Monday, January 20, 2020

James Joyce: காவியம் பாடிய கலைஞன்


ஜேம்ஸ் ஜாய்சுக்கு தன் நாட்டைப் பற்றின தேசிய காவியம் ஒன்றை எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்தது போலும். அதனை யுலிசஸ் என்ற நாவலாக எழுதிவிட்டார். காவியத்துக்கும் மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. காவியம் மண்ணைப் பற்றி பேசும் போது அம் மண்ணும் மக்களும் காலத்தால் மறக்கப்பட்டாலும் காவியத்தால் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் நினைவில் நிலை நிறுத்தப்படுகிறார்கள். இது காவியத்தில் மொழியின் சாதனை.  காவியம் பாடாத மொழி தன் மண்ணை தனக்கு சொந்தம் பாராட்டிக் கொள்ள முடியாது. சட்ட ரீதியாக மண் சொந்தமாக இல்லாமல் இருக்கலாம்.  உணர்வு ரீதியில் உரிமையின் அடிப்படையில் மண் காவியத்தால் சொந்தமாக்கப்படுகிறது.  மொழி தன் உரிமையை மண்ணின் மீது நிலை நாட்டிக் கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு காவியம் படைப்பதுதான்.  ஜாய்சுக்கு அந்த தேவை இருந்திருக்கிறது. அவர் ஒரு காவியம் இயற்றினால் போதும் அயர்லாந்து அவருக்கு சொந்தமானதாக ஆகி விடும்.  எல்லைக் கோடு இட்டு நிலத்தை ஆட்சி செய்பவன் உண்மையான அரசன் அன்று.  வேண்டுமானால் அவன் வரி வசூலித்துக் கொள்ளலாம். மண் அவனுக்கு சொந்தம் கிடையாது. ஜாய்சுக்கு மண்ணை ஆளவேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காவியம் இயற்ற பெறும் கனவு ஒன்று இருந்திருக்கிறது.  காவியம் இயற்றுவது ஒருவகையில் மண்ணை ஆளும் ஒருவனது வேட்கைக்கும் ஆளும் திறனுக்கும் இணையானதுதான். அப்படிப்பட்ட காவியம் வெறும் இலக்கிய  படைப்பு மாத்திரம் அல்ல மாறாக அது national epic ஆக இருக்க வேண்டும் என்று ஜாய்ஸ் ஆசைபட்டிருக்கிறார்.
திடீர் என்று இது போன்ற பேராவல் தோன்ற வாய்ப்பு இல்லை. யாரோ ஒருவர் இவரை அவ்வாறு எழுத பெறும் தாக்கத்தை இவர் மீது ஏற்படுத்தியிருக்க வேண்டும்.  இல்லையெனில் யுலிசஸ் என்ற மகத்தான படைப்பு அயர்லாந்தின் தேசிய காவியமாக உருபெற்றிருக்காது. National Epic  என்ற அவருடைய கனவு யுலிசஸ் என்றுதான் சொல்ல வேண்டும். ஜாய்சின் யுலிசசில் ஹோமர் நிச்சயம் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.  தலைப்பே அப்பட்டமாக சொல்கிறது, நாவல் ஒடிசியசின் பயணத்தை இழையோடச் செய்திருக்கிறது என்பதை.  எனினும் இக்காவியத்தை எழுத தூண்டியது செர்வான்டஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.  தன் படைப்பு டான் குவிக்சாட் போன்று இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை ஜாய்ஸ் வெளிப்படையாக சொல்ல வில்லை. ஆனால் ஹேம்லட் மீதான தனது பற்றாசையை நாவலின் இழைப்பின்னலாக பின்னி இழையோட செய்திருக்கிறார்.
ஹோமரின் ஒடிசியும் சேக்‌ஷ்பியரின் ஹேம்லட்டுமே நாவலின் கட்டுமானப் போருட்கள். இதில் குவிக்சாட் என்ற பாத்திரத்தைப் பற்றி ஒரே ஒரு குறிப்பு மட்டுமே நாவலில் வருகிறது.  அந்த ஒரே ஒரு குறிப்பு மாத்திரம் போதும் மொத்த யுலிசசை டான் குவிக்சாட்டின் பாதிப்பு என்று சொல்லி விட.
Did you hear Miss Mitchell's joke about Moore and Martyn? That Moor is Martyn's wild oats? Awfully clever, isn’t it? They remind me one of Don Quixote and Sancho Panza. Our national epic has yet to be written, Dr Segerson says. Moore is the man for it. (Ulysses,  210) (டான் குவிக்சாட் Moore ஒருவனால் சொல்லப்பட்ட கதை என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது)
பாதிப்பு ஏற்படுத்திய படைப்பு வேண்டுமானால் பெறும் பாராட்டுக்களை அப்படைப்பின் மீது தெரிவிக்கலாம். பாதிப்படைய செய்கின்ற அனைத்தும் தான் அதுவாகவே மாற உடன்படுத்திக் கொள்ளும். ஜாய்ஸ் தன்னை ஒரு சேச்ஷ்பியராக, ஹோமராக பவித்துக் கொள்கிறார். அங்கே ஜாய் வேறு வழியின்றி தன் பிம்பத்தை அல்லாத வேறு ஒன்றை அடைய ஆசைப்படுகிறார். தனதல்லாத வேறொரு முகமான ஹேம்லட்யையும்,  யுல்லிசசையும் திறம்பட தன் படைப்பில் உருவாக்கி இருக்கிறார் . இது வரையில் அவ்விருவரின் தாக்கம் வெறும்  யுலிசசில் இலக்கியபடைப்பு மாத்திரமே. யுல்லிசஸ் என்ற நாவல் தேசிய காவியமாக உருப் பெற இவர்கள் அல்லாத முன்றாமவர் தேவைப் படுகிறார்.  அந்த மூன்றாமவர்வரான செர்வான்டஸ் யுலிசசில் தன் முகத்தை மறுவார்ப்பு செய்யாமல் ஜாய்சை தனித்த முகமாக மாற்றுகிறார் . செர்வான்டசின் டான் குவிக்சாட் ஐரோப்பிய நாவல்கள் அனைத்துக்கும் ஆன ஊற்றுக்கண் என்று சொல்லலாம் . அதில் இருந்து இந்த ஐரிஷ் நாவல் கூட தப்ப முடியாது போலும். ஜாய்ஸ் இதை ஒப்புக் கொள்ள  மாட்டார். அவரது விமர்சகர்களேக் கூட. பாதிப்பை எற்படுத்தாத எதுவும் மற்றொன்றை தன் இயல்பான படைப்பாக மாற்றாது. யுலிசஸ் ஒரு தன் இயல்பான ஐரிஷ் நாவலாக இருப்பதற்கு டான் குவிக்சாட்டும் சான்சோ பான்சோவும் முக்கிய காரணங்கள்.
வேண்டுமானால் ஸ்டீஃபன் டெடலஸ்சை டான் குவிக்சாட்டாகவும் புளூமை சான்சோவாகவும் பாவித்துக் கொள்ளலாம். இதில் என்ன கெட்டு விடப் போகிறது. முதலாவதாக டான் குவிசாட் எப்படி ஸ்டீஃபன் டெடலஸாக இருக்க முடியும் அல்லது புளும் எப்படி சான்சோவாக இறுக்க முடியும் என யோசிக்கலாம். புளூம் கதைப்படி டெடலசுக்கு தந்தையின் ஸ்தானத்தில் இருக்கிறான். தந்தையை தேடி வீட்டை விட்டு கிளம்புகிற டெலிமேக்கஸ் போன்று ஸ்டீபன் தன் ஒருநாள் டப்லின் நகர பயணத்தில் புளூமை  தன் தந்தையாக கண்டடைகிறான். குவிக்சாட் தன் சாகச பயணத்தில் கண்டடையும் தன் சாகச பயணத்தின் தோழன் சான்சோ. ஓரிடத்தில் குவிக்சாட் சான்சொவை மகன் என்று அழைக்கிறான். அப்படியே பார்த்தாலும் இரண்டு ஒப்புமைகளும் பொருந்தாமல் போகின்றன.  ஹேம்லட் மூலம் ஜாய்ஸ் தீர்வு ஒன்றை தருகிறார். அது, "He is in my father. I am in his son." மேலும் இதனை consubstantiality என்று அழைக்கிறார். இது தந்தையில் மகனையும், மகனில் தந்தையும் காண்பதாகும். ஜாய்சே இந்த சலுகையை நமக்கு அளிக்கிறார். மேற்கூறிய இந்த பொருத்தமின்மை இப்பொது இந்த consubstantiality தியரி  மூலம் பொருந்தி போகிறது. செர்வான்டஸ் என்ற தந்தைப் பிரதி பெற்றெடுத்த மகன் பிரதிதான் ஜாய்சின் யுலிசஸ். அல்லது டெலிமேக்கசாக யுலிசஸ் என்னும் நாவல் கண்டடைந்த தந்தை பிரதிதான் ஒடிசியஸ் என்னும் டான் குவிசாட்.  ஒரு வகையில் ஜாய்சும் செர்வான்டசும் ஒன்றுதான். இருவரும் நாடற்றவர்கள்.  செர்வான்டஸ் தன்  நாவலை ஸ்பெனின்  national epic  ஆக படைத்துப் அப்போது ஆட்சி செய்த பெர்டினான்ட் மற்றும் இசபெல்லாவுக்கும் மேலாக உயர்ந்துவிட்டார். ஜாய்ஸ் தன் தாய் மண்ணை யுல்லிசஸ் மூலம் சொந்தமாக்கிக் கொண்டார். காவியம் பாடுகிற கலைஞன் அரசனைக் காட்டிலும் மேலானவன். அவன் மண்ணை தனதாக்கிக் கொள்கிறான். வரி வசூலிப்பவன் மன்னன். மண்ணை ஆள்பவன் காவியம் படைக்கும் கலைஞன்.


ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...