பாப்லோ பிக்காசோ: விளங்கிக் கொள்ள முடியாத கலைஞன் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Wednesday, February 1, 2017

பாப்லோ பிக்காசோ: விளங்கிக் கொள்ள முடியாத கலைஞன்


ஒவியங்களைப் புரிந்து கொள்வதற்கு அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அவசியப்படுகிறார்கள். நாம் சில ஓவியங்களை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டே இருப்போம். ஒன்றும் விளங்காது. ஒருவர் அதன் அழகியல் தன்மையை விவரிக்கும் போது இதை ஏன் நாம் இது வரை பார்க்கத்தவறிவிட்டோம் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவோம். ஓவியத்துக்கும் நமக்கும் இடையில் இருக்கும் அந்த நபர் நம் பார்வையை முற்றிலும் நம்முடையது அல்லாத ஒரு பார்வையாக மாற்றியமைக்கிறார். முன்பு இருந்த பார்வை அவர் காட்டும் அந்தத் தருணத்தில் இருப்பதில்லை. முன்பு பார்த்த பார்வையில் வெறுமனே காட்சி மாத்திரம் தான் இருக்கிறது அதில் அந்த ஓவியம் காட்டும் தரிசனம் முற்றிலுமாகக் காணாமல் போகிறது.
இந்த டான் குயிக்ஸாட் ஓவியத்தை வரைந்தவர் யார் என்று கேட்டதும் வியப்பு மேலிட்டது. இது பிக்காசோவின் ஓவியம். பிக்காசோ குயிக்ஸாட்டுக்கும் ஓவியம் வரைந்திருக்கிறார் என்பதுதான் அதிக வியப்பை தந்தது. இதனை முதலில் அறிமுகப் படுத்தியது நண்பர் வாசு. அப்போது எனக்கிருந்த ஒரே கிளர்ச்சி டான் குயிக்ஸாட்டின் மீதிருந்த அபிமானமும், பிக்காசோ என்ற மாபெரும் கலைஞனின் ஓவியம் என்றளவில் மாத்திரமே. அதற்கு மீறி எந்த ஒரு ஈர்ப்பும் அதன் அழகியல் மீது எனக்கு பெரிதாக இருந்திருக்கவில்லை.
ஆர்வத்தின் மிகுதியில் வேறொரு நண்பரிடம் இதைக் காட்டினேன். ஓவியத்தின் கிறுக்கலைப் பார்த்து “இது என்ன பெரிய பிரம்மாதம். நான் கூடத்தான் இது போல வரைவேன்” என்று என்று சட்டென்று நிறுத்தி விட்டார். திரும்பவும் ஓவியத்தை பார்த்தபோது அப்படித்தான் எனக்கும் தோன்றியது. எனினும் வரைந்தது பிக்காசோ, வரையப்பட்டது உலகத்தின் முதல் நாவல் டான் குயிக்ஸாடிற்கு. அதற்கும் பதில் சொல்லி ஆக வேண்டும். பொத்தாம் பொதுவாக இரண்டு கலைஞர்களையும் இழிவு படுத்தி விட முடியாது. ஓவியம் என்னவோ சிறு பிள்ளைகளின் கிறுக்கல் மாதிரி தான் இருக்கிறது. அதே நேரத்தில் கிறுக்கியது பிக்காசோ.
ஒரு ஓவியரை தான் கடைசியில் சந்தித்தாக வேண்டி இருந்தது. என்னுடைய ரூம்மெட் மிகச் சிறந்த ஓவியர். அவரை யாரேனும் பெயின்ட்டர் ராஜன் என்று சொன்னால் கோபித்துக் கொள்வார். ”நான் ஆர்ட்டிஸ்ட். பெயிண்டர் இல்ல” என்று சண்டைக்கு வந்துவிடுவார். அவரிடமே இதைப் பற்றி தெளிந்துக் கொள்ளலாம் என்று ஓவியத்தைக் காண்பித்தேன்.
அவருடனான அந்த உரையாடல் பாரிஸ் நகரத்தில் இருந்து ஒரு மிகச்சிறந்த ஓவியர் ஒருவர் வந்தாலும் அவ்வளவு அறிவுப் பூர்வமாக ஓவியத்தின் தன்மையைப் பற்றி யாராலும் விளக்கிக் காட்டியிருக்க முடியாது. ஓவியத்தை முதல் கட்டமாக பிக்காசோவுக்காக பாராட்டலாம். ஒரு மாபெரும் கலைஞன் மேதாவித்தனத்தில் ஒரு கிறுக்கலைக் கிறுக்கிவிடுவது அந்த மேதாவித்தனத்திற்கான பெருமை என முதலில் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் அவன் ஓவியம் என்றால் என்ன என்ற பொது புத்தியின் புரிதலை முதலில் உடைத்தவன் என்பதை நாம் இங்கு பார்க்க வேண்டி இருக்கிறது. ஓவியம் என்பது இதுதான் இப்படிப்பட்டதுதான் என்று நாம் ஒரு வரையறையை உண்டாக்கி வைத்து விட்டோம். ஓவியம் என்றால் நாம் வரையறுத்த அல்லது வரையறுக்கப்பட்ட அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
அதை முதலில் பிக்காசோ உடைக்கிறான். நாம் எது அழகியல் அல்ல என்று கருதிக் கொண்டு இருக்கிறோமோ அதையே அவன் எடுத்துக் கொண்டு ஓவியமாக சாதித்துக் காட்டுகிறான். கிறுக்கல் என்பது குழந்தைகளுக்கானது. அதனை நாம் முதிராத நிலை என்று அலட்சியம் செய்கிறோம். முதிர்ந்த நிலையின் சித்திரம் பூரணத்துவம் என்றும் அதுதான் கலை என்றும் நாம் கணக்கில் கொண்டால் ஏன் முதிராத நிலையில் உள்ள குழந்தையின் கிறுக்கல்கள் கலையாக இருக்கக் கூடாது? இங்கு ஓவியத்தின் கலை என்பதன் வரையறை முற்றிலும் மாறுபடுகிறது. ஒரு பூரணத்துவம் கொண்ட ஓவியம் சிறப்பானதாக நம்மை அதிகம் பாதிக்கலாம். எனினும் அந்த ஓவியத்தின் பூரணத்துவம் கலையாக இருக்க முடியாது. பூரணத்துவத்திற்கு மீறி கலைஞனின் கைவண்ணம் ஏதோ ஒரு இடத்தில் அதன் அழகியலைத் தாங்கி நிற்கிறது. இங்கு இருப்பது குழந்தையின் கிறுக்கல்தான். அதை குழந்தைக் கிறுக்கினாலும் சரி ஒரு ஓவியன் கிறுக்கினாலும் சரி அது ஒரு போதும் அழகியலைத் தாங்கி நிற்க முடியாது. அதற்கு பிக்காசோ தேவைப்படுகிறார். குழந்தைக் கிறுக்கல் ஓவியமானது பிக்காசோவின் கைவண்ணத்தால் மாத்திரமே.

இதைக் கேட்ட பின்பு நான் திரும்பவும் டான் குயிக்ஸாட் ஓவியத்தை பார்த்தேன். எதோ ஒன்று அதன் அழகியலாக அந்த குழந்தைக் கிறுக்கலில் இருந்ததை என்னால் உணர முடிந்தது. அது என்னவென்று தான் என்னால் இன்னும் சொல்ல முடியவில்லை. அப்படி சொல்லிவிட முடியுமானால் அதற்குப்பின்பு அந்த ஓவியத்திற்கு மதிப்பே இருக்காது. அந்த விளங்கிக் கொள்ள முடியாத நிலைதான் இந்த குயிக்ஸாட் ஓவியத்தை இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கும் உயிர்ப்புடன் வைத்திருக்க போகிறது. 
பாப்லோ பிக்காசோ: விளங்கிக் கொள்ள முடியாத கலைஞன் Reviewed by Arul Scott on 11:18 PM Rating: 5 ஒவியங்களைப் புரிந்து கொள்வதற்கு அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அவசியப்படுகிறார்கள். நாம் சில ஓவியங்களை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்...

No comments: