகங்களை மாத்திரமே கணக்கில் கொள்ள வேண்டும். பெண் என்றால் பெண்கள் மாத்திரமே.
மிகக் கடுமையாக விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று அவசியமில்லை. அவசியம் கருதியோ அழகியல் கருதியோ சில விதிவிலக்குகளை நமக்கு நாமே எடுத்துக் கொள்ளலாம். மேற்கொண்ட பணி அது மிகவும் முக்கியமானது. ஆக இந்த ரிலாக்ஸ்ஷேசன் அரை நிமிடங்களுக்கு மாத்திரமே. முறைத்து பார்த்தால் தர்ம அடி கிடைக்கும்.
ஐந்து நாட்களும் தவறாமல் இந்த முகங்களின் பதிவை தொடர வேண்டும். இதில் ஒருவரையே இன்னொரு நாள் பார்க்க நேர்ந்தாலோ அல்லது ஒரே ஜாடை கொண்ட இருவரை வாரத்தில் இரண்டு முறையாவது பார்த்துவிட்டாலோ மேற்கொண்ட பணியை உடனடியாக முடித்துக் கொள்ளலாம். இல்லையெனில் ஐந்து நாட்களும் நீங்கள் கண்ட முகங்கள் அனைத்தையும் மனப்பதிவில் வைத்துக் கொண்டு கடைசி நாளில் அவைகள் அனைத்தையும் ஓய்வில் மீண்டும் நினைவிற்கு கொண்டு வர வேண்டும். ஒன்று விடாமல் அனைத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சவால் விடுகிறேன் ஒன்று கூட உங்கள்நினைவின் திரையில் காட்சியாகாது. குறைந்தது ஐந்து முகங்களையாவது நினைவில் வைத்து கொள்ள முடியுமா என பார்த்தால் அதுவும் கூட இயலாத காரியம்.
ஒரே மாதிரியான முகங்களைக் கண்டவுடன் வியப்பில் ஆழ்ந்து போவதும் அனேக எண்ணிக்கைகளை கொண்ட கணக்கில் அடங்காத முகங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போவதும் மனித இயல்பு போன்று தோன்றுகிறது. ஏன் இது நமக்கு இயல்பாகிப் போய்விட்டது. உண்மையில் எண்ணிக்கைக்கு உட்படாத இலட்சக்கணக்காக முகங்களை கண்டு வியப்புதான் மேலிட வேண்டும். அந்த வியப்பு நமக்கு ஏற்படுவதில்லை. ஒரே ஜாடையில் இருவரை பார்த்தவுடன் அதிசயிக்கிறோம், பரவசமடைகிறோம். சினிமாவில் எம் ஜி ஆர் இரட்டை வேடத்தில் வந்தவுடன் திரைப்படத்தில் ஏதோ மேஜிக் காட்டுவது போன்று வியப்பு பார்வையாளர்களுக்கு. அந்த வியப்பு ஏன் எண்ணிக்கையில் அடங்காத முகங்களை பார்க்கும் போது ஏற்படுவதில்லை?
இப்படி வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்: ஒற்றுமையைக் காண்டு அதிசயிப்பவன் அமைப்பியல்வாதி, வேற்றுமைகளைக் கண்டு அதிசயிப்பவன் பின் அமைப்பியல்வாதி. முந்தினவர் ஆரம்பகால ரோலண்ட் பார்த்ஸ் பிந்தினவர் கட்டவிழ்த்தல் கோட்பாட்டாளர் தெரிதா. ’தெரிகிறதா’ இல்லை தெரிதா. சொல்லுங்கள் ’தெரிதா’ தெ  ரி   தா. சரி விடுங்கள், ’டெரிடா’. நல்லது இப்போது விசயத்திற்கு வருவோம். இணைகளை தேடிக் கொண்டு சென்றால் இலட்சத்தில் இரண்டு முக ஜாடைகள் தான் கிடைக்கும். இணைகளைக் கண்டுபிடித்தவுடன் ஏற்படும் ஆனந்தம் நியாயமானதுதான். ஆனால் அந்த பரவசத்திற்காக கொடுக்கப்படும் விலை அல்லது தியாகம் மிகவும் பெரியது. நூறு என்ற கணக்கில் ஒரு இணைக்காக தொண்ணூற்று எட்டு சதவீதத்தை பலிகொடுப்பதா. நூறில் அதிசயிக்க வைக்கும் ஒற்றுமை கொண்ட இரண்டு எண்கள் முக்கியமா அல்லது வித்தியாசப்பட்ட தொண்ணூற்று எட்டு எண்கள் முக்கியமா?
முதலில் வித்தியாசங்களை பார்க்கும் போது ஏற்படும் இரண்டு விதமான மன பாதிப்புகள் ஏற்படும். இவைகள் இரண்டையுமே தவிற்க வேண்டியிருக்கிறது. ஒன்று அலட்சியமாக இருப்பது. மற்றொன்று பீதியடைவது. இரண்டுமே கூடாது. வித்தியாசங்களை வரவேற்க வேண்டும் அவைகளின் வேற்றுமையைக் கண்டு ரசிக்க வேண்டும். ஒன்று போன்று மற்றொன்று இல்லை என்பது அழகான ஒன்று. அனைத்தும் புதிதானவைகள். மதம் ஒன்று, தேசம் ஒன்று, இனக்குழு ஒன்று என்று அனைத்தையும் இரண்டு எண்களுக்காக தொண்ணூற்று எட்டை தியாகம் செய்வது அறிவுடைமை அல்ல. ஒரே ஜாடை முகம் என்பது கிடையவே கிடையாது. ஒன்றை போன்று மற்றொன்று இருக்கலாம். ஒன்றை மற்றோன்று பிரதிபலிக்கலாம். இரண்டும் ஒன்றாகிவிட முடியாது. ஒருவர் ஒரு கோடி முகங்களை தேடி சென்றால் வேற்றுமை எவ்வளவு அழகானது என்று இறுதியில் ஒரு முடிவுக்கு வருவார். அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வேன் என்று ஒருவர் சவால் விட்டால் மூளை கலங்கிவிடும். எல்லாவற்றையும் ஒரு இணைக்குள் கொண்டுவந்து விடுவேன் என்று எளிமைபடுத்த முயன்றால் அது சர்வாதிகாரத்தனம். 98 அழிக்கப்பட்டுவிடும். பிரபஞ்சம் மிகபெரியது, அது தன்னுள் கொண்டுள்ள காலம் அளவற்றது. இந்த எல்லையின்மையும், முடிவின்மையும் எப்போதும் கணக்கில் அடங்காத வித்தியாசங்களை தன்னுள் வைத்துக் கொண்டு மனிதனை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
திரையில் மக்கள் பார்த்து ரசிக்கும் நட்சத்திரங்களின் முகங்கள் ஏதோ ஒரு நிலையில் அவைகளின் தனித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள தன் ஜாடையில் மற்றொரு முகத்தை தேடுகின்றன. இரட்டை என்பது பைனரி அல்ல. அது ஒன்றின் முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொள்ள தேடிக் கொள்ளும் பலவீனமான எதிர்நிலை. இரட்டை வேடங்களில் ஒருவர் பலசாலியாக இருப்பார் மற்றொருவர் கோழையாக இருப்பார். வலது கை அதிக பலத்துடனும் இடது கை அதிக பலமற்றும் இருப்பது போன்றது இது. கடைசியில் பார்க்க போனால் இரண்டும் ஒன்றுதான். பைனரி என்பது சாத்தியமற்ற நிலை. பனரி என்பது முடிவின்மையை எளிமையாக்க நடக்கும் முயற்சி.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...