Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்போலியன் என்கிற புலிகேசி மன்னர் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Thursday, May 17, 2018

Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்போலியன் என்கிற புலிகேசி மன்னர்

53 best Madame Tussaud images on Pinterest | Madame tussauds, Wax ...

Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்போலியன் என்கிற புலிகேசி மன்னர்


எந்தவித முன் தகவலும் இன்றி ஓர் இடத்தையோ நபரையோ சென்று பார்க்கும் போது இடமும் நபரும் அடையாளமற்று ஆர்வத்தை தூண்டாமல் இருப்பார்கள். பிரமிப்பும் ஆர்வமும் முன் தகவலின் பேரில் ஏற்படுகின்ற ஒரு மனக் கிளர்ச்சியோ என தோன்றுகிறது. அது வைரமே என்றாலும் பாராட்ட வைரம் என்ற முன் தகவலும் அறிவும் அவசியப்படுகின்றன. அது இல்லாத பட்சத்தில் வைரம் வெறும் கண்ணாடி. பார்வையிடுபவர் முன்பு ஒரு பொருள் ஜடமாக நின்று கொண்டிருக்கும் போது (உயிர் கொண்ட - உயிர் அற்ற) அந்த இரண்டு பேர்கள் மத்தியிலும் எந்த உரையாடலும் நடைபெறுவதில்லை. உயிர் கொண்டவரை கிளர்ச்சியூட்ட ஜடப்பொருள் அசைய வேண்டும். இல்லையென்றால் தன்னை பார்க்க வருபவர் தன்னைப் பற்றின முழு அறிவையும் பெற்றிருக்க வேண்டும். முன்னறிவு ஜடப்பொருளை அசையச் செய்கிறது. இல்லை என்றால் சூன்யத்தை ஜடப்பொருள் தன்னைச் சுற்றி வளையமிட்டுக் கொள்ளும். பல மணி நேரங்கள் முறைத்துப் பார்த்தாலும் அமைதியில் இருவரும் நிலைத்திருப்பர். மிக பிரபலமான மனிதர்களை சந்திக்க சென்றாலும் இதுதான் கதை. அவர் தன்னைப் பற்றி பேசவே மாட்டார். சென்று பார்க்கிற நமக்குத்தான் முன் அறிவு அவசியப்படுகிறது. அது நெப்போலியனே என்றாலும் நான்கு பேர் நல்லவிதமாக அவரைப் பற்றி நாலு வார்த்தைகள் முன்னமே சொல்லியிருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் உள்ள Madam Tussuads அருங்காட்சியகம் லண்டனில் உள்ளது போன்று கிடையாது. இங்கும் மெழுகினால் செய்யப்பட்ட பிரபலமான உருவங்களை உள்ளே சென்றால் பார்க்க முடியும். முதலில் Madam Tussuads யார் என்றே தெரியாவிட்டால் முழு அருங்காட்சியகமே பொருள் அற்ற ஒன்றுதான். அரக்க பறக்க விக்கி பீடியாவில் பெயரை டைப் செய்தால் தகவல்கள் அள்ளி இறைக்கப்படும். வெறும் தகவல்கள் கூட ஆர்வத்தை தூண்டுவதில்லை. எங்கோ எதோ ஒரு புள்ளியில் ஆர்வம் தூண்டப்பட வேண்டும். அப்புள்ளி தான் முன்னர் சேகரித்த அனைத்து தகவல்களையும் மூளைக்குள் அறிவாக கடத்தும். ஆர்வத்தின் அப்புள்ளி எப்போது கண்டடையப்படும்? Madam Tussuadsன் வாழ்க்கை சரித்திரம் மிகவும் சுவாரசியமானது. இருப்பினும் அச்சுவாரசிய சரித்திரம் அதாவது விக்கி பீடியாவில் சேகரித்த அச்சரித்திர தகவல் பார்ப்பவருக்கு சுவாரசியமாக ஒரு புள்ளியில் மாறவேண்டியிருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல அது உலகமே அறிந்த நெப்போலியனாகவே இருந்தாலும் அவர் சுவாரசியமாக மாறுகிற ‘புள்ளி’ அதுதான் முக்கியம்.
அருங்காட்சியகத்தில் உள்ளே நுழைந்தால் அனைவருக்குமே சுவாரசியம் கொடுக்கும் இடமாகத்தான் அவ்விடம் அமையும். காரணம் சர்வதேச மற்றும் இந்திய அளவில் உள்ள மிகப்பெரிய பிரபலங்களின் உருவ பொம்மைகள் தத்ரூபமாக நிஜ உருவங்கள் போன்று நின்று கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டு பிரதமருடைய உருவப்படிமமும் அங்கு உள்ளது. அதுவும் ஒருவகையில் சுவாரசியம்தான். எனினும் ஆச்சரியமூட்டும் உருவ பொமையாக ஒன்றை பார்த்தாக வேண்டும். அனைவரும் நன்கு பரிட்சயமானவர்கள். அவர்களை கண்டு வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது. ஒருவேளை நானூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒருவருடைய உருவ பொம்மை அங்கு இருந்தால் முழு அருங்காட்சியகமும் அறிவுக் களஞ்சியம். சம காலத்தின் மனிதர்கள் அறிந்து கொள்வதற்கானவர்கள் கிடையாது. சம காலத்தில் இருந்து இன்னும் இருநூறு ஆண்டுகள் அவர்கள் பயணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அறிந்து கொள்வதற்கானவர்கள். அப்படிப்பட்டவர்களின் உருவ பொம்மை தத்ரூபமாக அருங்காட்சியகத்தில் இடம் பெற்றால் அதுதான் அறிதலின் புள்ளி.
பார்ப்பவர்களைச் சுற்றி பிரபலங்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ள சிரித்த முகத்தோடு நின்று கொண்டிருக்கிறார்கள். இலக்கிய கிறுக்கு ஒன்று இங்கிருந்து சென்றால் பிரபலங்கள் அனைத்தும் அசட்டை செய்யப்படுவார்கள். அப்படிப்பட்ட கிறுக்குகளுக்கு இவ்வருங்காட்சியகத்தில் இரண்டே இரண்டு‘கள்’ மாத்திரம்தான் சுவாரசியம் தரும். அப்படி சுவாரசியம் ஏற்படாவிட்டால் ஆச்சரியப்படாதவர் இலக்கியக் கிறுக்கு என்று தன்னை பற்றி சொல்லிக் கொள்ள முடியாது.
இலக்கிய கிறுக்கு அருங்காட்சியகத்தை ஆர்வமின்றி சுற்றி வந்தால் ஒரு இடத்தில் நிச்சயம் கவனம் திசைத்திருப்பப்படும். ஐந்து புத்தகங்கள் இவ்வருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தும் cloth binding. ஒன்று மருத்துவம் சம்பந்தமான புத்தகம். மற்ற மூன்றும் என்னவென்றே தெரியவில்லை. ஐந்தாவதாக ஆர்வத்தை தூண்டும் வண்ணமாக ஒரு இலக்கிய பிரதி காட்சிக்கு வைக்கப்பட்டிருகிறது – The Picture of Dorian Gray. இக்கதை இதுவரை வாசிக்கப்படாமல் விடப்படிருந்தாள் நிச்சயமாக இந்த இடத்தில் புத்தகத்தை பார்க்கும் போது “அடடா வாசிக்காமல் விட்டுவிட்டோமே” என்று சென்னை திரும்பியதும் கதையை வாசிக்க ஆரம்பித்துவிடுவார். இது முதலாவது சுவாரசியம். அதுவரையில் டோரியன் கிரே தகவல் மட்டுமே. இன்மேல் கிரே வாசிப்பதற்கான நல்ல சுவாரசியமான கதை.
யாருடைய பேரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறதோ அவருடைய உருவ பொம்மை இல்லாவிட்டால் அவ்விடத்திற்கு பொருளே கிடையாது. நிச்சயமாக ஏதோ ஒரு ஒரு மூலையில் அந்த அம்மா நின்று கொண்டிருப்பார். அவர் கண்ணில் பட்டுவிட்டால் பார்ப்பவருக்கு கிலி. ஒரு பெண்மனி மெல்லியதொரு கைக்குட்டையில் இரண்டு விரல்களால் (கட்டை விரல் நடு விரல்) எதையோ பிடித்துக் கொண்டிருக்கிறார். மேலே இருக்கிற பலகை இவர்தான் Madam Tussuads என்று சொல்கிறது. அழகிய நீண்ட மூக்கு. மற்ற உருவ பொம்மைகளைக் காட்டிலும் இவர் அறிந்து கொள்வதற்கானவர்தான். சற்று அருகில் சென்று பார்த்தால் கைக்குட்டையில் வெட்டப்பட்ட தலை இருக்கிறது. கையில் வெட்டப்பட்ட தலையோடு மெழுகு பொம்மை தத்ரூபத்தில் நின்றால் அது வெறும் பொம்மை என்பதை மனம் ஏற்க மறுக்கும். அவரைப் பற்றின தகவல்கள் பெரிய பலகையில் வரிசையாக எழுதப்பட்டிருக்கின்றன.
Tussuadsன் அம்மா மெழுகு உருப்படிமங்கள் (wax modeling) செய்வதில் நிபுணர். அக்கலையை தன் மகளுக்கும் கற்று கொடுத்திருக்கிறார். பிரென்சு புரட்சியின் காலத்தில் Tussuads சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மூன்று மாதங்களில் தலை வெட்டப்படும். செல்வாக்கு பெற்றவர்களின் தலையீட்டால் விடுதலை செய்யப்படிருக்கிறார்.
ரூசோ போன்றவர்களுக்கு உருவப்படிமங்கள் செய்தார் என எழுதப்பட்டிருப்பது தகவல். அது சுவாரசியத்தை அளிக்காது. பலகையின் கடைசிக் குறிப்பு போரும் வாழ்வும் படித்திருந்தால் நிச்சயம் ”களுக்” என்று சிரிப்பை உண்டாக்கிவிடும். அதுவும் போரும் வாழ்வும் நாவலைப் படித்தவர்களுக்கு மாத்திரமே சிரிப்பு வரும் மற்றவர்களுக்கு அது வெறும் தகவல் அல்லது அறிவு. எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். நிச்சயமாக போரும் வாழ்வும் படித்தவர்களுக்கு சிரிப்பு வரும். கேரன்ட்டி.
போரும் வாழ்வும் நாவலில் நெப்போலியனை டால்ஸ்டாய் ’வச்சி செய்திருக்கிறார்’. நாவலில் நெப்போலியன் ஒரு கோமாளி. எங்கு யாரைப் பார்த்தாலும் வீர வசனம். Tussuads நெப்போலியனுக்கும் உருவப்படிமத்தை செய்திருக்கிறார். முகத்திற்கு படிமத்தை எடுக்கும் போது விளையாட்டாக “மிரண்டு கத்திவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். சிரித்துவிட்டு போக வேண்டியதுதானே? அங்கேயும் வீர வசனம். “நூறு போர் வீரர்களை கொண்டு என்னை துப்பாக்கி முனையிலா மிரட்டப்போகிறாய் நான் பயப்படுவதற்கு” என்று பதில் சொல்லியிருக்கிறார் நம் புலிகேசி மன்னர். போரும் வாழ்வும் நாவலை படித்திருந்தால் நிச்சயம் நெப்போலியனின் இந்த பதிலை படிக்கும் போது சிரிப்பு வரும். வர வேண்டும்.                  


Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்போலியன் என்கிற புலிகேசி மன்னர் Reviewed by Arul Scott on 6:04 AM Rating: 5 53 best Madame Tussaud images on Pinterest | Madame tussauds, Wax ... Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்ப...

No comments: