Tuesday, May 8, 2018

சிங்கப்பூர் பயணக் குறிப்பு (2) (Gardens by the Bay (Flower Dome + Cloud Forest): தேனீக்கு தெரியுமா மலரின் வாசனை



சிங்கப்பூர் பயணக் குறிப்பு (Gardens by the Bay (Flower Dome + Cloud Forest): தேனீக்கு தெரியுமா மலரின் வாசனை
தூரத்தில் இருந்து பார்க்கும் போது கண்ணாடி மூடியால் மூடப்பட்ட இரண்டு மாபெரும் குமிழ்கள் தென்படுகின்றன. அதற்கு அந்தப்பக்கம் உயர்ந்த கட்டிடத்தின் மீது கப்பலை நிறுத்திவைக்கப்பட்ட வடிவத்தில்  7 நட்சத்திர ஓட்டல். இந்தப்பக்கம் இராட்சத சக்கரம். இவ்விரண்டையும் பார்த்துக் கொண்டே கண்ணாடி மூடிக்குள் செல்கிறோம். வாயிலில் நுழையும் போதே ஆயிரம் பூக்களின் வாசம் ஒன்று சேர்த்து கிரங்கடிக்கிறது. எது எந்த மலரின் வாசனை என்று ஊகித்தறியமுடியாத கலவை அது. நம் நுரையீரல்கள் அது போன்றதொரு வாசத்தை இதுவரை சுவாசித்திருக்காது என நினைக்கிறேன். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கண்ணுக்கும் நுரையீரலுக்கும், மனதுக்கும் உகந்த காட்சி, வாசனை, இதம். எத்தனைவிதமான மலர்கள்! பார்த்து இனம் கண்டுபிடிப்பதற்கே மாதங்கள் செலவழியும்.    
பேராசிரியர் ஒருவர் ”அருள் சார் இப்ப உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?” என்று கேட்டார். சற்று நேரம் முழித்தேன். Words Worthன் Daffodils நினைவுக்கு வரவில்லையா என கேட்டார். ”இல்லை” என்றேன். அந்த ரொமான்டிக் கவிஞன் என்னை ஒருமுறை கூட படைப்பின் இப்படிப்பட்ட அழகினிடத்திற்கு அழைத்து சென்றதே கிடையாது. என் பதில் ”இல்லை சார், சாலமோன் சொன்ன காட்டுப்புஷ்பம் (lilies) தான் நினைவிற்கு வருகிறது” என்றேன். இன்றளவும் ஏனோ ரொமான்டிக் கவிஞர்கள் மீது இனம் புரியாத அலர்ஜி. பேராசிரியர் ரெஜானி சொல்வார், பதினெட்டு வயதுக்கு மேல் ஒருவன் ரொமான்டிக் கவிதைகளை நேசித்தால் அவனிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அதுவே பதினெட்டு வயது வாலிபன் ரொமாண்டிக் கவிதைகளை வாசிக்கவில்லை என்றாலும் அவனிடம் பிரச்சனை இருக்கிறது என்று. இனி நான் ரொமாண்டிக் கவிஞர்களிடம் போக முடியாது. பாடம் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எனினும் இப்பூக்களின் படையெடுப்பை பார்க்கும் போது இறைமகன் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வருகிறது: ”காட்டுப்புஷ்பங்களை கவனித்து பாருங்கள், சாலமோன் முதலாய் தன் சர்வ மகிமையில் அவ்விதமாய் உடுத்தவில்லை”. கடவுள் உடுத்துவிக்கும் ஒரு மலரின் அழகுக்கு முன்னால் சாலமோன் ராஜாவின் ஞானம் ஒன்றும் கிடையாது போலும்.
தேன் சேகரிக்கும் தேனீக்களைப் போன்று நாங்கள் அனைவரும் அந்த கண்ணாடி மூடிக்குள் பயணித்தோம் என சொல்லலாம் என நினைக்கிறேன். மலர்களையும் குருவிகளையும் பார்க்கும் போது நாமும் கூட அந்த ரொமாண்டிக் கவிஞர்களாக மாறிவிடுகிறோம். படைப்பாளிகளையும் நம்மூர் தர்க்கவாதிகளையும் இதை நினைத்துக் கொண்டே எதையாவது எழுதலாமா என நினைக்கும் போது சற்று கூச்சமாக இருக்கிறது.  தர்க்கவாதிகள் நுண்ணுணர்வை கேலி செய்பவர்கள். அதற்கு நுண்ணுணர்வுவாதிகள் பொறுப்பா அல்லது தர்க்கவாதிகளின் கோளாரா என நிச்சயமாக சொல்ல முடியாது. இருவருக்கும் ஏற்றார் போன்று நடுநிலைமை காப்பது நமக்கு நலம்.
இதனை அதிக நீட்டலும் அல்லாமல் குறுக்கலும் அல்லாமல் பாபிலோனின் தொங்கும் தோட்டம் என வர்ணிப்பை முடித்துக் கொள்வதுதான் சரி. ஆறு மாடிக்கு லிஃப்ட்டை பயன்படுத்தி தொங்கும் மலர் மாளிகையின் உச்சிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து இறங்கு பாதையில் அனைத்து மலர்களையும் இரசித்த வண்ணமாக கீழே இறங்கி வர வேண்டும். உச்சத்தில் இருந்து கீழே நோக்கினால் பீதி பற்றிக் கொள்கிறது. அவ்வளவு உயரத்தில் இருந்து ஆழத்தை நான் கண்டதே கிடையாது. தளம் ஜன்னல் போன்றதொரு இறங்கு பாதையைக் கொண்டது. நம் காலுக்கு கீழே பார்த்தால் தலை சுற்ற ஆரம்பிக்கிறது. 90 டிகிரியில் கிடைமட்டமாக பார்க்கும் போதும், உச்சத்தில் 365 டிகிரியில் ஏறெடுத்து பார்க்கும் போதுதான் பரவசம். 0 டிகிரியில் அதனையே கீழ் நோக்கி பார்த்தால் பயம் பற்றிக் கொள்கிறது. வாழ்க்கையை அப்படிப் பார்க்க செய்தவன் தாஸ்தாவஸ்கி. அதாவது 0 டிகிரியில். நான் நம்மூர் 0 டிகிரியை சொல்லவில்லை. 
அப்போதெல்லாம் எழும்பூரில் ரயிலைவிட்டு பாலத்தின் மீது நடக்கும் போது எங்கள் பேராசிரியர் கீழே குனிந்து தண்டவாளத்தைப் பார்க்க சொல்வார். அப்படி கீழ் நோக்கி பார்க்கும் போது ஏற்படும் அனுபவத்தை தாஸ்தாவஸ்கி இவ்வாறு சொன்னதாக சொல்வார். கீழ்நோக்கி பார்க்கும் போது அந்த பாதாளத்தில் குதிக்க வேண்டும் என்று நமக்குள்ளாக ஒருவித விருப்பம் தோன்றுமாம். அதனால் அத பாதாளத்தை பார்வையிடுவதை தவிர்ப்பது நல்லதாம். இல்லையெனில் பாதாளம் நம்மை விழுங்கி விடுமாம். குதிக்க வேண்டும் என்ற விருப்பம் நம்மிடத்தில் இருக்கிறதா அல்லது அது பாதாளத்தின் கவர்ச்சியா என்ற கேள்வியையும் போட்டு சிந்திக்க வைப்பார் பேராசிரியர். வாழ்க்கையை அப்படி கீழ் நோக்கி ஆழத்தை காண முயன்றவன் தாஸ்தாவஸ்கி. ஆழம் பிடிபடாது. ஆழம் காணவும் முயளக் கூடாது. பாதாளம் நம்மை அதனுள் ஈர்த்துக் கொண்டு போய்விடும். அதனாலேயே ஆழம் நோக்கி ஈர்க்கும் தாஸ்தாவஸ்கியை விட உயரம் நோக்கி அழைக்கும் டால்ஸ்டாயை எனக்கு அதிகம் பிடிக்கும்.
ஆழம் உயரம் இவ்விரண்டின் மத்தியில் இந்த தொங்கிக் கொண்டிருக்கும் அழகிய தோட்டத்தைக் கண்ட அனுபவம் பயணத்தில் என் மனதில் அழியாது பதிந்து போன காட்சி. அதிலும் அந்த கோடிப்பூக்களின் மகரந்த வாசனை நுரையீரலில் நின்று கொண்டே இருக்கும் போலிருக்கிறது. மகரந்தத்தின் வாசனையையும், தேனையும் அந்த தேனீக்கள் நுகரவும் சுவைக்கவும் செய்யுமா என்பது இப்போது நுண்ணுணர்வுக்காரகளிடமும், தர்க்கவாதிகளிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மலரின் வாசம் அதன் இதழ்களில் இருக்கிறதா? அல்லது அதன் மகரந்தத்தில் இருக்கிறதா? என் கருத்து படி தேனீக்களுக்கு மலரின் வாசனை தெரியாது என்றுதான் நினைக்கிறேன்.         


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...