Tuesday, August 3, 2021

பரிணாமத்தின் பெரும்பாதையில் உயிரின் தொடர்ச்சி

 



பரிணாமம் பற்றின கருத்து எந்த அளவிற்கு நம்பகமானது என்பது தெரியாது. இருப்பினும் அதனைக் கொண்டு பூமியின் மீதான உயிரின் தொடர்ச்சியை அதன் முழுமையில் புரிந்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறார்கள். கருத்து ஏற்புடையதா அல்லவா என்பதை விட அதன் மூலம் கோடி கணக்கான வருடங்களில் உயிர் எப்படி பயணித்தது என்பது பற்றின தேடல் மிகவும் சுவாரசியமானது. இந்த பரிணாமப் பாதையில் மனிதனை எங்கு பொருத்துவது அல்லது இந்த பாதையில் மனிதன் எங்கு வருகிறான் என்பது பரம்புதிரான ஒன்று. இந்த பெரும் பாதையில் திடீர் என்று மனிதன் இடைச்செருகலாக வந்தான் என்று நம்புவோமாக. எனினும் மனிதனைத் தவிர்த்து உயிர்களின் தோற்றம் மற்றும் அவைகளின் வளர்ச்சியை சற்று உற்று கவனித்தால் எப்பேர்ப்பட்ட கால வெளியில் அவைகள் பயணம் செய்து இன்று இருக்கிற காலத்திற்கு நம்மிடம் வந்து சேர்ந்து இருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. இதில் எத்தனை ஊழிகள் வந்தனவோ எத்தனை வகையான உயிரினங்கள் அந்த ஊழியில் அழிந்து காணாமல் போயினவோ. அழிவுகள் அத்தனையும் தாண்டி சிலர் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Sunday, August 1, 2021

பூனாச்சி: அக வாழ்க்கையின் அதிசயம்

வலிமை அற்ற எந்த ஒரு உயிர் ஒன்று தன் வாழ்க்கையைச் சாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள போறாடுகிறதோ அந்த உயிரின் இனப்பெருக்கம் பலமடங்கானது. வேட்டையாடும் வலிமை மிக்க உயிரினமோ பரிணாமத்தில் அழிந்து காணாமல் போய் விடுகிறது. மற்றொரு உயிரை கொன்றழித்து அதனை உண்டு வாழ வேண்டிய அவசியம் உள்ள உயிர்கள் உண்மையில் பரிதாபமானவைகள். வேட்டையாடப்பட்டு உணவாக உட்கொள்ளப்படும் உயிரினங்கள் ஒரு வகையில் அச்சமூட்டக்கூடிய பலுகிப் பெருகும் உயிர்கள். வலிமை மிக்கவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறவர்கள், அதிகாரம் மிக்கவர்கள் என்று பெரும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறவர்கள் பரிணாமத்தின் பெரும் பாதையில் தங்களுக்கான சுவடே இல்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். எளியவர்களும் வலிமைக் குறைந்தவர்களும் பரிணாமத்தின் முடிவு எல்லை வரை தொடர்ந்து பயணிக்கிறார்கள். உயிர் ஒன்று தாக்குதலுக்கு இலக்காகும் போது அது தன்னளவில் உயிர் தப்பி தொடர்ந்து வாழ்வதற்கு தன்னை தயார் செய்து கொள்கிறது. மேலும் அது இனப் பெருக்கத்தில் வளமிக்கதாகவும் ஆகிவிடுகிறது. பெருமாள் முருகனின் பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை மேற் சொன்ன பரிணாமம் பற்றின கருத்துக்கு முற்றிலும் பொருந்திப் போகிற கதை என்றாலும் அதற்கு ஆதாரமாக இருக்கிற பெருங்காமம் பற்றின கதை இந்த நாவல் என்று சொல்லலாம்.  

Sunday, July 4, 2021

எம்.வி.வெங்கட்ராமின் ”காதுகள்”: உலகின் மிகப்பெரிய வாய் பற்றின மாய புனைவு

 



மனிதனைத் தவிற வேறேந்த உயிரினமும் தம் ஐம்புலன்களைக் கொண்டு இந்த பிரபஞ்சத்தை உள்வாங்கி அதி உன்னத நிலையில் அதனை நுகர முடியுமா என்பது கேள்வியே. மனிதனின் ஐம்புலன்களும் பருப்பொருள் நிலையில் இருக்கிற இப்பிரபஞ்சத்தை கேட்டு, பார்த்து, நுகர்ந்து, மெய்யுணர்ந்து அதனை அனுபவமாக்குகின்றன. பிரபஞ்சத்தில் மனித உடல் என்பது அதிசயமான ஒன்று. அது முழு பிரபஞ்சத்தையே தனக்குள் உள்வாங்கி செறித்து மீண்டும் அதனை அதனிடத்திற்கே கழிவாக வெளியேற்றுகிறது. மனித உடல் மூலம் பிரபஞ்சம் தன்னை காலத்தின் பெரும் பயணத்தில் மறுசுழற்சி செய்து கொண்டே இருக்கிறது. மனிதனைக் காட்டிலும் மற்ற உயிர்களுக்கு இதில் பெரும் பங்கு இருக்கிறது என்றாலும் மனித உடல் மூலம் நடக்கும் இந்த மறு சுழற்சி போன்று அவைகள் அவ்வளவு வளம்மிக்கதாக (fertile) இருக்க முடியாது. வளம் மிக்கதான மறுசுழற்சியின் மனிதக் கழிவு உண்மையில் அருவறுக்கத்தக்கதும் கூட. ஆக அருவருக்கத்தக்க அழுக்கின் துர்நாற்றம் மனிதன். மனித உடல் அருவருப்பின் முழு மொத்தம். ஆதலால் அதுவே வளமானதாக இருக்கிறது. மனித மொழியும் கூட.

Sunday, June 20, 2021

தொண்டப்ப நல்லூர்

 

கனவில் தோன்றி ஆழ் மனதில் பதிந்த காட்சிப் பதிவுகள் போன்று வாழ்வின் சில நிகழ்வுகள் எங்கோ மனதின் ஆழத்தில் பசுமையாக தங்கி விடுகின்றன. ஆண்டுகள் பல கடந்தாலும் அந்நிகழ்வுகளின் பதிவு மாத்திரம் மனதில் இருந்து அகலாமல் அப்படியே உறைந்து போய் விடுகிறது.  சுவற்றில் வரையப்பட்ட அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களைப் போன்று. வாழ்வின் முக்கியமான பெரும் சம்பவங்கள் கூட காலத்தால் மனதில் இருந்து அழிக்கப்பட்டு விடுகின்றன. சிறு சிறு நிகழ்வுகள் மாத்திரம் ஏன் அப்படியே மனதில் பல வண்ணங்களில் சித்திரமாக படிந்து போய் விடுகின்றன என்று தெரியவில்லை. பல வருடங்களின் இடைவெளிக்கு பின்னர் அவைகளின் இருப்பும் மதிப்பும் எந்த ஒரு பெரும் கலைஞனாலும் தூரிகைக் கொண்டு தீட்டிவிட முடியாத ஓவியத்தைக் காட்டிலும் விலை உயர்ந்ததாக அவைகள் மாறிவிடுகின்றன. என்றைக்கோ கண்ட அதே இடம் அதே மனிதர்கள் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும். இன்று இருக்கும் அவர்கள் அல்லது அந்த இடம் என்றோ மனதில் பசுமையாய் படிந்து போனவர்களைப் போன்று இன்று இல்லை. அன்று ஆழ் மனதில் புகுந்து நிலை கொண்ட அந்த இடமும் மனிதர்களும் இன்றைய வாழ்வில் நம்மிடம் இருப்பவர்கள்தான் என்றாலும் இவர்கள் அவர்கள் அல்ல. அவர்கள் ஆழ் மனதில் தங்கிய மிகவும் நேசத்திற்கு உரியவர்கள். இன்று இவர்கள் நம்மை வெறுக்கிறவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. மனதில் எங்கோ ஒரு மூலையில் அவர்களின் நேசம் இன்றும் நம்மை அரவணைத்துக் கொண்டிருக்கிறது.

Friday, June 4, 2021

மஞ்சு: வாழ்வின் மீது படியும் இமைப் பொழுதின் பெரும் பாரம்

 


இமயமலை பகுதியில் உறைந்திருக்கும் பனியைப் போன்று சிலரது வாழ்க்கையில் காலம் என்னும் பெரும் பொழுது வினாடி என்ற மணித்துளிக்குள் உறைந்து விடுகிறது. நிமிடங்கள், மணி நேரம், பொழுது என்ற பெரும் கால வெளியாக அது விரிந்து நதியாக பிரவாகிப்பதில்லை. நகர்வுகள் எதுவும் அற்ற நேரமோ அல்லது வாழ்க்கையோ அர்த்தமற்ற ஒன்று. அது சாபத்தின் உறைநிலை. அர்த்தமற்ற அந்த வாழ்க்கை ஒருவருக்கு சாபமாக அருளப்படுமானால் அதனினும் அபத்தம் வேறொன்று இருக்குமா என்பது கேள்விக்குறியது. நடைமுறை வாழ்க்கையில் அது ரசிக்கக் கூடியது அல்ல. அதுவே இலக்கியமாக கதையில் புனையப்படுமானால் அதைவிட வேறெந்த வாழ்க்கையும் பேரழகு கொண்ட வாழ்க்கையாக இருந்து விட முடியாது. நடைமுறையில் காணப்படும் இந்த அபத்தம் புனைவில் பேரிலக்கியமாக மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட பேரிலக்கியங்கள் எண்ணிக்கையில் மிகச் சில என்று சொல்லலாம். அவைகள் பக்கங்களின் அளவிலும்  அடர்த்தி குறைவுதான்.  மேலும் இது போன்ற வாழ்வின் அபத்தத்தைக் முதன்மைப் படுத்தும் பேரிலக்கிய படைப்புகள் ஒரு மொழியில் வாய்க்கப் பெறுவது அது அம்மொழிக்கான வரம். மலையாளத்தில் எம். டி. வாசுதேவன் நாயரின் மஞ்சு நாவலில் உறைந்து போன மூடு பனி என்னும் வாழ்க்கையின் அபத்தத்தை அவர் உரைநடையில் கவிதையாக புனைந்திருப்பது அம்மொழிக்கான விலைமதிப்பற்ற பரிசு.

Friday, May 28, 2021

கடல்புரத்தில்: தீரா தாகத்தை தணிக்க முயலும் வாழ்க்கை என்னும் கடல் நீர்


நாவல் ஒன்றின் சிறப்பம்சம் என்பது தனக்கென அது கொண்டிருக்கும் வலுவான கதை சொல்லியின் குரல் என்று சொல்லலாம். எந்த அளவிற்கு கதை சொல்லியின் குரல் கதையோட்டத்தில் வளமாக தொனிக்கிறதோ அந்த அளவிற்கு கதையின் இசை நாதம் ரசிக்க கூடியதாக இருக்கும். எழுத்தில் மற்ற எந்த கலை வடிவத்திற்கும் இல்லாத சிறப்பம்சம் நாவலில் இந்த கதை சொல்லியின் குரல் என்று சொல்லலாம். இந்த கதை சொல்லியை ஆண் என்றோ பெண் என்றோ, எழுத்தாளன் என்றோ வகை பிரித்து அடையாளம் கண்டு பெயர் வைக்க முடியாது. இசையில் நாதத்திற்கு ஆண் பால், பெண் பால் என்று திணை பாகுபாடுகள் கிடையாது. கேட்கும் போது அது தரும் மொழி வகைப்படுத்த முடியாத உயிருக்கு மிக நெருக்கமான ஒன்று. வாசிப்பில் நாவல் வடிவம் என்பது வாசகனுக்கு அது இசைக்கப்படும் இசையின் குரல். அது தனித்த குரல். வேண்டுமென்றால் வசதிக்காக அதற்கு ஆண் எழுத்தாளர் என்றோ, பெண் எழுத்தாளர் என்றோ பெயர் வைத்துக் கொள்ளலாம். வண்ணநிலவனின் கடல்புரத்தில் கிளாசிக் நாவலை வாசிக்கும் போது இசை குறித்த இந்த பிரக்ஞை ஏற்படுகிறது. அல்லது கதை சொல்லியின் வளமான ’குரலின்’ தொனியை கண்டு “இது என்ன வகையான கதை சொல்லல்? யாருடைய குரல் இது? எப்படிப்பட்ட கதை சொல்லி இவர்? முன் மதிப்பீடுகள் எதையும் உருவாக்காமல் ஒரு கடலோர கிராமத்தின் வாழ்க்கையை அழகியல் ததும்ப கவிப்பூர்வமாக எவ்வாறு இங்கு கதையாக சொல்ல முடிகிறது?” என்று விடை காணா பல கேள்விகளை இந்நாவல் எழுப்புகிறது. இவைகளுக்கு எல்லாம் ஒரே பதிலாக வண்ணநிலவன் என்ற எழுத்தாளர்தான் அவைகள் அனைத்தும் என்ற ஒற்றை பதிலைக் கொண்டு விசாரத்தை முடித்துக் கொள்ள முடியாது. விடை காணா இந்த அருவமான கேள்விகளுக்கு ஒரே ஒரு பதிலாக இதனை இசையோடு பொருத்திப் பார்க்கும் போது நாவல் பற்றின ரசனையின் பாராட்டுதலாகவும் அது இருக்கும்.   

Tuesday, May 18, 2021

ஐய்யோ சென்றடைய கூடு இல்லையே

 




எழுத்தாளர்களின் ஆளுமையை அவர்களின் எழுத்து வழி மட்டுமே அறிந்து கொண்டால் போதும் என்று இருக்கும். நேரில் சென்று சந்தித்தால் அவர்களின் சிறுமை வெளிப்பட்டுவிடும். எழுத்தில் கண்டு வியந்த அந்த ஆளுமை அங்கு இருக்காது. மீறி போய் சந்தித்தால் அதுவரையில் அவர்கள் மீது கொண்டிருந்த பெரும் மதிப்பு கரைந்துவிடும். எழுத்தாளன் புத்தகத்தோடு மட்டுமே இருக்க வேண்டிய தனிப் பிறவி. மீறி நம்மை அவரோ அவரை நாமோ சென்று சந்திக்க வேண்டியதில்லை. எலும்புக் கூட்டின் மீது தசைகளையும் தோலையும் சேர்த்து கட்டி உருவாக்க பட்ட அந்த சாதாரண மனிதன் நமக்கு தேவை இல்லை. எழுத்தில் வெளிப்படும் ஆளுமை வேறு யதார்த்தத்தில் வாழும் எழுத்தாளன் என பெயர் கொண்ட அம்மனிதன் வேறு. அது Shakespeareகவே இருந்தாலும் சரி.

Wednesday, May 5, 2021

தொ சி மு ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாறு: கலகக்கார கலைஞனின் உருவச்சித்திரம்

தமிழ் நவீன இலக்கியத்தின் பெருங்கலைஞனுடைய வாழ்க்கையை வரலாறாக புனைய முற்படும் தோ சி மு ரகுநாதனுக்கு அப்புனைவு முடிவில் எப்படிப்பட்ட வடிவம் பெறும் என்ற கவலை அதிகம் இருந்திருக்கும் போலும். வரலாறு படைக்கப்பட்ட பின்பு  எதிர்பார்த்த படி அது வடிவம் கொள்ளாமல் போய் விட்டால் என்ன ஆவது என்ற கவலை. தொ சி மு புனைகதை எழுத்தாளன். ஆக, படைக்கப் படும் படைப்பு உயிர் கொண்டதாக இருந்தாக வேண்டும். பித்தனும் தன் படைப்புகளை உயிர் கொண்ட வாழும் பிறவிகள் என்றே அழைக்கிறார். தனிபெரும் பிறவிகளை படைத்து அவைகளுக்கு சாகா வரம் அளித்துவிட்டு மறைந்து போன படைப்பாளியைப் பற்றின வரலாறு உயிர் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் இருக்கத்தானே செய்யும். தொ சி முவின் இந்த அச்சம், ஆதங்கம் அவரது முன்னுரையிலேயே தெரிகிறது. பித்தனுக்கு மிக இணக்கமாக இருந்தவர் தொ சி மு. மற்றவர் அறியாத பித்தனையும் அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் பலவும் ரகுநாதனுக்கு மாத்திரமே தெரிந்திருக்கிறது. அவைகள் அனைத்தையும் இந்த வரலாற்றில் சேர்த்தாக வேண்டும். அப்படிச் சேர்த்தால் பிறர் அறியாத தவல்கள் பல வெளிவரும். சேர்க்காவிட்டால் பித்தனின் வாழ்க்கை வரலாறு முழுமைப் பெறாது. தொ சி முவுக்கு பித்தனின் வாழ்க்கை வரலாறு ஜீவ கலை ததும்பும் உயிரோவியமாக இருந்தாக வேண்டும். எனவே ஒரு முடிவுக்கு வருகிறார்.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...