Saturday, March 31, 2018

கவித்துவத்தின் உச்சங்கள்


கவித்துவத்தின் உச்சங்கள்
தந்தை மகன் உறவைப் பற்றி கட்டுரை எழுதப்போக அது “Prodigal Son” உவமைக் கதையை நினைவுப்படுத்தியது. அதைப் பற்றின நல்ல படம் இருக்குமா என தேட Rembrandtன் இந்த ஓவியம் கிடைத்தது. இந்த ஓவியரைப் பற்றி எங்களுடைய பேராசிரியர் அதிகம் பேசியிருக்கிறார். பசுமாட்டிற்கு பிடில் வாசிப்பது போன்று அவர் பேசுவது அப்போதெல்லாம் இருக்கும். ஒன்றும் விளங்காது. இப்போது மிகவும் மானசீகமான ஒரு கதைக்கான Rembrandt ன் ஓவியம் எனக்கு ஓவியத்தைப் பற்றின பெரிய திறப்பை ஏற்படுத்திவிட்டது.
ஊதாரி மகன் கதை இதுதான்; அப்பாவிடம் இருந்து சொத்தை பாகம் போட்டுக் கொண்டு தூர தேசம் செல்கிறான் இளைய மகன். காமக் களியாட்டு என தகாத வழிகளில் பணத்தை செலவழிக்கிறான். பணம் மொத்தம் காலியாகிவிடுகிறது. ஊரில் பஞ்சம் வேறு ஏற்பட்டுவிடுகிறது. ஊரில் உள்ள குடியானவன் ஒருவனிடம் தஞ்சம் புகுந்து பன்றி மேய்க்கும் தொழில் செய்கிறான். பன்றி மேய்க்கும் போது பசிக்கு பன்றியின் உணவை சாப்பிடப் போக பன்றியின் உணவை அவனிடம் இருந்து தட்டிப் பறித்துவிடுகிறார்கள். இப்போது அவனது அப்பாவின் நினைவு வருகிறது. அப்பாவின் வீட்டில் வேலைக்காரர்களுக்கே நல்ல உணவு இருக்கும் போது தான் இங்கு பன்றியின் உணவைக் கூட சாப்பிட முடியாமல் இருக்கிறேனே என்று மனம் வருந்தி வீட்டிற்கு நடையைக் கட்டுகிறான். அவனுடைய அப்பாவோ அவன் சென்ற நாள் முதல் அவன் வீடு திரும்பும் இந்நாள் வரை அவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மகன் தூரத்தில் வருவதைக் கண்டு ஓடிச் சென்று அவனை அரவணைத்துக் கொள்கிறார். அப்பாவும் மகனும் சந்திக்கும் தருணம்தான் இந்த ஓவியத்தின் காட்சி. மகனை வரவேற்கும் படமாகத்தான் முதலில் நாம் இந்த ஓவியத்தை பார்ப்போம்.  
ஓவியத்திற்குள் சூட்சமங்கள் பல உள்ளன. அதனை தேர்ச்சி பெற்ற ரசனையாளர் ஒருவர் அங்கம் அங்கமாக விளக்கும் போது வியப்பு மேலிடுகின்றது. முதலில் இந்த ஓவியத்தை வெறும் படமாக பார்க்க முயன்றேன். ஓவியத்தைப் பற்றி The Family Project.com ல் படிக்கும் போது எத்தனை புதிர்களை இந்த ஓவியம் தன்னகத்தே கொண்டுள்ளது என வியந்தேன். முதலாவது மிக அதிக வெளிச்சம் அப்பா மற்றும் மூத்த மகன் முகங்களில் செலுத்தப்பட்டிருக்கிறது. ஓவியத்தின் பின்புறமோ மிகவும் இருள் கவ்வியதாக இருக்கிறது. அப்பாவின் முகத்தின் மீது செலுத்தப்பட்ட வெளிச்சம் நற்கருணையை காட்டுவதற்கு. மூத்த மகன் (ஊதாரி மகனின் அண்ணன்) முதத்தில் இருக்கும் வெளிச்சம் அவனது பொறாமையக் காட்டுவதற்கு.

அப்பா தன் கைகளை அகல விரித்து தன் மனம் திருந்திய மகனை அரவணைக்கிறார். அந்தக் கைகள் ஒன்று ஆணின் கையாகவும் மட்றொன்று பெண்ணின் கையாகவும் இருக்கின்றன. இது தந்தைக்குள் இருக்கும் தாய்மை உள்ளடக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அதே போன்று மகனின் கால்களில் ஒரு பாதம் செருப்பு இல்லாமல் காயங்களால் நிறைந்திருக்கிறது. மற்றொன்றில் செருப்பு இருக்கிறது. வெறும் கால்கள் பலம் இழந்த நிலை அதனை தாய்மை அரவணைக்கிறது. பலம் இழந்த நிலையை இன்னும் பலம் கூட்ட மற்றொரு காலில் செருப்பு அணிந்த பக்கம் அப்பாவின் கை ஒரு ஆணின் கையாக அரவணைக்கிறது. இது இழந்த பலத்தை மீட்டெடுத்து அதிக பலம் பெறச்செய்வதற்கு.
ஓவியம் என்பது வெறும் படமாக இருக்கிறதில்லை. ஒரு கவிதையை வாசித்து பாராட்ட நமக்கு எப்படி டியூட்டர் தேவைப்படுகிறாரோ அதே போன்று ஓவியத்தை விளக்கவும் ஒரு interpreter அவசியப்படுகிறார். என் பேராசிரியர் வாசித்த பிடிலுக்கு இப்போது அர்த்தம் கிடைத்துவிட்டது என நினைக்கிறேன்.  வீடுதிரும்பும் ஊதாரி மகன் – கவித்துவத்தின் உச்சம்.

Friday, March 30, 2018

அப்பாக்களும் பையன்களும்: புரியாத புதிர்கள்



அப்பாக்களும் பையன்களும்: புரியாத புதிர்கள்
அப்பாக்கள் அனைவரும் ஒரே மாதிரி இல்லை. ஒருவரில் இருந்து மற்றொருவர் மாறுபடுகிறார். தங்கள் மகன்களைக் கண்டிக்கும் போதும் சரி, அன்பு செலுத்தும் போதும் சரி அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது. இதுவரை என்னுடைய வகுப்புகளில் மாணவர்கள் என்ற மட்டில் பல பையன்களைப் பார்த்து அன்பு செலுத்தியிருக்கிறேன், கோபப்பட்டிருக்கிறேன், கேலி செய்திருக்கிறேன், பயந்திருக்கிறேன். அனைத்து குணங்களைக் கொண்டவர்களின் கூட்டு மொத்தம் ஒரு வகுப்பறை. வேறுபட்ட குணாம்சங்களை எதிர்கொள்வது என்பது மிக சுவாரசியமான அனுபவமும் கூட. வருடா வருடம் புதிது புதிதாக இந்த தொடர் சுவாரசியம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே செல்லும். மானுடப் படைப்பு எவ்வளவு விசித்திரமானது. நம்மை நாமே நாம் பார்த்து அலுத்து போய்விட்டது. ஒரே சுற்றத்தாரைக் கண்டும் வேதனைக் கொண்டோம். வகுப்பறையோ ஒரு புதுமையின் உலகம்.
எனினும் வகுப்பறை ஒற்றை குணம் கொண்ட மாணவர்களின் கூட்டுத் தொகுதியாக இருக்க வேண்டும் என்பது நமது விருப்பம். உள்ளே நுழைந்தவுடன் அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு நம் முகத்தையே உற்று நோக்கி கவனிக்க வேண்டும். இதனைச் செய்து முடிக்க ஒரு சர்வாதிகார அடக்குமுறை அவசியப்படுகிறது. வகுப்பறைக்குள் சென்ற உடன் ஆசிரியனின் தோரணை சர்வாதிகாரியை போன்றுதான் மிடுக்குடன் இருக்கிறது. அதற்கு நேரிடையில் வித்தியாசப்பட்ட குணங்களைக் கொண்ட அறுவது எழுபது மாணவர்கள்.
அடக்குமுறை நடந்து கொண்டு இருக்கும் போதே எதிரிடையில் உள்ளுக்குள் கலகமும் வெடிக்க ஆரம்பிக்கிறது. ஒற்றை குணத்தை நோக்கி நிர்பந்திக்கும் போது அதன் பின்விளைவு கலகம். பலதரப்பட்ட குணாமசங்கள் வெளிவர துடிக்கிறது. அந்த ஐம்பது நிமிடங்கள் அவைகளை முடக்கிப் போடுகின்றன.  இவைகளின் கலவையை எதிர்கொண்டு அதனை பயன்படுத்திக் கொள்ளும் ஆசிரியர் யார் அல்லது எத்தகையவர். இந்த புள்ளியில் நாம் சிக்கித் தவிக்கிறோம். பலதரப்பட்ட பண்புகள் நம்மை நோக்கி வேகம் கொண்டு பாய்கின்றன. அவைகள் அனைத்திற்குமான ஒரு தாங்கும் கேடையமாக இருக்க நம்மால் முடிவதில்லை. வேற்றுமைகளை அழித்துவிட்டு இயந்திரம் போன்று மாணவர்கள் என்னை நோக்கி கவனிக்க வேண்டும். இது சாத்தியப்பட்டால் என்னிடம் இருக்கிற மற்றுமொறு பிரச்சனை ஒன்று இருக்கிறது: நான் செயலற்று போய் விடுவேன். மொழியற்று போய்விடுவேன்.
கூச்சல் மிகுந்த ஒரு கூட்டத்தை மீறிக் கொண்டு என் மொழி வீரியமடைய தயாராக இருக்கிறது. மௌனத்தில் ”சரி பாடம் நடத்து நான் கவனிக்கிறேன்” என கூறும் மாணவர்களின் அமைதியின் பிரேதத்தன்மையை என்னால் சகித்துக் கொள்ள முடிகிறதில்லை. வாய் திக்க ஆரம்பித்துவிடுகிறது. சென்னையில் உள்ள பிரசித்திப் பெற்ற கல்லூரிகளில் இது போன்ற நிலை உண்டு. அங்கே மாணவர்களின் அமைதி நிச்சயம் கவனிப்பதற்கானது கிடையாது.
என்னுடைய தற்போதைய மாணவர்கள் அதற்கு மாறானவர்கள். “நீ பேசு. எனக்கு ஒன்றும் புரியாது அதனால் நான் கவனிக்க மாட்டேன்” என்று சொல்லாமல் ஒருவருக்கு ஒருவர் பேச ஆரம்பித்துவிடுவார்கள். என் மொழியின் வீரியம் எவ்வளவு வலுப்படுகிறதோ அதற்கு இணையாக அவர்களின் சலனமும் வலுப்பெறுகிறது. அவர்கள் வித்தியாசமானவர்கள் வித்தியாசத்தை எதிர்கொள்ளும் திறன் தான் அதிகம் அவசியப்படும் ஒன்று.
அவர்களின் வித்தியாசப்பட்ட குண லட்சணங்கள் அனைத்தும் அவர்கள் அப்பாக்களின் வழியே வெளியாகும் ஒன்று என்பதை ஒரு தருணத்தில் கண்டுபிடித்தேன். இதனை அவர்களை அவர்கள் அப்பாக்களோடு பொருத்தி பார்க்காதவரை நமக்கு தெரியவராது. அவர்களை அவர்கள் அப்பாக்களோடு இணைத்துப் பார்க்கும் போது மானிடப்பிறவி எவ்வளவு சிறப்பானது என்பது ஆச்சரியமூட்டும் ஒன்றாகிவிடுகிறது.
அதற்கு வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஒன்று சேர இருநூறு மாணவர்களின் பெற்றோர்களை சந்திக்கும் வாய்ப்பு அது. அனைவருடனும் பேச வேண்டியவர்கள் தமிழ் பேராசிரியரும் ஆங்கிலப்பேராசிரியரும் தான். இவர்களின் முக்கியத்துவமே தனித்தன்மையானது. ஒரு மாணவரின் அப்பா என்னிடம் வந்து மிக இயல்பாக “என்ன? இவரு எப்படி?” என்றார். அவர் முகத்தைப் பார்க்கும் போதே அந்த பையனை விட அதிகம் ’கலாய்க்கும்’ அப்பா போன்று தோன்றினார். சில நிமிடங்களுக்குப் பின்னர் மிக சகஜமான மனிதர் என எனக்கு பட்டது. அதற்கு ஏற்றார் போன்று என் தாளத்தையும் மாற்றிக் கொண்டேன். “ரொம்ப பொறுப்பற்ற தன்மை. முன் பென்சில் உட்கார்ந்தால் தன்னால் பொறுப்பு கூடிவிடும்” என்றேன். அறுபது பேரும் முன் பென்சில் உட்கார முடியாதே. எதாவது ஒரு தீர்வு சொல்லியாக வேண்டுமே. அவரும் மிக இயல்பாக கேட்டுக் கொண்டு. “சரிங்க, அவரு முன் பென்ச்சில் உட்காரலைனா உங்க அப்பா ரொம்ப வருத்தப்படுவாருன்னு சொல்லுங்க. அப்புறம் கண்டிப்பா கேட்டுப்பாரு. என் மேல அவருக்கு தனி பிரியம், மரியாதை. அதனால எனக்காக அதைச் செய்வார்” என்றார்.
அவரிடம் இருந்த தகப்பனின் மேன்மை எனக்குள் மரியாதையை ஏற்படுத்தியது. ஒரு மகன் தன் தந்தையின் வருத்தத்தை தனக்கான தண்டனையாக எடுத்துக்கொள்வது மகனின் மேன்மையும் கூட. இது மிக அகம் சார்ந்த நிலையில் நடக்கும் தந்தை மகன் உரையாடல். வார்த்தைகள் தேவையில்லை. தந்தையின் சிறிய வருத்தமே மகனை திருத்த போதுமானது. அடி உதை தேவை இல்லை. முகம் வாடட்டும் மகன் அதனைப் பத்து பிரம்படிகளைக் காட்டிலும் பெரிய தண்டனையாக எடுத்துக் கொள்வான். இது தந்தை மகன் தோழமை உறவு.
இது மாத்திரமே அனைவருக்கும் பொதுவான ஒரு உறவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் இது மாறுபடும். கண்ணீரால் மகன்களைத் திருத்தும் அப்பாக்கள் உண்டு. பிரம்பைக் கொண்டு திருத்தும் அப்பாக்களும் உண்டு. மிக மிடுக்கோடு மகன்களோடு இடைபடும் அப்பாக்கள் உண்டு. அப்பாக்கள் வித்தியாசமானவர்கள். அவர்களின் தொடர்ச்சியான பையன்களும் வித்தியாசமானவர்கள். இந்த உறவுமுறையை ஆசிரியர்கள் பார்க்காதவரையில் குடும்பங்கள் உருவாக்கி அனுப்பும் பலதரப்பட்ட குணங்கள் நமக்கு புரியாத புதிராகிவிடுகிறது. இவைகள் அனைத்திற்குமான விசைதாங்கும் கேடயமாக இருக்கும் ஆசிரியன் நிலை மிகவும் நுட்பமானது. சற்று தவறினாலும் குணங்களின் வேறுப்பாடு உடையக்கூடும். கலகம் அதிகம் வெடிக்கக்கூடும்.

Tuesday, March 27, 2018

ஸ்டீபன் ஹாக்கிங்கோடு ஒரு ஆழ்நிலை உறக்கம்

ஸ்டீபன் ஹாக்கிங்கோடு ஒரு ஆழ்நிலை உறக்கம்
உலகத்திலேயே மிகவும் ஆபத்தான செயல்பாடு விவாதிப்பது என தோன்றுகிறது. கைக்களப்பு என்றால் கூட பரவாயில்லை எண்ணங்களின் உரசல்? அது புரோட்டானையும் நியூட்ரானையும் மோதவிடுவது போலிருக்கிறது. அணுச்சிதைவும் எண்ணங்களின் மோதலும் நம் உள்ளான மனோவியல் உலகத்தை சிதைவுறச்செய்து ஆட்டம்காணச் செய்கிறது. ஒருவர் ஆக்ரோஷமாக விவாதிக்க வரும்போது அணுச்சிதைவுக்கு ஒப்பான பேராபத்து ஏற்படுமோ என பயம் பீடித்துக் கொள்கிறது. விவாதத்தை தவிர்க்க வேண்டும் போல் இருக்கிறது. அதே நேரம் வீம்புக்கு விவாத களத்தில் குதித்து அதன் சூட்டில் உச்சத்திற்கு சென்று சண்டை போட்டு வெற்றிபெற வேண்டும் என்ற பேராவல். எதிராளியை சொற்களால் வீழ்த்தவேண்டும் என்பதுதான் விவாதத்தின் நோக்கமே. எதிராளி மண்ணைக் கவ்வ வேண்டும்.
ஒருமுறை வாய்ச் சண்டை போட்டபின்பு அதன் பின்விளைவுகள் மிக நீண்ட நாட்களுக்கு தொடரும் போல. எப்படி ஒரு முறை அணுச்சிதைவு நடந்து அதன் பாதிப்பு பல காலங்களுக்கு ஒரு உயிர் பரிணாமத்தையே அங்கங் குறைய பாதித்தது போன்று நம் மன அழகை அகோரமாக்கிவிடுகிறது இந்த எண்ணங்களின் அணுச்சிதைவு. இருப்பினும் ஒருவர் பேச மற்றொருவர் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்க யாராலும் முடிகிறதில்லை. எதிராளி பேசிவிட்டார் அதற்கு எதிராக அல்லது இணையாக நம்முடைய கருத்தையும் பதிவு செய்துவிட வேண்டும் என்ற துடிதுடிப்பு மேலோங்குகிறது. ஒருவரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. நான்கு பேர் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் அதற்கு சம்பந்தமே இல்லாமல் விவாதத்தின் வட்டத்திற்கு வெளியே இருந்து மூக்கை நுழைக்கிறார். அவர் அந்த நான்கு பேருடன் சம்பந்தப்படாதவர். அவர்கள் பேசும் மய்(மை)ய விசயம் ஒன்று அவருக்கும் மிகவும் தெரிந்த ஒன்று. அதைப் பற்றி தனக்கும் தெரியும் என்பது உள்ளூர அவருக்கே எவ்வளவு பெருமையான காரியம். அதைப் பற்றி ஒரு வார்த்தையாவது தன்னுடைய கருத்தைத் தெரிவித்தாக வேண்டும். இந்த வேலையில் தெரியும் என்ற அந்த ஒன்று வெறும் வார்த்தையாக மாத்திரம் வெளியே வரப்போவதில்லை. அது அதிகாரத்துடன் “எனக்கும் தெரியும்” என வெளிக்கிளம்பி புகைந்து கொண்டு வெளியேறும். எப்படி பெரிய அறிவு ஜீவிகள் பைப் பிடிக்கும் போது புகை திமிரோடு பைப்பில் இருந்து வெளியேறுமோ அதே போன்று நம்முடைய கருத்துக்கள் கூட மிடுக்குடன் வெளியேறுகின்றன.
எனக்கும் தெரியும் என்ற கருத்து வெளியேறிய உடனே அந்த கருத்து வெறுமனே சொல் வடிவம் பெற்ற உருக்கொண்ட ஒன்று கிடையாது. அது மீண்டும் சொல்லில் இருந்து சிதைந்து நச்சாக அடுத்தவரின் எண்ணத்தோடு மோத ஆரம்பிக்கிறது. இதில் பாதிப்படையப் போகிறவர் யார் என்பதுதான் மிகவும் கவலைக்கிடமான விசயம். விவாதத்தில் ஒருவர் தோற்கும் போது அவரது ஆழ்மனம் சிதைவுறுகிறது. மெல்ல மெல்ல அது உடலையும் பாதிக்க ஆரம்பிக்கிறது.
கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும். அதற்கு ஒரு முன்கோரிக்கை இருக்கிறது. விவாதிக்கப்படுவது முரண்பட்ட நம்பிக்கையுடையவர்களின் மோதலாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை சார்ந்த பொருளின் மீது அல்லது அதில் இருந்து ஒரே நம்பிக்கை என்னும் வட்டத்திற்குள் விவாதம் செயல்படுத்த வேண்டும். இதிலும் மதம் சார்ந்த விவாதங்கள் மிக மிக ஆபத்தானது. நம்பிக்கை பொருளோ அல்லது ஆளுமையோ முரண்பாடு அல்லது சார்புத்தன்மை என்ற நிலையில் இருவேறு தனி தளங்களில் இருந்து தனித்தனியாக வாதிடப்பட வேண்டும். இவைகள் ஒன்றாக ஒரே வட்டத்திற்குள் மோதவிடப்படும் போது புரோட்டானும் நியூட்டாரனும் மோதுவது போன்று ஆகிவிடுகிறது. விளைவு ஆக்கசக்திக்காக அல்ல அழிவுக்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சரி ஆக்கத்திற்காகவாவது எதாவது கிடைக்கிறதே அதற்காகவாவது கொஞ்சம் மோதவிட்டால்தான் என்ன? என விவாதிக்கலாம். ஆக்கத்திற்கு பின்பு எஞ்சியிருக்கிற கழிவு? அதனை வெடிக்கச்செய்தே ஆக வேண்டும்.
முற்போக்கு வாதிகள் ஒருபக்கமாகவும். நம்பிக்கைவாதிகள் ஒரு பக்கமாகவும் நின்று கொண்டு ஒவருக்கு ஒருவர் சம்பந்தமே இல்லாது போன்று தனித்தனியாக தங்கள் விவாதங்களை எதையோ உற்பத்தி செய்ய முற்படலாம். பலன் மின்சாரம் என்றால் அது மிகவும் உபயோகமான ஆக்கச்சக்திதான். அதற்காக சண்டையில்லாமல் இந்த மோதலை நடத்தியாக வேண்டும். நம்முடைய தேவை எல்லாம் மின்சார சக்த்திக்கான ஆற்றல் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டாக வேண்டும். ஒருவேளை புரோட்டான் அதிகம் வலுவுடையதாகி நியூட்ரானை மேற்கொண்டு வெறும் கழிவுகளையே உற்பத்தி செய்தால் மோதலின் பயன் ஒன்றுமின்மைதான். அந்த மோதலை நடைபெறசெய்யாமலேயே இருந்திருக்கலாம்.
புதிய கண்டுபிடிப்புகள், புதிய சிந்தனைகள் தான் அதிகம் நமக்கு தேவையானது. அதைவிட்டுவிட்டு மோதலின் வட்டத்திற்கு வெளியில் இருந்து மூன்றாவது ஒரு மோதலை உள்ளே கொண்டவரக் கூடவே கூடாது. அது கழிவை அதிகம் உற்பத்தி செய்யும். அந்த கழிவு ஏற்படுத்தும் சேதம் என்பது தடுக்க முடியாத ஒன்று. கழிவுதானே தேவையில்லை என்று புறக்கனிக்கவும் முடியாது. காரணம் அது மிகுந்த வீரியத்துடன் வெளியேறுகிறது. நான்கு அறிவியல் மாணவர்கள் உரையாடும் இடத்தில் மகா பக்த சிரோமனியை அருகில் அமரசெய்யக்கூடாது. அப்படியே அருகில் இருந்தாலும் நம்முடைய நலனுக்காக நாம் அமைதிக்காப்பது நலம். அதிகம் உரையாடல் செயல்படும் போது அது அருகில் சூன்யத்தில் ஓய்வில் உறங்கிக் கொண்டிருக்கும். அறியாமை விழித்தெழுந்து தன்னுடைய மெய்ஞான அறிவே சர்வமும் என்று பெருமை பேசிக்கொள்ளும். அப்படியே மெய்ஞானம் மிகுந்திருந்திருந்தால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே அதனை செயல்படுத்தி உலகத்தை நவீனப்படுத்தியிருக்கலாமே? அப்படி கேட்டால் மீண்டும் உறக்க நிலைக்குச் சென்று குரட்டை விட ஆரம்பித்துவிடும். அது ஒரு ஏகாந்த நிலை.
     ஆதலால் அந்த மூன்றாவதாக இருக்கும் செயலற்ற ஆற்றலை முடுக்கிவிடாமல் அதன் உறக்க நிலையிலேயே வைக்க வேண்டும். அது விழித்துக் கொண்டால் அதுவே கரும் வளையாமாக மாறி முழு பிரபஞ்சத்தையே விழுங்கிவிடும். அது தூங்கட்டும். நம் ஸ்டீபன் ஹாக்கிங்கோடு ஆழ்நிலை தியானத்தில் தூங்கட்டும். 

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...