Wednesday, May 30, 2018

மராட்டின் மரணம்: கலை பிரச்சாரத்திற்கே

மராட்டின் மரணம்: கலை பிரச்சாரத்திற்கே
மராட்டின் மரணம் என்ற ஓவியம் Slovene சிந்தனையாளர் Slavoj Zizekன் மூலம் அறிமுகமானது. மராட் பிரென்ச்சு புரட்சியின் அங்கத்தினன். கோர்டே என்ற பெண் இவனை சாகும்படி நெஞ்சில் கத்தியால் குத்திவிடுகிறாள். கொலை செய்த பின்பு தப்பி ஓடாமல் அங்கேயே படபடப்பில் நின்று கொண்டிருந்திருக்கிறாள். புரட்சியாளர்கள் அவளை பிடித்துக் கொண்டுபோய் கொன்றுவிடுகின்றனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு மராட்டின் நண்பனான ஓவியர் ழாக்-லூவிஸ் டேவிட் சம்பவத்தை ஓவியமாக தீட்டுகிறார். இந்த ஓவியம் பத்திரிக்கையாளன் மராட்டின் மரணம் என்றழைக்கப்படுகிறது. ஓவியர் டேவிட்  ’ரோபஸ்பியரின் தூரிகை’ என்று செல்லமாக அழைக்கப்பட்டிருக்கிறார். மராட்டின் மரணம் இவரை பெரிதும் பாதித்திருக்கிறது. வெறுமனே தன்னுடைய நண்பனுடைய மரணம் என்பதாக அவர் இம்மரணச்சம்பவத்தை அணுகவில்லை. அது ஒரு புரட்சி சிந்தனையின் மரணமாக அவர் அதனை பார்த்திருக்கிறார். நண்பனுடைய மரணத்தை ஓவியமாக்குவதில் பிரச்சனை ஒன்றும் பெரியதாக இல்லை. அப்படியே சம்பவத்தை பத்திரிக்கை செய்தியை போன்று தத்ரூபமாக வரைந்துவிட்டுப் போய் இருக்கலாம். ழாக்-லூவிஸ் டேவிட் இம்மரணத்தை தன் நண்பன் புரட்சியாளனுடைய மரணத்தின் சம்பவமாக பார்க்காமல் அதனை காலங்கள் கடந்து தொடர்ந்து புரட்சி சிந்தனை சாகடிக்கப்பட்டதினுடைய தருணமாக ஓவியப்படுத்தியிருக்கிறார்.     
பிரென்சு புரட்சியின் அங்கத்தினன் மராட் சரும நோயால் வாதிக்கப்பட்டவன். சருமபிரச்சனையை மற்றும் அதன் வேதனையை சமாளிப்பதற்கு குளியல் தொட்டியில் இருந்தாக வேண்டியிருந்திருக்கிறது. இல்லையென்றால் சரும வேதனை வாதித்துக் கொண்டே இருக்கும். வேகும் உடலுக்கு குளிர் பதம் எப்போதும் அவசியப்பட்டிருக்கிறது. தன்னுடைய பெரும்பான்மையான நேரத்தை குளியல் தொட்டியில் அமர்ந்தவாரே கழித்திருக்கிறான். எழுத்துப் பணிகளைக் கூட தொட்டியில் இருந்தவாரே செய்திருக்கிறான். அப்படி எழுதிக் கொண்டிருந்த போது கோர்டே என்ற பெண் அவன் குளியல் அரையில் நுழந்து அவன் மார்பில் கத்தியை பாச்சியிருக்கிறாள். புரட்சியாளனின் மரணம் பயந்த ஒரு பெண்ணினால் நடத்தப்பட்டிருக்கிறது. அவனுடைய மரணம் பொருளற்ற மரணமாகிவிடுகிறது. நடு ரோட்டில் புரட்சியின் போது அவன் உயிர் போய் இருந்தால் அவன் மரணம் கொண்டாடப்படிருக்கும். குளிக்கும் அறையில் எழுதிக் கொண்டிருக்கும் போது பயந்த பெண் ஒருத்தியினால் கொல்லப்பட்டிருக்கிறான்.
சிந்தனையாளன், உடல் வலுவற்றவன், சருமப்பிரச்சனைக் கொண்டவன் சாதாரணமாக கத்தியை எடுத்து சிறுபையன் கூட கொன்றுவிடலாம். மிகவும் எளிமையான செயல். இதை எழுதியோ பேசியோ சென்சேஷனல் ஆக்கியிருக்க முடியாது. செய்தியை வெளியிட்டிருந்தால் ஒரு நாளைக்குக் கூட செய்தி சூடுபிடித்திருக்காது. எளிதில் ஒரே நாளில் மராட் மக்களால் மறக்கப்பட்டிருப்பான். நிச்சயம் ஓவியம் மாத்திரமே இம்மரணத்தைக் கவித்துவப்படுத்தமுடியும். அதுவும் யதார்த்த கலைவடிவத்தில். ஒரு மாதம் கழித்து ழாக்-லூவிஸ் டேவிட் இதனை காவியப்படுத்துகிறார்.
ஒருவேளை ஒரு நாவலாசிரியன் இதனை முதன்மைப்படுத்தி எழுத முயன்றிந்தால் நிச்சயமாக கதை முழுவதும் கோர்டேவின் பக்கம் திரும்பியிருக்கும். ஏன் இந்த அபலை இவனைக் கொன்றாள் அவளுடைய பின்புலம் என்ன இந்த பெண்ணுக்கு மராட் என்ன தீங்கு செய்தான்? என கேள்விகள் வளர்ந்து கதை நாவலாக வடிவெடுத்திருக்கும்.
புரட்சியாளன் ஏன் கொல்லப்பட்டான் என்பது விவாதப் பொருளாகவே மாறியிருக்காது. இப்போதும் கூட இந்த விவாதம் மராட்டுக்காக அல்ல ரொபஸ்பியரின் தூரிகைக்காக. மராட்டின் மரணம் டேவிட்டின் ஓவியத்தின் மூலமாம புரட்சி சிந்தனையின் மரணமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை இம்மரணக்காட்சி தினசரியில் வாசிக்கப்பட்டிருக்குமானால் அதில் எந்த வித ஈர்ப்பும் இருந்திருக்காது. பரிதாபமாக இரத்தம் தோய்ந்த தொட்டியில் உடல் மிதந்து கொண்டிருக்கும்.
டேவிட்டின் ஓவியம் அந்த நிஜத்தை முற்றிலும் அழகியல் ரசனைக்கு மாற்றிவிடுகிறது. இந்த ஓவியத்தில் நிஜ சம்பவத்தில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அவைகள் வெறுமனே மாற்றங்கள் என சொல்லிவிடவும் முடியாது. இந்த ஒரு நிஜத்தின் மையப்புள்ளிக்கு Neo-Classical ஓவியத்தின் கலை நுட்பங்களை பயன்படுத்தியிருக்கிறார். இதுவரையில் செவ்வியல் கலை நுட்பங்கள் கற்பனைவாதத்திற்குத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது கற்பனைவாதம் தூக்கியெறியப்பட்டு அனைத்து அழகியல் தொழில் நுட்பங்களையும் அர்ப்பமான யதார்த்தத்தின் மீது பாய்ச்சப்படுகிறது. ழாக்-லூவிஸ் டேவிட்ன் முந்தைய ஓவியங்கள் கிரேக்க, ரோமானிய நாயகர்களை வைத்து வரையப்பட்டவைகள். இப்போது தன் காலத்தின் நாயகனை வரைய இதுவரை தான் ஓவியத்தில் பிரயோகித்திராத செயல்முறையை நிகழ்த்தப் போகிறார். ஒன்று மாத்திரம்தான் இடம் மாற்றம் செய்யப்படுகிறது – கற்பனைவாதத்தின் இடத்தில் இப்போது யதார்த்தவாதம். இதுவரை பிரயோகித்த ஓவியக்கலையின் அனைத்து தொழில் நுட்பங்களையும் யதார்த்தம் என்ற புள்ளிக்கு கொண்டு வருகிறார். அதாவது மராட் என்கிற சமகால புரட்சியாளன்.  
முதலில் மராட்டின் உடல் சரும நோயால் பாதிக்கப்பட்ட உடல். இந்த ஓவியத்தில் அவனது உடல் மிகவும் மென்மையான உடலாக காட்சியளிக்கிறது. கொலை செய்த பெண் ஓவியத்தில் காட்டப்படவில்லை. வழக்கம் போல் வெளிச்சம் அதிகம் உடலின் மீது பாய்ச்சப்பட்டிருக்கிறது. அவன் படுத்திருக்கும் குளியல் தொட்டி குளியளறைக்குள் இருப்பதாகும் ஆனால் ஓவியம் குளியல் அறை என்ற புறக்காட்சியை நீக்கி விடுகிறது. ஜன்னல்கள் ஓவியத்தில் காணப்படவில்லை. மொத்தத்தில் குளியல் தொட்டி இருக்கும் இடம் குளியளறையின் இடம் அல்ல. வெறுமனே குளியல் தொட்டியும், அதனுள் கொலைசெய்யப்பட்ட மராட்டும் அவன் சாய்ந்து படித்திருக்கும் இடத்தில் ‘வெள்ளை துணியும்’ முன்பதாக எழுதுவதற்கு பலகையின் மீது போர்த்தப்பட்ட பச்சை துணியும் அதன் பக்கத்தில் பேனா மையும் காட்சிப்படுத்தப்படுகிறது. இது அப்பட்டமாக ஒரு பத்திரிக்கையாளனுடைய மரணத்தை மாத்திரமே பதிவு செய்யும் ஓவியம்.
யதார்த்தவாதத்தின் தத்ரூபத்தை தாண்டி இலட்சியப்படுத்த வேண்டியவைகளை முதன்மைப் படுத்தும் பிரச்சார ஓவியம் இது. வெள்ளைத் துணியில் இரத்தம் தோய்க்கப்பட்டிருக்கவில்லை. இரத்தம் அதிகம் இருந்தால் அது ஓவியம் ஓவர் ஆக்ட்டிங்காக மாறிவிடும். ஜன்னலும் இல்லை. வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்பதும் புதிர். ஒருவேளை அவன் உடளுக்குள் இருந்து ஒளிரும் வெளிச்சமாகக் கூட இருக்கலாம்.  
ஓவியத்தின் வரைபட நுணுக்கங்கள் இப்போதைக்கு விளங்கவில்லை. சரியாக கிடைமட்ட மேல் மட்ட கோடுகள் வைத்து வரையப்பட்டிருக்கிறது. எனினும் சாய்ந்து படுத்திருக்கும் அவனது உடலை பாக்கும் போது கிரேக்க சிந்தனையாளன் சாக்ரட்டீசின் விஷம் அருந்தி சரிந்து கிடக்கும் உடல் போன்று தோன்றுகிறது. ஆகவே மராட் சாக்ரடீஸ் போன்று ஓவியன் ழாக்-லூவிஸ் டேவிட் காலத்து நாயகன். அதுவும் புனிதமாக்கப்பட்ட நாயகன். அவன் உடலில் இருந்து ஒளிரும் வெளிச்சம் பிரென்சு புரட்சியின் புனித நாயகன் என்ற அந்தஸ்தைக் கொடுக்கிறது.
இந்த ஓவியர் ஒரு பிரச்சாரக் கலைஞன். இலட்சியங்களை பிரச்சாரமாக கலையைக் கொண்டு பரப்புகிறான். இவரது புகழ் பெற்ற ஓவியங்கள் என இரண்டை சொல்லலாம். ஒன்று சாக்ரட்டீசின் கடைசித் தருணம், இரண்டாவது குதிரையின் மீது வீர பயணம் மேற்கொள்ளும் நெப்போலியன். தன் காலத்து மகாமனிதனைக் காட்டிலும், கெரேக்கக் காலத்து சிந்தனையாளன் சாக்ரட்டீசைக் காட்டிலும், சமகாலத்து மராட்டை வரைவதுதான் ஓவியர் ழாக்-லூவிஸ் டேவிட் மாபெரும் சவாலாக இருந்திருக்கும். அதில் அவர் பெற்ற வெற்றியே ‘மராட்டின் மரணம்’ என்ற ஓவியத்தை புகழ் பெற்றதாக்கி இருக்கிறது. யதார்த்தத்தில் எளிமைகளின் மீது நடத்தப்படும் கலை பரிசோதனைகள் தான் உயர்ந்த கலையாக மாறுகிறது. கிரேக்க தத்துவ ஞானியும், பிரென்ச்சு எம்பரரும் ஏற்கனவே பெரும் பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையில் நடைபெரும் அவளங்களையும், Guernica போன்ற படுகொலைகளையும் காவியப்படுத்துவதுதான் கலைஞனுக்கான சவால். 


Guernica 

Thursday, May 17, 2018

Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்போலியன் என்கிற புலிகேசி மன்னர்

53 best Madame Tussaud images on Pinterest | Madame tussauds, Wax ...

Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்போலியன் என்கிற புலிகேசி மன்னர்


எந்தவித முன் தகவலும் இன்றி ஓர் இடத்தையோ நபரையோ சென்று பார்க்கும் போது இடமும் நபரும் அடையாளமற்று ஆர்வத்தை தூண்டாமல் இருப்பார்கள். பிரமிப்பும் ஆர்வமும் முன் தகவலின் பேரில் ஏற்படுகின்ற ஒரு மனக் கிளர்ச்சியோ என தோன்றுகிறது. அது வைரமே என்றாலும் பாராட்ட வைரம் என்ற முன் தகவலும் அறிவும் அவசியப்படுகின்றன. அது இல்லாத பட்சத்தில் வைரம் வெறும் கண்ணாடி. பார்வையிடுபவர் முன்பு ஒரு பொருள் ஜடமாக நின்று கொண்டிருக்கும் போது (உயிர் கொண்ட - உயிர் அற்ற) அந்த இரண்டு பேர்கள் மத்தியிலும் எந்த உரையாடலும் நடைபெறுவதில்லை. உயிர் கொண்டவரை கிளர்ச்சியூட்ட ஜடப்பொருள் அசைய வேண்டும். இல்லையென்றால் தன்னை பார்க்க வருபவர் தன்னைப் பற்றின முழு அறிவையும் பெற்றிருக்க வேண்டும். முன்னறிவு ஜடப்பொருளை அசையச் செய்கிறது. இல்லை என்றால் சூன்யத்தை ஜடப்பொருள் தன்னைச் சுற்றி வளையமிட்டுக் கொள்ளும். பல மணி நேரங்கள் முறைத்துப் பார்த்தாலும் அமைதியில் இருவரும் நிலைத்திருப்பர். மிக பிரபலமான மனிதர்களை சந்திக்க சென்றாலும் இதுதான் கதை. அவர் தன்னைப் பற்றி பேசவே மாட்டார். சென்று பார்க்கிற நமக்குத்தான் முன் அறிவு அவசியப்படுகிறது. அது நெப்போலியனே என்றாலும் நான்கு பேர் நல்லவிதமாக அவரைப் பற்றி நாலு வார்த்தைகள் முன்னமே சொல்லியிருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் உள்ள Madam Tussuads அருங்காட்சியகம் லண்டனில் உள்ளது போன்று கிடையாது. இங்கும் மெழுகினால் செய்யப்பட்ட பிரபலமான உருவங்களை உள்ளே சென்றால் பார்க்க முடியும். முதலில் Madam Tussuads யார் என்றே தெரியாவிட்டால் முழு அருங்காட்சியகமே பொருள் அற்ற ஒன்றுதான். அரக்க பறக்க விக்கி பீடியாவில் பெயரை டைப் செய்தால் தகவல்கள் அள்ளி இறைக்கப்படும். வெறும் தகவல்கள் கூட ஆர்வத்தை தூண்டுவதில்லை. எங்கோ எதோ ஒரு புள்ளியில் ஆர்வம் தூண்டப்பட வேண்டும். அப்புள்ளி தான் முன்னர் சேகரித்த அனைத்து தகவல்களையும் மூளைக்குள் அறிவாக கடத்தும். ஆர்வத்தின் அப்புள்ளி எப்போது கண்டடையப்படும்? Madam Tussuadsன் வாழ்க்கை சரித்திரம் மிகவும் சுவாரசியமானது. இருப்பினும் அச்சுவாரசிய சரித்திரம் அதாவது விக்கி பீடியாவில் சேகரித்த அச்சரித்திர தகவல் பார்ப்பவருக்கு சுவாரசியமாக ஒரு புள்ளியில் மாறவேண்டியிருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல அது உலகமே அறிந்த நெப்போலியனாகவே இருந்தாலும் அவர் சுவாரசியமாக மாறுகிற ‘புள்ளி’ அதுதான் முக்கியம்.
அருங்காட்சியகத்தில் உள்ளே நுழைந்தால் அனைவருக்குமே சுவாரசியம் கொடுக்கும் இடமாகத்தான் அவ்விடம் அமையும். காரணம் சர்வதேச மற்றும் இந்திய அளவில் உள்ள மிகப்பெரிய பிரபலங்களின் உருவ பொம்மைகள் தத்ரூபமாக நிஜ உருவங்கள் போன்று நின்று கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டு பிரதமருடைய உருவப்படிமமும் அங்கு உள்ளது. அதுவும் ஒருவகையில் சுவாரசியம்தான். எனினும் ஆச்சரியமூட்டும் உருவ பொமையாக ஒன்றை பார்த்தாக வேண்டும். அனைவரும் நன்கு பரிட்சயமானவர்கள். அவர்களை கண்டு வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது. ஒருவேளை நானூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒருவருடைய உருவ பொம்மை அங்கு இருந்தால் முழு அருங்காட்சியகமும் அறிவுக் களஞ்சியம். சம காலத்தின் மனிதர்கள் அறிந்து கொள்வதற்கானவர்கள் கிடையாது. சம காலத்தில் இருந்து இன்னும் இருநூறு ஆண்டுகள் அவர்கள் பயணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அறிந்து கொள்வதற்கானவர்கள். அப்படிப்பட்டவர்களின் உருவ பொம்மை தத்ரூபமாக அருங்காட்சியகத்தில் இடம் பெற்றால் அதுதான் அறிதலின் புள்ளி.
பார்ப்பவர்களைச் சுற்றி பிரபலங்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ள சிரித்த முகத்தோடு நின்று கொண்டிருக்கிறார்கள். இலக்கிய கிறுக்கு ஒன்று இங்கிருந்து சென்றால் பிரபலங்கள் அனைத்தும் அசட்டை செய்யப்படுவார்கள். அப்படிப்பட்ட கிறுக்குகளுக்கு இவ்வருங்காட்சியகத்தில் இரண்டே இரண்டு‘கள்’ மாத்திரம்தான் சுவாரசியம் தரும். அப்படி சுவாரசியம் ஏற்படாவிட்டால் ஆச்சரியப்படாதவர் இலக்கியக் கிறுக்கு என்று தன்னை பற்றி சொல்லிக் கொள்ள முடியாது.
இலக்கிய கிறுக்கு அருங்காட்சியகத்தை ஆர்வமின்றி சுற்றி வந்தால் ஒரு இடத்தில் நிச்சயம் கவனம் திசைத்திருப்பப்படும். ஐந்து புத்தகங்கள் இவ்வருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தும் cloth binding. ஒன்று மருத்துவம் சம்பந்தமான புத்தகம். மற்ற மூன்றும் என்னவென்றே தெரியவில்லை. ஐந்தாவதாக ஆர்வத்தை தூண்டும் வண்ணமாக ஒரு இலக்கிய பிரதி காட்சிக்கு வைக்கப்பட்டிருகிறது – The Picture of Dorian Gray. இக்கதை இதுவரை வாசிக்கப்படாமல் விடப்படிருந்தாள் நிச்சயமாக இந்த இடத்தில் புத்தகத்தை பார்க்கும் போது “அடடா வாசிக்காமல் விட்டுவிட்டோமே” என்று சென்னை திரும்பியதும் கதையை வாசிக்க ஆரம்பித்துவிடுவார். இது முதலாவது சுவாரசியம். அதுவரையில் டோரியன் கிரே தகவல் மட்டுமே. இன்மேல் கிரே வாசிப்பதற்கான நல்ல சுவாரசியமான கதை.
யாருடைய பேரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறதோ அவருடைய உருவ பொம்மை இல்லாவிட்டால் அவ்விடத்திற்கு பொருளே கிடையாது. நிச்சயமாக ஏதோ ஒரு ஒரு மூலையில் அந்த அம்மா நின்று கொண்டிருப்பார். அவர் கண்ணில் பட்டுவிட்டால் பார்ப்பவருக்கு கிலி. ஒரு பெண்மனி மெல்லியதொரு கைக்குட்டையில் இரண்டு விரல்களால் (கட்டை விரல் நடு விரல்) எதையோ பிடித்துக் கொண்டிருக்கிறார். மேலே இருக்கிற பலகை இவர்தான் Madam Tussuads என்று சொல்கிறது. அழகிய நீண்ட மூக்கு. மற்ற உருவ பொம்மைகளைக் காட்டிலும் இவர் அறிந்து கொள்வதற்கானவர்தான். சற்று அருகில் சென்று பார்த்தால் கைக்குட்டையில் வெட்டப்பட்ட தலை இருக்கிறது. கையில் வெட்டப்பட்ட தலையோடு மெழுகு பொம்மை தத்ரூபத்தில் நின்றால் அது வெறும் பொம்மை என்பதை மனம் ஏற்க மறுக்கும். அவரைப் பற்றின தகவல்கள் பெரிய பலகையில் வரிசையாக எழுதப்பட்டிருக்கின்றன.
Tussuadsன் அம்மா மெழுகு உருப்படிமங்கள் (wax modeling) செய்வதில் நிபுணர். அக்கலையை தன் மகளுக்கும் கற்று கொடுத்திருக்கிறார். பிரென்சு புரட்சியின் காலத்தில் Tussuads சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மூன்று மாதங்களில் தலை வெட்டப்படும். செல்வாக்கு பெற்றவர்களின் தலையீட்டால் விடுதலை செய்யப்படிருக்கிறார்.
ரூசோ போன்றவர்களுக்கு உருவப்படிமங்கள் செய்தார் என எழுதப்பட்டிருப்பது தகவல். அது சுவாரசியத்தை அளிக்காது. பலகையின் கடைசிக் குறிப்பு போரும் வாழ்வும் படித்திருந்தால் நிச்சயம் ”களுக்” என்று சிரிப்பை உண்டாக்கிவிடும். அதுவும் போரும் வாழ்வும் நாவலைப் படித்தவர்களுக்கு மாத்திரமே சிரிப்பு வரும் மற்றவர்களுக்கு அது வெறும் தகவல் அல்லது அறிவு. எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். நிச்சயமாக போரும் வாழ்வும் படித்தவர்களுக்கு சிரிப்பு வரும். கேரன்ட்டி.
போரும் வாழ்வும் நாவலில் நெப்போலியனை டால்ஸ்டாய் ’வச்சி செய்திருக்கிறார்’. நாவலில் நெப்போலியன் ஒரு கோமாளி. எங்கு யாரைப் பார்த்தாலும் வீர வசனம். Tussuads நெப்போலியனுக்கும் உருவப்படிமத்தை செய்திருக்கிறார். முகத்திற்கு படிமத்தை எடுக்கும் போது விளையாட்டாக “மிரண்டு கத்திவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். சிரித்துவிட்டு போக வேண்டியதுதானே? அங்கேயும் வீர வசனம். “நூறு போர் வீரர்களை கொண்டு என்னை துப்பாக்கி முனையிலா மிரட்டப்போகிறாய் நான் பயப்படுவதற்கு” என்று பதில் சொல்லியிருக்கிறார் நம் புலிகேசி மன்னர். போரும் வாழ்வும் நாவலை படித்திருந்தால் நிச்சயம் நெப்போலியனின் இந்த பதிலை படிக்கும் போது சிரிப்பு வரும். வர வேண்டும்.                  


Thursday, May 10, 2018

மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல்


மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல்

பெட்ரிசியன் கல்லூரி பேராசிரியர்களின் மலேசிய சிங்கப்பூர் சுற்றுலா பயணம் இன்றோடு (7/5/2018) முடிவடைகிறது. வீடு திரும்புகின்றோம். எனக்கு சிங்கப்பூரை விட்டு போகிறோமே என்ற பிரிவின் வருத்தமும் இல்லை சென்னைக்கு போகிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை. ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனும் மனநிலை இப்போது.
 குச்சி மிட்டயும் குருவி ரொட்டியும் வாங்கி தருவதாக சொல்லி சீனியர் தர்மாவையும், உடன் பேராசிரியர் ஜஸ்டிசையும் சரிகட்டிவிட்டு ஜனனல் ஓர இருக்கையை கையகப்படுத்திவிட்டேன். சென்னைக்கு திரும்பும் Scoot விமான ஊர்தி அளவில் பெரியது. மலேசியா செல்லும் போது பயணித்த ஊர்தி மிகச்சிறிய அளவில் இருந்தது. ஓடிப்போய் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டேன். விமான அலுவளர் ஒருவர் வந்து டிக்கட்டை வாங்கி சரிபார்த்து ஜன்னலில் இருந்து மூன்றாவது இருக்கைக்கு மாற சொன்னார். அவர் செய்தது பஸ்ஸில் ஐந்து வயது பையன் ஜன்னல் ஓர இருக்கைக்கு ஆசைப்பட்டு கண்டக்டரிடம் குட்டுவாங்கிய கதையாகிவிட்டது. ஏன் என் இருக்கையை மாத்திரம் பரிசோதிக்க வேண்டும். நிராசையில் மூன்றாவது இருக்கைக்கு வந்தமர்ந்தேன். மேலே பறக்கும் போது நிலத்தின் காட்சி தென்பட வில்லை. ஐந்து வயது பையனின் ஏமாற்றம் அது. ஆனால் வீடு திரும்பும் போது அப்படி இல்லை.
லைபரரியன் மேடம் இடத்தை மாற்றிக் கொண்டார்கள். அந்த இடத்திற்கு எனது எம் ஏ சீனியர் தர்மா வந்து உட்கார்ந்தார். இப்போது உடன் பேராசிரியர். என்னுடையது நடு இருக்கை. பாவம் சின்னப் பையன் என்று அந்த நடு சீட்டை அபகரிக்க மாட்டார். ஜன்னல் ஓரமாக இன்னொரு பேராசிரியையின் மாகன். சீட்டுக்கு போட்டி போடவும் முடியாது. கெஞ்சிக் கேட்கவும் முடியாது. பரவாயில்லை. ஓரளவிற்கு நிலத்தின் காட்சி தென்படுகிறது. கொஞ்சம் எட்டிப் பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும். முழுமை கிடைக்காதே!
சிறிது நேரம் கழித்து ஜன்னல் ஓர பையனின் அம்மா அதாவது எங்கள் உடன் பேராசிரியை அவனை தன்னிடம் வந்து உட்காருமாறு அழைத்துக் கொண்டார். இப்போது ஜன்னல் இருக்கைக்கு ஜஸ்டிஸ் வரப் போகிறார். பையன் இடத்தை காலி செய்த உடனேயே நகர்ந்து ஜன்னல் ஓரம் சென்று விட்டேன். அசடு வழிய ஜஸ்டிசை பார்த்தேன். பரவாயில்லை உட்காருங்க என பெருந்தன்மையோடு நடு இருக்கையில் அமர்ந்து கொண்டார். இதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும். “பார்த்து தம்பி ஜன்னல் வழியா வெளிய குதிச்சிட போற” சீனியர் தர்மா.
முழுமையான கட்சி இப்போது கிட்டிவிட்டது. விமானம் பறக்கும் போது ஒன்றை மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டும். பஞ்சு பொதிகளாக பறக்கும் மேகங்கள். நல்லிரவில் அது எப்படி சாத்தியமாகும்.  கீழே இருந்து சிங்கப்பூரின் மின் விளக்குகள் போதுமான வெளிச்சத்தை வான்நோக்கி ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த இருட்டிலும் ஊர்திக்கு கீழே பறக்கும் அந்த பஞ்சு மேகங்களை பார்க்கிறேன். இதையெல்லாம் ’அது அப்படி இருந்தது, இது இப்படி இருந்தது என இங்கு வர்ணிக்க முடியாது’. மேகம் ஊர்திக்கு கீழே பறந்து சென்று கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். மேகங்கள்? மேகம்? நமக்கேன் இந்த இலக்கண சண்டை.
சிங்கார நகரம் இப்போது கண்முன் முழுமையில் காட்சியாக்கப்படுகிறது. மனதை கொள்ளை கொள்ளும் காட்சி அது. சீரியல் விளக்குகளால் அலக்கரிக்கப்பட்ட திருவிழாக் கோலம் அது. இதுவே இப்படி என்றால் பிரான்ஸ் எப்படி இருக்கும். இப்போது ஜஸ்டிசைப் பார்க்கும் போது ”மெட்ராஸ் போனதும் ஒனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிதாறேன்” என்ற நன்றியுணர்ச்சி. தூக்கம் மெல்ல கண் இமைகளை தழுவ ஆரம்பித்தது (பொன்னியின் செல்வன் படித்த பாதிப்பு வேறொன்றுமில்லை).
உறக்கம் தெளிந்தவுடன் கடிகாரத்தைப் பார்க்கும் போது மணி சரியாக இரண்டு. கடலில் இருந்து நிலம் கிட்ட கிட்ட அருகே வந்து கொண்டிருக்கிறது. சென்னையை நோக்கி விமானம் கீழே இறங்குகிறது. நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து கொண்டே செல்கிறது. மௌன்ட் ரோடு, ஜி எஸ் டி ரோடு, மெட்ரோ ரயில் பாதை என எல்லாம் தெளிவாக பரிட்சயப்பட்ட இடங்கள் புதுமையாக தெரிய ஆரம்பிக்கின்றன. ஆறு நாள் சுற்றுலா பயணம் பேராசிரியர்கள் அனைவரையும் மிகவும் நெருக்கமானவர்களாக மாற்றிவிட்டது. இனி கல்லூரியில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அந்நியத்தன்மை இருக்காது என நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் அந்த ஆறு நாட்கள் நட்பின் பரிட்சயத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். பெரிய மனது பன்னி ஜன்னல் ஓர இருக்கையை கொடுத்த அந்த இரண்டு பேராசிரியர்கள் இனி நமக்கு மிகவும் முக்கியமானவர்கள். ஒருவேளை அந்த சிறு பையன் மாத்திரம் அங்கு இருந்திருந்தால் என் ஆசைகள் எல்லாம் நிராசையாகிவிட்டுருக்கும். விமானத்தில் பயணம் செய்து ஜன்னல் ஓரம் கிடைக்காவிட்டால் அதில் பயணம் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன? இரண்டும் ஒன்றுதான். சிறு வயது என்பது உடலின் பருவநிலை மாற்றம் இல்லை. அது சிறிது நேரத்திற்கான மன நிலை. அனைவரும் அந்த நிலைக்கு சென்று கொஞ்ச நேரமாவது இலயித்திருக்க வேண்டும். விமானத்தை விட்டு வெளியேறும் போது ஜன்னல் ஓரத்திலேயே அந்த மனநிலையை கழற்றிவிட வேண்டும். சரி சரி அதிகம் உபதேசத்திற்குள் கட்டுரை பயணிக்கிறது. இத்தோடு இப்பதிவை முடித்துக் கொள்வோம்.   

Tuesday, May 8, 2018

சிங்கப்பூர் பயணக் குறிப்பு (2) (Gardens by the Bay (Flower Dome + Cloud Forest): தேனீக்கு தெரியுமா மலரின் வாசனை



சிங்கப்பூர் பயணக் குறிப்பு (Gardens by the Bay (Flower Dome + Cloud Forest): தேனீக்கு தெரியுமா மலரின் வாசனை
தூரத்தில் இருந்து பார்க்கும் போது கண்ணாடி மூடியால் மூடப்பட்ட இரண்டு மாபெரும் குமிழ்கள் தென்படுகின்றன. அதற்கு அந்தப்பக்கம் உயர்ந்த கட்டிடத்தின் மீது கப்பலை நிறுத்திவைக்கப்பட்ட வடிவத்தில்  7 நட்சத்திர ஓட்டல். இந்தப்பக்கம் இராட்சத சக்கரம். இவ்விரண்டையும் பார்த்துக் கொண்டே கண்ணாடி மூடிக்குள் செல்கிறோம். வாயிலில் நுழையும் போதே ஆயிரம் பூக்களின் வாசம் ஒன்று சேர்த்து கிரங்கடிக்கிறது. எது எந்த மலரின் வாசனை என்று ஊகித்தறியமுடியாத கலவை அது. நம் நுரையீரல்கள் அது போன்றதொரு வாசத்தை இதுவரை சுவாசித்திருக்காது என நினைக்கிறேன். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கண்ணுக்கும் நுரையீரலுக்கும், மனதுக்கும் உகந்த காட்சி, வாசனை, இதம். எத்தனைவிதமான மலர்கள்! பார்த்து இனம் கண்டுபிடிப்பதற்கே மாதங்கள் செலவழியும்.    
பேராசிரியர் ஒருவர் ”அருள் சார் இப்ப உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?” என்று கேட்டார். சற்று நேரம் முழித்தேன். Words Worthன் Daffodils நினைவுக்கு வரவில்லையா என கேட்டார். ”இல்லை” என்றேன். அந்த ரொமான்டிக் கவிஞன் என்னை ஒருமுறை கூட படைப்பின் இப்படிப்பட்ட அழகினிடத்திற்கு அழைத்து சென்றதே கிடையாது. என் பதில் ”இல்லை சார், சாலமோன் சொன்ன காட்டுப்புஷ்பம் (lilies) தான் நினைவிற்கு வருகிறது” என்றேன். இன்றளவும் ஏனோ ரொமான்டிக் கவிஞர்கள் மீது இனம் புரியாத அலர்ஜி. பேராசிரியர் ரெஜானி சொல்வார், பதினெட்டு வயதுக்கு மேல் ஒருவன் ரொமான்டிக் கவிதைகளை நேசித்தால் அவனிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அதுவே பதினெட்டு வயது வாலிபன் ரொமாண்டிக் கவிதைகளை வாசிக்கவில்லை என்றாலும் அவனிடம் பிரச்சனை இருக்கிறது என்று. இனி நான் ரொமாண்டிக் கவிஞர்களிடம் போக முடியாது. பாடம் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எனினும் இப்பூக்களின் படையெடுப்பை பார்க்கும் போது இறைமகன் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வருகிறது: ”காட்டுப்புஷ்பங்களை கவனித்து பாருங்கள், சாலமோன் முதலாய் தன் சர்வ மகிமையில் அவ்விதமாய் உடுத்தவில்லை”. கடவுள் உடுத்துவிக்கும் ஒரு மலரின் அழகுக்கு முன்னால் சாலமோன் ராஜாவின் ஞானம் ஒன்றும் கிடையாது போலும்.
தேன் சேகரிக்கும் தேனீக்களைப் போன்று நாங்கள் அனைவரும் அந்த கண்ணாடி மூடிக்குள் பயணித்தோம் என சொல்லலாம் என நினைக்கிறேன். மலர்களையும் குருவிகளையும் பார்க்கும் போது நாமும் கூட அந்த ரொமாண்டிக் கவிஞர்களாக மாறிவிடுகிறோம். படைப்பாளிகளையும் நம்மூர் தர்க்கவாதிகளையும் இதை நினைத்துக் கொண்டே எதையாவது எழுதலாமா என நினைக்கும் போது சற்று கூச்சமாக இருக்கிறது.  தர்க்கவாதிகள் நுண்ணுணர்வை கேலி செய்பவர்கள். அதற்கு நுண்ணுணர்வுவாதிகள் பொறுப்பா அல்லது தர்க்கவாதிகளின் கோளாரா என நிச்சயமாக சொல்ல முடியாது. இருவருக்கும் ஏற்றார் போன்று நடுநிலைமை காப்பது நமக்கு நலம்.
இதனை அதிக நீட்டலும் அல்லாமல் குறுக்கலும் அல்லாமல் பாபிலோனின் தொங்கும் தோட்டம் என வர்ணிப்பை முடித்துக் கொள்வதுதான் சரி. ஆறு மாடிக்கு லிஃப்ட்டை பயன்படுத்தி தொங்கும் மலர் மாளிகையின் உச்சிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து இறங்கு பாதையில் அனைத்து மலர்களையும் இரசித்த வண்ணமாக கீழே இறங்கி வர வேண்டும். உச்சத்தில் இருந்து கீழே நோக்கினால் பீதி பற்றிக் கொள்கிறது. அவ்வளவு உயரத்தில் இருந்து ஆழத்தை நான் கண்டதே கிடையாது. தளம் ஜன்னல் போன்றதொரு இறங்கு பாதையைக் கொண்டது. நம் காலுக்கு கீழே பார்த்தால் தலை சுற்ற ஆரம்பிக்கிறது. 90 டிகிரியில் கிடைமட்டமாக பார்க்கும் போதும், உச்சத்தில் 365 டிகிரியில் ஏறெடுத்து பார்க்கும் போதுதான் பரவசம். 0 டிகிரியில் அதனையே கீழ் நோக்கி பார்த்தால் பயம் பற்றிக் கொள்கிறது. வாழ்க்கையை அப்படிப் பார்க்க செய்தவன் தாஸ்தாவஸ்கி. அதாவது 0 டிகிரியில். நான் நம்மூர் 0 டிகிரியை சொல்லவில்லை. 
அப்போதெல்லாம் எழும்பூரில் ரயிலைவிட்டு பாலத்தின் மீது நடக்கும் போது எங்கள் பேராசிரியர் கீழே குனிந்து தண்டவாளத்தைப் பார்க்க சொல்வார். அப்படி கீழ் நோக்கி பார்க்கும் போது ஏற்படும் அனுபவத்தை தாஸ்தாவஸ்கி இவ்வாறு சொன்னதாக சொல்வார். கீழ்நோக்கி பார்க்கும் போது அந்த பாதாளத்தில் குதிக்க வேண்டும் என்று நமக்குள்ளாக ஒருவித விருப்பம் தோன்றுமாம். அதனால் அத பாதாளத்தை பார்வையிடுவதை தவிர்ப்பது நல்லதாம். இல்லையெனில் பாதாளம் நம்மை விழுங்கி விடுமாம். குதிக்க வேண்டும் என்ற விருப்பம் நம்மிடத்தில் இருக்கிறதா அல்லது அது பாதாளத்தின் கவர்ச்சியா என்ற கேள்வியையும் போட்டு சிந்திக்க வைப்பார் பேராசிரியர். வாழ்க்கையை அப்படி கீழ் நோக்கி ஆழத்தை காண முயன்றவன் தாஸ்தாவஸ்கி. ஆழம் பிடிபடாது. ஆழம் காணவும் முயளக் கூடாது. பாதாளம் நம்மை அதனுள் ஈர்த்துக் கொண்டு போய்விடும். அதனாலேயே ஆழம் நோக்கி ஈர்க்கும் தாஸ்தாவஸ்கியை விட உயரம் நோக்கி அழைக்கும் டால்ஸ்டாயை எனக்கு அதிகம் பிடிக்கும்.
ஆழம் உயரம் இவ்விரண்டின் மத்தியில் இந்த தொங்கிக் கொண்டிருக்கும் அழகிய தோட்டத்தைக் கண்ட அனுபவம் பயணத்தில் என் மனதில் அழியாது பதிந்து போன காட்சி. அதிலும் அந்த கோடிப்பூக்களின் மகரந்த வாசனை நுரையீரலில் நின்று கொண்டே இருக்கும் போலிருக்கிறது. மகரந்தத்தின் வாசனையையும், தேனையும் அந்த தேனீக்கள் நுகரவும் சுவைக்கவும் செய்யுமா என்பது இப்போது நுண்ணுணர்வுக்காரகளிடமும், தர்க்கவாதிகளிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மலரின் வாசம் அதன் இதழ்களில் இருக்கிறதா? அல்லது அதன் மகரந்தத்தில் இருக்கிறதா? என் கருத்து படி தேனீக்களுக்கு மலரின் வாசனை தெரியாது என்றுதான் நினைக்கிறேன்.         


Monday, May 7, 2018

மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும்

மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும்
The Waste Land கவிதையில் எலியட் லண்டன் நகரத்தின் துரிதமான காலை நேரத்தைப் பற்றி பேசுவார். கூட்டமாக வேலைக்கு செல்லும் கும்பலில் தானும் ஒருவராக ஒருவருக்கு ஒருவர் பரிட்சயம் அற்ற நிலையில் கூட்டதில் தனிமையில் தலை கவிழ்ந்து நடந்து செல்கிறார். அக்கூட்டத்தில் ஒருவரை மாத்திரம் பார்த்து "There I saw one I knew, and stopped him, crying: “Stetson!" என்று கத்துகிறார். மாபெரும் கூட்டதில் தனிமையில் பிடித்த ஒருவரை பார்க்கும் போது ஒரு நிம்மதி பெருமூச்சு. கவிதையில் அவர் சந்தித்த நண்பர் எஸ்றா பௌன்ட் என எங்கள் பேராசிரியர் சொல்வார்.
அதே போன்றதொரு நிம்மதி பெருமூச்சு மலேசியாவில் எனக்கு எற்பட்டது. எலியட் கண்ட உற்ற நண்பனை பார்த்த நிம்மதி போன்றது அது. நான் பார்த்தது ஒரு பூவைம் ஒரு குருவியையும். எப்படி அந்த பாம் மரங்கள் மலேசியவைப் பற்றின ஒரு பிம்பத்தை எற்படுதுகிறதோ அதே போன்றதொரு மலேசியா பற்றின பதிப்பை இந்த இரு அழகுச் சித்திரங்கள் ஏற்படுத்தின.
காலை உணவுக்காக விடுதிக்கு சென்ற போது இவர்கள் இருவரையும் கண்டேன். விடுதிக்கு ஒருவித செடியினால் வேலி அமைத்திருந்தனர். சற்று உற்று நோக்கும் போதுதான்; நீயா என்ற அந்த எலியட்டின் ஆச்சரியம். நம்மூர் பூச்செடிதான்.
வேலியின் மீது நம்மூர் பரிட்சயமான பறவை ஒருவர் பறந்து செல்கிறார் - மைனா.
நகரத்திற்குள் செல்லும்போது நாட்டின் தேசிய மலர் வண்ண வண்ண மின் விளக்குகளால் சாலையோரம் எங்கும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. சிவப்பு வண்ண டாம்பீகம் இல்லாத எளிமையான மலர்கள் அவைகள். சொன்னால் அட இந்த மலரா? என்று ஆச்சரியப் பட்டுப் போவீர்கள். வேறொன்றுமில்லை - செம்பருத்திதான். இதுதான் இங்கு தேசிய மலர்.
பிரம்மாண்ட நகரத்தின் மத்தியிலும் நம் தமிழ் பறவைக்கும் மலருக்கும் தாராளமான இடம் இருக்கிறதே.
அதனால் என்ன? என்று எவரேனும் கேட்கலாம். இதனையே ஆங்கிலத்தில் "So what?" எனக் கேட்டால் அவமானம். இந்த விசயத்தில் நமக்கு தமிழை விட ஆங்கிலம் சுறுக்கென்று குத்தும். கூட்டத்தில் எலியெட் தன் நண்பனை பார்த்ததாக சொன்னதற்கு "so what?" என்று கேட்கலாம். கவிதை பின்நவீனத்துவ கவிதை அல்லவா. கேள்விக்குக்கு பதில் அளிக்கும் பொறுப்பு கிடையாது.

Saturday, May 5, 2018

சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1)



சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1)

இன்று சிங்கப்பூர் சுற்றுளாவின் இரண்டாம் நாள். இராட்சத சக்கரத்தில் சாகச பயணம். அதற்கு முன்பு கடல் ஓரத்தில் கடல் கோள் பகுதியை நிலமக்கிய பிரம்மாண்ட இடத்தில் சிறிது நேர பார்வையிடல். மனித முயற்சியின் பிரம்மாண்டம் இப்பகுதி. இயற்கையின் பிரம்மாண்டம் எனக்குள் பிரமிப்பை உண்டாக்கும். ஆனால் மனிதனுடையதோ தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி என்னையே அறியாமல் தும்புறுத்திக் கொல்லும். எல்லாவற்றையும் பார்த்து முடித்து கரையோரமாக கட்டிட மேடையில் நீர் நிலையை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறேன்.
சீனர் ஒருவர் ரொட்டித் துண்டுகளை வீசிக் கொண்டிருக்கிறார். புறாக்கள்  ஒன்று கூடி அவைகளை கொத்தித் தின்கின்றன. ஓரமாக காகம் தனக்கான சமயத்தை எதிர்பார்த்து கத்துக்கிடக்கிறது. இவர்கள் அனைவரின் சாப்பாட்டையும் காகம் ஒருவரே ஏப்பம் விட்டுவிடுவார் போலிருக்கிறது. இமைக்கும் நேரத்தில் மற்றொருவர் போட்டிக்கு வருகிறார். மிக மிக சீன்னஞ் சிறு குருவி - சிட்டுக்குருவி. அவ்வளவு பெரிய பருத்த உருவங்களை பொருட்படுத்தாமல் எல்லாம் எனக்கே என்று அனைத்தையும் படுவேகத்தில் கொத்திக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து செல்கிறது. சின்னஞ்சிறு சிட்டையும் புறாக்களையும்  ஒன்றுசேரத்த உருவமாக காக்கை  மாத்திரம் ரொட்டி தன்னை தேடி வரட்டும் என காத்துக் கிடக்கிறது.
சிங்கப்பூரின் இந்த பிரம்மாண்ட அழகிய கட்சியின் மதியில் ஒரு ஓரமாக அமர்ந்து இந்த சீனரின் வள்ளல் பெருங்கொடையில் பயனடையும் இந்த மூன்று வித பறவைகள் உணவு உண்டு பசியாறும் கட்சியை கண்டு களிக்கிறேன்.
மொபைலில் இருந்து புகைப்படம் எடுக்க ஆவல் தூண்டுகிறது. இப்போது நடத்தப்படும் காட்சி சீனருடையது. எப்படி நான் உள்ளே நுழைந்து அதனை படம் பிடிக்க முடியும்? மனசாட்சி உறுதுகிறது. கொஞ்சம் நேரத்தில் நான்கைந்து சிட்டுக்கள் கூடிவிட்டன. மற்றொரு சீனக் குடும்பம் சடார் என்று உள்ளே நுழைந்து பயமுறுத்துகிறார் "ப்பா" என மிரட்டல். பாவம் எல்லாம் சிதறி ஓடிவிட்டன.
கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் ரொட்டிதுண்டுகள்  வீசப்படுகின்றன மீண்டும் மூன்று ஜாதிப் பறவைகளின் சங்கமம். ரொட்டி தன் பக்கம் வரும் என காகம் இன்னும் காத்துக் கிடக்கிறது. மைனாக்கள் கொஞ்சம் கூடிவிட்டன.
இன்னொரு சீனர் ஏற்படுத்திய சலனம் என் மனசட்சியின் குற்றவுணர்வில் இருந்து விடுத்தலையாக்கி விட்டது. கைபேசியை எடுத்து தைரியமாக அந்த சீனர் ஏற்படுத்திய காட்சியை படம் பிடிக்கிறென்.
பொல்லாத சிட்டுக்குருவிகள் அதீத வேகத்தில் ரொட்டிதுண்டுகளை அதிகாரமாக கொதிக்கொண்டு செல்கின்றன. இறைவனின் மிகச்சிறு படைப்பு மனிதனின் பிரம்மாண்டத்தை அலட்சியப்படுத்தும் தருணமாக இந்நிகழ்வு அமைந்து விட்டது. டூர் குருப்பை காணவில்லை. கல்லூரி முதல்வர் கோபத்தோடு  காத்துக்  கொண்டிருப்பார். கிளம்ப வேண்டும்.

Thursday, May 3, 2018

மலேசியா, நம் கண்முன் விரியும் தேசம் (பயணக் குறிப்பு 2)

நம் கண்முன் விரியும் தேசம்

ஓவ்வொரு நிலமும் அதற்கான தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது. அது அந்நிலதின் குறிப்பிட்ட வாழ்வியல் முறையாக இருக்கலாம் அல்லது அந்நிலத்தின் இயற்கை வளமாக இருக்கலாம். இவைகள் அனைத்தும் அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. மற்றமை என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது அந்த நிலத்திற்கு உரிய சிறப்பு அம்சம் தனித்துவமாக காணப்படும். இதற்கு அந்த மற்றமையின் நிலையில் இருந்து நம்மையும் அல்லது மற்றவரையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு முன்பு காலனிய காலத்து இந்தியாவை சித்தரிக்கும் நாவலை ஒன்றை வாசித்தேன். நாவலில் உள்ள ஓரே ஒரு படிமம் இந்தியா என்றால் என்ன என்ற உணர்வை கொடுத்தது இங்கிலாந்தில் இருந்து துரைச்சானி அம்மாள் இந்தியா வருகிறாள். துறைமுகத்தில் இருந்து சத்தம் ஒன்று கேட்கிறது. நிலப்பகுதியில் இருந்து வரும் சத்தத்தை இவ்வாறு பதிவு செய்கிறாள்: ஆயில் ஊற்றப்படாத மாட்டு வண்டி சத்தத்தை முதல் சத்தமாக இந்தியாவுக்குள் நுழையும் போது கேட்டேன் என்று.
துரு பிடித்த நிலையில் உள்ள கட்டை வண்டியின் சத்தம் எவ்வளவு தூரத்திற்கு நம் பண்பாட்டின் சத்தமாக அவர்களை  வியந்து கேட்கச் செய்யும் சத்தமாக இருந்திருக்கும். அந்த சத்ததின் வழியே நம் தேசத்தை நாம் பார்க்கிறோம். "க்ரீச்சிடும்" வண்டி சக்கரம் நம் பரந்து விரிந்த தேசத்தைப் பார்க்கும் படிமம். (படிமதைப் பற்றி எனக்கு என்ன தெரியும். எல்லாம் ஒரு உட்டான்ஸ்தான்).

மலேசிய வந்து இறங்கியதும் கண் முன் விரிந்த காட்சி ஒரு வித தென்னை போன்ற மரங்கள் முழு தேசத்தையும் நிரப்பி கிடக்கின்றன. பேருந்தில் முன்னால் நின்றுகொண்டு வரைபடத்துடன் guide நாட்டைப் பற்றி விளக்க ஆரம்பித்தார். முதலாவது இந்த தென்னை போன்ற மரம். பாம் எண்ணைக்கான மரமாம். அடுத்தது பெட்ரோல் பற்றி பேசினார். இங்கு உள்ளது போன்று பெட்ரோல் நாம் நாட்டில் மலிவாக இருந்தால் ஸ்கூட்டரிலேயே வட்ட முனை இமயமலையில் இருந்து தென்கோடி குமரி வரை ஊர் சுற்றலாம். மெய்ஞானமும் அதிகமாகும்.

கோலாலம்பூர் பட்டணமே பெரிய  கல்லூரிகளின் வளாகத்தை பொன்றதொரு  பராமரிப்பு.

Tuesday, May 1, 2018

மலேசியா பயணக் குறிப்பு(1)

மலேசியா பயணக் குறிப்பு

தினமும் நாம் கடக்கும் சாலை முக்கியத்துவம் அற்ற ஒன்று. மிகவும் பழகிப் போன மும்மரமான சில மணி நேரங்களுக்கான உலகம் அது. அது அன்றாடதின் பகுதி. பழமையின் சாரம் ஊறிப் போனது அந்த அன்றாடத்தின் அங்கம். ஒரு பொருளை வாங்கிய புதியதில் அந்த பொருளின் மீது நமக்கு இருக்கும் புதுமையின் பார்வை எப்படி நீண்ட நாட்களுக்கு பின்பு முக்கியத்துவம் அற்ற புளித்து போன ஒன்றாகி விடுகிறதோ அதே போன்று இந்த சொற்ப நேர பயணத்தின் பாதை பழமையுமாகவும் இல்லாமல் புதுமையாகவும் அல்லாமல் ஏதோ ஒன்றாக இருக்கிறது. இதுதான் யதார்த்தமோ? இந்த ஏதோ ஒன்றுதான் நாவலில் யதார்த்தவாதம் போலும்.

ஊர் பயணம் என்றதும் அதே சாலை திருவிழா கோலம் பூண்டு விடுகிறது. ஏன் இப்படி ஒரு மற்றம் பார்த்து பழகிய பொருளின் மீது எற்படுகிறது. இதே உணர்வை வித்தியாசம் வித்தியாசமாக நாவலாசிரியர்கள் தங்கள் படைப்பில் கொண்டுவருவதும் படைப்பின் சூட்சமம்தான்.
இப்பொது கடல் (இல்லை) விண் கடந்து வேறு தேசம் செல்கிறேன். பழகிய அன்றாடத்தின் சாலை நேராக மலேசியாவுக்கே போவது போல் தோன்றுகிறது. 

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...