Monday, December 25, 2017

சொல்லும், செயலும்


வழிமுறை எதுவாயினும் பரவாயில்லை இலக்கை அடைவதுதான் முக்கியம். அடையும் வழிமுறை எப்படிப்பட்ட ஒழுக்க மீறலில் செயல்பட்டாலும் அது ஒரு பொருட்டே அல்ல. இலக்குதான் முக்கியம். இதனை ஒரு மதவாதி பேசவே துணிய மாட்டார். செய்வது ஒன்றாக இருந்தாலும் அதனை நியாயமாகவே அவர் முன் நிறுத்தி பேசுவார். மதம் எப்போதும் உண்மையை தன் ஆடையாக போர்த்திக் கொண்டு எந்தக் காரியத்தையும் செயல்படுத்தும். அது நன்மையாக இருக்கட்டும் தீமையாக இருக்கட்டும் தன்னை முன்நிலைப்படுத்திக் கொள்வது உண்மை என்ற சாதனத்தின் மூலமாகவே. மதம் சற்று சாரம் பொருந்திய வார்த்தையான ’தர்மம்’ என்ற பத்தத்தை பயன்படுத்திக் கொள்கிறது. அந்த வார்த்தையின் வைப்ரேஷன் சற்று கூடுதலானது. மதம் மாத்திரமே கையில் எடுக்கும் பதம். அறம், தர்மம் இந்த வார்த்தைகளை தொட தத்துவவாதிகள் வெட்கப்படுவார்கள். மதம் அவர்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறது. இந்த வார்த்தைகளைத் தொட சற்று நாணுவார்கள். அப்படியே பயன்படுத்திவிட்டாலும் அவர்களுடைய நிலைப்பாடே மாறிவிடுகிறது. மதத்தின் தளத்தில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். சொல்லும் சொல்லே ஒருவருடைய அடையாளமாகிறதோ?
தத்துவவாதிகள் தர்மம், அறம், சத்தியம் என்ற மதம் சார் வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகளைத் தங்களுக்கென வகுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது செக்குலராகவும் இருத்தல் வேண்டும். நீதி, நேர்மை, நியாயம், உண்மை, ஒழுக்கம் என அதிகம் வைப்ரேஷன் ஏற்படுத்தாத வார்த்தைகளை அவர்கள் கையாள வேண்டியிருக்கிறது.
”அது சமஸ்கிருதம் இது தமிழ். அதிலும் ’அறம்’ செவ்வியல் தமிழ்”.
 விதண்டாவாதம் வம்புக்கு இழுக்கிறது.
 வார்த்தையின் வீரியம் ஒருவரை அதன் கட்டுப்பாட்டில் வைத்தைக் கொள்ளச் செய்கிறது. அல்லது தன்னால் அதன் கட்டுப்பாட்டில் இருக்க முடியாவிட்டாலும் அதற்கு ஏற்றார் போலவாவது நடித்தாக வேண்டியிருக்கிறது. நடிக்கும் போதே பயம் மன்னிக்கவும் அச்சம் பற்றிக்கொள்கிறது. அதுவே அறம் சார்ந்த விசயம் தானே?
இலக்கு முக்கியம் அதே நேரத்தில் அதனை அடையும் வழி நீதியான வழியாகவும், நேர்மையானதாகவும் இருத்தல் வேண்டும். இதனை அணுகும் போது பயம் ஏதும் நமக்கு ஏற்படுவதில்லை. ஆதலால் யார் ஒருவர் இவைகளை முன்னிட்டு காரியங்களை பேசுகிறாறோ அவருக்கு இந்த வார்த்தைகள் மீது அலட்சியம் அதிகம். இது மற்றவர்களை கட்டுப்படுத்தும் சாதனங்கள் மட்டும்தான். பயன்படுத்துபவர் எப்போது வேண்டுமானாலும் இவைகளை விட்டு விட்டு வெளியே போய்விடலாம். தன் விருப்பத்தை எந்த வழியை கொண்டும் இலக்கை அடைந்து விடலாம்.
”நீதி வேண்டாமா? நேர்மை வேண்டாமா?”
”அதைப் பற்றி எனக்கேன் கவலை”
இலக்கை அடைவதுதான் முக்கியம். இலக்கை அடைய ஒருவர் முன்னெடுக்கும் முயற்சியே ஒருவரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. வழியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் சேரும் இடமே முக்கியமானது. அது சொர்க்கமாகவே இருக்கட்டும் தர்மத்தின் வழி அவசியம் இல்லை. வழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சரி நீங்கள் தான் தத்துவவாதியாயிற்றே உங்களுக்கு ஏது சொர்க்கம். அப்படியெனில் இலக்கு வேறு ஒன்றா?
ஒற்றை இலக்கான சொர்க்கத்தை நீக்கிவிட்டால் ஓராயிரம் சொர்க்கங்கள். அடையும் வழிகளும் அநேகம்.
 ”பாவம் என்ற கல்லறைக்கு பலவழி / அந்த நீதி தேவன் கோவிலுக்கு ஒரு வழி”.
 இப்போது கல்லறையும் இல்லை கோவிலும் இல்லை, நீதி தேவனும் இல்லை. அவர் அப்போதே அண்ணாவின் நாடகத்தில் மூர்ச்சையாகிவிட்டார். அதையெல்லாம் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டது. அதனை பேசியவர்களின் சித்தாந்தங்களும் காலாவதியாகிவிட்டன.
காரணம் அவர்கள் முன் வைத்த வழிமுறை பொறுட்டல்லாத ஒன்றாகவும் அடையும் இலக்கே முக்கியமானதாகவும் மாறிவிட்டது. இதனை புத்தகத்தில் பேசிவிடலாம், தத்துவமாக ஊருக்கே பேசி கூட்டத்தையும் கூட்டலாம்.
 முன் வைத்த சித்தாந்தம் செயலுக்கு வரும்போதுதான் அது சரியானதா தீமையானதா என முடிவெடுக்கப்படும். கருத்தாக்கமாக எப்பேர்ப்பட்ட ஒழுங்கீனத்தையும் நியாயமாக ஆதரித்து பேசிவிட முடியும். அது செயலாக்கம் பெறும் போதுதான் அது தர்மமா, அறமா, நீதியா, ஒழுக்கமானதா, என அனைத்தும் மெய்ப்பிக்கப்படும். அதுவரையில் ஒரு கருத்தாக்கத்தைக் கொண்டு எதை வேண்டுமானாலும் நியாயமானதாகவும் நன்மையானதாகவும் பேசிவிடலாம். அனைத்திற்குமானது மெய்ப்பிக்கப்படும் செயல்பாட்டின் தருணத்தில் இருக்கிறது. செயல் ஒன்றே அனைத்திற்குமான நிவாரணி. அதுவரையில் எல்லாம் ஒன்றுபோல் தோன்றும். நல்லதை தீமை என வாதிடலாம் தீமையை நன்மை என வாதிடலாம்.
நன்மையும் தீமையும் அதன் தன் கருத்து நிலையில் இல்லை - அது செயலாக்கத்தில் இருக்கிறது. ஒருவர் தன் சிந்தனையை செயலில் காட்டட்டும். அது நல்லதா கெட்டதா என்பதை ஊர் தீர்மானிக்கும். அடையும் வழி முக்கியமல்ல இலக்கே முக்கியமானது என்பதை ஒருவர் கருத்தாக நூறு ஆயிரம் பக்கங்களாக புத்தகங்கள் எழுதி பேர் பெற்றுவிடலாம். அதனை செயலாக்கத்தில் கொண்டுவருவது துர்லாபம். மனத்திடம் வேண்டும். இதையெல்லாம் தத்துவாதிகள் கோட்ப்பாட்டாளர்கள் ”இப்படி இருந்தால் என்ன?” என யோசனையாக முன் வைப்பார்கள். அவ்வளவுதான். அவர்கள் அதனை ஒருபோதும் செயலாக்கத்தில் கொண்டுவரவே மாட்டார்கள். காரணம் அவர்கள் ஒழுக்க வாதிகள். அடிப்படையில் அவர்கள் மிகவும் நல்லவர்கள். மதவாதிகள் அதற்கு நேரிடையானவர்கள். சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று. சொல்வதோ தர்மம், சத்தியம், அறம். இவைகளை பேசுபவர்கள் ஒருப்போதும் அந்த வார்த்தைகளுக்கு உண்மையாக இருக்கவே மாட்டார்கள். காரணம் அவைகள் கோரும் ஒரு வாழ்க்கை இலட்சியமான வாழ்க்கை. தியாகம் அவசியம்.
சேதாரம் என தெரிந்த பின்பு எப்படி ஒரு மதவாதி அந்த வார்த்தைகளுக்கு உண்மையாக இருக்க முடியும். இதனால்தான் மிக அரிதாகவே மகான்கள் மிக சொற்ப எண்ணிக்கையில் நம் வரலாற்றில் சென்றிருக்கிறார்கள். சொல்லும் சொல்லை செயலாக்கம் பெற செய்வது எளிதெனில் அனைவரும் இயல்பானவர்களாகவும் வாழ்க்கையும் இயல்பனதாகவும் இருக்குமே. சொல்லை செயலில் கொண்டுவருவதற்கு உயிர்த்தியாகம் செய்ய முற்பட்டவர்களைத்தானே மகான்கள் என கொண்டாடுகிறோம். அனைவரும் மகான்கள் கிடையாதே.
இதில் தத்துவவாதிகளை அவர்கள் முன்மொழியும் கருத்துக்கள் எவ்வளவு ஆபத்தானதாக இருப்பினும் நம்பிவிடலாம். ஏனெனில் தங்கள் கருத்துக்களை ஒருபோதும் அவர்கள் நடைமுறைக்கு கொண்டுவரவே மாட்டார்கள். கதைகள் பல பேசி திரிவார்கள்.

தேடிச் சோறுநிதந் தின்று -  பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே  …………………………..


அதற்கு மேல்? ஒன்றும் கிடையாது. அது பாரதி கவிதையே ஆனாலும் அதனை என் கட்டுரையின் ஒட்டல் வெட்டல் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவேனே அன்றி பாரதியை ”என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்ய” அல்ல. கட்டுரையே கட்டுரையின் இலக்கு. 

Sunday, December 17, 2017

கரன் கார்க்கியின் ஒற்றைைப் பல்: நிணத்தின் வாடைவீசும் யதார்த்தவாதம்

கரன் கார்க்கியின் ஒற்றைப் பல்: நிணத்தின் வாடைவீசும் யதார்த்தவாதம்
யதார்த்தவாதத்தைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் வெட்டி தோலுரித்து தொங்கவிடப்பட்ட மாமிசத்தின் மீது  எழும் நிணத்தின் வாடை நினைவிற்கு வரும். அனைவருக்கும் வாய்க்காத எழுத்தின் உத்தி யதார்த்தவாதத்தின் உத்தி. அதுவே உயர் கலை என கொள்ளலாம். வாழ்க்கை நம் கண் முன் தோலுரித்துக் காட்டப்படுகிறது. ஒருமுறை எழுத்தாளர் இமயத்திடம் பேசிக்கொண்டிருக்கும் போது யதார்த்தவாதம் பற்றி கேள்வி கேட்டேன். அவர் மிக இயல்பாக பதிலைத் தந்தார். பதில் கேள்வியாகவே இருந்தது. ”எழுத்தில் ஏது யதார்த்தம். பேனாவை தொட்டவுடனேயே கற்பனையில் இறங்கிவிடுகிறோமே?” இலக்கியத்தில் நாம் நினைக்கிற அதி தூய்மையான யதார்த்தவாதம் சாத்தியம் கிடையாது” என்று சொன்னார். எனினும் ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் A 1 பீப் ஸ்டாலில் எழும் மாம்சத்தின் நிண வாடை நினைவில் எழும்பும். வாழ்க்கையை அதன் நிர்வாண நிலையில் முதன்மைப்படுத்துவது அது. அதனிடம் அணுகிச் செல்லுவதற்கு நமக்கு ஏனோ பயம். இது பிரதியை பிரித்து வாசிக்காமலேயே ஏற்படும் பாதிப்பு. அதுவே கரன் கார்க்கியின் ஒற்றைப் பல் பிரதியின் மீது ஏற்படுகிறது.
ரஷ்ய கார்க்கியை கலைஞரின் ”தாய்” மொழிப்பெயர்ப்பின் பல ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். யதார்த்தத்தின் நிணம்  பழக்கப்பட்டதுதான். இப்போது ஒற்றைப் பல்லையும் வாசிக்க வேண்டும்.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...