”இது மிஷின் யுகம்” - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Thursday, February 9, 2017

”இது மிஷின் யுகம்”

”இது மிஷின் யுகம்”


இரண்டு மேற்கோள்களுக்கு மத்தியில் இருக்கும் சுதந்திரமே சுதந்திரம். கற்பனை வரட்சி ஏற்படும் காலத்தில் நல்ல தலைப்பிற்கு திண்டாடும் நேரங்களில் மேற்கோள்களின் உதவியைப் போன்று வேறெதுவும் இருக்க முடியாது. அப்படியே நமக்கு பிடித்த மேதை ஒருவரின் கதைக்/கட்டுரையின் தலைப்பை இரண்டு மேற்கோள்களின் மத்தியில் சிறைபிடித்துவிட்டால் கேள்வி கேட்க யாரும் கிடையாது. ஒருவேளை தலைப்புக்கு சொந்தக்காரரே வந்தாலும் வேலையப்பாருமையா என்று அதிகாரத்தோடு விரட்டியடித்துவிடலாம். தற்போது நமக்கு அந்தப் பிரச்சனையே கிடையாது. அந்த மனுஷன் கல்லைறையில் இருந்து எழுந்து வந்தாலும் ரெடியா இருக்கு MLA Hand Book. இடத்தை சுட்டிக்காட்டி விட்டு ”எல்லாம் சட்டப்படிதான் செய்யுறோம் என்று வாதிட வந்தவரை வாயடைத்து போகச் செய்துவிடலாம். இந்த மேற்கோள் என்பது ஒரு சொகுசு பேருந்து மாதிரி. தலைப்புக்கு சொந்தக்காரரே வந்து அதனிடமே புலம்பினாலும் வாயையே திறக்காது. அவ்வளவும் சொகுசு வாழ்க்கை. பிடித்து வைத்த பிள்ளையார் போன்று வாயைத் திறக்கவே திறக்காது. சரி, அந்த மேற்கோளாவது என்னுடையதா என்றால் அதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் பாருங்கள் அதனைத் தொட ஒரு அசட்டுத் தைரியம் வேண்டும். அது இல்லாதவர்கள் என்னதான் தாங்கள் நல்லவர்கள் என்று பெயர் எடுத்தாலும் அதைக் கையாளும் வரையில்தான் அதிகாரம்.
என்னுடைய இப்போதைய பிரச்சனை எல்லாம் இந்தத் தலைப்பைப் பயன்படுத்துவாதா கூடாதா என்பதுதான். சூழ்நிலை என்னை நிர்பந்திப்பதாலும் இதனை எழுதுவதற்கான ஊக்கம் அதிகம் இருப்பதாலும் வேறு வழியே இல்லை. தலைப்பை நியாயமான விதத்தில் திருடிவிட வேண்டியதுதான். திருட்டோ பொய்யோ அது நியாயமாக நடக்க வேண்டும். அதில் நியாயமே மிக முக்கியமானது. அதற்காக உண்மையைக் கூட அடகு வைத்துவிடலாம். எல்லாம் நியாயத்தோடு நடக்க வேண்டும். என்னதான் புதுமைப்பித்தன் என்னுடைய ஆதர்ச படைப்பாளி என்றாலும் கதைகளையும் தலைப்பையும் திருட வேண்டும் என்று உள்ளங்கை நமைக்கிறது. இந்த பாழா போன மொழி நியாயமாக திருடினால் கூட காட்டிக் கொடுத்துவிடுகிறது. அந்த மனுஷன் தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி வைத்துக் விட்டுப் போய்விட்டார். காப்பி அடிக்க வேண்டும் என்றால் கூட அதே ஸ்டைல் தான் நமக்கும் வருகிறது. எல்லாவற்றையும் மனதில் கொண்டு சற்று அசட்டுத் துணிச்சலுடன் இந்தத் தலைப்பை என்னுடைய சௌகரியத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். அதுவும் மேற்க்கோள்களுக்கு மத்தியில்.  
தலைப்பை சுடுவதற்கான முக்கியக் காரணமே இதுதான். திரும்பவும் சைவ ஓட்டல் மசால் தோசை மீது அளவுகடந்த ஆசை. இந்த சைவ ஓட்டலுக்குள் செல்லும் போதெல்லாம் ஒரே ஒரு சிறுகதைதான் என் நினைவிற்கு வரும். ”கடவுளும் கந்தசாமி பிள்ளையும்”. ஏன் என்றெல்லாம் என்னால் பதில் சொல்ல தெரியாது. ஏனோ என் எண்ணங்கள் எல்லாம் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் காபி குடித்த அந்த ஒட்டல் என் நினைவில் அழியாமல் தங்கி விட்டது. அதுவே அந்த ஓட்டலின் சர்வர் என்று வந்தால் கண்டிப்பாக அது இது மிஷின் யுகம் கதையில் வரும் சர்வர் தான் ஞாபகம் வருவார். அந்த இடமும் இந்த நபரும் என் நினைவில் மாற்றப்படாத இடமும் நபரும் ஆவர்.
உண்மையைச் சொல்லவேண்டுமானால் சர்வர்களைப் பார்க்கும் போது புதுமைப் பித்தன் காட்டிய அந்த பரிதாபமான மிஷின் போன்ற சர்வர் எனக்கு ஞாபகம் வரமாட்டார். எங்கள் வீட்டுப் பிள்ளை சர்வர் கண்முன் காட்சியளிப்பார். மிக முரட்டு சர்வர் என்பதனால் புதுமைப்பித்தன் காட்டும் சர்வரை நான் ஒருபோதும் பரிதாபமாகப் பார்க்கவே மாட்டேன்.  
 ஓட்டலுக்குப் போகும் போதெல்லாம் அவர்களைப் நேருக்கு நேர்  பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து விடுவேன். என்னுடைய நகைச்சுவை உணர்விற்கு மிக உறுதுணையாக இருப்பவர்கள் சாப்பிட வருபவர்கள் மாத்திரமே. சர்வரையும் நிராகரிக்க வேண்டும். டேபிலையும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கவும் வேண்டும். வேறு வழியின்றி நம் எதிரில் இருக்கும் விசித்திர முகங்கள் தான் நமக்கு அன்றைக்கான பொழுது போக்கு. அதனால் இதுவே என்னுடைய பிழைப்பு என்று நினைத்து விடாதீர்கள். சில நேரங்களில் சில மனிதர்கள். அவர்களை சற்று நேரம் கவனித்தே ஆக வேண்டும். இல்லையெனில் அவர்கள் நம்மை கவனிக்க வைப்பார்கள். இந்த இரண்டில் ஒன்றை நீச்சயம் நான் தெரிவு செய்தாக வேண்டும்.  
அப்படித்தான் இன்று நான் அந்த விசித்திரமான ஒரு பையனை சைவ ஓட்டலில் என் மேஜைக்கெதிரில் பார்த்தேன். சாப்பிடுவதற்கு என்று ஒரு பொறுமை, நாகரிகம் இருக்கிறது. இவைகளுக்கு எதிர்த்து கலகம் செய்கிறவன் போல காணப்பட்டான். மன வளர்ச்சி அதிகரிக்காத குழந்தையைப் போன்று காணப்பட்டான். உணவுக்காக அது போல் மாறினான அல்லது இயல்பிலேயே அவன் அப்படித்தான என்பது விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. சர்வருக்கு அந்தப் பையன் மீது தனிப் பிரியம். பார்ப்பதற்கு Software கம்பனியில் வேலைப்பார்ப்பவன் போல் இருந்தான். ஏற்கனவே இரண்டு தட்டுகள் காலியாகி விட்டன. இன்னும் மூன்று ஐட்டங்களை நான் போய் அமரும் போது ஆர்டர் செய்துக் கொண்டிருந்தான்.
நிச்சயம் அவன் உணவைப் பசிக்கோ ருசிக்கோ சாப்பிடவில்லை. அவ்வளவையும் ஒன்று கொலைப்பசி எடுத்தால் சாப்படவேண்டும். அல்லது புதிகாத இந்த உணவை உண்பவனாக இருக்க வேண்டும். இரண்டும் கிடையாது. அவன் உண்பது பேராசைக்காக. அது ஒரு விதமான இச்சையின் பசி. அது ஒரு போதும் மகிழ்ந்து உட்கொள்ள அல்ல. அனைத்தையும் ஒரு கை பார்க்க வேண்டும் என்பதினாலேயே. மூன்று ஐட்டங்களையும் தன் முன் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக ருசிக்க ஆரம்பித்தான். நாளைக்கான மெனு என்ன என்பதையும் அப்போதே விசாரித்து வைத்துக் கொண்டான். நிச்சயம் நாளைக்கும் வருவான் போலிருக்கிறது. வாங்கிய உணவை முழுவதும் சாப்பிடாமல் அப்படியே வைத்துவிட்டு பில்லை வாங்கிக் கொண்டு பணம் செலுத்தக் கிளம்பி விட்டான்.
என்னுடைய கவலை எல்லாம் உணவு வீணாகிறதே என்பதல்ல. அதைப் பற்றி யார் கவலைப் பட போகிறார்கள். ஒரு முறை சாப்பிடும் போது அதிகம் சாதத்தை சிந்திவிட்டேன். என்னுடைய அம்மா வெறுமனே திட்ட செய்வார்கள் அவ்வளவுதான். அதைப் பற்றி நான் கவலைப் பட்டதே கிடையாது. கோபம் மட்டும் நுனி மூக்கிற்கு மேல் உட்கார்ந்துக் கொள்ளும். என் அப்பாதான் ஒரு முறை முறைத்துவிட்டு “ஒரு நெல் மணி இந்த தட்டுக்கு வர எவ்வளவு உழைப்பு உழைச்சிருக்குதுன்னு எண்ணிப் பாருடா” என்றார். அதில் ஒரு லாஜிக் இருந்தது. அதிகம் என் அப்பாவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்தேன். அந்த உழைப்பை என் கண் முன்பதாகவே நான் பார்த்திருக்கிறேன். உழைப்பு மாத்திரம் என்றால் கூட பரவாயில்லை. அவ்வளவும் காத்திருப்பு. கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிகம் மன சோர்வை உண்டாக்கும் காத்திருப்பு அது. ஒருமுறை பாதியில் மொத்த பயிரும் விளைச்சலுக்கு வராமல் காய்ந்து போய் விட்டது. அவருடைய வருத்தத்தின் பெருமூச்சு மொழியற்றது. எதைக் கொண்டும் அதனை ஈடு செய்யவே முடியாது.
அந்தப் பையனிடம் நான் கொண்ட கோபம் மேற்கூறியக் காரணத்திற்காக அல்ல. அவன் உடல் பற்றிய கவனத்திற்காகத்தான். அந்த உடல் அந்த உணவை சுவைக்கவோ அல்லது அனுபவிக்கவோ  இல்லை. அவ்வளவும் இச்சை. சர்வர் எல்லாத்தையும் ஆர்டர் செய்யுறீங்களே என்று கேட்டார். எல்லாத்தையும் சாபிடனும் போல இருக்குதே என்று சொன்னான். அப்போதே எனக்கு உறுதிப் பட்டது அது நிச்சயம் ருசிப்பின் மகிழ்வுக்காகக் கூட இல்லை. வெறுமனே ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்ற ஆதங்கம். அந்த உடல் ஆசைக்காக வாழவில்லை பேராசைக்காக வாழ்கிறது. உணவு மாத்திரம் அல்ல மற்ற எல்லாமும் கூடத்தான் அதுபோன்றுதானோ என்று தோன்றியது. அந்த உடல் தன் தேவைக்காக உண்டாலாவது பரவாயில்லை அதன் பருமன் சமசீர் நிலையில் இருக்கும். அல்லது ருசிக்காக பலவித உணவுகளை ருசிபார்த்தால் உடலுக்கான இயல்பு எடைக்கு மீறி இருக்கலாம்.
இந்த ஆதங்கத்தின் நுகர்வு என்னை அதிகம் திடுக்கிட வைத்தது. அந்த இச்சை ஒன்றுதான் பணம், அதிகாரம், காமம் என அனைத்தையும் சமச்சீர் அற்ற நிலையில் நுகரும் மிருகங்களாக மாற்றிவிடுகிறதோ? இயல்புக்கு மீறினவர்கள் நாம்.   


”இது மிஷின் யுகம்” Reviewed by Arul Scott on 11:47 PM Rating: 5 ”இது மிஷின் யுகம்” இரண்டு மேற்கோள்களுக்கு மத்தியில் இருக்கும் சுதந்திரமே சுதந்திரம். கற்பனை வரட்சி ஏற்படும் காலத்தில் நல்ல த...

No comments: