Thursday, November 3, 2016

”நெஞ்சமெல்லாம் வண்ணம் செய்த மாயம்”


”நெஞ்சமெல்லாம் வண்ணம் செய்த மாயம்”
சில நேரங்களில் குறிப்பிட்ட சில அனுபவங்கள் நம்மைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவைகள் கனவுகளாக, சித்திரங்களாக, கதைகளாக ஏதோ ஒரு விதத்தில் நம் ஆழ்மனதின் அனுபவங்களின் காட்சிகளாக தங்களை இருத்திக் கொண்டே இருக்கும். எனினும் அந்தக் குறிப்பிட்ட அனுபவத்தின் சம்பவத்திற்கு நம்மால் கடந்து செல்லவே முடியாது. ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை பார்க்கும் போது ஒரு விதமான சோகத்தின் வலி ஏற்படும். சில நேரங்களில் சில கனவுகள் அவைகள் நம்முடைய பண்டைய காலத்து அனுபவம் போன்ற உணர்வை ஏற்படுத்தி விடும். அவைகள் நம்முடைய வயதின் கணக்கை விட ஆண்டுகளின் கணக்கில் மிகவும் தொன்மையானவைகள் போல் தோன்றும். ஏன் இந்த குறிப்பிட்ட அனுபவங்கள் மாத்திரம் தொன்மையானவைகளாக இருக்கின்றன என்பது நம்மால் சிந்துத்துப் பார்க்க முடியாதவைகள். இதற்கான விடை நண்பர் ஜெய் தினேஷ் உடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது கிடைத்தது.
நம்முடைய ஆழ் மனதில் அநேக அனுபவங்கள் தொன்மங்களாக படிந்து கிடக்கின்றன. ஆவைகள் இந்த காலத்திற்குரியவைகள் அல்ல. அவைகளின் வயது நம்முடைய வயதிற்கும் மீறின மிக புராதனமான வயதை கொண்டவைகள். அது எப்படி என்னுடைய அனுபவத்திற்கும் வயதிற்கும் மீறி என்னில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஒன்று மாத்திரம் தொன்மையானதாக இருக்க முடியும் என்பது இப்போது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. உரையாடலில் பாதியில் நண்பர் ஏறக்குறைய சிக்மண்ட் பிராய்டாக மாறி விட்டார். (வேண்டாம் வேண்டாம் பிராய்டு அறிவு ஜீவிகளின் சொத்தாக மாறிவிட்டார். அவர் ஒரு கோட்பாடு மாதிரி. எதையாகிலும் உலறிவைத்து விட்டால் நம் கதை முடிந்தது. இப்படித்தான் ஒரு பெண்ணியவாதியிடம் கண்ணகியைப் பற்றி பேசி மாட்டிக் கொண்டேன். முதுகு பழுத்து விட்டது. ஃபிராய்டு வேண்டாம் மெஸ்மரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.)  நண்பர் அந்தத் தருணத்தில் ஏறக்குறைய மெஸ்மராகவே மாறிவிட்டார். அந்த மெஸ்மர் உறக்கத்தின் ஆழ் நிலைக்கு கொண்டு செல்வார். நம்முடைய நண்பர் நவீன மெஸ்மர் அப்படி ஒன்றும் தூங்க வைக்க வில்லை.
குறிப்பிட்ட சம்பவம் ஒன்றை ஞாபகப் படுத்திக் கொள்ளும் படி சொன்னார். ஒவ்வொரு அனுபவமாக எது முக்கியமானது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஒன்று மாத்திரம் நினைவிற்கு வந்தது. அது என் ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட போது ஏற்பட்ட ஒன்று. அது ஒரு புதிய உலகமாக புதியதொரு அனுபவமாக ஏற்பட்டது. அதுவரை சுதந்திரமாக திரிந்த எனக்கு புதிதாக பள்ளிக்கூடம் உருவாக்கிய கட்டுப்பாடு ஒன்றும் ஒடுக்குமுறையாக இருந்திருக்கவில்லை. வயதுக்கு ஏற்ற சூழ்நிலைதான் அது. இன்றைய சூழ்நிலையைப் போன்று அல்ல. பிறந்து இரண்டு வருடத்திற்குள்ளாகவே குழந்தைகள் ஒடுக்குமுறையின் சூழளுக்குள் தள்ளப்படுகிறார்கள். அந்தக் காலத்தில் {ஒன்றும் அதிகம் இல்லை. இருபத்தி ஐந்து அல்லது முப்பது வருடக்களுக்கும் முப்புதான்} பால்வாடி என்பது குழந்தைகளுக்கான விருப்பத் தெரிவு. குழந்தைகளுக்கு சூழ்நிலை பிடிக்கவில்லை என்றால் வீட்டிற்கு கொண்டுவந்து விடுவார்கள். இன்றைக்கோ LKGகளும் UKG களும் கட்டாயத்தின் பேரில் குழந்தைகளின் சுதந்திரத்தை பறித்து வைத்துக் கொள்கின்றன. என்னுடைய பள்ளிப் பிரவேசம் நல்ல மனப் பக்குவத்தின் வயதில் நடந்து ஒன்று. வகுப்பறையின் கட்டுப்பாட்டை என் மனம் ஏற்றுக் கொள்ள பக்குவப்பட்ட நிலையாகத்தான் அந்த ஐந்து வயது இருந்தது. கையைத் தூக்கி தலையின் மீது வலைத்து அடுத்த பக்கத்து காதைத் தொட வேண்டும். நுனி விரல் காதைத் தொட்டால் நாம் தகுதிப் பெற்றவர்கள். இல்லையெனில் வீட்டிற்கு அனுப்பி இன்னும் ஒரு ஆண்டு காத்திருக்க சொல்வார்கள். என்னுடைய விரலின் நுனி காதைத் தொட்டதா இல்லையா என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் பள்ளியில் சேர்க்கப்பட்டேன்.
வகுப்பரைக்குள் நுழைந்த அனுபவம் தான் இன்றும் என்னில் புதிய அனுபவமாக இருந்துக் கொண்டு இருக்கிறது. மேற்படிப்புகள் என்று தொடர்ந்து கொண்டே இருந்த நேரங்களில் புதுப் புது சூழ்நிலைகளை சந்திப்பது என்பது என்னுடைய அந்த ஒன்றாம் வகுப்பு சேர்க்கையின் அனுபவமாகவே இருக்கும். ஏன் இன்றைக்கு புதியதாக ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட அந்த ஐந்து வயதின் அனுபவமாகவே இருக்கும். எல்லாவற்றையும் புதியதாக பார்க்கும் பார்வை குறைந்தது இருபது நாட்களுக்காவது நீடிக்கும். என்னுடைய ஒன்றாம் வகுப்பின் அந்த இருபது நாட்கள் மிகவும் பசுமையானது. அந்தத் தருணமே என்றென்றைக்கும் நம்மை அதன் பின் தொடர்ந்து செல்ல தூண்டும் தருணங்கள். அந்த ஒரு இடைப்பட்டக் காலத்தில் ஒரு சித்திரம் மாத்திரம் என்னை வதைத்துக் கொண்டிருந்தது. அந்த சித்திரம் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஒரு தாய் மடியில் வைத்துக் கொண்டு கண்ணீர் விடும் சித்திரம். அந்த வயதில் Fairy Taleகளில் வரும் சின்டரெல்லாவைக் காட்டியிருந்தால் இந்நேரம் நான் ஒரு கதாசிரியனாக இருந்திருப்பேன். அந்த சித்திரம் யதார்த்ததின் கொடுரமாக என் முன் காட்சியளித்தது.
 அந்த சித்திரத்தில் இருந்த கண்ணீர் வடிக்கும் தாய் மாத்திரம் என் மனதில் ஏதொ ஒரு சோகத்தை அந்த நாளில் ஆழ் மனதில் பதிய வைத்து விட்டது. ஏன் அந்த சித்திரம் எனக்கு அப்படிப்பட்ட ஒரு வலியை ஏற்படுத்தியது என்பது நண்பர் இந்தக் கேள்வியைக் கேட்ட பின்புதான் எனக்கு தோன்றியது. மௌனத்தின் வலியை ஏற்படுத்திய அந்த சித்திரத்திற்கு பின்பு இருந்த சம்பவம் என்ன என்பதை என்னால் பல நாட்கள் புரிந்து கொள்ளவே முடிய வில்லை. சட்டென்று மற்றுமொறு அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது. என்னுடைய நான்கு அல்லது மூன்று வயதில் வலது கை நடுவிரலில் தங்க மோதிரம் நன்றாக புதைந்து விட்டது. அது அதிகம் நினைவில் இல்லாத ஒரு அனுபவம். ஐந்து வயதுக்கு முந்தைய நினைவுகளுக்கு நம்மால் முழுமையாக பயணம் செய்யவே முடியாது. சில பதிவுகளின் தாக்கங்கள் மாத்திரமே இருக்கும். முழுமையாக சம்பவ நிலையில் என்ன நடந்தது என்று எப்போதுமே நினைவில் நிறுத்திக் கூற முடியாமல் போய்விடும். அந்த ஊர் தங்க ஆசாரியை அழைத்து மோதிரத்தை வெட்டி எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு மேல் என்ன நடந்தது என்பது முழுவதும் எனக்கு தெரியாது. ஒன்று மாத்திரம் நன்றாக மனதில் ஆழமாக ஒரு வித வலியோடு அந்தச் சித்திரம் என்னில் பதிந்து விட்டது. நடுவிரல் இரத்தம் சொட்டச் சொட்ட வலிக்க வலிக்க மோதிரம் வெட்டி எடுக்கப்பட்டது. அதுதான் என்னுடைய முதலும் கடைசியுமான தங்க மோதிரம்.
என் நடுவிரலின் வலியை விட மடியில் வைத்துக் கொண்டு என் அம்மா எனக்காக கண்ணீர் சிந்தின வலி மிகுந்த முகம் அப்படியே என் மனதில் பதிந்து விட்டது. அது என்னில் இரட்டிப்பான வலியை அந்தத் தருணத்தில் உண்டாக்கியது. அது என் ஐந்து வயதுக்கு முந்தைய அனுபவம். அதில் முழுமையான சம்பவத்தை என்னுடைய எண்ண ஓட்டத்தில் முழுமையாக மீட்டெடுக்க முடியாவிட்டாலும் என் அம்மாவின் அந்த அழுகையின் முகமும் விரலுக்கு சேதம் இன்றி மோதிரம் வெட்டியெடுக்கப்பட வேண்டுமே என்ற என் தாத்தாவின் ஆவல் நிறைந்த பார்வையும் காரணமின்றி என்னில் பதிந்து விட்டது.
என்னுடைய முதிராத எண்ண ஓட்டத்தில் பதிந்த அந்தச் சித்திரமும் பின்பதாக ஒரு புதிய உலகை அதாவது ஒன்றாம் வகுப்பு என்ற ஒரு புதிய உலகத்தில் நுழைந்த போது பார்த்த சித்திரமும் அப்படியே தொடர்பில்லாமல் பதிந்து விட்டது. என்னில் ஒன்று மாத்திரமே விளங்காமல் இருந்து வந்தது. ஏன் அந்த போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தையை மடியில் வைத்திருந்த பெண்ணின் படம் நினைவில் காரணமின்றி ஒரு வலியை ஏறிபடுத்தியிருக்க வேண்டும் என்று அறுதியிட்டு கூற முடியாமல் இருந்தது.
நணபர் ஜெய் தினேஷ் இரண்டிற்குமான தொடர்பை தன்னுடைய மெஸ்மரிசத்தின் மூலம் தோண்டி எடுத்து விட்டார். கடைசியில் ”அருள் இந்தப் படமா பாருங்கள்” என்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பதாக தன்னுடைய தாயின் மடியில் ரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் முகத்தை பார்க்கும் ஒரு சித்திரத்தை காண்பித்தார். உண்மையாகவே அன்று ஜெய் தினேஷ் ஒரு மெஸ்மராகத்தான் இருந்தார். என்னுடைய ஆழ் மனதை அதுவும் நான் பயணிக்க முடியாத என்னுடைய ஐந்து வயதுக்கு முந்தைய நினைவிற்கு கொண்டு சென்று என்னால் தீர்க்க முடியாமல் இருந்த இரண்டு அனுபவங்களை தொடர்பு படுத்தி விட்டார். மூன்று சித்திரங்கள் தொடர்ந்து என்னில் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்பு படுத்தப்பட்ட நிலையில் வண்ணங்கள் குழைத்த ஓவியத்தை என்னில் நிகழ்த்தி விட்டது.
நம்முடைய ஐந்து வயதுக்கு முந்தைய அனுபவங்கள் அனைத்தும் தொன்மையானவைகள். காரணம் அவைகள் நம்முடைய நினைவின் வளர்ச்சிக்கு முந்தினவைகள். நம் நினைவுகள் எட்டிப்பிடிக்கும் எந்த அனுபவமும் நினைவுக்கு உட்பட்ட காலத்திற்குறியவைகள் அவைகள் நம்முடைய வயதுக்கு ஏற்ற வயதை உடையவைகள். எப்போது ஒரு அனுபவம் நம்முடைய நினைவின் வளர்ச்சிக்கு முந்தி செல்கிறதோ அவைகள் தொன்மையானவைகள் என்ற உணர்வை ஏற்படுத்தும். கதைகள் கூட அப்படிப்பட்டவைகள் தான். அவைகள் அழைத்துச் செல்லும் காலம் நம்முடைய முதிராத எண்ணங்களின் குழந்தைப் பருவத்திற்கான காலங்கள்.     



  

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...