Thursday, August 17, 2017

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

முகம் ஒன்றுதான் அது அத்தனை உணர்வுகளுக்குமான நாடக மேடையாக திகழ்கிறது. எத்தனை அடுக்குகளிலான உணர்வுகள் அதன் மீது அரங்கேற்றப்படுகின்றன. அத்தனைக்கும் அந்த முகம் உயிர் கொடுக்கிறது. அந்த அரங்கேற்ற மேடை மாத்திரம் இல்லை என்றால் அத்தனை உணர்வுகளுக்கும் உயிர் அற்று போய் விடும். கோபம் இப்படித்தான் இருக்கும் என அதனை தனியாகத் துண்டித்துக் காட்டக் கூடியவர் யார்? கனிவு என்பதை அதன் இருப்பில் தனியாகத் துண்டித்துக் காட்ட முடியுமா? இவைகள் அனைத்துக்கும் முகம் என்ற நாடக மேடை அவசியப்படுகிறது.
அனைத்து உணர்வுகளுக்குமான வெளியாக்கமாக முகம் இருப்பது இயல்பானது. அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். கோபம் வந்தால் உடனே அதனை வெளிப்படுத்தியாக வேண்டும். அன்பு என்றால் அதனையும் உடனே வெளிப்படுத்தியாக வேண்டும். இதில் ஒவ்வொருவரும் ஓவ்வொரு உணர்வை அதீதத்தில் வெளிக்காண்பிக்க பேர்போனவர்கள். அனைவரும் அனைத்து உணர்வுகளையும் சமச்சீர் விகிதத்தில் தங்கள் முகத்தில் திரையிடும் இயல்பு இல்லாதவர்கள்.
ஒரு மனிதனால் கோபம் கொள்ள மாத்திரமே தெரிந்திருக்குமாயின் அவனால் அதிகம் அன்பைக் காட்ட முடியாது. அப்படியே மீறி காட்டினாலும் அதுவே அபூர்வமானதாக ஆகிவிடும். எப்போதும் அன்பை மாத்திரமே பொழிகின்றவர்கள் திடீரென கோபத்தை வெளிப்படுத்தும் போது அது ஒருவராலும் தாங்கிக் கொள்ள முடியாத உள்ளக் குமுறலாகி விடுகிறது.
இயல்பில் ஒருவருக்கு ஒன்று இல்லாதபட்சத்தில் திடீர் என்று அவரிடம் அது தோன்றும் போது அந் நபரை இயல்பற்றவராக மாற்றிவிடுகிறது. அதுவும் அந்த இயல்பற்ற நிலை சிறிது நேரத்திற்கு மாத்திரமே. அச்சிறிது நேரமே மற்றவர்களுக்கு தாங்க முடியாத தருணமாக மாறிவிடுகிறது. இயல்பிற்கு உட்படாதது ஒன்று நீண்ட நேரத்திற்கு நீடிப்பதில்லை. இதில் அனைத்தும் நீண்ட நேரம் நீடிக்காவிட்டாலும் ஒன்றை மாத்திரமே காலத்திற்கும் நிலைத்திருக்கும்படி நாம் விரும்புகிறோம். அதனை என்றென்றைக்குமான ஒன்றாக வைத்துக் கொள்ள நாம் ஆசைப்படுகிறோம். அந்த ஒன்று அன்பு. அன்பு ஒன்றே என்றென்றைக்கும் இருக்கவேண்டும் என்று நாம் அசைப்படுகிறோம்.
இங்கு பிரச்சனை ஒன்று உள்ளது. அன்பை மாத்திரமே என்றைக்குமான ஒன்றாக நாம் உணர்ந்து அனுபவித்து வருகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அன்பைத் தவிர இங்கே வேறு ஒன்றும் இருக்கவில்லை என்றும் வைத்துக் கொள்வோம். நம்மால் அந்த தனித்து நிற்கும் ஒற்றை உணவர்வான ஒப்பற்ற அன்பை இதுதான் ”அன்பு” என்று நம்மால் முழுவதுமாக அதனை உணர்ந்து கொள்ள முடியுமா என்பதுவும் கேள்வி.
முடியாதுதான். அன்பு அதனை அதன் முழுமையில் வைத்துப் பார்க்க வேண்டும் எனில் நாம் அதில் இருந்து அதுவல்லாத ஒன்றான வேறு ஒன்றிற்கு கடந்து சென்று அந்த ஒப்பற்ற ஒற்றை உணர்வை அதுவல்லாத மற்றொன்றில் இருந்து அன்பை அதன் முழுமையில் பார்க்க வேண்டி இருக்கிறது. கோபம் என்ற மற்றொரு புள்ளியில் இருந்தே அன்பு என்ற முழுமையை நாம் பார்க்க முடியுமோ? அது இல்லாவிடில் அன்பின் முழுமையை நாம் கண்டு கொள்ளவே முடியாதோ எனவும் தோன்றுகிறது.
அதே நேரத்தில் அப்படி கோபம் என்ற மற்றொரு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. பிரச்சனை இதுதான்: நாம் அன்பையே இலக்குப் பொருளாக வைத்து அதனை ஆய்வு செய்துவிடுகிறோம். நாம் ஒருபோதும் எதிர்மறை அம்சமான கோபத்தை அதனுடைய இருப்பில் ”இது தான் இது” என்று ஆய்வு செய்வதில்லை. கோபம் ஒன்று தனியாக ஒன்று இருக்கிறது என்று நாம் நம்புகிறோம். அதுவும் பிரச்சனையே.
உண்மையைச் சொல்லப்போனால் இந்த உலகத்தில் கடைசியில் எஞ்சி இருப்பது/இருக்கப்போவது அன்பு ஒன்று மாத்திரமே. அது மாத்திரமே என்றென்றைக்குமான எக்காலத்துக்குமான ஒன்றாக விளங்குகிறது. அதனைத் தவிர்த்து எதாகிலும் ஒன்று அன்பிற்கு போட்டியாக நிற்குமாயின் அதன் பிரச்சனை அன்பில் இல்லை. மாறாக போதாக்குறையாக ஒன்று அன்பில் குறைவுபடுகிறது. அன்பு குறைவுபடும் நிலையில் அந்த குறைவின் நிலைதான் நாம் கூறும் கோபம், காழ்புணர்ச்சி, வெறுப்பு மற்ற எல்லாம். இவைகள் அன்பின் ஏதோ ஒரு இல்லாத நிலைதான். இவர்கள் அன்பில் குறைவுபட்டவர்கள் மற்றும் இல்லதாவர்கள் ஆவர். இருப்பது ஒன்று மாத்திரமே அன்பு ஒன்றே.
ஒருவன் இவைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் காட்டும் திறன் அற்றவன் எனவும் சொல்லலாம். அன்பின் ஒருபகுதி குறைவு படும் நிலையில் அங்கே நிற்பது அதாவது அந்த போதாக்குறையின் பகுதிதான் ஒருவருக்கு வெறுப்பாகவும், காழ்ப்புணர்ச்சியாகவும், கபடமாகவும் மாற்றமடைகிறது.
ஒருவேளை ஒருவனுக்கு அன்பின் சாரமே உள்ளத்தில் இல்லாமல் போகும் எனக் கொள்வோம். அந்த நிலை? ஏற்கனவே சொன்னது போல முகம் ஒரு நாடக மேடையாக ஒன்றை மாத்திரமே காட்ட முடியும். அதுவும் அது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருப்பதாகும். இப்போது அவன் மிக அரிதாக வெளிக்காண்பிக்கும் ஒன்றான அன்பும் இல்லாவிடில் அவனுடைய அந்த மற்ற குறைவுபாட்டின் உணவர்வுகள் அவனிடத்தில் இருக்கக் கூடுமா? அப்படி இருக்க முடியாதுதான். அது எதுவும் அற்ற ஒரு நிலை. ஒருவன் மனதில் அன்பின் ஈரம் முழுவதும் வற்றிவிட்ட நிலையில் அவன் முகத்திரை எதனை நாடகமாகக் காட்சியாக்கும்? அன்பும் கிடையாது, அதன் குறைவுபாடான மற்ற எந்த உணவர்வுகளும் கிடையாது. எதுவுமற்ற நிலை எது?

என்னைப் பொறுத்தவரையில் அது உணவர்களே அற்ற ஒரு முகமூடியை தன் முகத்தின் மீது பொருந்த்திக் கொள்வதைப் போன்றதாகும். அந்த முகமூடி சிரிப்பை மாத்திரமே நிரந்தரமாகக் காட்டுகிறது என வைத்துக் கொள்வோம். அந்த முக மூடியை உற்று நோக்கும் போது ஒரு வித ஏக்கம் அந்த சிரிப்பின் முகத்திற்கு பின்னால் இருக்கும். அந்த பரிதாபத்தில் ஒரு அன்பின் ஏக்கம் காணப்படுகிறது. அன்பு மிகுதியாக இருக்கும் பட்சத்தில் எப்படி அது மற்றவர்களை சந்தோஷப்படுத்துகிறதோ அதே போன்று அந்த அன்பு என்ற பிரவாகம் வற்றிய உள்ளதைப் முகமூடியில் பார்க்கும் போது இரக்கம் மேலிடிகிறது.

Monday, August 14, 2017

மிஸ்ட்டர் பேனா அமுக்கி


சென்ற வாரம் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. என் வாழ்நாளில் இதுதான் எனக்கு வந்த முதல் கடிதம். அதாவது நீல நிற Inland letterல். ஆவலோடு பிரித்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பின் தொடர்ச்சியில் என்னை பயம் கவ்விக் கொள்ள ஆரம்பித்தது. அது ஒரு விமர்சனக் கடிதம். நான் எழுதிய “கூப்பிடுக்கள் புதுமைப்பித்தனை” கட்டுரைக்கான எதிர்வினை அது. கிழித்து தொங்கபோட்டுவிட்டார். எழுதிய கடிதத்தை அப்படியே என்னுடைய பிலாக்கில் பதிவிடும்படி உத்தரவும் போட்டுவிட்டார். சில வசவுகளை மாத்திரம் நீக்கிவிடுகிறேன் என்ற கோரிக்கைக்கு சம்மதம் தெறிவித்துக் கொண்டார். கடித்தத்தில் வந்த எதிர்வினை இதுதான்.

மிஸ்ட்டர் பேனா அமுக்கி,
விலை உயர்ந்த அந்த காமா பேனா அதிகம் இன்க் பிடிக்கும் என்பதால் கண்டமேனிக்கு எழுதுவதை தவிர்த்தல் நலமாக இருக்கும். பேசும்போது நாவடக்கம் எவ்வளவு அவசியாமோ அதே அளவிற்கு பேனாவைக் கையாளும்போதும் அதிகம் அவசியம். தர்க்கம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. “கொசுக்களை வடிகட்டி ஒட்டகத்தை விட்டுவிடுகிறீகள்”. நான் ஒட்டகம் என்று சொன்னது வணிக இலக்கியத்தைப் பற்றினது. கொசுக்கள் என்று சொன்னது சீரியஸ் இலக்கியத்தைப் பற்றியது. சு ரா எங்கே அந்த வணிக எழுத்தாளர்கள் எங்கே. தமிழ் இலக்கியத்தைப் பற்றி பேசும்போது அதனை தமிழ் இலக்கிய விமர்சன பின்னணியில் வைத்துமட்டுமே விவாதிக்க வேண்டும். ஒருபோதும் நீங்கள் வரம்பை மீறி இங்கு உள்ள நவீன தமிழ் இலக்கியத்தைப் பற்றி விவாதிக்கும் போது மேல் நாட்டு இலக்கிய விமர்சனங்களை சண்டைக்கு இழுக்கக் கூடாது. இது ஆய்வு நெறிமுறை பிறழ்வு. நீங்கள் குறிப்பிட்ட கா. நா. சு வே ஒருபோதும் தன்னுடைய நவீன தமிழ் இலக்கிய விமர்சனத்திற்கு மேல் நாட்டு விமர்சனத்தையோ கோட்பாட்டையோ கையாண்டது கிடையாது. அந்தந்த பண்பட்டிற்கென்று அதற்கான அரசியல் இருக்கிறது. இதில் அங்குள்ள ஒன்றை இங்குக் கொண்டுவந்து முடிச்சு போடக் கூடாது. இருப்பினும் உங்களுடைய விவாதத்தை அதிகம் ரசித்தேன்.
இன்னொன்றையும் நீங்கள் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலக்கியம் என்பது உன்னத சிந்தனையில் இருந்து பீரிட்டு வெளிப்படும் பிரவாகம் என்பார்கள். இதுதான் நம்முடைய நம்பிக்கையும் கூட. நம்முடைய தமிழ் இலக்கியத்தில் இதை நீங்கள் பார்ப்பீர்களானால் சிந்தனை எவ்வளவு செறிவானதாக இருக்கிறதொ அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கையும் இருக்கும் என நம்பலாம். அதிலும் சிலருடையதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
எது எப்படி இருந்தாலும் நம் நம்பிக்கையான உன்னத சிந்தனை மற்றும் அதில் இருந்து வரும் இலக்கியம் என்பதை அந்த சிந்தனையாளனுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது வாழ்க்கை மிகவும் மோசமானதாகத்தான் இருக்கும். உங்கள் கட்டுரையில் ஹெம்மிங்வே ஹெம்மிங்வே என்று மூச்சு முட்ட கத்துகிறீர்களே அவருடைய வாழ்க்கையில் அவர் என்ன அவ்வளவு ஒழுக்கவாதியா?. ஓரினச்சேர்க்கைக்காரர்தானே அவர்? ஒழுக்கம் ஒழுக்கமின்மை என்ற வரையறைக்கும் மீறி Sodomi என்று சொல்வார்களே அப்படிப்பட்டவர்கள் தானே இந்த ஐரோப்பிய இலக்கியவாதிகள் மற்றும் சிந்தனைவாதிகள்.
கேரக்ட்டரே சரியில்லை என்னும் போது அவர்கள் சிந்தனை மாத்திரம் உன்னதமாக இருந்து கொண்டாடுவது எவ்வளவு அபத்தமானது. அந்த ஹேம்மிங்வேவினின் ஒழுக்க சீலத்தோடு நீங்கள் சொன்ன சேசை சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அதில் சேஸ் ஒழுக்கத்தின் சிகரமாகக் கூட இருக்கலாம். ஒழுக்கமாக இருப்பது என்பது வேறு உன்னதமான எண்ணங்களைக் கொண்டிருப்பது வேறு. ஏன் சுஜாதாவை எடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக அவர் ஒழுக்க சீலர். மறுப்பேதும் இருக்க முடியாது. ஆனால் அவர் கதைகளில் சற்று மசாலா துக்கலாகத்தானே இருக்கிறது.
இந்தவகையில் உங்களுடைய கட்டுரை ஒரு இலக்கிய வடிகட்டி என்ற வகையில் ஒரு பெரிய ஒட்டகத்தையே நிறுத்தாமல் விட்டுவிட்டது. அதற்கு பதிலாக தேவையில்லாத சிறிய கொசுக்களை பூதமாகக் காட்டி அவைகளை ஒரு பொருட்டாகக் கருதி வடிகட்டியிருக்கிறது. நல்லா எழுதினீங்க போங்க கட்டுரையை. எழுதும் போது பக்குவம் பார்த்து எழுத வேண்டாமா?
மிக காட்டத்துடன் எழுதிக்கொள்ளும் உங்கள் நலம்விரும்பி

********

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...