மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Thursday, May 10, 2018

மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல்


மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல்

பெட்ரிசியன் கல்லூரி பேராசிரியர்களின் மலேசிய சிங்கப்பூர் சுற்றுலா பயணம் இன்றோடு (7/5/2018) முடிவடைகிறது. வீடு திரும்புகின்றோம். எனக்கு சிங்கப்பூரை விட்டு போகிறோமே என்ற பிரிவின் வருத்தமும் இல்லை சென்னைக்கு போகிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை. ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனும் மனநிலை இப்போது.
 குச்சி மிட்டயும் குருவி ரொட்டியும் வாங்கி தருவதாக சொல்லி சீனியர் தர்மாவையும், உடன் பேராசிரியர் ஜஸ்டிசையும் சரிகட்டிவிட்டு ஜனனல் ஓர இருக்கையை கையகப்படுத்திவிட்டேன். சென்னைக்கு திரும்பும் Scoot விமான ஊர்தி அளவில் பெரியது. மலேசியா செல்லும் போது பயணித்த ஊர்தி மிகச்சிறிய அளவில் இருந்தது. ஓடிப்போய் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டேன். விமான அலுவளர் ஒருவர் வந்து டிக்கட்டை வாங்கி சரிபார்த்து ஜன்னலில் இருந்து மூன்றாவது இருக்கைக்கு மாற சொன்னார். அவர் செய்தது பஸ்ஸில் ஐந்து வயது பையன் ஜன்னல் ஓர இருக்கைக்கு ஆசைப்பட்டு கண்டக்டரிடம் குட்டுவாங்கிய கதையாகிவிட்டது. ஏன் என் இருக்கையை மாத்திரம் பரிசோதிக்க வேண்டும். நிராசையில் மூன்றாவது இருக்கைக்கு வந்தமர்ந்தேன். மேலே பறக்கும் போது நிலத்தின் காட்சி தென்பட வில்லை. ஐந்து வயது பையனின் ஏமாற்றம் அது. ஆனால் வீடு திரும்பும் போது அப்படி இல்லை.
லைபரரியன் மேடம் இடத்தை மாற்றிக் கொண்டார்கள். அந்த இடத்திற்கு எனது எம் ஏ சீனியர் தர்மா வந்து உட்கார்ந்தார். இப்போது உடன் பேராசிரியர். என்னுடையது நடு இருக்கை. பாவம் சின்னப் பையன் என்று அந்த நடு சீட்டை அபகரிக்க மாட்டார். ஜன்னல் ஓரமாக இன்னொரு பேராசிரியையின் மாகன். சீட்டுக்கு போட்டி போடவும் முடியாது. கெஞ்சிக் கேட்கவும் முடியாது. பரவாயில்லை. ஓரளவிற்கு நிலத்தின் காட்சி தென்படுகிறது. கொஞ்சம் எட்டிப் பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும். முழுமை கிடைக்காதே!
சிறிது நேரம் கழித்து ஜன்னல் ஓர பையனின் அம்மா அதாவது எங்கள் உடன் பேராசிரியை அவனை தன்னிடம் வந்து உட்காருமாறு அழைத்துக் கொண்டார். இப்போது ஜன்னல் இருக்கைக்கு ஜஸ்டிஸ் வரப் போகிறார். பையன் இடத்தை காலி செய்த உடனேயே நகர்ந்து ஜன்னல் ஓரம் சென்று விட்டேன். அசடு வழிய ஜஸ்டிசை பார்த்தேன். பரவாயில்லை உட்காருங்க என பெருந்தன்மையோடு நடு இருக்கையில் அமர்ந்து கொண்டார். இதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும். “பார்த்து தம்பி ஜன்னல் வழியா வெளிய குதிச்சிட போற” சீனியர் தர்மா.
முழுமையான கட்சி இப்போது கிட்டிவிட்டது. விமானம் பறக்கும் போது ஒன்றை மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டும். பஞ்சு பொதிகளாக பறக்கும் மேகங்கள். நல்லிரவில் அது எப்படி சாத்தியமாகும்.  கீழே இருந்து சிங்கப்பூரின் மின் விளக்குகள் போதுமான வெளிச்சத்தை வான்நோக்கி ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த இருட்டிலும் ஊர்திக்கு கீழே பறக்கும் அந்த பஞ்சு மேகங்களை பார்க்கிறேன். இதையெல்லாம் ’அது அப்படி இருந்தது, இது இப்படி இருந்தது என இங்கு வர்ணிக்க முடியாது’. மேகம் ஊர்திக்கு கீழே பறந்து சென்று கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். மேகங்கள்? மேகம்? நமக்கேன் இந்த இலக்கண சண்டை.
சிங்கார நகரம் இப்போது கண்முன் முழுமையில் காட்சியாக்கப்படுகிறது. மனதை கொள்ளை கொள்ளும் காட்சி அது. சீரியல் விளக்குகளால் அலக்கரிக்கப்பட்ட திருவிழாக் கோலம் அது. இதுவே இப்படி என்றால் பிரான்ஸ் எப்படி இருக்கும். இப்போது ஜஸ்டிசைப் பார்க்கும் போது ”மெட்ராஸ் போனதும் ஒனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிதாறேன்” என்ற நன்றியுணர்ச்சி. தூக்கம் மெல்ல கண் இமைகளை தழுவ ஆரம்பித்தது (பொன்னியின் செல்வன் படித்த பாதிப்பு வேறொன்றுமில்லை).
உறக்கம் தெளிந்தவுடன் கடிகாரத்தைப் பார்க்கும் போது மணி சரியாக இரண்டு. கடலில் இருந்து நிலம் கிட்ட கிட்ட அருகே வந்து கொண்டிருக்கிறது. சென்னையை நோக்கி விமானம் கீழே இறங்குகிறது. நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து கொண்டே செல்கிறது. மௌன்ட் ரோடு, ஜி எஸ் டி ரோடு, மெட்ரோ ரயில் பாதை என எல்லாம் தெளிவாக பரிட்சயப்பட்ட இடங்கள் புதுமையாக தெரிய ஆரம்பிக்கின்றன. ஆறு நாள் சுற்றுலா பயணம் பேராசிரியர்கள் அனைவரையும் மிகவும் நெருக்கமானவர்களாக மாற்றிவிட்டது. இனி கல்லூரியில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அந்நியத்தன்மை இருக்காது என நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் அந்த ஆறு நாட்கள் நட்பின் பரிட்சயத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். பெரிய மனது பன்னி ஜன்னல் ஓர இருக்கையை கொடுத்த அந்த இரண்டு பேராசிரியர்கள் இனி நமக்கு மிகவும் முக்கியமானவர்கள். ஒருவேளை அந்த சிறு பையன் மாத்திரம் அங்கு இருந்திருந்தால் என் ஆசைகள் எல்லாம் நிராசையாகிவிட்டுருக்கும். விமானத்தில் பயணம் செய்து ஜன்னல் ஓரம் கிடைக்காவிட்டால் அதில் பயணம் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன? இரண்டும் ஒன்றுதான். சிறு வயது என்பது உடலின் பருவநிலை மாற்றம் இல்லை. அது சிறிது நேரத்திற்கான மன நிலை. அனைவரும் அந்த நிலைக்கு சென்று கொஞ்ச நேரமாவது இலயித்திருக்க வேண்டும். விமானத்தை விட்டு வெளியேறும் போது ஜன்னல் ஓரத்திலேயே அந்த மனநிலையை கழற்றிவிட வேண்டும். சரி சரி அதிகம் உபதேசத்திற்குள் கட்டுரை பயணிக்கிறது. இத்தோடு இப்பதிவை முடித்துக் கொள்வோம்.   

மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல் Reviewed by Arul Scott on 2:45 AM Rating: 5 மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல் பெட்ரிசியன் கல்லூரி பேராசிரியர்களின் மலேசிய சிங்கப்பூர் சுற்றுலா பயணம் இன்றோடு (7/5/2018) ...

No comments: