Sunday, November 6, 2016

ஏதேனின் பாம்புகள்


ஏதேனின் பாம்புகள்
இன்று ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அது அப்படியே MGR ன் எங்கள் வீட்டு பிள்ளை படத்தை நினைவுப்படுத்தியது. சைவ உணவகம் செல்வதற்கு என் பாக்கட்டில் இருந்த பணம் மிகுந்த தைரியத்தைக் கொடுத்தது. குறைந்தது இருநூறு ரூபாய் இருந்தால் தைரியமாக உள்ளே நுழைந்து வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு அந்த இருநூறையும் கால்லாவில் காலிசெய்து விடலாம். போதுமான பணம் கொடுத்த தைரியம் இன்று நேராக என் கால்களை ***** சைவ உணவகம் நோக்கி தள்ளியது. அதிகம் செலவழிந்தால்? இருநூறை நீச்சயம் தாண்டாது. அத்தனை காலி மேஜைகள் இருந்தும் அந்த ஒரு இடம் மாத்திரம் ஏன் என்னை அந்த அளவிற்கு ஈர்த்தது என்று தெரியவில்லை. என் எதிரில் இருந்த அந்தப் பையனுக்கு சுமார் இருபத்தி நான்கு இருபத்தைந்து வயதிருக்கும். ஏற்கனவே ஒரு தட்டை காலி செய்து விட்டு கடைசியாக ஒரு பிலேட் இட்டிலியை அமுக்கிக் கொண்டிருந்தான்.
எனக்கு சைவ ஓட்டலுக்கு சென்றால் மசால் தோசை என்பது மாற்றப்படாத நியதி. என்னவோ அனைத்து சைவ ஓட்டல்களும் மசால் தோசைக்காகவே இயக்குவது போலவும் அவைகளுக்கு மீறி மற்ற அனைத்தும் அந்த ஓட்டலுக்குறியவைகள் அல்ல என்ற உணர்வு மேலோங்கி நிற்கும். மசால் தோசை என்றால் சைவ ஓட்டல் சைவ ஓட்டல் என்றால் மசால் தோசை. இது என்னுடைய நியூட்டன் கண்டுபிடிப்பு. அதனையே அனைவரும் ஒப்புக் கொண்டாக வேண்டும். யாரும் மாற்றுக் கருத்து கூறக்கூடாது. இதில் யாரும் என்னை மாற்றி விடக் கூடாது என்றும் மிகவும் கவனமாக இருப்பேன். எனினும் ஏதேனின் பாம்புகள் சாப்பிடுகிற விசயத்தில் மாத்திரம் எளிதில் ஏமாற்றி விடுகின்றன. எனக்கு எதிரில் வேறு எதையாகிலும் ஆர்டர் செய்து வாங்கினால் போதும் எனக்கு உடனே அதைப் போன்றே வாங்கி சாப்பிட்டு விட வேண்டும் என்ற சோதனை ஆரம்பித்து விடும். என்றாலும் பாருங்கள் படிக்கின்ற விசயத்தில் என்னால் குறைந்தது பத்து பேரையாவது பாதிக்க முடியும். என்னுடைய ஆருயிர் எழுத்தாளன் தாஸ்தாவஸ்கியை குறைந்தது பத்து பேரையாவது படிக்க வைத்து விடுவேன். இல்லையென்றால் பொறாமையில் எதாகிலும் ஒரு எதிர்வினையாயவது செய்ய தூண்டி விடுவேன். அந்த விதத்தில் எந்த ஏதேனின் பாம்பும் என்னை வஞ்சிக்காது.
சாப்பாட்டைப் பொருத்தவரையில் தான் எனக்கு என்று எந்த  தெரிந்தெடுப்பும் இருக்காது. மற்றவர் எதை ஆர்டர் செய்கிறாரோ அதுவே என்னுடைய தெரிந்தெடுப்பாக மாறிவிடும். வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. என்றாலும் எளிதில் வஞ்சிக்கப்படுகின்ற இடமாயிற்றே. இருப்பினும் என்னுடைய மசாலா தோசையை மாத்திரம் யாரும் ஈடு கட்டும் வித்தத்தில் மாற்றுப் உணவை கொண்டுவரவே முடியாது. அதிலும் குறிப்பாக உயர்தர சைவ உணவுகள். அந்த தோசைக்குப் பிறகுதான் மற்ற அனைத்தும்.
அந்தப் பையன் இன்றைக்கு எப்படியோ ஏதேனின் பாம்பு போல் ஒரு பிலேட் இட்டிலியைக் காட்டி என்னையும் அதைப் போன்றே ஆர்டர் செய்யும் படி செய்து விட்டான். எனினும் மசாலா தோசைக்கு அப்புறம் தான் அனைத்து பட்டியல் உணவுகளும். அதற்காக இன்னும் சற்று நேரம் காத்திருந்தால் தவறு ஒன்றும் இல்லை. அதற்குள் அந்தப் பையன் சந்தடிக் காட்டாமல் நழுவி விட்டான். அது பாம்புகளுக்கே உரித்தான செயல். சர்வரின் வேலைக்கே உலைவைத்துவிட்டான். ”சார் இங்க இருந்தவர பாத்திங்களா”. என்று அவசர அவசரத்தில் கேட்க ஆரம்பித்தார். நன்றாக புரிந்து விட்டது பையன் டிமிக்கி கொடுத்து விட்டான். என்னவோ நாங்கள் தான் அந்த பையனை மறைத்து வைத்திருப்பது போன்று எங்களிடமே பதபதைத்தவராக கேட்டுக் கொண்டே இருந்தார். எதிரில் அமர்ந்திருந்தவருக்கு அதில் அக்கரை ஒன்றும் இல்லாதவர் போல் கண்டும் காணாதவராக இருந்துவிட்டார். நான் என்னுடைய மசாலா தோசையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தேன். என் பக்கம் திரும்பி பையனைப் பற்றி எந்தக் கேள்வியையும் கேட்க வில்லை.
நானே ஏமாற்றி விட்டு சென்று விட்டது போல விசாரணை என்னை நோக்கியே பாய்வது போல் உணர்வு ஏற்பட்டது. அதனால் கோபம் ஒரு பக்கம். அடுத்ததாக இட்டிலியையே என்னுடைய அடுத்த வேட்டையாக வைத்திருந்தேன். இப்போது அதனை ஆர்டர் செய்ய கொஞ்சம் கூச்சம். இப்போது போய் ஒரு ப்ளேட் இட்லி என்று கேட்டால் சர்வர் என்னை பற்றி என்ன நினைப்பார். நானும் டிமிக்கி கொடுக்கும் பேர்வழி என்று தானே நினைப்பார். காசு என்னுடையது. வயிறு என்னுடையது இதில் வெட்கம் என்ன வெட்கம். இருந்தாலும் காரணமின்றி வருகிற வெட்கங்கள், பயங்கள் அவ்வளவு எளிதில் நம்மை விட்டு போய் விடாது. இது போன்ற எண்ணக்கள் கரைந்து போவதற்கு குறைந்தது ஒரு நாளாவது தேவைப்படும். ஒரு தூக்கம் தேவைப்படும். தூக்கம் ஒன்றுதான் மருந்து.
இவைகளுக்கு மத்தியில் அடுத்த வேட்டைக்காக ஒரு பிளேட் இட்டிலியை தைரியமாக ஆர்டர் செய்து விட்டேன். சர்வருடைய பதபதைப்போ என்னவென்றால் கடுக்காய் கொடுத்து விட்டு மிடுக்காய் நழுவினவனை பற்றி வெளியில் கூறிக்கொள்ளவும் முடியாது. கணக்கையும் மறைக்கவும் முடியாது. கல்லாவில் இருக்கும் முதலாலியிடம் சொல்லிவிட்டால் எல்லாம் முடிந்தது. திட்டாவது வாங்கிக் கட்டிக் கொண்டு போய் விடலாம். சம்பளத்தில் கை வைத்துவிட்டால். தவிப்போடு ஆற்றாமையில் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தார்.
சும்மா ஒரு பேச்சுக்கு, என்னிடம் பணம் இல்லை என்று அவரிடம் சொன்னால் என்னாவது. எங்கள் வீட்டுப்பிள்ளை சாதுவான MGRன் கதிதான் என்னுடைய கதியும். அவ்வளவு கடுப்பையும்  என் மீது கொட்டித் தீர்த்திருப்பார். இது தேவையில்லாத பயம். என்னிடம் தான் ரூயாய் ***** இருக்கிறதே. ஜோபியை ஒரு முறை தொட்டுப்பார்த்துக் கொண்டேன். அப்படியே ***** தாள் பத்திரமாக இருந்தது. அந்தப் பையன்தான்….! மிகவும் தந்திர சாலி. பணம்  இல்லாமல் எல்லாம் இருந்திருகாது. இதுபோல் ஏமாற்றினால் அதில் ஒரு கிளுகிளுப்பு அவ்வளவுதான். ஆனால் சர்வரின் பாடுதான் படு திண்டாட்டம். என்னுடைய வேட்டையை முடித்து விட்டு ”போதும் பில் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு ”கை கழுவ” சென்றேன். எங்கே நானும்  நழுவி விடுவேன் என்று பயந்து அவர் பயந்திருக்க வேண்டும். தேவையில்லாமல் அலையப் போகிறாரோ என்று அவசர அவசரமாக கையை கழுவிவிட்டு கிச்சன் பக்கம் வேறு ஆர்டருக்காக பில்லுடன் சென்றவரை வலுக் கட்டாயமாக பிடித்து பில்லை வாக்கிக் கொண்டு கல்லாவுக்கு சென்று விட்டேன்.
எனினும் அந்தப் பயையனுடைய முகம் மாத்திரம் அப்படியே என் மனதில் பதிந்து விட்டது. அந்த குரும்புத்தனமான சிரிப்பின் கண்கள் இப்போது வேறு அர்த்தத்தை எனக்கு நினைவூட்டியது. 



No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...