Tuesday, May 14, 2019

செவ்வியல் கண்டடையும் வாசகன்


செவ்வியல் கண்டடையும் வாசகன்
            புத்தக வாசிப்பில் வாசகன் புத்தகத்தை தெரிந்தெடுக்கிறானா அல்லது புத்தகம் வாசகனை தெரிந்தெடுக்கிறதா என்றால் புத்தகமே வாசகனை தெரிந்தெடுக்கிறது என சொல்லலாம். இது பட்டிமன்ற தலைப்பு போன்று தோன்றலாம். வாசிப்பனுபவம் இதனை உறுதி செய்கிறது. வாசிப்பின் தொடர்ச்சியில் ஒரு புத்தகம் முடியும் போது அடுத்த புத்தகம் வாசிப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இது செவ்வியல் பிரதிகளின் விசயத்தில் அப்பட்ட உண்மை. ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது அடுத்த புத்தகத்தை வாசகன் தெரிவு செய்வதில்லை. அவனது வாசிப்புக்காக புத்தகம் நீண்ட நாட்கள் காத்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் புத்தகம் வாசகனை கண்டடைகிறது.
            அது second hand புத்தக கடையாக இருக்கலாம், brand new புத்தகங்களை விற்கும் ஒடிசியாக இருக்கலாம், அல்லது நண்பர்களின் பரிந்துரையின் பேரில் இரவலாக வாங்கும் புத்தகமாக இருக்கலாம். இந்த வித்தியாசமான பல்வேறு வழிகளில் ஒரு செவ்வியல் பிரதி வாசகனை வந்தடைகிறது. அந்த நேரத்தில் வாசகனுடைய மனதும் பிரதிக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. இது செவ்வியல் வாசகனை கண்டடையும் தருணம்.
            வம்படியாக எவ்வளவுதான் வாசகன் ஒரு பிரதியை வாசித்து முடிக்க முயன்றாலும் பிரதியின் ஒரு இம்மி கூட உள்ளே செல்லாது. கல்லூரி மாணவன் ஒருவன் மொத்தையான போரும் வாழ்வும் நாவலை படிக்க அவனது இளங்கலை நிலையில் விருப்பம் கொண்டிருந்தால் அது ஈடேற கூடிய காரியம் அன்று. பல முறை முயற்சி செய்தும் பலன் கிடைக்காது. அதுவே பல வருடங்கள் கழித்து நண்பர் ஒருவர் அதே நாவலை பரிந்துரைக்கும் போது நாவலின் வாசிப்பு மிக எளிமையாகி விடுகிறது. முயன்று சாத்தியப்படாத விசயம் எந்தவித முயற்சியும் இன்றி வாசிப்பின் வலியும் இன்றி இயல்பாக நாவலின் வாசிப்பு இனிமையாகிறது.
            நூற்றாண்டு தனிமையை படிக்காவிட்டால் நீயெல்லாம் ஒரு இலக்கிய மாணவனா? என்று எப்போழுதோ யாராலோ சீண்டப்பட்டிருப்போம். அவ்வளவு சிக்கலான நாவலா மார்க்வேசின் நாவல் என்று பிரமிப்படைந்து இனி இந்த புத்தகத்தை எப்போதும் வாழ்நாளில் வாசிக்கவே முடியாது என்ற பயம் அச்சுறுத்திக் கொண்டே இருந்திருக்கும். நூற்றாண்டு தனிமை நம் அலமாறியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். அந்த பிரதிக்கு மாத்திரம்தான் தெரியும் எப்போது வாசகன் தன்னை வாசிக்க வருவான் என்று. என்ன வாசிப்பது என்று குழம்பிக் கொண்டிருப்பான். அலமாறியில் ஒவ்வொன்றாக இதை வாசிக்கலாமா அல்லது அதை வாசிக்கலாமா என்று தெரிந்தெடுப்பின் முடிவின்மையில் உழன்று கொண்டிருப்பான். திடீர் என்று நூற்றாண்டு தனிமை கண்ணுக்கு பளிச்சென்று தெரியும். மூன்றே நாட்கள். புயேந்தியாக்களின் வாழ்வும் வீழ்ச்சியும், மக்காந்தோவின் சதுப்பு நிலமும் கண்முன் விரியும். இது வேறெப்பொதும் சாத்தியப்பட்டிருக்காது. அன்றைக்கு எதேட்சையாக புத்தகங்களை தேட வாசகன் செவ்வியலால் கண்டடையப்பட்டிருக்கிறான்.
            மழைக்காரணமாக கல்லூரி விடுமுறையில் நான்கு நாட்களுக்கு வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டில் தனித்திருக்கும் நேரத்தில் தாஸ்தாவஸ்கியின் The Idiot வாசகனை சந்திக்கலாம். அதுவரை வாசிப்பில் கண்களுக்கு புலப்படாமல் காட்சிக்கு வராத பீட்டஸ்பர்க்கின் பனியும், ரயில் வண்டியில் செல்லும் கதை மாந்தர்களின் உரையாடல் சத்தமும் பார்த்திருக்கவோ கேட்டிருக்கவோ மாட்டோம். அந்த நான்கு நாள் மழையில் பீட்டர்ஸ்பர்க் நகரில் மிஷ்கினோடு நாமும் வாழ்ந்திருப்போம்.
            பேராசிரியர் Le Misarables வாசிப்பதைக் கண்டு பொறாமையில் நாமும் ஒரு பிரதியை அமேசானில் ஆர்டர் செய்து வாங்கி படிக்க ஆரம்பித்து இருப்போம். இங்கு பொறாமை என்பது ஒரு தூண்டுதல். அந்த தூண்டுதல் கூட பேராசிரியரின் வாசிப்பு மீதான பொறாமை கிடையாது. செவ்வியல் ஏதோ ஒரு வகையில் அந்த பொறாமை என்னும் தூண்டுதலை பயன்படுத்தியிருக்கும். மற்றப்படி பேராசிரியர் வாசித்திருந்த Divine Comedy பொறாமையைத் தூண்டி புத்தகத்தின் மீதான ஆசையை ஏற்படுத்தியிருக்காது. ஒருவேளை classic என்ற அச்சம் வேண்டுமானால் ஏற்பட்டிருக்கும். Les Misarableக்கு மாத்திரம் ஏன் அந்த பொறாமை. காரணம் யூகோவின் செவ்வியல் வாசகனை கண்டடைந்த நேரம் அது.
            second hand புத்தக கடை எப்போதும் பாப்புலர் புத்தகங்களை அடுக்கடுக்காக வைத்து கடையை அழகுபடுத்திக் கொண்டிருக்கும். அதில் செவ்வியல் மாத்திரம் எப்போதும் கண்களை உறுத்தும். பார்த்த மாத்திரத்தில் புத்தகம் கையகப்படுத்தப்பட்டு விடும். தாஸ்தாவஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்  second hand புத்தகக் கடையில் பார்ப்பது மிக மிக அரிது. பார்த்திருக்கவே முடியாது என சொல்லலாம். நம் அலமாறியில், இந்த புத்தகத்தின் பல மொழிபெயர்ப்புகள் இருக்கலாம். second hand புத்தகக் கடையில் ஒருவேளை கரமசோவ் சகோதரர்கள் நாவல் காணக் கிடைத்தால் உடனே புத்தகம் காணாமல் போய் விடும். இதுவரையில் ஒரு second hand புத்தக கடையில் நல்ல நிலையில் ஒரு தாஸ்தாவஸ்கியின் புத்தகத்தைக் கூட சென்னை வந்த இத்தனை ஆண்டுகளில் பார்த்தது கிடையாது.
            அப்படியே கரமசோவ் சகோதரர்கள் நாவல் அதுவும் பென்குயின் பதிப்பகத்தாரின் பிரதி கிடைக்கப்பெற்றால் நாவல் வாசகனுடைய வாசிப்புக்காக கடையில் காத்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு மணி நேரம் தப்பினாலும் நாவல் காணாமல் போய்விடும். புத்தகத்தை எடுத்து பார்க்கும் போதே கடைக்காரருக்கு ஒரு நிச்சயம்: இவன் கண்டிப்பாக புத்தத்தை வாங்கிவிடுவான். புத்தகத்தின் மீது விலை குறிப்பிடப்பட்டிருந்தால் பேரம் பேசுவதற்கு இடமே கிடையாது. நுங்கம்பாக்கத்தில் லயோலா கல்லூரியைத் தாண்டி ரயில்வே பாலத்திற்கு அந்தப்பக்கம் சென்றால் அனைவரும் அறிந்த second hand புத்தகக் கடை ஒன்று உள்ளது. 10 ரூபாய் புத்தகங்கள் ஒரு மேஜையிலும், 50 ரூபாய் நாவல்கள் இன்னொரு மேஜையிலும், நூறு ரூபாய் நாவல்கள் கடைக்கு உள்ளேயும் இருக்கும். புத்தம் புதிதான புத்தகங்கள் விலைக் குறிப்பிடப்படாமல் இருக்கும். அவைகளின் விலை வாங்குவோரின் ஆர்வத்தை பொருத்து மாறுபடும். அலட்சியமாக பார்த்துவிட்டு புத்தகத்தின் விலையை கேட்டால் 150 என இருக்கும். அதிக பட்சம் 200ஆக இருக்கும். ஆர்வ மிகுதியில் புத்தக விலையை கேட்டால் ஐநூறுக்கு விலை ஏறும்.
            அன்று கல்லூரி வேலையாக நுங்கம்பாக்கம் வழியாக போகும் போது கடை திறந்த உடனேயே புத்தகங்களை பார்க்க சென்றோம். நல்ல புத்தகம் எதுவும் கிடைக்காது என்பது எப்போதும் நடக்கும் விதி. அன்று ஆச்சரியப்படும் விதமாக கரமசோவ் சகோதரர்கள் நாவலை எங்களைப் பார்த்தவுடன் கடைக்காரர் வெளியெ எடுத்து வைத்தார். என்னுடைய ஆர்வ மிகுதியை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. வழக்கம்போல் புத்தங்களை தேடுவது போன்ற பாவனையில் புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தேன். நோக்கம் எல்லாம் கரமசோவ் சகோதரர்கள் மீதே இருந்தது.
            கடைசியாக புத்தகத்தை எடுத்து விலையைப் பற்றி விசாரித்தேன். “சார், ஃபேமசான ஆர்த்தர் சார், இவரோட கிரைம் அன்ட் பனிஷ்மென்ட் ஃபேமசான நாவல். இவரோடதெல்லாம் ஐநூறு ரூபாய்க்கு போகும்.” என்று விலையை ஐநூறு ரூபாய்க்கு புத்தக விலையை நிர்ணயித்துவிட்டார். ஐநூறு ரூபாயில் இருந்து இரநூறு ரூபாய்க்கு விலையை குறைத்து பேரம் பேசுவது நம்முடைய சாமர்த்தியம். ”நூறு ரூபாய்க்கு கொடுங்க” என்று சொன்னால் ”வேலைய பாருங்க, எடத்த காலி பன்னுங்க” என்று பதில் காட்டமாக வரும்.
            ஆர்வத்தைக் காட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக, “சார் எங்கிட்ட இந்த நாவலோட நான்கு மொழிபெயர்ப்புகள் உள்ளன.” என்று புத்தகத்தை கீழே வைப்பது போன்று பாவனைக் காட்டி இந்தாங்க 200 ரூபாய் என்றேன். புத்தகத்தின் உள்ளேயும் பென்சிலில் 200 என்று விலை குறிப்பிடப்பட்டிருந்தது. பென்குயின் எடிஷன். உள்ளே மொழி பெயர்ப்பாளர் பெயர் டேவிட் மெக்டஃப் என்று இருந்தது. என்னிடம் இல்லாத மொழிபெயர்ப்பு இது. Les Misarable கூட அங்கு இருந்தது. Les Misarableயை மாத்திரம் அநாதையாக விட்டுவிட்டு வந்து விட்டேன். யூகோவின் ஏழைப்படும் பாடு நாவலுக்கு தற்போது என்னிடம் இருக்கும் ஒரு மொழிபெயர்ப்பு போதும். ஆனால் தாஸ்தாவஸ்க்கிக்கு எத்தனை மொழிபெயர்ப்புகள் இருக்கின்றனவோ அத்தனையும் வாங்க வேண்டும் என்ற ஆசை. அதுவும் குறிப்பாக கரமசோவ் சகோதரர்கள் நாவலுக்கு.
                    

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...