Monday, February 27, 2017

மோட்சப் பயணம்



கிரேக்க புராணத்தில் செத்தவர்களின் ஆன்மாக்கள் ஒரு படகின் மூலமாக அடுத்த உலகத்திற்கு செல்வார்கள். படுகுக்காரனிடம் காசு கொடுக்க வேண்டும். பொருள் இலார்க்கு எவ்வுலகமும் கிடையாது என்பது உண்மைபோலும். இந்த மானிடப்பிறவிகளுக்கு மாத்திரம் ஏன்தான் இந்த சாபமோ. அனைத்தையும் காசு கொடுத்துதான் அனுபவிக்க வேண்டும். காசே அனைத்தையும் தீர்மாணிக்கும் காரணி. இறந்த பின்பு கூட காசு அவசிப்படுகிறது. நதிக்கு அப்புறம் இருக்கும் உலகம் எப்படிப்பட்டது என்பது நமக்கும் தெரியவில்லை. அங்கும் காசின் அதிகாரம் தானோ என்னவோ? யார் கண்டது. யாராவது அங்கிருந்து வந்து நமக்கு அந்த உலகத்தைப் பற்றி அறிவித்தால் நன்றாக இருக்கும். முன் கூட்டியே அந்த உலகத்துக்கு உண்டான கரன்சியை சம்பாதித்து வைத்துக் கொள்ளலாம். இந்த மானிடப் பிறவிகளுக்கு எதுவும் இலவசம் கிடையாது. கடைசிக் காசுவரைக்கும் குறைவின்றி செலுத்தித் தீர வேண்டும். காசு கிடக்கிறது காசு. அதற்கு எந்தப் பஞ்சமும் கிடையாது. அதனை அடைவதற்கு பலவழிகள், பல தந்திரங்கள் உள்ளன. என்னுடைய கவலையெல்லாம் நன்னெறி போதனைகள் கூட பணம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறதே தவிற பணம் என்ற மையத்தை உடைக்கவில்லையே என்பதுதான்.
இருப்பினும் பணமே முதலும் முடிவும் என்று நம்மால் தீர்மாணமாக சொல்ல முடியாது. அந்தப் படகுக்காரன் இருக்கிறானே. அவன்தான் கிரேக்க புராணத்தில் வருபவன். அவனுக்கு காசு என்பது அனுமதி சீட்டு மாத்திரமே. காசைக் கொடுத்தால் படகில் அமர வைத்துக் கொண்டு அடுத்தக்கரைக்கு கொண்டு போய் விட்டுவிடுவான். வாயயைத் திறக்கவேமாட்டான். அவனைப் பற்றி சொல்லப்போனால் அச்சு அசல் நம்முடைய சென்னை மாநகரப் பேருந்து கண்டக்ட்டர்களைப் போன்றவன். சில்லரை அவசியம். பேருந்தின் பின்புறக் கதவுக்கு பக்கத்தில் இருக்கிறதே அந்த ஒற்றை இருக்கை அதற்கு நிகர் இந்த மாகாணத்தில் இருக்கும் அனைத்து அதிகாரங்களின் இருக்கைக்கு முன்னால்  கால் தூசு. நாம் எந்த சிம்மாசனத்திற்கு பயப்படுகிறோமோ இல்லையோ அந்த ஒரு இருக்கைக்கு மாத்திரம் தக்க மரியாதையை செலுத்தியே ஆக வேண்டும். மரியாதை ஒன்றும் பெரிதாக சாஸ்டாங்கமாக கீழே விழ வேண்டும் என்பது கிடையாது. நாம் செய்ய வேண்டிய ஒரே மரியாதை சரியான சில்லறையை தட்சணையாக்க வேண்டும். குறையவும் கூடாது, கூடவும் கூடாது. மீறினால் அதிகாரம் தன் வேலையைக் காட்டிவிடும்.
“நான் யார் தெரியுமா? அவனாக்கும் இவனாக்கும்”
”நீ யாரா இருந்தா எனக்கென்ன. சில்லரையக் கொடுய்யா”
வேறு வழியே இல்லை. இந்த சாபத்தின் உலகத்தில் இருந்து தப்பிக்க சரியான சில்லரையை எந்தத் டீக்கடையிலாவது முன்கூட்டியே மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அதிகாரத் திமிர்.
 நம்மை மதிக்காததால் அவர் ஒன்றும் அதிகம் திமிர் பிடித்தவர் ஒன்றும் கிடையாது. நம்மைப் போன்ற மிகச் சாதாரண மனிதர்தான். இல்லை என்றால் ஏன் அவர் அந்த படகுத் தொழிலை செய்துக் கொண்டிருக்கிறார். சொர்கத்திற்கு அப்படியே போக வேண்டியதுதானே. அவ்வளவுச் சில்லரைகளையும் தனக்காகவா வைத்துக் கொள்ளப் போகிறார். எல்லாம் சொர்கத்தின் கஜானாவுக்குத்தான் போய் சேரும். படகுக்காரன் வசூலிக்கும் பணத்தையெல்லாம் எங்கே கொண்டு போய் சேர்க்கிறான் என்று தெரியவில்லை. நிச்சயமாக அது அவனுக்கனதாக இருக்க முடியாது. அந்த கஜானாவை பராமரிக்கும் உயர் அதிகாரி யார் என்று தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கும் நலமாக இருக்கும். அவருக்கு இந்த வசூலோடு வேறொரு வருமானத்திற்கான வழியையும் காட்டிவிடலாம். எல்லாம் இந்த நரண்களின் நாட்டில் நடைபெறும் வசூல் வேட்டையைத்தான் சொல்கிறேன். படகு வருமானத்திற்கு இணையாக சாராய வருமானமும் மிக லாபம் தரும் வருமானம் என்ற சூட்சமத்தை சொல்லித் தந்துவிட்டால் போதும். அந்த மோட்சத்தின் நகரத்தில் வருமானமும் அதிகமாகிவிடும். அமிழ்தத்தோடு கல்லச்சாராயத்தையும், டாஸ்மாக் சரக்கையும் கொஞ்சம் மிக்ஸ் செய்து அதிக விலைக்கு விற்றுவிடலாம். விளைவாக நரண்களாகிய நமக்கு மிகப் பெரிய விடுதலைக் கிட்டி விடும். அந்த மறு உலகத்தை முழுவதும் Economic System கீழ் கொண்டுவந்துவிட வேண்டும். மேலும் demonetisation செய்து அலைக்கழிக்க விட வேண்டும்.  இப்படி செய்வதினால் நம்முடைய பூமி செழிப்படைந்துவிடும். பணம் இல்லாதக் காரணத்தினால் தானே அற்பப்பதர்களாகிய நாம் அந்த மறு உலகத்திற்காக இங்கு ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் இங்கேயே சுபிட்சமாக வாழ்வோமாக.  
    சரி நம்முடைய கண்டக்ட்டர்களின் கதைக்கு வருவோம். நாம் சொன்னது போன்று அனைவரும் ஒரே மாதிரியான குணம் படைத்தவர்கள் கிடையாது. இந்த சென்னை பெருநரகத்தில்……. பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது பின்னால் இருக்கும் ’ர’ கரத்தை ஒரு எழுத்துக்கு பின்னுக்குத் தள்ளினால் இரண்டும் ஒன்று தான். அதன் இயந்திர நிலைக்கு நாமும் பழக்கப்பட வேண்டும். கடவுளே அந்த கந்த சாமி பிள்ளையுடன் இந்த நகரத்தில் பட்டப் பாடு இருக்கிறதே! அது அந்தப் புதுமைப்பித்தனுக்குத்தான் வெளிச்சம். தன் இருப்பில் எந்த உணர்வும் அற்று தன் இயல்பில் இயங்கும் ஒரு இயந்திரம். ஆயில் விடாததால் சற்று மக்கர் செய்யும். உராய்வு சத்தம் காதைப் பிய்க்கும். எல்லாம் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் பழகிப்போய் விடும். பின்பு இந்த நகரத்தை விட்டு பிரியவே மனம் வராது. சொர்கமாக மாறிவிடும். இந்த இயந்திர பெருநகரத்தில் கண்டக்ட்டர்கள் மாத்திரம் மிகவும் மாறுபட்டவர்கள். அவர்கள் நகரத்திற்கு விதிவிலக்கு. பொது மக்களுக்கு கண்டக்ட்டர்கள் என்றாலே ஒரு வெறுப்புதான். அதுவும் அந்த சில்லறையால் ஏற்படும் வெறுப்பு. சில்லறை தராவிட்டால் தரக்குறைவாக பேசுவார்கள் என்பது நம்முடைய ஐதீகம். ஒருமுறை ஏதோ பிரச்சனை ஆகி விட்டது. அதுவும் சில்லரை விசயத்தில்தான். கண்டக்ட்டர் சரியான சில்லறையைத் தரவில்லை. ஒரு IT கம்பெனி வாலிபருக்கு வந்ததுபார் கோபம். கண்டக்ட்டரின் சட்டையைப் பிடித்துவிட்டார். அடிக்க கையையும் ஓங்கி விட்டார்.
மூலையில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கு பெரும் நிம்மதி. அட, அநியாயத்தைத் தட்டிக் கேட்க வந்துட்டானய்யா ஒரு வீரன் என்ற பரமதிருப்தி. சம்பவம் முடிந்த பிறகு பயணிகளிடம் கண்டக்ட்டர் அழுது முறையிட ஆரம்பித்துவிட்டார். வயதானவர். தாடி நரைத்தவர். என்னவோ நானே அவரது சட்டையைப் பிடித்தது போன்ற அவமானம் எனக்கு. திருப்தி கொண்டவனல்லவா. அப்படித்தான் இருக்கும்.
அந்த இரக்கத்தின் மன நிலையில் வேறொரு பேருந்தில் ஒரு போதும் பயணம் செய்யக் கூடாது என்று கராராக முடிவெடுத்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பதாக ஒரு பேருந்தில் பயணித்த போதுதான்  அந்த சங்கற்பம். பயணம் நுங்கம்பாக்கத்தில் இருந்து திருவல்லிக்கேணி வரை. தற்போதைக்கான என்னுடைய மோட்ச வீடு மேன்ஷன் அறைதான். மோட்சம் என்பதனால் அது சொர்க்கம் என்றாகிவிடாது. மூட்டை பூச்சிகளின் அடாவடித்தனத்திற்கு அந்த கண்டக்ட்டர்கள் எவ்வளவோ மேல். அது இப்போதைக்கான ஒரு அடைக்கலம் மாத்திரமே. நான்கு மணிக்குள் அந்த ஒரு சிறு அறையை ரஸ்கோல் நிக்கோவைப் போன்று (மன்னிக்கவும், போகிற போக்கில் இது போன்று மேலை நாட்டு பெயர்களை உதிர்த்து விட்டு சென்றால் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் ஒரு மரியாதை) சென்றடைந்துவிட வேண்டும். பேருந்தில் ஏறியவுடன் நிம்மதியாக இருந்தது. கூட்டம் அதிகம் இல்லாத பேருந்து. எந்த இருக்கை தோதாக இருக்கும் என்று தீர்மானிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. டீலக்ஸ் பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நம்மை தண்டிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவைகள்.  இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டு ஒரு இடம் பிடித்தாயிற்று. கண்டக்ட்டர் அரும்பு மீசை வாலிபன். இவ்வளவு இளைய வயதில் அரசாங்க உத்தியோகமா. வியப்பாக இருந்தது. எனினும் அவன் தன் உயர் அதிகாரிகளுடன் மாட்டிக் கொண்டு படப்போகும் அல்லது பட்டுக்கொண்டிருக்கும் அவஸ்தை இந்த வயதுக்கு மிக அதிகம்தான் போலும் என்று தோன்றியது.
“திருவல்லிக்கேணி” என்றேன்
“ஒன்னா ரெண்டா?”
என்ன ஒரு அலட்சியம். இந்த நேரத்தில் ஒரு IT வீரன் சட்டையைப் பிடிக்க ஒருவனும் இல்லையே என்ற ஆதங்கம். ஏன் நீ சட்டையப் பிடிக்கக் கூடாதா என்றெல்லாம் திருப்பிக் கேட்கக் கூடாது. அடிவாங்கிக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். தட்டிக் கேட்க ஹீரோ ஒருவன் வருவான். எதிர்ப்பார்த்தது போன்று நான்கு வாலிபர்கள் இருந்தார்கள். சட்டையப் பிடிக்க வில்லை. மாறாக ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார்கள். அது ஒன்றே போதும். கண்டக்ட்டர் பையன் காண்டாகிவிட்டான். அது ஒரு ஆத்மார்த்தமான நிம்மதியைக் கொடுத்தது. பேருந்து மௌன்ட் ரோட்டை நெருங்கியது. “டமார் என்று ஒரு சத்தம்” நம்முடைய பேருந்து முன்னால் சென்று கொண்டிருக்கும் காரின் பின் பகுதியைப் பதம் பார்த்துவிட்டது. கண்ணாடிச் சிதறல்கள் மாத்திரம்தான். பெரிதாக விபத்து ஒன்றும் கிடையாது.
இனி எப்படி அந்தப் பேருந்தில் பயணிப்பது. அவ்வளவுதான். வேறு வண்டியைப் பிடிக்க வேண்டியதாயிற்று. எப்படியோ ஒருவழியாக என் அறையைச் சென்றடைந்தேன். என்னுடைய இன்றைய மோட்சப் பயணம் இவ்வளவு இன்னல்களுக்குள்ளாகும் என்று நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. ஒரு வேலை இரயில் பயணத்தையே தொடர்ந்திருக்கலாமோ என்று விட்டத்தைப் பார்த்துக் கொண்டுந்தேன். மறு நாள் காலையில் ரயிலை மறித்துப் பயணிகள் போராட்டம் நடத்தினர் என்று தினசரியில் செய்தி வந்திருந்தது.  



    

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...