Monday, October 31, 2016

Wish You The Same

Wish You The Same
ஆங்கிலத்தில் ஒருவர் நமக்கு வாழ்த்து கூறும் போது அதற்கு மறு வாழ்த்து கூறுவது சங்கடமான காரியம். ”Wish You Happy Diwali Sir”. மறுவாழ்த்து கூற தமிழில் இருந்து அப்படியே மொழிப் பெயர்ப்பு செய்தால் ஊர் சிரித்துவிடும். அதற்காக மௌனம் காக்கவும் முடியாது. எதையாகிலும் உளறி வைத்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அவ்வளவுதான். நாம் எவ்வளவு ஆங்கிலத்தில் உலக இலக்கியத்தை வாசித்திருந்தாலும் அந்த ஒரு நொடிப் பொழுதில் நம்முடைய எல்லா வாசிப்பனுபவமும் பூஜ்ஜியமாகி விடுகிறது. மறுவாழ்த்து சொல்ல கற்றுத்தராத  இலக்கியம் என்ன பெரிய இலக்கியம் என்ற ஆற்றாமை அப்போது நாம் வாசித்த வாசிப்புகள் அனைத்தின் மீதும் கோபத்தை ஏற்படுத்திவிடும். அதுவும் நவீனத்தின் மிடுக்கோடு இருக்கிற மாணவர்களைக் கண்டால் போதும் நம்முடைய ஆங்கிலத்தில் இருக்கிற “do” “does” ஆகிவிடும் “does” “do” ஆகிவிடும்.

Thursday, October 27, 2016

நொடிப்பொழுதில் இலயித்திருக்கும் கவிதைகள்

நொடிப்பொழுதில் இலயித்திருக்கும் கவிதைகள்

[ நேற்று டான் குயிக்ஸாட்டின் எட்டாம் அத்யாயத்தை வாசித்து கொண்டிருக்கும் போது கவிதையைப் பற்றியும் அதில் வரும் பாடு பொருள்களைப் (குறிப்பாக பெண்களின் அழகு) பற்றியும் செர்வான்டஸ் செய்த கோபம் மிகுந்த கேளிக் கிண்டல் அதனைப் பற்றி சிறிது யோசிக்க வைத்தது. அதுபோன்ற சிந்தனைகளை வீணடிப்பது மாபெறும் தவறு என்பதினால் உடனே சிந்தனையை ஐநூறு எண்ணிக்கைகளிலான வார்த்தைகளில் பதிவு செய்து விட்டேன். ]
கவிதை தன் இயல்பில் ஒருபோதும் எதையும் அதன் இயல்புதன்மையில் வைத்துப் பார்க்காது. ஒரு படி மேலே சென்று அதனை சற்று உயர்த்தி அல்லது அழகு படுத்தித் தான் காண்பிக்கும். கவிதையின் பாடுபொருள்களே இப்படித்தான். ஒன்று கிடைத்து விட்டால் போதும் அதனை மெருகேற்றி அதன் இயல்பு தன்மையில் இருந்து சற்று மாற்றித் தான் காண்பிக்கும். ஏன் இயல்பில் உள்ள பொருட்களை அவைகள் இருப்பது போன்று காட்ட கூடாதா? இயல்பு நிலை அவ்வளவு அவலட்சணமானதா? இதெல்லாம் நம்மை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கிறவைகள். இது கவிதையின் குணாதசியமா. அல்லது இயல்பு நிலையை ஒருபோதும் அதன் இயல்பு நிலைக்கு மீறி காட்டமுடியாது என்பதா. சில நேரங்களில் நாம் ஒரு பார்க்கின்ற அனைத்தும் அந்த நொடிக்கானவைகள் தாம். இது காலம் சம்பந்தப்பட்ட காரியம். பொருளின் இயல்புத்தன்மை என்பது நிகழ்காலத்தின் அப்போதைய அந்த நொடிப்பொழுதில் நம்மால் பார்க்கப்படுவதைக் காட்டுகிறது. அந்த கடந்து போகும் நொடிப்பொழுதுதான் இயல்பு நிலை நேரம். அந்த ஒரு நொடிக்கு முந்தைய எந்த ஒரு காரியமானாலும் சரி அது இயல்புக்கு மீறின ஒன்றாகும். நம்முடைய பார்வை அந்த துள்ளியமான நொடியிலிருந்து பயணம் செய்து கடந்த காலத்திற்கு சென்று விடுகிறது.

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்


இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்
இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள் என்று குறைவு பட்டுக் கொண்டிருப்பார். இதனால் மற்ற எழுத்தாளர்களை திட்டவும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இதனைக் கேட்க்கும் போது உள்ளூர குற்ற உணர்வு ஏற்படும். எழுதுவதற்கு தயக்கமும் ஏற்படும். எழுத்தை வீணடிக்கக் கூடாது என்று இமையம் சொல்லும் போது அவர் எதை அர்த்தப்படுத்தி பேசினார் என்பது இன்றைக்கு அவருடைய பேட்டியை இந்துவில் படித்த பின்புதான் புரிந்து கொண்டேன். இமையம் தன் எழுத்திற்கென்று சமீப காலங்களாக ஒரு கோட்ப்பாட்டை முன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். இதனை கோட்பாடு என்று சொல்வதற்கு கூட பயமாய் இருக்கிறது. காரணம் கோட்பாடு என்ற வார்த்தை முழுவதும் இப்போது தவறாக அதுவும் கல்வி புலங்களில் பேராசிரியர்களால் அறைகுறையாக புரிந்து கொள்ளப்பட்டு போதிக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இமையம் உருவாக்கும் தன்னுடைய விழுமியங்கள் (இந்த வார்த்தை கூட கொஞ்சம் சிக்கலான வார்த்தை தான்) முற்றிலும் தன்னுடைய படைப்பு சார்ந்ததாகவே இருக்க செய்கின்றன. படைப்பில் இருந்து உருவாக்கப்படும் கோட்பாடுகள் தான் மிக திடமானவைகள். அந்த வகையில் ஹென்றி ஜேம்சின் நாவலின் கலைத் தன்மை என்ற கட்டுரை பொதுவாக நாவல் வடிவம் என்ற பொதுப்படையில் முன்வைக்கப்படும் கருத்தாக்கங்களாக அல்லாமல் தன்னுடைய படைப்புகளில் இருந்தே முன் வைக்கப்பட்டவைகளாக இருக்கின்றன.

Wednesday, October 26, 2016

மில்லரின் சாபம்



மில்லரின் சாபம்

நாராயணனும் கோபாலனும் அக்கல்விச்சாலைக்குட் புகுந்து மாணாக்கர் தொகுதியையும் ஆரவாரத்தையுங் கண்டு அதிசயித்துக்கொண்டே பிரதம ஆசிரியராகிய டாக்டர் மில்லர் துரையவர்களிருக்கும் அறையை தேடிச் சென்றார்கள். அப்புலவர் திலகருக்கு அபொழுது ஐம்பது வயதுக்கு மேலிருக்கலாம். அவர் சரீரத்தின் உன்னத எழுச்சியையும் நிமிந்த கம்பீர நடையையும், மயிர்செறிந்த களையும், எப்பொழுதும் பிறர் நன்மையைச் சூழவெழும் நினைவுக்களால் உண்டான வரிகளோடிய விசாலமான நெற்றியையும், உதடுகள் பொருந்தி மன உறுதியைக் குடிகொண்டு விளக்கும் தோற்றத்தையும் கண்டவர்கள் நெஞ்சில், ஒருவித ஆர்வமும் அச்சமும் வியப்பும் செல்வமும் உண்டாதல் இயல்பே.  அவர், ஸ்கோத்லாந்து தேசத்தில் செல்வமும் கண்யமும் பொருந்திய ஒரு நற்குடும்பத்தில் பிறந்து கல்வியில் சிறந்த பண்டித் தியத்தையடைந்து கீர்த்திப் பட்டங்கள் பெற்றவராயினும் சுயநயத்தையும் பொருளீட்டலையும் சிறிதும் பாராட்டாதவராய், ஔவையார் “திரைகலலோடியுங் கீர்த்தியைத்தேடு” என்ற முது மொழியைக் கைப்பற்றியவர்போல், மாதர் வலைச்ச்சிக்கி மனமுறுக்கும் இளம்பிராயத்திலேயே இத்தேசத்திற்கு வந்து, சென்னைக் கிறிஸ்தவ கலாசானையில் ஓராசிரியராயமர்ந்து, தம் சாமர்த்தியத்தினால் அக்கல்விச்சாலையின் தலைமை பூண்டு, அது பண்டிதராலும் பாமரராலும் தம் பெயராலேயே வழங்கும் படியான கீர்த்திப் பிரதாபத்தைக் கொள்ளை கொண்டிருதுமன்றி, செல்வப் பொருளைச் சிறிதும் மதியாது, மாணாக்கர்களின் சௌகர்யத்தின் பொருட்டும், வித்தியாசாலையின் பொருட்டும் கல்வியை ஏழை மாணாக்கர்களுக்குப் புகட்டும் பொருட்டும் தம் குடும்பச் சொத்திலிருந்து ஏராளமான திரவியத்தை செலவிட்டும், சிற்றின்பசுகத்தையும் சந்தானவிருத்தியையும் கருதாது ஆயுள்மட்டும் பிரமசாரி விரதத்தையே கைக்கொண்டு, கலைமகளே மணமகளாகவும், தம் அளவிறந்த மாணக்கரே புதல்வராகவும், பரோபகாரமே உத்தி யோகமாகவும் வாழ்ந்து வந்தார்.


மேற்கூறிய வரிகள் பத்மாவதி சரித்திரம் நாவிலின் வரும் பகுதியாகும். கதையின் நாயகன் நாராயணன் தன்னுடைய நண்பன் கோபாலனுடன் சென்னைக்கு மேற்படிப்புக்காக வருகிறான். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் நுழையும் போது அவர்களுக்கு ஏற்படும் மனவெழுச்சிதான் இந்த வரிகள். இது நடந்தது பதொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில். மாதவையா இக்கல்லூரியிலேயே பயின்றிருக்கிறார் பாடம் நடத்தியும் இருக்கிறார். அன்றும் சரி இன்றும் சரி மில்லர் நம்மை திகைக்க வைக்கிற ஒரு ஆளுமை. அன்று ஐம்பது வயதையுடைய மில்லர் மாணவர்கள் மத்தியில் பெரும் மதிப்பிற்குறியவராக இருந்திருக்கிறார். ஒரு நூற்றாண்டு கழித்து இதனை இன்றும் பசுமையுடன் நம்மிடம் தருவது நாவல் வகைமை மாத்திரமே. நாவல் தன்னுடைய வடிவத்தில் மாத்திரம் புதினம் அல்ல அது காலத்திற்கும் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கும் புதினமாக இருக்கிறது. கதையில் மில்லர் இன்றும் ஐம்பது வயதுடைய அதே கம்பீரமான பேராசிரியதான். மற்ற கலை வடிவங்கள் செய்யமுடியாததை நாவல் என்கிற கலைவடிவம் செய்து முடித்துவிடுகிறது. நாவலை தொடும் போதெல்லாம் மில்லர் அன்றிருந்த அதே மிடுக்குடன் நம் கண்முன்னே நடக்க ஆரம்பித்துவிடுகிறார்.  

Monday, October 24, 2016

பாப் டிலன்: சில நேரங்களில் சில பரிசுகள்


பாப் டிலன்: சில நேரங்களில் சில பரிசுகள்
பாப் டிலன் நொபேல் பரிசைப் பெற்றது பலதரப்பு சிந்தனையாளர்களிடம் இருந்து பலவிதமான கருத்துக்களை நம் மத்தியில் எழுப்பியிருக்கின்றன. சர்ச்சை என்று சொல்லாமல் கருத்துக்கள் என்று சொல்லவே பிரியப்படுகிறேன். பாப் டிலனின் இந்த தருணம் மிக முக்கியமான தருணம். நமக்கு மூன்று தரப்பினர்களின் விவாதங்கள் முக்கியப்படுகின்றன. இம்மூன்றைத் தவிர்த்து மற்ற எந்த விவாதமும் சர்ச்சைகளாத்தான் கொள்கிறேன். மூவர்கள் முறையே; நாட்டுப்புறவியல் வல்லுனர், சமூக சிந்தனையாளர் மற்றும் தேர்ந்த இலக்கியவாதி இலக்கிய விமர்சகர். இவர்களின் பெயர்கள் எனக்கு மாத்திரமே இரகசியமானவைகள். அதை வெளிப்படுத்தி இப்போது பேசுவது அறமாகாது. எனினும் இவர்களின் நிலைப்பாடுகளை முன் நிறுத்தி பேசுவது மிகவும் அவசியப்படுகிறது. இவர்கள் ஐரோப்பியர்களோ அல்லது கீழைத்தேயத்து அறிஞர்களோ அல்ல. நம்முடைய தமிழர்கள் அதுவும் பச்சைத் தமிழர்கள்.

Saturday, October 22, 2016

வீடுபேறு கிட்ட நண்பர்களை சம்பாதியுங்கள்




வீடுபேறு கிட்ட நண்பர்களை சம்பாதியுங்கள்
இன்று John Galsworthyயின் Strife என்னும் நாடகத்தை பற்றிய அறிமுகம் கிடைத்தது. இந்த பெயர் பரிச்சயமான பெயர். அதே நேரத்தில் உள்ளூர பயத்தை ஏற்படுத்தும் பெயரும் கூட. சில எழுத்தாளர்களின் பெயரை கேட்டவுடனே மகிழ்ச்சியான உணர்வு நமக்கு ஏற்படும். சில பெயர்கள் அதிலும் ஆங்கில இலக்கிய படைப்பாளிகளின் பெயர்கள் மிகவும் பயமுறுத்தக்கூடியவைகள். Galsworthy UGC பரிட்சையின் பயத்தை ஏற்படுத்தும் பெயர். பெயரைக் கேட்டதுமே இயல்பாக பயம் ஏற்பட்டுவிடும். கீழ்கண்டவற்றில் எது Galsworthyன் நாவல் என்ற கேள்வி ஏதோ தண்டனை கைதியிடம் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா என்ற கேள்வி போன்று ஒரு மரண பயத்தை ஏற்படுத்தும். இன்று அப்படி இல்லை. புத்தகம் மேஜையின் மீது வைக்கப்பட்டு அதைப்பற்றி பிரஸ்தாபமாக பேசப்பட்டது. Galsworthy என்ற பெயர் எங்கேயோ கேட்ட பெயர் ஆயிற்றே என்ற கேள்வி மாத்திரம் மண்டையை துளைத்துக் கொண்டே இருந்தது. அது UGC க்கு சொந்தமான பெயர் அல்லவா. யார் என்று தெறியாவிட்டால் படித்த முழு படிப்பும் வீண். பதில் கிடைக்காத வரை அற்ப பதர்தான். பதில் கிடைத்துவிட்டால் நம்மை போன்ற ஸ்காலர் உலகத்திலேயே ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

Wednesday, October 19, 2016

கதைக்கதையாம் காரணமாம்


கதைக்கதையாம் காரணமாம்
கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மொழி எந்த அளவிற்கு போதாமைத் தன்மையை கொண்டிருக்கிறது என்பதை விளக்க மொழியியலாளரோ மானுடவியலாளரோ நமக்கு வேண்டியதில்லை. அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கும் உரயாடல்களை கவனித்தாலே போதும். அவைகளில் பாதி மொழியற்று இயங்கும் பரிமாற்றங்கள் என்பதை கண்டு பிடித்துவிடுவோம். மொழி என்பது தன்னுடைய நிலையில் பாதி அளவில் தான் உரையாடலை தொடர அனுமதிக்கும். அதற்கு மேல் நம்மால் கருத்துக்களை மற்றவர்களுடன் தொடர முடியாமல் போகிறது. மௌனங்களும் திக்கல்களும் ஒருவழியாக நம்மை காடைசியில் சொல்ல முற்படுவதை சொல்ல வைத்து விடுகின்றன. இதற்கும் மீறி ஒருவன் சரலமாக மொழியை மிக நீண்ட நேரம் கையாள்பவன் என்றால் நிச்சயம் அவன் அசாதாரண மனிதனாகத்தான் இருக்க முடியும்.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...