Friday, November 4, 2016

துயருற்றவர்கள்

Fritz Eichenberg, illustrations to Crime and Punishment,1938.
துயருற்றவர்கள்
துயரத்தின் எல்லையைக் கடக்கும் போது அது ஏற்படுத்தும் வலி தாங்க முடியாதது. அந்த நிலையில் ஒருவர் தன்னுடைய இருப்பை  தொடகிறார் என்றால் அவர் நிச்சயம் மாகா புருஷனாகத்தான் இருக்க வேண்டும். எனினும் மகா புருஷர்களே இன்றைக்கு இவ்வுலகத்தின் வேதனையில் சிக்கித் தவிக்க முடியாமல் உலகத்தின் பந்தங்களை அறுத்துக் கொண்டு சன்யாசம் வாங்கிக் கொள்கின்றனர். வாழ்க்கை அதன் தன் இருத்தலில் மிக துயரகரமானது. இந்தத் துன்பக்கேணியை தவிர்த்து நம்மாள் வாழ்க்கையை தொடர முடியாது. இந்தத் துன்பக்கேணியின் சாகரத்தில் திளைத்தப்பின்பு நமக்கு காத்திருக்கும் வாழ்க்கை என்பதுதான் மிகவும் பொக்கிஷமானது. அந்த பொக்கிஷத்தை ஒவ்வொரு நொடியும் ஊய்த்துணர வேண்டியிருக்கிறது. துன்பதிற்கு பின்வரும் வாழ்க்கையை பொக்கிஷமாக ஒவ்வொரு நொடியையும் வாழ ஆரம்பிக்கிறார்கள். ஆனால் துன்பத்தின் வலி அதன் எல்லைக் கோட்டை அத்து மீறினவனுடைய வாழ்க்கையை இன்பமானதாக வைத்திருக்குமா என்பது தான் என்னுடைய முக்கியமான கேள்வி.
மரணத்தின் டரயலைக் கடந்தவன் தாஸ்தாவஸ்கி. மரணத்திற்கு தப்பி சிறைசென்றவனுக்கு ஏற்ப்பட்ட எண்ணம் வாழ்வின் இனி இருக்கப்போகும் ஒவ்வொரு நொடியும் வாழ்ந்தாகப் பட வேண்டும் என்பதுதான். அவன் வாழ்ந்த எஞ்சிய வாழ்க்கையை முழுவதும் எழுத்திற்காகவே செலவிட்டவன். துயரம் தந்த பீதி அவனை பின் தொடந்திருக்க வேண்டும். அவன் துன்பக்கேணி அவனுக்கென விதித்த வலியின் வரம்பையும் மீறி வாழ்வேன் என்று பிடிவாதம் கொண்டுவிட்டான். அந்த துன்ப சாகரத்தில் அவன் ஒன்று பைத்தியமாகி இருக்க வேண்டும் அல்லது தற்கொலை செய்திருக்க வேண்டும். என்ன திமிர் அவனுக்கு. வாழ்க்கையை தொரட அவனுக்கு யார் தெம்பளித்தது.
துன்பக்கேணி வலிப்பு நோயை பரிசாக அவனுக்கு தந்து வழியனுப்பி வைத்தது. மனதின் வலி அவனுக்கு தாங்க முடியாததாக இருந்திருக்க வேண்டும். 
இதனை தகவலாகத்தான் தாஸ்தாவஸ்கியின் வாழ்க்கைக் குறிப்பில் வாசித்திருக்கிறேன். இன்றைக்கு வலிப்பு வந்த ஒருவரை என் கண் எதிரே அதுவும் அவரை தூக்கி உட்கார வைக்கும் அளவுக்கு நெருக்கத்தில் இருந்து தொட்டு உணர்ந்தேன். உடலின் அதிர்வின் உதரலை என் கையாலேயே தொட்டுணர்ந்தேன். வாய்பேச முடியாதவர் அவர். அந்த உணவு விடுதியில் அவருடன் மற்றுமொரு வாய் பேச முடியாதவரும் இருக்கிறார். இவர்கள் மௌனத்தில் வாழ்பவர்கள்.
ஏற்ற வேலைக்கு உணவு. இருக்க உணவு விடுதியே போதுமானதாக இருக்கிறது. இதற்க்கு மேல் அவர்களுக்கு ஏதாகிலும் வேண்டுமா என்ன. ஒரு மனிதனுக்கு உண்ண உணவும் இருக்க இடத்தையும் தவிற வேறு என்ன இலட்சியங்கள் இருக்கப் போகின்றன. அதுவும் அந்த இரண்டு வாய்பேசாதவர்களுக்கு சொகுசு வாழ்க்கையும் எஜமானனின் நற்கருணையும் போதுமானதுதான் என்று சொல்ல வேண்டும்.
இவைகளுக்கு மீறி வாழ்க்கைக்கு என்று என்ன இருக்கிறது. தங்களுடைய முழு வாழ்க்கையும் அந்த ஓரிடத்திலேயே வாழ்ந்து முடிக்கலாம் அல்லவா. இருப்பினும் அதுதான் மனிதனுக்கான துன்பக்கேணி. அதுதான் அவர்களுக்கான சிறைவாசம். அதனை அவர்களால் சந்தோஷமாக்கிக் கொள்ளவே முடியாது. அவர்களுக்கான தேவையை முற்றிலும் உணவு மற்றும் இருப்பிடத்துடன் நிறுத்திக்கொள்ளவே முடியாது. குறைவு பட்டவர்கள் என்பதற்காக அவர்களின் மற்ற எல்லா தேவைகளையும் அபத்தமென்று முடக்குவது அவர்களின் சுதந்திரத்தையே மனித நேயம் என்ற பெயரில் தட்டிப்பரிப்பதாகும். வேலையும், இருக்க இடமும், நேரத்திற்கு உணவையையும் கொடுத்து விட்டு மற்ற தேவைகளை முடக்குவது அவர்களை துன்பக்கேணியின் சாகரத்தில் என்றென்றைக்கும் பாதுகாப்பாக வைப்பதாகும்.
பேசுகிறவன் உரிமையை ஏதோ ஒரு விதத்தில் வெளிக்காட்டி விடுகிறான். பேச்சில் அலட்சியத்தைக் காண்பித்தாலே போதும் ஒரு மணி நேரத்திற்குள் அவனுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பேச்சற்றவர்களின் குமுறல் பரிதாபமாகத்தான் காணப்படும். அலட்சியதிற்கும் அதட்டலுக்கும் இருக்கிற மரியாதை மௌனத்தின் பரிதாபத்திற்கு கிடையாது. ஆனால் அதனை மனிதனின் உயர்ந்த நல்லொழுக்கமாகக் கொண்டாடுகிறோம் பூஜிக்கிறோம். அவைகள் கடவுளுக்குறியவைகளாம்.
அந்த வலிப்பு நிச்சயம் உள்மனதின் குமறலே. அதனுடைய வெடிப்புதான் உடலில் இந்த பாதிப்பு. மதம் இதனை பேய்பிடித்தவனின் நோய் என்று முத்திரைக் குத்தித் தப்பித்து விடுகிறது. இமையம் தன்னுடைய ”பத்தினி இலை” கதையில் பேய் பிடித்த பெண்ணின் பேச்சை இலக்கியப்படுத்தி இருப்பார். கதை சொல்லி ஒரு கேள்வி கேட்ப்பார். ஏன் எங்கள் தெரு பெண்களுக்கு மாத்திரம் பேய் பிடிக்கிறது. அது மற்ற பெண்களுக்கு பிடிக்காதா என்று. அந்த ஒரு கேள்வியில் அனைத்தும் விளங்கி விடும். பேய் பிடித்து விட்டது என்று சொல்வது மதம் தன்னை தன் தீமையின் அவப் பெயரில் இருந்து காத்துக் கொள்வதற்காக. இல்லையெனில் ஏன் இந்த பொய்யை கற்ப்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் பழிக்கு தப்புவதற்காகத்தான் இந்த பொய்யோ எனத் தோன்றுகிறது.
தாஸ்தாவஸ்கி தன் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இப்படிப்பட்ட பேய் பிடித்த பெண்களைப் பற்றி பேசுவார். வேலைக்கார பெண்களுக்கு வீட்டு வேலைகள் அதிகம் இருக்கும் அதில் இருந்து தப்பிக்க அவர்கள் பேய்பிடித்த நிலையில் அதாவது மண நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அவர்கள் ஆலையத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்பு குணப்படுத்தப்படுகிறார்கள். குணப்படுவதற்கு அந்த குறிப்பிட்ட சூழ் நிலையேக் காரணம். அமைதியும் சலனமற்ற சூழ்நிலை அவர்களை மன அமைதிக்கு கொண்டு வருகிறது. அவருடைய கதையில் வரும் பெரும்பாலான பெண்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். கதையின் நாயகனும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவன். கடைசியில் அனைத்துப் பாத்திரங்களும் வலிப்பு நோய்க்காரர்களாகவே இருப்பர்.
இதற்கு எல்லாம் பேய்கள் தாம் காரணம். அதிகாரப் பேய்கள், முதலாளிப் பேய்கள், கணவன் பேய்கள், கொடுரமான அப்பாப் பேய்கள். இப்படி பேய்கள் எத்தனையோ விதத்தில் சமுகத்தில் இந்த துயருற்றவர்களை துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. ஆனால் பேய்கள் மாத்திரம் தங்களை புனிதத்தின் அடையாளமாகக் காட்டிகொண்டு தப்பித்து விடுகின்றன. பழி பாவங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெறியாத இருத்தலே இல்லாத ஆவிகள் மீது போடப்படுகிறது.
பல்கலைக்கழகத்திற்கு மிகுந்த வலியுடன் சென்று விட்டேன். பேராசிரியர் வாசிக்க ஒரு கதையை கொடுத்தார். கதை தாஸ்தாவஸ்கியைப் பற்றிய சிறுகதை. கதையின் பெயர் The Other. போர்கே எழுதின கதை. கடைசியில் தாஸ்தாவஸ்கி பூதம் போர்கேயையும் ஆட்கொண்டுவிட்டதா என்ற சந்தோஷத்தில் அந்த ஐந்து பக்க கதையை வாசித்து முடித்துவிட்டேன். புத்தகங்கள் கிடைக்கப்பெற்ற, வாசிக்க பேறு பெற்ற நமக்கு தாஸ்தாவஸ்கி பூதம் ஏதோ ஒரு விதத்தில் மற்ற பேய்களிடம் இருந்து வரும் இன்னல்களை அலட்சியம் செய்யக் கற்றுத்தருகிறது. ஆனால் வாசிக்க வாய்ப்பே அற்ற அந்த துயருற்றவர்களின் கதி.


  

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...