திருநீர்சாமி: உண்மையை உணர்த்தும் உரையாடல் களம் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Monday, January 30, 2017

திருநீர்சாமி: உண்மையை உணர்த்தும் உரையாடல் களம்


இமையத்தின் கதைகள் இதுவரை அவைகளின் கதைகளுக்காகவும், கதை மாந்தர்களுக்காகவும்  சிறப்பைப் பெற்றிருந்தன. செடல், கலியம்மாள் போன்றவர்களை வாழும் மனிதர்களாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. அதே போன்று பெத்தவன், எங்கதெ போன்றவை யதார்த்ததின் வாழ்க்கையாக நம்மால் அறியப்படுகின்றன. இவைகள் மாத்திரமே கதைகளின் சிறப்பம்சங்களா? கதை மாந்தர்கள் கதையின் வாழும் யதார்த்ததிற்கு மிக அருகில் இருப்பவர்கள்.  இம்மாத உயிர்மையில் வெளியாகி இருக்கும் ”திருநீர்சாமி” கதை இமையத்தின் கதைசொல்லலின் வேறொரு பரிமாணத்தைச் சுட்டிக் காட்டுகிறது. கதைக்கு என்று மூன்று பிரதானக் கூறுகள் இருக்கின்றன எனக் கொள்ளலாம். கதைப் பாத்திரம், கதைக் கரு, மற்றும் உரையாடல். இவைகளில் முதல் இரண்டை இலக்கிய விமர்சனத்தில் அதிகம் வைத்து விவாதித்து விட முடியும். மூன்றாவதை அவ்வளவு எளிதில் இலக்கிய விமர்சனம் என்ற அளவுகோளில் வைத்து விவாதிக்க முடியாது. அது முற்றிலும் தத்துவம் சார்ந்த ஒன்று. உரையாடல் என்று வரும்போது அது தத்துவத்திற்கான ஒரு களம் அல்லது கருவி. சொல்லப்போனால் உடையாடலைக் கொண்டே கதையாடலைக் கூட சாத்தியப்படுத்திவிட முடியும். இமையம் தன்னுடைய பெரும்பாலான கதைகளைக் கதையாடல், அதாவது Narration, மூலம் அல்லாது உரையாடல் மூலமாகவே சாதித்து விடுவார். நாடகங்களின் சிறப்பியல்பு முழு நாடகத்தின் கதையும் கதை மாந்தர்களும் உரையாடல் என்ற ஒரே களத்தில் மாத்திரமே இயங்குவது. அந்தச் சாத்தியம் இமையத்தின் கதைகளில் உண்டு. கதையாடல் இன்றி உரையாடலே போதுமானது என இமையத்தை வாசிக்கும்போது தோன்றுகிறது. எனவே கதைமாந்தர்களைக் காட்டிலும், கதையாடலைக் காட்டிலும் உரையாடலே முதன்மையானது போன்றும் தோன்றுகிறது.  
ஏற்கனவே சொன்னது போல உரையாடல் அதன் சிறப்பியல்பில் தத்துவத்திற்கான சாதனமாகும். திருநீர்சாமி ஒரு சித்தர் சாமி. சித்தர் மரபு எல்லா தத்துவ மரபுகளைக் காட்டிலும் மிக உயர்ந்த மரபு. ஏன் இந்தியத் தத்துவ மரபிற்கும் மிக உயர்ந்தது எனக் கொள்ளலாம். இது வெறுமனே யூகத்தின் நிலை மாத்திரமே. இதனை நிரூபிக்க உரையாடல் தேவைப்படுகிறது. உரையாடலும் தனித்து இயங்க முடியாது. எனவே கதையும் அவசியமாகிறது. எனினும் கதையைக் காட்டிலும் முன்நிறுத்தப்படுவது உரையாடலின் தத்துவம் மாத்திரமே. உரையாடலின் இறுதியில் நிரூபணமாவது சித்தர் மரபின் தத்துவ மேன்மை.
டெல்லியில் இருக்கும் தமிழன் அண்ணாமலை இந்திப் பெண் ஒருத்தியைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறான். கணவன் மனைவி இருவரும் அறிவியல் வல்லுநர்கள். அண்ணாமலைக்குக் குலதெய்வம் தமிழ்நாட்டில் அவன் ஊரில் இருக்கும் திருநீர்சாமி. தன் குழந்தைக்குத் திருநீர்சாமி கோயிலில் வைத்தே மொட்டை போட வேண்டும் என்பது அண்ணாமலையின் விருப்பம். அதனை நிறைவேற்றுவதற்காக மனைவியிடம் கூட கூறாமல் டிக்கட்டை முன்பதிவு செய்துவிடுகிறான். அதனை அவளிடம் தெரிவிக்கும்போது அவனுடன் அவன் சொந்த ஊருக்குச் செல்வதற்கு மறுத்துவிடுகிறாள். கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் ஆரம்பித்துவிடுகிறது. மனைவி அவனுடைய குலதெய்வத்தை ’மயிறு சாமி’ என்று திட்டிவிடுகிறாள். கோபத்தின் உச்சத்தில் அவளை அறைந்துவிட்டு தான் அதற்காக அவளை விவாகரத்து செய்யவும் தயார் என்று கூறுகிறான். அவளோ அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தன் அம்மாவை உடன் அழைத்துக்கொண்டு வந்து வாதிட ஆரம்பிக்கிறாள். மாமியார் சமாதனம் செய்ய, அவன் மனைவி இன்னும் அவன் குலதெய்வத்தை இழிவு படுத்த, இன்னுமொறு முறை அவன் அவளை அறைந்து விடுகிறான். கண் முன்னாலேயே தன் மகள் அடிபடுவதைத் தாங்காமல் தன் மகனை நியாயம் பேச அழைக்கிறாள். மைத்துனன் பாண்டே சமாதானம் பேச அண்ணாமலையுடன் பேச்சுக் கொடுக்கிறார். பேச்சு வாக்கில் அண்ணாமலை தன் குலதெய்வம் திருநீர்சாமியைப் பற்றி ஒவ்வொன்றாகப் பேச ஆரம்பிக்கிறான். திருநீர்சாமி என்பவர் ஒரு சித்தர் என்பதும் அவருக்கு என்று எந்தப் பெயரும் ஊரும் கிடையாது என்பதையும் கூறுகிறான். அவர்கள் தங்கள் உடலே பாரம் என்று வாழ்ந்த மகா சித்தர்கள் என்றும் கூறுகிறான். எவ்வளவு பெரிய கோயில் என்று கேட்க. அது ஒரு சிறு கோயில் என்று அண்ணாமலை கூற, அங்கு சித்தருக்கு என்று எந்த சீடர்களாவது ஸ்தாபனமாவது இருக்கிறதா என்று பாண்டே கேட்கிறார். சித்தருக்கு என்று யாரும் கிடையாது. தான் இறக்கப் போவதை அவர் முன் கூட்டியே அறிந்திருந்தவர். அதனால்தான் சாகப்போகும் முன்பு தன்னைப் புதைப்பதற்கு ஒரு குழி வெட்டும்படிச் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னபடியே அவரை அந்தக் குழியில் வைத்துப் புதைத்திருகின்றனர். சில நாட்கள் கழித்துப் பார்த்தபோது புதைத்த இடத்தில் ஒரு லிங்கம் இருப்பதைப் பார்க்கின்றனர். அதனையே திருநீர்சாமியாக வைத்துப் பூஜிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதையெல்லாம் கேட்கக் கேட்க பாண்டேவுக்கு ஆவல் அதிகமாகிறது. இந்தத் தலத்தை விவேகானந்தர், அன்னி பெசென்ட் அம்மையார் போன்றோர் வந்து தரிசித்த இடம் என்று கூறும்போது பாண்டேவின் ஆர்வம் இன்னும் அதிகமாகிறது.
இங்கு முழுக்கதையின் இயங்கியல் அதன் உரையாடலில் சித்தர் மரபின் தத்துவம் பெரிதுப்பட்டு நிற்கிறது. ஒருசாராரின் உண்மையை நிரூபிக்க தத்துவம் சார்ந்த உரையாடல் அவசியப்படுகிறது. முழு இந்திய அளவில் சித்தர்களின் மரபு அதன் போதனையை அதன்  ஒன்றுமின்மையைக் காட்டுவதாக இருக்கிறது. மரணத்தைக் கொண்டாடுவதாகவும் இருக்கிறது. இதற்கு எதிரிடையில் நிற்பது இந்துமதமும் அதன் போதனைகளும் புராணங்களும். சமயம் என்ற பெயரில் அதிகம் ஒருவரை ஈர்ப்பது இந்த இந்துமதத்தின் தலைவர்கள் மற்றும் ஒரு மாபெரும் ஸ்தாபனத்தன்மை. மாபெரும் கோயில்கள் மடாதிபதிகள் அவர்களைப் பின்பற்றும் சீடர்கள் என அது ஒரு மிகப் பெரிய நிறுவனமாக மக்களை ஈர்க்கிறது. தத்துவத்திற்குப் பதிலாக புராணங்கள் கதைகளாக கடவுளர்களைக் கொண்டாடுகின்றன. மொத்தத்தில் இந்துமதம் அதன் ‘Material’ போகத்தையும் இந்த நிலை வாழ்வையும் பெரிதுபடுத்திப் பேசுகிறது. நிலையாமையைப் பற்றியதானது சித்தர் மரபு. அதன் தார்ப்பரியத்தைத் தெளிவாக்குவது திருநீறு. ஒன்றுமின்மையின் நிலைமையை இது காட்டுகிறது. இதற்குள் எந்த மத அடையாளத்தையும் உட்புகுத்த முடியாது. எல்லாவற்றையும் துறந்த நிலையே சாம்பலின் நிலை. இதற்கு எதிரிடையாக இந்துமதத்தின் எல்லாக் குறியீடுகளும் தன்னை மற்ற எல்லா மதங்களில் இருந்தும் பிரித்து வைத்துக் கொள்கின்றன. சித்தர்களின் மரபும் திருநீறும் எல்லா மதங்களையும் ஒன்றிணைக்கிறது. கதையில் திருநீறு சாமி கோயிலில் திருநீரு வழுங்குபவர் ஒரு முஸ்லிமாக இருக்கிறார். தலைமுறைதலைமுறையாக முஸ்லீம்களே திருநீரு வழங்கும் தொண்டினை செய்துகொண்டு வருகின்றனர்.
முழுக்கதையில் வாழ்க்கையின் நிலையாமையையும் அது வலியுறுத்தும் குறியீடான திருநீறைப் பற்றியும் அண்ணாமலை இமையம் ஒரு கட்டுரையைக் கொண்டு பேசிவிட முடியாது. இதன் தத்துவார்த்த உண்மையை விளக்க அவருக்கும் உரையாடல் என்ற சாதனம் அவசியப்படுகிறது. இதில் முதல் வருகிற உரையாடல், அதாவது அண்ணாமலை தன் மனைவியுடனான உரையாடலில், இந்தத் தத்துவத்தை அவ்வளவு எளிதில் எடுத்துக் கூறிவிட முடியாது. உரையாடல் தன் மனைவியுடனும், மாமியாருடனும் தொடரத் தொடர முரணியக்கத்தில் நின்று விடுகிறது. முரண்பட்ட மாற்றுக் கருத்து மாத்திரமே அங்கிருந்து வருகிறது. கதையின் பின்பகுதிதான் தத்துவ உண்மைக்காக உரையாடலின் தேவை அதிகப்படுகிறது. செயல்பாட்டில் உரையாடல் அதன் வீரியத்தை முழுவதும் செய்து முடிக்கிறது. அதற்கு மாறாகக் கதையின் முதல் பகுதியில் தத்துவார்த்த உண்மைக்குப் பதிலாக உண்மையைப் பற்றிய யூகம் அண்ணாமலையையே திருநீர்சாமியைச் சந்தேகிக்க வைக்கிறது. உண்மை உரையாடலின் முரணியக்கத்தில் சிக்கித் தவிக்கிறது. சொல்ல வந்த யூகத்தின் அடிப்படையிலான உண்மை பொய்யாக்கவும் படலாம், அதனை நீர்த்துபோகவும் செய்யலாம். அந்த உண்மை யூகத்தின் நிலையில் அப்பழுக்கற்றதாகக் கூட இருக்கலாம். இருப்பினும் இறுதியில் உண்மை உணர்த்துவிக்கப்படுவது முரண்பாடற்ற உரையாடல் களத்தில் மாத்திரமே. அண்ணாமலை தன் மனைவியிடம் தன் உண்மையை உணர்த்துவிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். எனினும் உண்மை என்பது அங்கே அவர்கள் கண் முன்பாக இருக்கிறது. அது உணர்த்துவிக்கப்படாதவரை அது அண்ணாமலைக்கும் சரி அவன் மனைவிக்கும் சரி உணர்த்துவிக்கப்படாத ஒன்றே. பாண்டே விவாதத்திற்க்கான இடத்தை அண்ணாமலைக்கு அளிக்கிறார்; அல்லது இமையம் பாண்டேவை அமைதிப்படுத்தி கவனிக்கும் ஒருவராக மாற்றுகிறார். அந்தத் தருணத்தில் உண்மை தன் வீரியத்தை உணர்த்துவிக்க உரையாடல் மூலம் தத்துவார்த்த தர்க்கமாக மாறுகிறது. கவனித்தல் என்ற ஒன்று இல்லாதவரை உரையாடலுக்குச் சாத்தியமே இல்லை. கவனித்தல் சாத்தியப்படும் போது உரையாடலில் உண்மை ”உண்மை” எனவும் பொய் ”பொய்” எனவும் உணர்த்துவிக்கப்படுகிறது. இது போன்ற ஒரு தருணத்தை தாஸ்தாவஸ்கியின் கரமசோவ் சகோதர்கள் என்ற நாவலில் வரும் ஒரு பகுதியான ”Grand Inquisitor” என்ற பகுதியின் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். இடைக்காலத்தில் கிறிஸ்து திரும்பவும் இந்த பூமிக்கு வருகிறார். அவர் தெருவில் நடக்கும் போது குருடர்கள், பாவப்பட்டவர்கள் என அனைவரும் அவரைத் தொட்டு குணம் அடைகின்றனர். இதைப் பார்த்த மதகுரு வந்தவர் ஏதோ ஒரு கெட்ட ஆவியாக இருக்கலாம் என்று கிறிஸ்துவை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார். விசாரணையின் மறுநாள் அவரைத் தீயிட்டு எரிக்கலாம் என்று முடிவாகிறது. மத குரு அவரை விசாரணை நடத்த ஆரம்பிக்கிறார். விசாரணையில் ஒரு இடத்தில் கூட கிறிஸ்துவின் உரையாடல் வராது. பேசுவது முழுவதும் மதகுரு மாத்திரமே. வாசிக்கிற நமக்கு அவர் உண்மையாகக் கிறிஸ்து என்று தெரியும். எனினும் அது உணர்த்துவிக்கப் பட வேண்டியிருக்கிறது. Inquisition என்கிற நீதி விசாரணை மிகத் தீமையானது என்பதும் அதனை நடத்தும் மதகுருக்கள் ஆபத்தானவர்கள், பொய்யர்கள் எனவும் நமக்கு நன்கு தெரியும். எனினும் அது உணர்த்துவிக்க வேண்டியிருக்கிறது. இங்கே உண்மை மௌனத்தில் கவனித்தல் என்ற ஒரு நிலையை எடுத்துக் கொள்கிறது. பொய்மை அதற்கு எதிரிடையாக தன் உரையாடலை ஆரம்பிக்கிறது. இறுதியில் உரையாடல் என்ற சாதனம் கவனித்தல் என்ற ஒரு புள்ளியிடத்தில் தன்னுடைய பொய்மையை தோலுரித்துக் கொள்கிறது.
அதே போன்று சித்தர் மரபு என்ற உண்மை முழு மொத்த இந்து மதத்தின் புராணக்களுக்கு முன்னிலையில் தன் உண்மையை உரையாடல் என்ற சாதனத்தின் மூலம் நியாயப்படுத்திக் கொள்கிறது. இது முற்றிலும் உரையாடல் என்ற சாதனத்தின் மூலமாகவே சத்தியப்படுகிறது. இதனை இமையம் திருநீர்சாமி கதையின் முக்கியக் கூறான உரையாடலைத் திறம்பட பயன்படுத்துவதால் சாதித்துக் காட்டுகிறார். அதே நேரத்தில் கதையின் மற்ற கூறுகளான கதைக்கரு, கதை மாந்தர்கள் என்பனவற்றிற்கும் அவற்றிற்கான சமச்சீர் அளவு பிரயோகத்தையும் கொடுத்துவிடுகிறார். மற்றபடி கதை வடிவத்தில் உரையாடல் என்ற கதைக்கூறு மாத்திரமே கதையில் அதிகம் இருந்தால் வீங்கிப் பெரிதாகி விடும் வாய்ப்பு உண்டு. இமையம் இக்கதையில் மற்ற இரண்டு கூறுகளுக்கும் உரையாடலுக்கு இணையான சமநிலையை எற்படுத்தியிருக்கிறார். எனினும் இக்கதையின் முழுபலமும் உரையாடலில் மையம் கொண்டிருப்பதை வாசிப்பில் நம்மால் உணர முடிகிறது. கடைசியில் உண்மை உணர்த்துவிக்கப்படுவது உரையாடல் என்ற களத்தில் மாத்திரமே.

இவை எல்லாவற்றையும் கடந்து அண்ணாமலை தன் தரப்பு உண்மைக்காக போராடினாலும் அவனுடைய மனைவியின் பக்கம் இருக்கும் நியாயத்தையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. அண்ணாமலையின் உண்மை ஆண் என்ற அதிகாரத்தின் மையத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வாக்குவாதம் செய்வது போல் தோன்றுகிறது. இது ஒரு பெண் மீதான ஆணின் அதிகாரக் குரல் போன்றும் இருக்கிறது. அது அவன் மனைவியானாலும் சரி அவன் மாமியாராக இருந்தாலும் சரி அவனுடைய உரையாடல் ஆண் என்ற மையப்புள்ளியில் இருந்து செயல்படுவது போன்று தோன்றுகிறது. ஆகவேதான் அது அதிகாரத்தின் முரணியக்கத்தில் முடிகிறது. அதுவே பாண்டே என்று வந்தவுடன் நிலைமை முற்றிலும் வேறுவிதமாக மாறி விவாதம் உரையாலில் இயங்க ஆரம்பிக்கிறது. உரையாடலில் அண்ணாமலை தரப்பு உண்மையைப் பார்க்கும் அதே நேரத்தில் அவனுடைய ஆண் ஆதிக்கத்தின் அதிகாரத்தின் செயல்பாட்டையும், தன் மனைவியுடன் கலந்து பேசாமல் சுயமாய் முடிவெடுக்கும் உரிமையையும், வேண்டுமென்றால் தன் தேவைக்கு ஏற்ப விவாகரத்து செய்யத் துணியும் துணிச்சலும் கதையில் மறைமுகமாகக் கதையாடலில் காண்பிக்கப்படுகிறது. எனினும் முழுக் கதை பிரதானமாக உணர்த்துவிக்கும் உண்மை சித்தர் மரபைப் பற்றியதாகும். 
திருநீர்சாமி: உண்மையை உணர்த்தும் உரையாடல் களம் Reviewed by Arul Scott on 10:23 PM Rating: 5 இமையத்தின் கதைகள் இதுவரை அவைகளின் கதைகளுக்காகவும், கதை மாந்தர்களுக்காகவும்  சிறப்பைப் பெற்றிருந்தன. செடல், கலியம்மாள் போன்றவர்களை வாழும்...

No comments: