Wednesday, November 9, 2016

பணம் பொய்த்த நிலையும், வாசிக்கவிருக்கும் செல்லாத பணமும்

தி இந்து - The Hindu256 × 207Search by image
பணம் பொய்த்த நிலையும், வாசிக்கவிருக்கும் செல்லாத பணமும்

அநீதிகள் நிகழும் போது யாரோ ஒருவர் ஏதோ ஒரு விதத்தில் அதற்கெதிரான எதிர்குரலை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அக்குரல்கள் ஏதோ ஒரு பாதுகாப்பு வலையத்திற்குள்ளாக தங்களைப் பாதுகாத்துக் கொண்டே கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்க்குரல்கள் எப்போதும் எதிர்குரல்களாக இருப்பதில்லை. அவைகள் பாதுகாப்பு என்கிற காப்பீட்டின் உதவியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அநீதியும் சரி அதற்கான எதிர்க்குரலும் சரி ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுடன் ஒன்று உடன்பட்டுத்தான் செயல்படுகின்றன. இவைகள் இரண்டிற்கும் மத்தியில் ஏதோ ஒன்றின் செயல்பாட்டிற்கு நாம் தலையசைத்து ஆமோதித்தே ஆக வேண்டியிருக்கிறது.  எதிர்க்குரலின் புரட்சிதன்னமைக்கு  இசைந்து செயல்படுவதுதான் மிகவும் ஆபத்தானது. அது வெறும் எதிர்ப்புக் குரல் மாத்திரமே. பிரச்சனை இங்கு என்னவெனில் இன்று எது எதிர்க்குரலாக இருக்கிறதோ அதுதான் நாளைக்கான அதிகாரத்தின் குரல். அதிகாரத்தின் குரலும் சரி புரட்சிக் குரலும் சரி எதோ ஒரு விதத்தில் ஒன்றாகத்தான் இயங்குகின்றன. இன்று ஒரு குரலின் புரட்சி உத்வேகம் மேலோங்கி நிற்கும் போது அதுதான் நாளைக்கான அதிகாரத்தின் சிம்மாசனம். அந்த சிம்மாசனத்தை அடைவதற்கான விலைதான் இன்றைய புரட்சியின் வலிகள் வீரப்போர்கள் அனைத்தும். கண்டிப்பாக பரிசு ஒன்று இருக்கிறது. எந்த இலட்சியவாதியும் இதற்கு விதிவிலக்கல்ல. இது ஒரு முரணியக்கம். இந்த Binaryக்கு மத்தியில் யார் ஒருவரும் தலையிடக்கூடாது. முரணியக்கங்களின் நிலைப்பாடு வேண்டுமானால் மாறுபடலாம் எனினும் அவைகள் ஒன்றுக்கொன்று இரட்டைத்தன்மையில் எப்போதும் தங்கள் இருத்தலைப் பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றன. இதில் மூன்றாம் சாராருக்கு எந்த இடமும் இல்லை. வேடிக்கை மாத்திரம் பார்க்க வேண்டும்.
நம்மால் இவைகளுடைய போராட்டத்தை  கண்டும் காணாதவர்கள் போன்று சும்மா இருந்துவிடவும் முடியாது. ஏதோ ஒரு சாராரின் அதட்டல் பேச்சுக்கு நாம் செவி மடுத்தாக வேண்டி இருக்கிறது. பார்வையாளர்களாகிய நம்முடைய கைதட்டல்களும் ஆமோதிப்பும் இவர்களுக்கு அவசியப்படுகிறது. இதில் இரண்டையும் நாம் தவிர்த்தாக வேண்டியிருக்கிறது. அதற்கு மூன்றாவது ஒரு குரல் நமக்கு தேவைப் படுகிறது. அது உண்மையின் குரலாக நிச்சயம் இருந்தாக வேண்டியிருக்கிறது. எனினும் எல்லாக் போராட்டத்தின் குரல்களும், அதிகாரத்தின் குரல்களும் உண்மை என்ற உடுப்பைப் போர்த்திக் கொண்டே செயல்படுகின்றன. எப்படியாகிலும் உண்மை என்ற ஒரு நிலைப்பாடு இவைகளுக்கு அவசியப்படுகிறது.
இப்படிப் புரிந்தும் புரியாமலும் பேசுவதற்கு முக்கியக் காரணம் நமக்கு ஏதோ ஒரு நிலையில் உண்மையின் அதன் புனிதத் தன்மையில் அதனை நாம் பார்க்க வேண்டி இருப்பதன் அவசியம் முக்கியப்படுகிறது. புனிதம் என்று கூறுவது சற்று அதிகப்பட்சமான வார்த்தைதான். என்ன செய்வது உண்மை தன்னுடைய இருப்பில் அப்படியே காட்சியளிக்கும் போது அதனை புனிதம் என்றுதானே கூறியாக வேண்டியிருக்கிறது. அதனை சாத்தியப் படுத்துகிறவர்கள் கவிஞர்கள். இவர்களை எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்க்க எனக்கு மனதில்லை. இவர்களைப் பற்றிய  மதிப்பீடு நிச்சயமாக கவிஞர்கள் என்ற நற்பெயர் மாத்திரமே. இவர்கள் நடந்ததை அப்படியே கதையாக்குபவர்கள்.  ஒரு விதத்தில் கதையாக்கப்பட்ட வாழ்க்கையை அதன் உண்மை நிலைக்குச் சென்று அதன் உண்மையின் இருப்பு நிலையை ஆராய்கிறவர்கள். அவன் சொல்லவரும் factயைக் காட்டிலும் truthதான் மிக முக்கியமானது. இவைகள் இரண்டிற்குமான வேறுபாடு மிக அதிகம்.
உதாரணமாக இன்றைய சூழ்நிலையில் பணம் தான் அனைத்தும் என்று வாதிடுபவர்கள் கணக்கை எடுத்தால் அதனுடைய எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும். பணம் செல்லாத இடம் ஒன்று இருக்கும் என்று ஒருவர் சொன்னால் நம்மால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
காசு அனைத்தையும் செய்து முடிக்கும் என்பது உண்மை எனினும் அதன் truth என்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. துப்பறியும் நாவல்களில் அதிகம் இடம்பெறும் ஒரு சொற்றொடர் “as a matter of fact”. இதில் fact தான் முக்கியம். சம்பவத்தின் சாராம்சமான சத்தியம் நமக்கு அவசியப்படுவதில்லை. எனினும் சத்தியம் என்பது யாவரும் அறிந்த ஒன்று. அதைப் பற்றி விவாதம் என்று வரும் போது ஒருவரும் அதனுடைய சத்தியத்தின் நிலையை கவனத்தில் கொள்வதில்லை. நாம் அனைவரும் factன் மீது மயங்கி விடுகிறோம். Factன் மீது உருவாக்கப்படும் தர்க்கம் தான் மிக பலமான மதில் சுவர். அதனை கிழித்துக் கொண்டு அதனால் மறைக்கப்பட்ட truthஐ பார்ப்பது மிகக் கடினமான செயல். கதைகள் கூட சத்தியத்தின் பக்கம் நிற்பதில்லை. அவைகள் மிக முக்கியமாக fact ஐயே கட்டமைக்க முற்படுகின்றன. யதார்த்தக் கதைகள் கூட இந்த விதத்தில் தோற்று விடுகின்றன. அது எவ்வளவு எளிதில் தன்னுடைய செயல்பாட்டில் சத்தியத்தை துள்ளியமாக வெளிக்காட்டுமா என்பது கேள்விக்குறியது. இதில் சத்தியத்தைப் பேசத்துடிக்கும் கதைகளைக் கூட கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. ஒன்று நடந்த சம்பவத்தில் இருந்து வேறொரு புனைவை கட்டமைத்து உண்மையைத் தேட முற்படுவது. இரண்டாவது நடந்த சம்பவத்தில் இருக்கும் அப்பட்டமான உண்மையை நோக்கியத் தேடல். இவைகள் அனைத்துமே தங்களுடைய இருப்பு நிலையில் சத்தியத்திற்கான தங்களுடைய சேவையை நிறைவேற்றாமல் போய் விடுகின்றன.
            இதில் நடக்க போவதை முன் அறிவிக்கும் கதைகள் என்று ஒன்று இருக்கிறதா என்பது இப்பொதைக்கு நம்முடைய முக்கியத்தேடலாக இருக்கிறது. ஒன்று நடந்தவற்றின் உண்மையைக் கட்டமைக்கிறது. மற்றொன்று நடந்த சம்பவத்தைப்போல் ஒரு மாற்றுப் புனைவை உருவாக்கி அந்தப் புனைவில் ஒரு உண்மையை விசாரிக்கிறது.
எனினும் சத்தியத்திற்கான ஒரு முக்கிய தேடல் முன் அறிவிக்கும் கதைகள் தாம் அதிகம் நமக்குத் தேவைப் படுகிறது. இதில் இமையத்தின் கதைகளை அதுவும் மிக சமீபத்தியக் கதைகளை இதன் அடிப்படையில் ஆராய வேண்டி இருக்கிறது. அவர் எழுதிய பெத்தவன் கதை வெறுமனே எங்கேயோ நடந்த சம்பவம் அல்ல. அதற்கு முன்பு ஆணவக் கொலைகள் பல நிகழ்துக் கொண்டுதான் இருந்தன இருக்கிறது. எனினும் அந்த குறிப்பிட்டக் கதைக்கான சம்பவம் ஏற்கனவே நடந்த ஒன்று அல்ல அது வரப்போகும் சம்பவத்தின் தீமையின் கொடூரத்தின் செயல்பாட்டை முன் அறிவிக்கும் கதை.
இமையம் இப்போது நடந்ததை ஆவணப்படுத்தும் கதைக் கலைஞன் மாத்திரம் அல்ல. நடக்க இருக்கும் சம்பவத்தையும் கதைப் படுத்தும் முன் அறிவிப்பாளனாக ஆகிவிட்ட படைப்பாளியாகிவிட்டார். இதற்கு மற்றுமொறு உதாரணம் அவர் எழுதிக் கொண்டிருக்கும் செல்லாத பணம். ஒருவேளை இமையம் இதனை ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பதாக எழுதியிருந்தால் அவர் சொல்லியிருக்கும் செல்லாத பணம் என்பது ஒரு தத்துவமாகத்தான் இருந்திருக்கும். செல்லாத பணம் எப்போதும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நம்முடைய மனம் அதனுடைய தாற்பரியத்தை ஏற்க மறுக்கிறது. நாம் பணம் என்கிற ஒன்றினுடைய செயல்பாட்டின் factஐ மாத்திரமே அதிகம் கொண்டாடுகிறோம். சில நேரங்கள் என்பதை விட பல நேரங்களில் பணம் செயல்படாத நிலையை நாம் பார்க்கத் தவறுகிறோம். பணம் என்கிற fact தான் நம்மை அதிகம் கவர்கிறது.

பணத்திற்குமான செயல் இழப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழத்தான் செய்கிறது. அந்தத் தருணங்களில் மாத்திரமே நாம் பணத்தின் செயல்படாத நிலை என்ற சத்தியத்தை ஏற்கிறோம். எனினும் அதனுடைய தாற்பரியத்தை நாம் எல்லா நேரங்களிலும் ஏற்பதில்லை. எனினும் அதனை ஏற்கக் கூடியதாக மாற்றப்போவது செல்லாத பணம் என்றக் கதை. நல்ல சினிமாப் படத்திற்கான ட்ரெய்லர் மாதிரி இமையம் இப்போது கதையின் ட்ரெய்லரை மாத்திரம் போன தடம் இதழில் வெளியிட்டு விட்டார். அதன் முழுக் கதையும் எப்போது வரும் என்று நாம் இப்போது காத்துக் கொண்டு இருக்கிறோம். தீபாவளி, பொங்கல் என்று விசேஷப் பண்டிகைக் காலங்களில் படங்கள் வருவது போன்று இன்று நம்மத்தியில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பணத்தைப் பற்றிய ஒரு மாபெரும் தத்துவத்தின் பின்னனியில் அவருடைய செல்லாத பணம் என்ற கதையை இன்னும் கூடுதல் கவனத்தோடு வாசிக்கக் காத்துக் கொண்டிருக்கிறோம்.  

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...