Friday, November 11, 2016

வெண்ணிற இரவுகள்: நவீனக் காதலின் ஏமாற்றங்கள்

வெண்ணிற இரவுகள்: நவீனக் காதலின் ஏமாற்றங்கள்
நம் ஐம்புலன்களைக் கொண்டு இந்த பிரபஞ்ச வெளியை பார்க்கிறோம், சுவாசிக்கிறோம், கேட்கிறோம், தொட்டு உணருகிறோம். இதற்கு மீறியும் இந்த ஐம்புலன்களின் கூர்மையான செயல்பாட்டிற்கு மீறி ஏதோ ஒரு விதத்தில் எதேனும் ஒரு புலன் மாத்திரம் அது செயல்படுகின்றதாக இருப்பினும் திறன் அற்றதாக இருக்கிறதோ என்ற எண்ணம் நேற்று வெண்ணிற இரவுகள் கதையை வாசிக்கும் போது ஏற்பட்டது. கதையின் நாயகன் பேசுவதற்கு வாய் இருந்தும் பேச்சற்றவன். அவன் ஒவ்வொரு இரவாக சந்திக்கும் அந்தப் பெண் ஏதோ ஒரு விதத்தில் கண்கள் இருந்தும் பார்வை அற்றவள். உடல் என்கிற புறச்சட்டகத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கும் உள் மனதிற்கும் கூட இப்படிப்பட்ட உணர்வுகள் இருக்கின்றனவே என்று கதையை வாசித்து முடித்த பின்பு ஏற்பட்டது. உள் மனது பார்க்கிற, கேட்கிற, உணருகிற சாளரங்கள் தான் நம்முடைய உடலின் புலன்களோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது.
            இதற்கு முன்பு இந்தக் கதையை வாசிக்கும் போதெல்லாம் கதையின் இறுதியில் நடைபெறும் காதலின் பிரிவு எவ்வாறு செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே வாசிப்பின் இலக்காக இருக்கும். கதையின் போக்கில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை ஒருபோதும் கவனித்ததே இல்லை. அந்த பதினைந்து வயது பெண்ணிற்கும் இருபத்தைந்து வாலிபனுக்கும் தொடர்ந்து நடக்கும் சந்திப்புகளில் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் தோன்றுகிறது. முதலாவது அவன் தான்னை ஒரு சகோதரன் பொன்றவன் என்று சொல்லி மெல்ல மெல்ல அந்தப் பெண்ணுடன் சிநேகத்தை வளர்த்துக் கொள்கிறான். சந்திப்பின் தொடர்ச்சியில் அவளுக்குள்ளும் தன் மீது காதல் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடுகிறான். அவளுக்கு ஏற்பட்டிருக்கிற மனச்சிக்கள் இதுதான். அவள் ஏற்கனவே ஒருவனை காதலித்து இருக்கிறாள். தன்னுடைய பொருளாதார சூழ்நிலை தற்போது அவளை ஏற்றுக் கொள்வதற்கு இடம் தராது என்று பணம் சம்பாதிக்க மாஸ்கோ செல்கிறான். தான் திரும்பி வரும் வரையில் தனக்காக காத்திருந்தால் ஒரு வருடம் கழித்து அவளை ஏற்றுக் கொள்வதாகவும், ஒரு வேளை தன்னால் திரும்பி வராமலும் போகலாம் என்று சொல்லி விடுகிறான். தனக்காக காத்திருக்க தயாராக இருந்தால் வந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி விட்டு நிச்சயமாக ஏதும் சொல்லாமல் சென்று விடுகிறான். அவள் அவனுக்காக ஒருவருடம் காத்துக்கொண்டே இருக்கிறாள்.
            தன்னை விரும்பாத ஒருவனுக்காக ஓர் ஆண்டு முழுவதும் காதிருக்கிறவள் தனக்காகவே ஒவ்வொரு இரவும் வந்து வந்து  சந்திக்கிறவனை தன்னையே முழுவதும் நேசிக்கிறவனை அவளால் நேசிக்க முடியவில்லை. இந்த மும்முணைக் காதல் இறுதியில் எப்படி முடிவடைகிறது என்பதுதான் வாசிப்பில் சுவாரசியமாக இதுவரை இருந்துவந்தது.
            தற்போதைய வாசிப்பு கதையை முற்றியும் வேறொரு கோணத்தில் காட்டியது. கதை அதன் மும்முனைக் காதல் எப்படி முடிவடைகின்றது என்று இப்போது இல்லை. இரண்டு பேரும் இரண்டு வித்தியாசமான உலகத்தில் தங்களைப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். அவன் தன்னுடைய வாழ்க்கையை நான்கு சுவற்றுக்கு மத்தியில் யாருடனும் பேசாமல் வாழ்ந்திருக்கிறான். யாருடனாவது பேசுவது என்பதே அவனுக்கு அபூர்வமான செயல். ஒருவன் பல ஆண்டுகள் பேசாமல் இருந்தால் என்ன ஆவான் என்பதற்கு அவன் ஒரு உதாரணம். தன்னுள்ளேயே சிறைபட்டுக் கிடக்கும் ஒருவனாக அவன் மாறிவிடுகிறான். அவன் அவளை சந்திக்கும் அந்தத் தருணம் தான் அவன் தன்னுள் இருந்தே வெளிவரும் தருணம். தான் யார் என்பதே அவனுக்கு தெரியாத ஒன்று. அவன் தன்னைக் கண்டடைவது அவளிடம் மட்டுமே. பல ஆண்டுகள் சிறையில் அடைபட்டவன் ஒரு நாள் வெளி உலகிற்கு வந்து இந்த உலகத்தைப் பார்ப்பது போல் இருக்கிறது. பேசுவதற்கு வாய்ப்போ நண்பர்களோ கிடைக்கபெறாத ஒருவன் சிறைக்கைதிதான். அவளிடம் பேசும் ஒவ்வொரு தருணமும் அவனுக்கு ஒரு மாபெரும் விடுதலையாக இருப்பதை உணருகிறான். பேசுதலின் அடிப்படை அதன் செயல்பாட்டிற்கும் மீறி உள்மனத்துக்கு வாய் ஏதோ ஒருவிதத்தில் விடுதலையின் சாளரமாக இருக்கிறது. அவன் பேசா விட்டால் சிறைக்கைதி தான்.
            தன்னை தன் உள்மனம் என்னும் கூண்டுக்குள் இருந்து விடுவித்துக் கொள்ள அவனுக்கு அந்தப் பெண் அவசியப்படுகிறாள். மீண்டும் மீண்டும் வெண்ணிற இரவுகளை அவன் நாடுவது தன்னுடைய பரிபூரண விடுதலைக்காகவே.
அந்தப் பக்கத்தில் அவளும் கூட ஏதோ ஒரு விதத்தில் தன் அக உலகத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் முடக்கிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய சிறை அவளுடைய பாட்டி. அந்தக் கிழவிக்கு கண் தெரியாது. அந்தக் குருட்டுத் தனத்தில் கிழவியின் ஒரே பொழுதுபோக்கு, வேலை எல்லாம் தையல் மாத்திரமே. அவளுடைய உலகம் குருட்டு உலகம். அந்த குருட்டு உலகத்தில் தான் மாத்திரம் இருப்பதை அவள் விரும்ப வில்லை. கிழவிக்கு அவளுடைய துணைத் தேவைப்படுகிறது. தன்னுடன் துணையாக வைத்துக் கொண்டால் கூடப் பரவாயில்லை. அவள் ஆடையையும் சேர்த்து தன்னுடைய ஆடையுடன் ஆடையாக சேர்த்துத் தைத்து விடுகிறாள். கிழவியின் ஆடையுடன் அவளுடைய ஆடை பின்னப்படுகிறது. இனி கிழவியின் உலகம் தான் அவளுடைய உலகமும். கிழவியின் உலகம் பார்வையற்ற உலகம். தன்னுடைய குருட்டு உலகத்தை பதினைந்து வயது இளைய பெண்ணையும் வற்புறுத்தி வாழ வைக்கிறாள். அச்சிறு பெண், தான் இதுவரையில் பார்த்த வந்த உலகம் முற்றிலும் இருள் நிறைந்த கிழவியின் உலகமாக இருந்து வந்திருக்கிறது. அந்த நேரத்தில் அவளுடைய காதலன் வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ நாவலைக் கொடுக்கிறான். இருவருமாக இருளில் இருந்து அந்த நாவலின் மூலம் அழகிய உலகத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அவளுக்கு அவன் மீது காதல் ஏற்படுவதற்கு இந்த நாவல் தான் காரணமோ என்றும் தோன்றுகிறது. இருள் நிறைந்த உலகத்தில் அவளுக்கு ஒரு புதிய உலகமும் காதல் உணர்வையும் வால்டர் ஸ்காட்டின் நாவல் தர ஆரம்பிக்கிறது.
            அதனை வாசிக்கும் முன்பு கிழவி வெகு ஜாக்கிரதையாகவே கதையை வாசிக்க அனுமதி அளிக்கிறாள். பழையக் காதல் கதைகள் எல்லாவற்றிலும் வாலிபர்கள் வந்து ஏதும் அறியாத பெண்களைக் கவர்ந்து சென்றுவிடுவார்கள். அது போன்ற கதைகள் இளம் பெண்கள் வாசிக்க உகந்த புத்தகங்கள் அல்ல என்று கிழவி எச்சரிக்கிறாள். உண்மையில் கிழவி அது போன்ற கதைகளை தன் வாழ் நாளில் வாசித்ததே கிடையாது. இப்போது இரண்டு பேருக்கும் ஒரு புதிய உலகம் அந்தக் கதையின் மூலமாகக் காண்பிக்கப் படுகிறது. அவளுக்கு மாத்திரம் தான் வாசித்த காதல் காவியம் ஏதோ ஒரு விதத்தில் ஒரு தாக்கத்தை அவளுக்குள் ஏற்படுத்தி இருக்க வேண்டும். புத்தகத்தைக் கொடுத்தவனையே காதலிக்க ஆரம்பிக்கிறாள். மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றுவிடுகிறாள்.

            இங்கு முக்கியமாக வாசிப்பில் கிடைப்பது கதையின் நாயகனும் சரி அவளும் சரி ஏதோ ஒருவிதத்தில் தங்களுக்கான உலகத்தைத் தொலைத்திருக்கிறார்கள். அவள் கண்கள் பார்க்கின்ற உலகம் அவளுக்கு போதுமானதாக இருந்திருக்கவில்லை. அவனுடைய வாய் பேசுவதற்கு போதுமானதாக இருந்திருக்கவில்லை. இந்த இரண்டு போதாமையின் நிலைமைகள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது நிறைவடைகிறது. இதற்கு மீறி அவளுடைய அந்த மாஸ்கோ காதலனுக்கான காதல் வெறுமனே வால்டர் ஸ்காட் தன்னுடைய நாவல் மூலமாக ஏற்படுத்திய காதல் உணர்வு அவ்வளவுதான். அவனுக்கான தேவை தன் பேச்சற்ற நிலையில் உண்டாகிய வெற்றிடத்தை நிறப்ப ஒருவள் தேவைப் பட்டிருக்கிறாள். இவைகளுக்கு மீறி இரண்டு பேருக்கும் மத்தியில் மலர்ந்த காதலும் புனைவின் காதல்தான். அவளுடைய மாஸ்கோ காதலனின் மீதான ஏற்பட்ட காதலும் புனைவுக் காதல்தான். காதல், புனைவுக்கு மாத்திரமே சாத்தியப்படுகிற ஒன்று. அதனை நிஜத்தில் செயல்படுத்த துடிப்பது தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் செயலோ என்று தற்போதைய வாசிப்பில் கதை நமக்குக் காட்டுகிறது. கடைசியில் அவன் கடவுளே இவ்வளவு சிறிய மகிழ்ச்சிக்காகவா இவ்வளவு பெரிய வாழ்க்கை என்று கதையை முடிக்கிறான். அவன் பெருமூச்சு காதலின் ஏமாற்றத்திற்கானது அல்ல. மாறாக அவன் பெருமூச்சு அவள் மூலமாக ஏற்பட்ட தான் கண்ட உள்ளத்தின் விடுதலையின் உணர்வு என்பதுதான். அந்த விடுதலையின் உணர்வுதான் அவன் கண்ட ஒரு சிறிய மகிழ்சி. அதற்கு மீறி காதலைப் பற்றியெல்லாம் வெண்ணிற இரவுகள் எதுவும் பேசவில்லை. காதல் பற்றிய பேசுதல்கள் வால்டர் ஸ்காட்டோடு முடிந்து விட்டது. அந்தப் பழையக் காதல் நிஜத்திற்கு மாத்திரம் அல்ல ஏன் நவீன புனைவுக்குக் கூட சாத்தியம் இல்லை. 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...