Tuesday, November 1, 2016

நிஜத்தில் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதா?

நிஜத்தில் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதா?
சிவ விஷ்வநாதன் இந்து ஆங்கில நாளிதழில் மாதம் ஒருமுறைக்காவது opinion pageல் கட்டுடையை எழுதிவிடுகிறவர். இந்த நடுப்பகுதிப் பத்தியை (column) வாசிப்பது என்பதே மிகப் பெரிய சாதனையாகும். எழுதுகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட துரையின் வல்லுனர்களாக இருப்பவர்கள். அவர்களுடைய பத்தியை வாசித்து முடிப்பது ஒரு அறிவுச்  சுரங்கத்திற்குள் பயணிப்பதற்கு ஒப்பானதாகும். சில நேரங்களில் தங்கவேட்டை சாத்தியப்படும். சில நேரங்களில் கடைசி பத்து விரிகளுக்கு முன்பதாகவே மூச்சு திணறல் ஏற்படும். எனினும் சில பத்தி எழுத்தாளர்களின் பெயரைக் கண்டாலே மகிழ்ச்சிதான். அதில் முக்கியமானவர் சிவ விஷ்வநாதன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக அவருடைய எழுத்தின் மீது ஏதொ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவருக்கு மாத்திரம் கூடதல் கவனிப்பு செலுத்தி வாசிக்க ஆரம்பித்தோம். தொடர்ந்து அவருடைய கருத்துக்கள் மீதும் ஈர்ப்பு ஏற்பட ஆரம்பித்தது. இவர் மாத்திரம் மற்றவர்கள் போல் அல்லாமல் ஏதோ ஒன்றை அதுவும் மிகவும் பழகிப்போன ஒன்றை புதுமையான விதத்தில் பேசுவதைப் போன்று தோன்றியது.
அவர் ஒரு இலக்கியப் பேராசிரியராக இல்லாதிருப்பினும் அது வெறுமனே அறிவு சார் உரையாடலாக இல்லாமல் வேறு ஏதோ ஒரு தளத்தில் மிகவும் பரிச்சையமான மொழியாக எனக்கு காணப்பட்டது. மற்றவர்களைப் பொறுத்தவரையில் மொழி முழுக்க முழுக்க அவர்கள் பேசும் அறிவு சார் துரையின் மொழியாக இருப்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். மொழிக்கும் நம்முடைய வாசிப்புக்கும் இடையேயான தூரம் மிக அதிகம். ஆனால் சிவ விஷ்வநாதனின் மொழி ஒரு அரசியலைப் பற்றியோ அல்லது அறிவு சார் காரியங்களைப் பற்றியோ பேசும் மொழியாக இல்லை. அவர் பயன்படுத்தும் மொழி முழுக்க முழுக்க விஷ்வநாதன் என்பவரின் தனிக் குரலின் மொழியாகத்தான் எனக்குப் பட்டது. அந்தக் குரல் வழியே தான் இந்திய அரசியலின் மீதான கருத்தாக்கங்களை நம்மால் பார்க்க முடியும். மொழி என்பது பேசும் நபரின் வெளிப்பாடு தானே. எங்களை மிகவும் கவர்ந்த ஒரு காரியம் விஸ்வனாதனின் குரல் தான். முழுக்கட்டுரைக்கும் பின்பதாக அந்த நபரின் ஆளுமையை நம்மால் உணர முடியும்.
இதை சாத்தியப் படுத்தியது எது என்பதுதான் இப்போதைக்கான கேள்வி. வெறுமனே ஒரு மொழி ஆளுமையின் வெளிப்பாடாக மாறிவிடும் என்று அவ்வளவு எளிதில் கூறிவிட முடியாது.  ஒரு மொழியில் இருக்கும் மனிதக் குரல் என்பது நாவலின் கதை சொல்லியின் குரல் போன்றது. அதே நேரத்தில் விஷ்வநாதனை நாம் கதைசொல்லி என்றும் அவருடைய பத்திகள் கதையாடல்களின் தன்மைக்கானவை என்றும் சொல்லிவிட முடியாது. கட்டுரை ஏதோ ஒரு விதத்தில் நாவலின் சாயலை தன்னில் வைத்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். சற்று மொழியை ஆராய்ந்தால் அந்த மொழி கதையாடலுக்கான மொழியாக இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு ஆய்வுக் கட்டுரைக்கான மொழியாக இருக்கும். எங்களுடைய பேராசிரியரிடம் ஆய்வுக் கட்டுரையை எப்படி எழுதுவது என்று பயிற்சி எடுக்க சென்றால் அந்த பயிற்சியின் விளைவு விஸ்வனாதனின் மொழியாகத்தான் இருக்கும். பேராசிரியர் அந்த மொழியின் நிலையை அடையும் வரைக்கும் திருப்தியடையவே மாட்டார். எதைதான் இவர் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார் என்று தலையை பிய்த்துக் கொள்வோம். விஸ்வநாதனின் கட்டுரையை ஒருவர் வாசித்தால் அதுதான் பேராசிரியர் எதிர்ப்பார்த்தத் தரம் என்பதை நாம் கண்டுபிடித்து விடுவோம்.
இந்த இடத்தில் முழுக்க முழுக்க objective ஆய்வுக் கட்டுரையைப் போன்ற பத்தி எப்படி நாவலுக்கான தன்மையை தனக்குள் கொண்டிருக்க முடியும் என்பதுதான் கேள்வி. இந்த இரண்டு நிலைகளுக்கிடைப்பட்ட  அவருடைய எழுத்தின் இருப்பை இனம் காண்பதுதான் இப்போதைய தேவையாக இருக்கிறது. விஷ்வநாதனுடையது ஆய்வுக் கட்டுரையும் அல்ல தனிநபர் சார்ந்த கருத்துக்களும் அல்ல. கட்டுரையில் ஆங்காங்கே நான்கு புனைவு எழுத்தாளர்களின் பெயர்கள் மாத்திரம் தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும். அவைகள்; செர்வான்ட்டஸ், (பக்தின்), தாஸ்தாவஸ்கி, மிலன் குன்டேரா, மற்றும் டால்ஸ்டாய். இவர்களுடைய பெயர்கள் நேரடியாக வராவிட்டாலும். அவர்களுடைய நாவல் தன்மை அல்லது பதங்கள் எப்போதும் இவருடைய கட்டுரைகளில் எட்டிப்பார்த்துக் கொண்டே இருக்கும். இந்த நாவல் தன்மை தான் விஷ்வநாதன் என்கிறவருடைய சொந்தக் குரலாக மாறுகிறது.
ஆரம்பத்தில் இவர் நாவல் காட்டுகிற பார்வையைக் கொண்டு தான் அரசியலையும் சமூகத்தையும் பார்க்கிறாரோ என்ற கேள்வி எழுந்துக் கொண்டே இருந்தது. நிஜத்தைப் பற்றி பேசுவது என்பது அவ்வளவு எளிதல்ல எனவே சிவ விஷ்வநாதன் நாவல் மொழியை, நாவலின் கருத்தாக்கத்தை தன்னுடைய கருத்தாக்கமாக எடுத்துக் கொண்டு இன்றைய அரசியலைப் பற்றி பேசுகிறார் என்று ஏறக்குறைய ஒன்றறை ஆண்டுகள் நான் யோசித்து வந்தேன். கடைசியாக நண்பர் டேவிட் வெஸ்லியுடன் உரையாடும் போது திடீர் என்று “டேய் அந்த மனுஷன் நிஜத்தையே நாவலாகத்தான் பார்க்கிறான்” என்று சொன்னார். விஷ்வநாதன் பற்றிய என்னுடைய புரிதல்கள் அனைத்தும் அந்த நொடிப்பொழுதில் தலைகீழ் விகிதத்தில் இருந்து நேர் நிலைக்கு செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டது.
விஷ்வநாதன் பேசிய அனைத்தும் நாவல் என்ற வடிவத்தைக் கொண்டு அல்லாமல் நிஜத்தையே நாவலாக அல்லது நாடமாக பார்ப்பதாக மாறி விட்டது. அதுவும் நாவல் நிஜத்தை முதன்மைப் படுத்தும் போது அது அப்படியே நிஜத்தை இருந்தவாறு ஒரு போதும் காட்டது. அது தன் செயல்பாட்டில் நிஜத்தை முதலில் நையாண்டி செய்யும். பின்புதான் மற்ற அனைத்து செயல்பாடுகளும். இந்த விதத்தில் விஷ்வநாதன் யதார்த்தத்தை நிஜமாக அதன் இருப்பை பார்க்காமல் அதனை முதலாவது ஒரு நகைப்பிற்குரிய களமாகத்தான் பார்க்கிறார். அதன் பிறகுதான் நிஜத்தைப் பற்றிய மற்ற மதிப்பீடுகளும். நிஜத்தை நாவலாகவும் நாடகமாகவும் பார்க்கும் பார்வைதான் அவருடைய கட்டுரையை ஆய்வு ஏடாகவும் அல்லாது கதையாடலாகவும் அல்லது நடப்பியலை காமெடிப் புனைவாகவும் பார்க்கும் பார்வையாக மாற்றியமைக்கிறது. 







No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...