Thursday, November 24, 2022

குற்றமும் தண்டனையும்: ஒரு ஏழை தாயின் பாசமிகு சொற்கள்

 


    Raskolnikovவுக்கு அவன் தாய் எழுதிய கடித்ததைப் போன்று உலகில் வேறு  யாராவது தனது மகனுக்கு அப்படியொரு ஆகச்சிறந்த கடிதத்தை எழுதியிருக்க முடியுமா என்று கேட்டால், தஸ்தாவஸ்கியின் காதலர்கள் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஒரு தாய் தன் மகனுக்கு எழுதிய அந்த ஆகச் சிறந்த கடிதம் குற்றமும் தண்டனையும் நாவலில் மூன்றவது அத்தியாயத்தில் இடம்பெறுகிறது. கடிதம் அத்தியாயத்தில் இருக்கிறது என்றா சொன்னேன்? இல்லை இல்லை தவறாக சொல்லிவிட்டேன்.  அத்தியாயத்தில் கடிதம் இல்லை. கடிதமே அத்தியாயமாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். நீண்ட நெடிய கடிதம் அது. அதுவும் தொடர்ந்து மேலும் எழுதுவதற்கு மூன்றாவது  காகிதம் இல்லாததால் கொஞ்சம் குறைவாகவே இரண்டாம் பக்கத்தோடு அந்தத் தாயார் கடித்தத்தை முடித்துக் கொள்கிறார். இல்லை என்றால் முழு நாவலும் அந்த ஏழைத் தாயின் கடிதமாக மாறியிருக்கும். நாவலில் அநேக பக்கங்களில் சொல்லி இருக்க வேண்டிய முன் கதையை சுருக்கமாக கடிதத்தின் வழியே தெளிவாக சொல்லப்படுகிறது. கடிதத்தை வாசிக்கும் போது கடிதத்தின் சொற்களுக்கும் அதனை எழுதுகிற தாயின் பாசமிகு உணர்வுகளுக்கும் இடையே பெரிய இடைவெளி ஒன்றும் இல்லை. கடிதத்தின் சொற்களே அத் தாயின் உணர்வுகள், அவள் உணர்வுகளே அச்சொற்கள். இரண்டிற்கும் இடைவெளி என எதுவும் இல்லை. 

Monday, November 7, 2022

விரிந்த மயில் தோகையின் ஆயிரம் கண்கள்



    Picture of Dorian Gray நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என்று வாசிக்காமல் ஒத்திப் போட்டுக் கொண்டு வந்திருந்த நாவல். உணவு வகைகளை சாப்பிடுவதைப் போன்று, புத்தகங்களை எடுத்து உடனடியாக வாசித்து விட முடிவதில்லை. குளிர் சாதன பெட்டியை திறந்து வேண்டியதை  எடுத்து சாப்பிடுவதை போன்று இருப்பதில்லை புத்தக வாசிப்பு. எல்லா நேரங்களிலும் நினைத்ததை எடுத்து வாசித்து விடவும் முடிவதில்லை. வாசிப்பில் அதற்கென்று பெயர் பட்டியல் (catalogue) ஒன்று உருவாக வேண்டும். தற்போது வாசிக்கும் புத்தகம் முன்பு வாசித்த புத்தகத்தின் தொடர்ச்சியாக அமைகிறது. 

Friday, January 21, 2022

தி. ஜா. ராவின் அபூர்வ ராகங்கள்

 



மோகமுள் நாவலில் வரும் ரங்கண்ணாவுக்கு எப்பொழுதும் வீணையைச் சுருதி சேர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். இசை பயில வரும் மாணவர்களின் அனுதினக் கடமை அது.  இல்லையெனில் தூர்வாசர் சாபம்தான். பாபுவைக் கண்டால் மத்திரம் உச்சிக்கு ஏறின கோபம் சட்டென்று தணிந்து விடும். சுருதி சேர்ந்த வீணையைக் கொண்டு ரங்கண்ணா பெரிய  சச்சேரி ஒன்றும் செய்யப் போவதில்லை. வெறும் சாதகம் மாத்திரம்தான். அனுதின சாதகத்திற்கும் சரி என்றோ ஒரு நாள் அரங்கேற போகிற கச்சேரிக்கும் சரி வீணையைச் சுருதி சேர்த்து வைத்திருத்தல் அவசியம். எது எப்படியோ,  நன்கு சுருதி சேர்த்து வசிக்கத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் வீணை பெறும் கலைஞன் ஒருவனுக்காகக் காத்திருக்கிறது. அல்லது ரங்கண்ணா போன்றவர்களின் இலக்கணம் மீறாத அனுதின சாதகத்திற்குக் காத்திருக்கிறது.  கலைஞனின் விரல்கள் பட்டதும் இசை தன் இருத்தலைக் கண்டடைந்து விடுகிறது. விரல்களின் இயக்கம் இருக்கும் வரையில், சங்கீதம் உயிர்ப்போடு இருக்கிறது. விரல்களின் ஜாலங்கள் முடிந்தவுடன் இசையும் காணாமல் போய் விடுகிறது.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...