Wednesday, February 1, 2017

டான் குயிக்ஸாட்டும் வாசிப்பனுபவமும்: பகுத்தறிவின் கண்கள் திறக்கப்படும் தருணம்


சில புத்தகங்களை நாம் மாத்திரமே வாசிக்க வேண்டும் போல் இருக்கும். அவைகளை மற்றவர்கள் யாரேனும் வாசிக்க நேர்ந்தால் பொறாமைத் தீ அவர்கள் மீது பற்றி எரியும். சில புத்தகங்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் வாசித்து விட முடியாது. அப்படிப்பட்ட புத்தகக்களை வேறொருவர் வாசிக்க நேர்ந்தால் அவர்மீது தோழமை உணர்வு அதிகமாகிவிடும். இவைகளுக்கும் மீறி சில புத்தகங்கள் உள்ளன. அவைகள் தனிப்பட்ட வாசிப்பனுபவத்திற்கோ பெருமிதத்தின் வாசிப்பனுபத்திற்கோ ஆன புத்தகங்கள் அல்ல. வாசித்து முடித்தவுடன் அதனை இந்த உலகமே வாசிக்க வேண்டும் என்ற ஒரு புனிதமான எண்ணம் நமக்குள் உருவாகி விடும். அதனை வாசிக்கும் படி இந்த முழு உலகத்திற்கும் பரிந்துரை செய்வோம்.

முதற்கூறிய புத்தகங்கள் வரிசையில் பிரதானமாக தாஸ்தாவஸ்கியை நான் என் தனிப்பட்ட வாசிப்பனுபவத்தில் குறிப்பிடுவேன். யாரேனும் அவரை வாசித்து விட்டேன் என்று சொன்னால் அந்த நபரை மன்னிக்கவே மாட்டேன். தாஸ்தாவஸ்கியை வாசிக்க முடியவில்லை என்று சொல்லக் கேட்கும் போது ஒரு மேதமையின் உணர்வு நம்மில் ”நான் தானடா வாசிப்பு சக்ரவர்த்தி” என உளப்பூர்வமான பூரிப்பை நமக்குள் ஏற்படுத்தும். எனினும் அதனை வெளியில் சொல்ல மாட்டோம். அது நம்முடைய ஈகொவை அதிகம் வலுப்பெற செய்து நம்முடைய தனித்துவத்தைக் கட்டிக் காக்கும். டால்ஸ்டாயைப் பொருத்தவரை அவர் அனைவருக்குமானவர் எனினும் எளிதில் அனைவரும் அவரிடத்தில் நெருங்குவதில்லை. அப்படி நெருங்குபவர்களை மாத்திரமே நமக்கு இணையான தோழர்கள் என்று நட்பு பாராட்டுவோம். இதில் மகாத்மா காந்தி கூட நமக்கு இணையான நண்பர் ஆகி விடுவார். காரணம் அவர் ஒரு டால்ஸ்டாய் பிரியர். எனினும் ஒரு புத்தகத்தை ஊருக்கே பரிந்துரை செய்து அதற்காக எந்த கைங்கரியத்தையாகிலும் செய்துவிடலாம் என்று எண்ணுகிற புத்தகங்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்தவைகள் எனலாம். அப்படிப்பட்ட ஒரு புத்தகமாக நான் அனைவருக்கும் பரிந்துரை செய்வது செர்வாண்டஸின் டான் குயிக்ஸாட் நாலாகும்.
                இதனை பரிந்துரைப்பதற்கான காரணம் இது ஒரு நற்செய்தியின் புத்தகமாகும். நற்செய்தி என்றால் மறைபொருளை விளக்கிக் காட்டும் நற்செய்தி அல்ல. இந்த பௌதீக உலகத்தைக் விளக்கிக் காட்டும் secular gospel. நாம் நம்முடைய ஐம்புலன்களால் தொட்டு நுகர்ந்து சுவாசித்து அனுபவிக்கும் இந்த பிரபஞ்சத்தை அவ்வளவு எளிதில் புரிந்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறோம். பௌதிக உலகத்தை ஐம்புலன்கள் தான் உணர்ந்தறியும் ஆனால் நம் மனதால் அதனை புரிந்துக் கொள்ளவே முடியாது. நாம் எவ்வளவுக்கு அதிகம் அதனை விளங்கிக் கொள்ள முயல்கிறோமோ அந்த அளவிற்கு அதனை அதன் அறிவியல் தன்மையில் இருந்து கற்பனை நிலைக்கு மாற்றி விடுகிறோம். சொல்லப்போனால் இந்தப் புத்தகம் ஐம்புலன்களான உடலைப் பற்றிய புத்தகமும் தான். யார் இந்த உடலை அதன் முழுமையில் சரியாக புரிந்து கொண்டார்கள்? அதன் முயற்சித்தானே இன்றைக்கு வசை வசையாக பெருகி இருக்கிற கல்வி நிலையங்கள். செர்வாண்டஸ் இந்த பௌதிக உலகத்தை அதிகம் ஆராய்ந்தான். தத்துவத்தையோ, அறிவியலையோ, பூகோலவியலையோ, மருத்துவத்தையோ, அரசியலையோ படிக்க விரும்பும் எவருக்கும் இந்தப் புத்தகம் தான் மிக சிறந்த ஆரம்பமாக இருக்கும்.
                கற்பனைக் கதைகளால் நம்முடைய புத்தி மிகவும் பாழடைந்திருக்கிறது. இதற்கு தேவையானதெல்லாம் அதனைக் கலைந்தெறிய ஒரு மாற்றுக் கதை. புனைவுக் கதை கற்பனைக்கு எதிராக இந்த பௌதிக உலகத்தை கதையாக சொல்லும் ஒரு புனைவாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டதுதான் டான் குயிக்ஸாட். இரண்டு வால்யூம்களாக தமிழில் நமக்கு இந்த நாவல் கிடைக்கப்பெற்றிருக்கிறது. சிவ முருகேசன் அவர்களின் இந்த மொழிப்பெயர்ப்பு அவ்வளவு வாசிப்புக்கு இனிமையான மொழிபெயர்ப்பாக இருக்கிறது. சில நாட்களுக்கு இந்த நாவலை விட்டுப் பிரிய மனமே இல்லாதிருந்தது. குயிக்ஸாட் மற்றும் சான்கொ பான்ஸா ஆகியோரின் நகைச்சுவைகளுக்கு மீறி இந்த நாவல் பல அறிவார்ந்த விசயங்களைப் பேசி விட்டன. என்னை மிகவும் ஆச்சரியப் படுத்திய ஒரு இடம் இந்தக் கதை முழு பூலோகத்தையும் அதன் அச்ச ரேகை தீர்க்க ரேகையைக் கொண்டு அதன் தூரத்தை கணக்கிட்டுக் காட்டுவதுதான். விமானம் கண்டுபிடிக்காத நேரத்திலேயே பூமியின் மிக நீண்ட இரண்டு பகுதிகளான ஸ்பெயின் நாட்டில் இருந்து கண்டி வரைக்கும் இடைப்பட்ட தூரத்தை தரை வழியாகவும், வான் வழியாகவும் எவ்வளவு நாட்களில் கடக்கலாம் என்பதைக் கணக்கிடுகிறது.  

                முழு நாவலும் மறுமலர்ச்சிக் காலத்தில் கடல் பயணிகள் பூமியை சுற்றியது போன்று முழு பூமியையும் ஒரு சுற்று சுற்றி வருகிறது. இருப்பினும் கதையின் இரண்டு பாத்திரங்கள் உலகைச் சுற்றவில்லை. அவர்கள் உள்ளூர்க் காஸ்டீலியன் வட்டாரத்தை மாத்திரம் தான் சுற்றித்திரிந்தார்கள். அவர்கள் மேற்கொண்ட உள்ளூர் பயணம் ஏறக்குறைய ஒரு உலகப் பயணமாகவே மாறிவிட்டது. பகுத்தறிவுக் கண் திறக்கப்பட்டது போன்று இந்தப் புத்தகத்தை வாசித்தபோது உணர்ந்தேன்.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...