Wednesday, May 8, 2019

புலப்படாத பூனையும் (imperceptible) உணரப்படாத நிசப்தமும்


புலப்படாத பூனையும் (imperceptible) உணரப்படாத நிசப்தமும்
     நேரக்கணக்கு எப்போதும் கடிகார முள்ளின் நகர்வின் படி கணக்கிடப்படுவதில்லை. நிமிட முள், வினாடி முள், நேர முள் என்று காலம் அதன் வேகத்தில் அல்லது  தாமதத்தில் நகர்ந்து கொண்டே செல்கிறது. இப்பிரபஞ்சத்தின் அசைவு வினாடி முள்ளின் வேகத்தைக் காட்டிலும் மிகக் குறைவானது. நத்தை ஊர்ந்து போவது போன்று பிரபஞ்ச இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய பூமி பத்து நேர கணக்கு படி தன்னை தானே ஒரு சுற்று சுற்றிக் கொள்ள 24 மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறது. இது பருப்பொருள் அசைவு. அதை விட சத்தத்தின் அதிர்வு இயக்க நகர்வு  மிக வேகமானது. ஒரு கல்லை தூக்கி எரிவதற்கும், அதிர்வலைகள் மூலம் சத்தத்தை ஒரு எல்லையில் இருந்து மற்ற எல்லைக்கு அனுப்புவதற்கும் கால வித்தியாசம் உண்டு. வெளிச்சத்தின் வேகத்தை அளப்பது மிகவும் கடினம். கணக்கிட முடியவில்லை என்பதை விட மனித மூளைக்கு அந்த திறன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதி வேக இயக்கமான ஒளியின் பாய்தலும் சரி மிக மிக மிக குறைந்த வேகத்தில் இயங்கும் இந்த பிரபஞ்சமானாலும் சரி மனித பார்வைக்கு முன்பு அதன் இயக்கம் செயலற்ற சிசப்த நிலையாகும். கணிக்க முடியாததால் ஒரு இயக்க விதியை நிசப்த நிலை என்கிறோம். பிரபஞ்சத்தின் அகண்ட வெட்ட வெளியில் கிரகங்கள், விண்மீன்களின் இயக்கத்தை  நிசப்தம் என்று சொன்னால் அது பார்வை மயக்கம். புலன்களின் உணர்வுகளுக்கு அப்பால் பிரபஞ்சம் பேரியக்கத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.
     இதனை உணர முடியாமல் எல்லாம் மாயை எல்லாம் நிசப்தம் என்று சொல்வது பூனை கண்ணைக் கட்டிக்  கொண்ட கதை. புறம்பான பிரபஞ்சம் எக்கேடு கேட்டால் எனக்கு என்ன என்று இருந்தால் பொறுப்பான மனிதன் யோசிக்கிற யோசனையா இது. அதீதத்தில் ஒளியின் வேகமும் சரி, அதைவிட வேகம் குறைந்த ஒலியின் வேகமும் சரி, பிரமாண்டமான பிரபஞ்சத்தின் நிசப்தமான இயக்கமும் சரி இவை அனைத்தும் நம் இருப்பின் நலன் கருதியே இயங்குகின்றன. இதில் ஒலியின் வேகத்தை ஒளி எடுத்துக் கொண்டாலோ அல்லது இவ்விரண்டின் வேகங்களை இந்த அண்ட பிரமாண்டம் எடுத்துக் கொண்டாலோ என்னாவது. பூதங்கள் வெந்து உருகிவிடும். அல்லது அனைத்தும் உடைந்து சிதறிவிடும். எனவே அதினதின் இயக்கம் அதினதின் வேகத்தில் அதினதின் இடத்தில் இருக்கட்டும். இம்மியளவு இதில் மாற்றம் ஏற்பட்டாலும் சேதாரம் நமக்குத்தான்.
     அதனால் ஒருவார உல்லாச பயணமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு நிமிட சலிப்பூட்டும் காத்திருத்தலாக இருந்தாலும் சரி ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஏனென்றால் ஐபூதங்களின் அதீத நிசப்த பெரியக்கங்கள் நம் பொருட்டு இருக்கின்றன. பூனை போன்று கண்ணை கட்டிக்கொண்டு பொறுப்பில்லாமல் இருக்க கூடாது. ஐந்து நாள் உல்லாச பயணம் எப்படி இனிக்கிறதோ அதே போன்று ஐந்து நிமிட காத்திருத்தலும் மகிழ்ச்சியளிக்க வேண்டும். அதுவும் சென்னையில் சாந்தோம் பகுதியில் ஸ்ரீராம் சிட்டி பைனான்ஸ் அலுவலகத்தின் முன்பு மாநகர குப்பைத் தொட்டி அருகில் ஐந்து நிமிடம் காத்திருப்பது பிரபஞ்ச விதிக்கு நாம் கொடுக்கும் மரியாதை. இந்த ஐந்து நிமிடத்தில் எதிரே அலுவலகக் கட்டிடமும், அருகே குப்பைத்தொட்டியும் எந்த விதமான பொழுது போக்கையும் அளிக்க போவதில்லை. நம்முடைய நோக்கம் எல்லாம் அந்த ஐந்து நிமிடம் எப்படி கழிய வேண்டும் என்பதுதான். அப்படி செய்ய கூடாது. குப்பை தொட்டியானாலும் அங்கு ஒரு கதை நடைபெறும் அதை கவனித்தால் போதும். பூனை ஒன்று குப்பைத் தொட்டியில் எதையாவது தேடிக் கொண்டிருக்கும். அது கண்டிப்பாக சாம்பல் வண்ணத்தில் இருக்கும். கொஞ்சம் நேரத்தில் நான்கு நாய்கள் அதனை துரத்திக் கொண்டு செல்லும். மிக நீண்ட பெரிய மதில் சுவர் ஓரத்தில் பூனை ஓட நாய்கள் துரத்த நமக்கு அந்த ஐந்து நிமிடங்கள் TOM AND JERRY கார்ட்டூன்தான். பூனை தப்பித்து சென்று மறைந்த இடம் எவ்வழி என்று அவ்வளவு சிக்கிரத்தில் யூகிக்கு முடியாது. எங்கேயோ சிறிய துவாரம் இருக்கக் கூடும். அது ஆபத்தின் விளிம்பில் இருக்கும் பூனைக்குத்தான் தெரியும். பூனை மாயமாய் மறைந்த உடன் நாய்கள் பூனையை துரத்தின நோக்கத்தை மறந்து விட்டு எதுவுமே நடக்காதது போன்று இயல்பாக திரும்பு விடுவார்கள். எனக்கு தெரிந்து எந்த பூனையும் நாயிடம் மாட்டிக் கொண்டு சின்னாபின்னமானதை பார்த்ததே இல்லை. ஆனால் எலி பூனையின் கண்ணில் பட்டால் நிச்சயம் பூனைக்கு சிற்றுண்டிதான். நாய்களின் நோக்கம் பூனையை துரத்துவது மட்டுமே. இது பூனையின் சாமர்த்தியமா அல்லது நாயின் இரக்கமா என்பது இன்றளவும் புதிரான ஒன்று. சும்மா ஐந்து நிமிடங்கள் இவைகளை கவனித்துக் கொண்டே இருந்தாலும் கடைசியில் ஒரு நிமிடம் எஞ்சி இருக்கும். குப்பையை கிளறிக் கொண்டிருக்கும் அந்த TOMயை  snap  short எடுத்துவிட வேண்டியதுதான். சாம்பல் நிற பூனையை நீண்ட சிமெண்ட் மதிலின் பின்புலத்தில் படம் எடுத்தால் எதோ பூனை மாயமாகி விட்டது போன்ற பிரமை. இன்னும் சற்று உற்று பார்த்தால் கூட பூனை படத்தில் புலப்படவில்லை. எப்படிப் புலப்படும். சிமெண்ட் மதிலின் நிறம் சாம்பல், பூனையின் நிறம் சாம்பல் பூனை காணாமல் போய் விட்டது. பிரபஞ்சத்தின் நிசப்தம் உணரப்படாத போது எப்படி பூனையின் இருப்பு புலப்படும்.                
           

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...