Friday, May 3, 2019

வீதி உலா



     சாதாரண நாட்களில் நாம் பார்க்கிற தெரு அவ்வளவு அழகானதாக இல்லை.  மக்கள் நாடமாடும் இடம் என்றாலும் ஒருவகையில் கைவிடப்பட்ட இடம் சாலை. அது தெருவாக இருக்கலாம், பரபரப்பு மிக்க சாலையாக இருக்கலாம் கைவிடப்பட்ட இடங்கள் அவை. வீட்டுவாசலின் எல்லைக்கு வெளியே உள்ள பகுதி கைவிடப்படலின் ஆரம்பம்.  ஒருவர் வீட்டு வாசலின் எல்லைக்கு வெளியே நகரும் போது கைவிடப்படலின் எல்லைக்குள் நுழைகிறார்.
                 அது மக்கள் குழுமிய இடம். நூற்றுக் கணக்கில் மக்கள் நடமாடுகின்றனர். அந்த இடத்திற்கு ஒருவர் கூட சொந்தமானவர் அன்று. அந்த இடத்தில் கூடுகிற ஒவ்வொருவரும் அந்நியரே. மிகவும் பிரியத்துக்கு உரியவரை  அங்கு சந்திக்க நேர்ந்தால் அவ்விடத்தில் நின்று பேச மனம் ஒப்பாது. எல்லைக் கோட்டை தாண்டி ஒரு டீ கடையிலாவது நின்று பேச மனம் ஏங்கும். நடுத்தெரு நாளுவார்த்தைகள் சேர்ந்தார் போன்று பேச முடியாத இடம்.  இருவராக நின்று பேசிக் கொண்டிருந்தால் அதை பார்க்க நேர்ந்த அம்மா, ஏன் தெருவில் நின்று பேசுறீங்க வீட்டுக்குள்ள போய் பேசுங்கஎன்னும் அன்பான கட்டளை பிறக்கும். இல்லையென்றால் இப்படி செய்யவேண்டும்: நண்பனை வீட்டு வாசல் சுவருக்கு வெளியேயும் நாம் உள்ளேயும் நின்று கொண்டு பேச்சை தொடரலாம். இப்படிப்பட்ட சூழ்நிலை வீட்டில் சகோதரிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே.  அம்மாவின் அதிகார கட்டளை: “வந்தா வாசலோட பேசி அனுப்பு”. அபோது நண்பன் கைவிடப்பட்டவன்.
     இந்த சந்திப்பு புள்ளி தெருவும் தெரு சார்ந்த இட அமைப்பை பொறுத்து அமைக்கிறது.  என்னதான் தெருவும் சாலையும் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றாலும் ஏதோ ஒரு வகையில் அனைவரின் வாழ்வின் சீர்மையை தீர்மானிக்கிறது.  யாருக்கும் சொந்தமற்ற இந்த இடம் எல்லோருக்கும் உரியது.  இதன் மீது சொந்தம் கொண்டாட முடியாது என்றாலும் நிச்சயம் உரிமை பாராட்ட முடியும். 
     உரிமைக்கான தருணம் எப்போதும் வாய்ப்பதில்லை. உரிமை உண்டு எனும் உணர்வே மிக அரிதாகத்தான் நமக்கு ஏற்படுகிறது. குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசும் போது பதபதைப்பில் சுத்தமாக இல்லையே என்று எண்ணும் தருணம்    நம் உரிமையை உணரும் தருணம். உரிமை இருந்து என்ன செய்ய.  எச்சில் துப்பவும் TRANSFORM அருகில் நின்று சிறுநீர் கழிக்கவும் தான் உரிமை. உண்மையில் அது உரிமையை தவறாக பயன்படுத்துதல். 
     இவை எல்லாவற்றிற்கும் மீறி இந்த கைவிடப்பட்ட இடம் நம் வாழ்க்கையில் மிக முக்கியமான இடம்.  இந்த இடம் அளிக்கிற மிக மகத்தான தருணங்கள் பல. உதாரணத்திற்கு திருவிழாவையே எடுத்துக் கொள்வோம்.  அந்த பிரம்மாண்ட கண்காட்சியை நிகழ்த்துவதற்கு நம் வாசலின் குறுகிய இடம் போதவே போதாது. சற்று பொறுங்கள், வாசல் தெரு என்று பிரிக்கிறோமோ? நம் வீட்டின் வாசல்தானே தெரு. அல்லது தெருவின் ஒரு சிறு பகுகிதான் நம் வீட்டு வாசல். நகர்புறத்தில் இந்த உரிமைக்கு இடம் இல்லை.
                 ஆனால் வாசல் தெருவின் ஒரு சிறுபகுதியாக இருக்குமானால் உரிமையுடன் பொறுப்பும் கூடிவிடும். விசயத்துக்கு வருவோம். விழாக்கோலம். அதுதான் விசயமே. அதற்கு நம் வீட்டின் மிகச்சிறிய வாசல் போதாது. வாழ்வின் பிரம்மாண்டத்தை கண்டு களிக்கிற இடம் அது. வருடத்தில் சில நாட்களுக்கே கொண்டாட்டத்தை அளிக்கிற இடம் அது.  மற்ற நேரங்களில் மிக மிக சாதாரண இடம். முக்கியத்துவம் அற்ற இடம் தெரு.  விழாக்காலங்களில் எவ்வளவு வேற்றுமையை அது உண்டாக்குகிறதோ அதற்கு இணையாக நேர்மறையாக மனதின் உச்சநிலையான கொண்டாட்டத்தை அது வழங்குகிறது.
     அன்று பல்கலைக் கழகத்தில் இருந்து பீச் ரோட்டில் வீடு திரும்பி க் கொண்டிருந்தேன். சாலையில் வண்டியை திருப்பியதுமே சிறு குழந்தையை போன்றதொரு குதூகலம்.  பத்து குதிரைகள் இருக்கும். இரண்டு  இரண்டாக போலீஸ் காரர்கள் அவைகளின் மீது அமர்ந்து சென்றனர். நம் உயரத்திற்கும் விஞ்சிய உயரம் அவைகளுடையது. மினுமினுப்பான தோல் குதிரைகளின் தோல். சராசரி வாழ்க்கையில் நாம் காணாத குதிரைகள். விருப்பப்பட்டால் லாயத்தில் சென்று பார்க்கலாம். அவைகளை அங்கு பார்ப்பது கொண்டாட்டம்  அல்ல.  சலிப்பை ஏற்படுத்துகிற நம்முடைய தினசரியில் வெறும் மோட்டர் சைக்கிள்களும் கார்களும் செல்லும் பரபரப்பான மெரினா சாலையில் ஒய்யாரமாக குதிரைகள் அணிவகுத்து செல்வது விழாக் கோலம் என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது.
     குதிரைகளின் அருகில் செல்லும்போது  என்னுடைய வண்டியின் வேகத்தை சற்று குறைத்து அவைகளின் நடைக்கு ஈடுகொடுத்து ஒட்டும் போது ஏதோ  அதிசயத்தை அருகில் காண்பது போன்ற உணர்வு.  மிகை அல்ல. பள்ளிக் கூடம் செல்லும் போது வழியில் எறும்புகள் சாரைசாறையாக போவதை பார்க்கும் போது கால் மணிநேரத்தை வேடிக்கை பார்க்க செலவிடுவதில்லையா அது போன்றுதான் இதுவும். இவ்வுலகில் மிக பிரம்மாண்டமான யானையும் சரி, ஒய்யாரமான குதிரையும் சரி, மிகச் சிறிய சீர்மைக்கு உதாரணமான எறும்புகளும் சரி உற்று நோக்கி வேடிக்கை பார்ப்பதற்கானவைகள்.
     பத்து குதிரைகளை அணிவகுக்க செய்வதும் ஒன்றுதான், ஒரே ஒரு யானையை வீதி வலம் வர செய்வதும் ஒன்றுதான். பத்து குதிரைகளைக் காண்பது கொண்டாட்டம் என்றால், அதற்கு இணையாக ஒரே ஒரு யானையை வீதியில் வலம் வரக் காண்பதும் கொண்டாட்டம்தான்.  HARLEY DAVIDSON பைக் ஒன்று சாலையில் என்னை கடந்து போகச் சென்றால் துரத்தி சென்று அதன் எஞ்சின் வடிவமைப்பை பார்த்துக் கொண்டே செல்வேன். அது சுவாரசியம். யானையும் குதிரையும் ரோட்டில் செல்வதை பார்ப்பது கொண்டாட்டம்.
       

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...