உலகப் புகழ் பெற்ற பேனா - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Wednesday, November 16, 2016

உலகப் புகழ் பெற்ற பேனாஉலகப் புகழ் பெற்ற பேனா
என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு தொடந்து இருந்து கொண்டே இருந்தது. ஏறக்குறைய ஒரு ஆண்டிற்கு யாரிடமும் அதனுடைய விலையைப் பற்றி சொல்லவே இல்லை. யாரேனும் “என்ன விலை” என்று கேட்டாள் அன்பளிப்பு என்று மழுப்பி விடுவென். திறந்து பார்த்து விட்டு ”இரிடியம் பாய்ன்ட்” என்று சொல்லி அதிகம் விலை இருக்கும் என்று திரும்பத் தந்து விடுவார்கள். அதுதான் என் பேனாவைப் பற்றிய முதல் அறிவுத் தகவல். அது வரை இரிடியம் பாயின்ட் பேனாவிற்கும் மற்ற பேனாக்களுக்கும் எந்த வித்தாசமும் தெரியாது. தெரிந்திருக்க அவசியமும் இருந்திருக்கவில்லை. பள்ளிக் கூடத்தோடு எல்லாம் முடிந்து விட்டது. அப்போதெல்லாம் Ink பேனா அவ்வளவு பெரிய விஷயமாக இருக்காது. அப்போது இருந்த ரெனால்ட்ஸ் பேனாக்கள் தான் அதிகம் கவனத்தை ஈர்க்கும். அந்தப் பேனாக்களுக்கே டியூப்ளிக்கேட் வந்து கொண்டிருந்தது. ரெனாட்ஸ் நான்கு ரூபாய் என்றால் போலி ஒரு ரூபாய். எனினும் பௌண்டன் பேனா பக்கம் கவனம் திருபியதே கிடையாது. அது ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. எனது பக்கத்து தெரு பையன் அவனுடைய ஜாமன்ட்டரி பாக்ஸில் குறைந்தது ஏழு ரெனால்ட்ஸ் பேனாக்களாவது வைத்திருப்பான். ஒன்றையாவது தரமாட்டனா என்ற ஏக்கம் அவைகளைப் பார்க்கும் போதெல்லாம் இருக்கும்.  

கேம்ப் ரோட்டில் பேனாவுக்கென்றே ஒரு கடை இருக்கிறது. என்னுடையதைப் போலவே பேனா அந்தக் கடையில் இருக்கிறதா என்ற ஆசையில் கடைக்கு சென்று என்னுடைய பேனாவைக் காட்டி இதே போன்று பேனா உங்களிடம் இருக்கிறதா என்று கேட்டேன். அதுவரையிலும் கூட ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பேனாவை வாங்கி விட்டோமே என்ற குற்ற உணர்வு என்னை விட்டு விலகிப் போகவே இல்லை. கடைக்காரர் பேனாவை வாங்கி wow என்று அதிசயித்து விட்டு எங்கே எவ்வளவுக்கு வாங்கினீர்கள் என்று கேட்டார். பழைய மழுப்பல்தான். நண்பர் ஒருவர் எனக்கு பரிசாக அளித்தது என்று தப்பித்து விட்டேன். சிறிய பூதக் கண்ணாடியை எடுத்து பேனாவின் முள் நுனியை உற்று நோக்கினார். எனக்கு அது வாட்ச் கடைக்காரரின் செய்கைகளை நினைவூட்டியது. உற்று பார்த்துவிட்டு நிச்சயம் ஆயிரம் ரூபாய் இருக்கும் என்றார். அந்த வார்த்தை எனக்கு பெரிய நிம்மதியை தந்தது. யாரும் என்னை ஏமாற்றவில்லை என்ற திருப்திதான். பேனாவைப் பற்றிய இந்த இரண்டாவது தகவல் இன்னும் பேனாவின் மீது எனக்கே மதிப்பை சற்று அதிகமாக்கிவிட்டது.
அதுவரைக்கும் அது ஆயிரம் ரூபாய்ப் பேனா என்ற விலையைப் பற்றிய மதிப்புதான் பெரிதுபட்டு நின்றது. அதற்கு மீறி என் பேனாவைப் பற்றிய எந்த உயர்ந்த மதிப்பீடும் எனக்கு இருந்ததில்லை. குட்டையாகவும் கட்டக் கரேல் என்று இருக்கும் ஒருவனுக்கு நல்ல செக்கச்சிவந்த நிறத்தில் காதலி ஒருத்திக் கிடைக்கப்பெற்றால் எப்படி இருக்கும் அதைப் போன்றதுதான் என்னுடைய நிலையும். பார்க்கிறவர்களுக்கு அந்தப் பெண்ணின் மீது அதிகக் கோபம் ஏற்படும். காரணம் அவலட்சணமான ஒருவனுக்கு அவள் காதலியாக இருப்பதினாலேயே. பார்க்கிறவர்கள் அப்பெண்ணை உள்ளூர வெகுவாக பாராட்டுவார்கள். வெளியே சொல்ல மாட்டார்கள். பெண்ணின் அழகை அலட்சியம் செய்வார்கள். காரணம் அவள் இருக்கும் இடமும் நபரும் தான் காரணம். என்னுடைய பேனா ஒரு முக்கியப் பிரமுகரின் சட்டைப் பாக்கெட்டில் இருந்திருக்குமானால் அதைப் பற்றி ஊரே பேசியிருக்கும். ஊடகங்கள் அந்தப் பேனா மீது படையெடுதிருக்கும். அதைப் பற்றி தினசரியில் ‘ஆன்ட்டிக்ஸ்’ பக்கத்தில் குறைந்தது ஐநூறு வார்த்தைகளுக்காவது எழுதியிருப்பார்கள். விலைமதிக்கமுடியாத கற்கள் தங்கத்தின் மீதுதானே பொதிக்கப்பட வேண்டும். தகரம் சரிபடுமா. என்னுடைய பேனா அப்படித்தான் என்னிடம் இருந்து மதிப்பிழந்து காணப்பட்டது.
மற்றொரு முறை என்னுடைய பேராசிரியர் பேனாவை வாங்கி எழுதிப் பார்த்தார். ”ஸ்மூதா” இருக்கே என்று திரும்ப தந்து விட்டார். அப்போதுதான் ஞாபகம் வந்தது ஃபௌன்டன் பேனாக்களை ’ஸ்மூத்னஸ்க்கு’ கொண்டு வர குறைந்தது ஆறுமாதங்களாவது ஆகும் என்று. எழுதிப் பழக்கப்பட வேண்டும். முள் தேய வேண்டும். என்னுடைய பேனாவை வாங்கியப் புதியதிலேயே ‘ஸ்மூதாகத்தான்” எழுதியது என்ற விஷயமே எனக்கு தெரியாமல் இருந்தது. அதை வைத்து ஏறக்குறைய எண்ணூறு பக்கங்கள் எழுதிவிட்டேன். ஆயிரம் பக்கங்கள் என்பது என்னுடைய இலக்கு. அதுவரையிலும் அதனுடைய ‘ஸ்மூத்னஸ்’ தான் காரணம் என்று ஒரு நாளும் நான் எண்ணிப் பார்த்ததே இல்லை. என்னுய பேனா என்றால் அதன் ஸ்மூத்னஸில் குறைந்தது பத்து பக்கங்களாவது வலியின்றி எழுதிவிடலாம். அதுவே மற்ற பேனாக்களாக இருந்தால் சிந்தனை எவ்வளவு செறிவாக இருந்தாலும் காகிதத்தின் மீது ஸ்மூதாக பேனா பயணிக்காது. பத்துப் பக்கங்களுக்கு ஐந்து பக்கங்கள் தான் எழுத முடியும். என் பேனாவைக் கொண்டு சிந்தனை செறிவாக இருந்தால் ஐம்பது பக்கங்கள் கூட எழுதலாம்.
இந்த மாதிரிப் பேனாக்களை தெரிவு செய்கிறவர்கள் பத்திரிக்கையாளர்கள் மாத்திரமே என்ற செய்தியை pdwல் பேனாக் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். அவர் பேனா விர்பனையில் நாற்பது ஆண்டுகள் அனுபவம் உடையவர்.
அவரிடம் ஒரு முறை காட்டியபோது. ”இது hand made பேனா சார். இத மாஸ் ப்ரோடக்‌ஷன்ல உற்பத்தி செய்ய முடியாது. ஆர்டர் செய்து வாங்கனும்”. பிளாஸ்டிக்கை மெட்டிரியளைக் கொண்டு ஒரு மாடலை வைத்துக் கொண்டு ஆயிரம் பத்தாயிரம் என்று உற்பத்தி செய்து விடலாம். இது ஒவ்வொன்றாகக் கடைந்துதான் உருவாக்க வேண்டும் என்றார். பிளாஸ்டிக் பேனாக்களை எவ்வளவு அழுத்தம் கொடுத்து திருகினாலும் சற்று விட்டுக் கொடுக்கும். அதனால் திருகளில் உள்ள மரை சற்று வேறுபட்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த மாதிரிப் பேனாக்களில் அதுபோல் அழுதம் கொடுக்க முடியாது. மரை எவ்வளவோ அவ்வளவுக்குத்தான் திருகளும் கொடுக்க முடியும். மீறி கொடுத்தால் உடைந்து விடும். அதற்காகவே வெளி மரைக்கும் உள் மரைக்கும் ஏற்றவாறு பேனாவின் தடிமன் பருத்து இருக்கும். ஒரு முறை உடைந்து விட்டால் அவ்வளவு எளிதில் மாற்று மூடியையோ கீழ்பகுதியையோ வைத்து சமாளிக்க முடியாது. புதிதாக மற்றொன்றை செய்தாக வேண்டும். அப்படி மூன்று பேனாக்கள் ரிப்பேருக்காக அவருடைய கடையில் இருந்ததைப் பார்த்தேன். அனைத்தும் பத்திரிக்கையாளர்களின் பேனாக்கள் என்றார். அதிகம் எழுதுகிறவர்கள். இந்த மாதிரிப் பேனாக்கள் தான் அவர்களுக்கு சரி படும். பேனாக் கடைக்காரரிடம் அதுவும் நாற்பது ஆண்டுகள் பேனா விற்பனையில் அனுபவம் பெற்றவரிடம் இருந்து நான் பெற்ற இந்தத் தகவல் என்னுடைய பேனாவின் மீது எனக்கே பெரும் மதிப்பை ஏற்படுத்தி விட்டது.
இதெல்லம் ஒரு புறம் இருக்க நேற்றைய முந்தைய நாள் ஜே. பி. சாணக்யாவின் ”பெருமைக்குரிய கடிகாரம்” என்ற கதையை வாசித்தேன். வாசித்து முடிந்த பின்பு என்னுடைய எண்ணம் எல்லாம் கடிகாரத்தின் மீது பதியவில்லை. கதையில் வரும் காமா பேனாவின் மீதே நோக்கம் கொண்டிருந்தது. கதையின் தலைப்பு உலகப் புகழ் பெற்ற காமா பேனா என்று இருந்திருந்தால் என் பேனா அமரத்துவம் பெற்றிருக்கும். நான் மேற்கூறிய பேனாவின் அனைத்து அம்சங்களும் நிஜ உலகில் இருந்து நான் கற்றுக் கொண்டது. புனைவு என்னுடைய பேனாவை காலங்களுக்கு மீறின புராதனப் பொருளாக மாற்றி விட்டது. கதையின் வரிகள் பேனாவைப் பற்றி இவ்வாறாக வரும்.
பின்பு ஒருநாள் நான் காமா பாப்புலர் பேனா ஒன்று வாங்கி வந்தேன். வீட்டுக்கு வந்து எழுதினால் அது எனது லாவகத்திற்கு இசைந்து கொடுக்கவில்லை. எதேச்சையாகத்தான் நான் அதன் பெயரை உற்றுப் பார்த்தேன். அது காமா என்பதற்கு பதிலாக அதில் அதிகமாக ஒருணீசேர்க்கப்பட்டிருந்தது.
 ‘டூப்ளிகேட்
 ‘ஆமாம், அதை நான் கடைக்காரனிடம் கொடுத்துச் சண்டையிட்டேன். ‘மன்னித்துக்கொள்ளுங்கள்என்றுகூறி அவன் ஒரிஜினலைக் கொடுத்தான்.
     அப்படியே கதையில் என்னுடைய சொந்த பேனா அதுவும் ஆயிரம் ரூபாய் காமா பேனா என் கண் முன் தெரிந்தது. என்ன செய்ய. கதையில் 44 வார்த்தைகளில் வரும் காமா பேனாவுக்காக 5653 வார்த்தைகளில் வாழும் கடிகாரத்திற்கு துரோகம் செய்ய முடியுமா. எனவே, ”பெருமைக்குறிய கடிகாரம்” தான் சரியான தலைப்பு. இருந்தாலும் என்னுடைய காமா பேனா 44 வார்த்தைகளில் உயிர்ப் பெற்றிருப்பது என்னுடைய பேனா செய்த பூர்வ ஜென்மப் புண்ணியம் தான்.   உலகப் புகழ் பெற்ற பேனா Reviewed by Arul Scott on 10:35 PM Rating: 5 உலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு ...

No comments: