Tuesday, May 18, 2021

ஐய்யோ சென்றடைய கூடு இல்லையே

 




எழுத்தாளர்களின் ஆளுமையை அவர்களின் எழுத்து வழி மட்டுமே அறிந்து கொண்டால் போதும் என்று இருக்கும். நேரில் சென்று சந்தித்தால் அவர்களின் சிறுமை வெளிப்பட்டுவிடும். எழுத்தில் கண்டு வியந்த அந்த ஆளுமை அங்கு இருக்காது. மீறி போய் சந்தித்தால் அதுவரையில் அவர்கள் மீது கொண்டிருந்த பெரும் மதிப்பு கரைந்துவிடும். எழுத்தாளன் புத்தகத்தோடு மட்டுமே இருக்க வேண்டிய தனிப் பிறவி. மீறி நம்மை அவரோ அவரை நாமோ சென்று சந்திக்க வேண்டியதில்லை. எலும்புக் கூட்டின் மீது தசைகளையும் தோலையும் சேர்த்து கட்டி உருவாக்க பட்ட அந்த சாதாரண மனிதன் நமக்கு தேவை இல்லை. எழுத்தில் வெளிப்படும் ஆளுமை வேறு யதார்த்தத்தில் வாழும் எழுத்தாளன் என பெயர் கொண்ட அம்மனிதன் வேறு. அது Shakespeareகவே இருந்தாலும் சரி.

இது பெரும்பான்மையின் நிலை. அது அப்படித்தான் இருக்கும். எனினும் விரல் விட்டு எண்ணும்படியான எழுத்தாளர்கள் தமிழ் நவீன இலக்கியத்தில் விதிவிலக்கானவர்கள். எழுத்தில் காணும் அதே ஆளுமையை அவர்களது வீட்டிலும் காண முடியும்.  எந்த வேலையில் சென்றாலும் தேனீரோ மதிய உணவோ சொந்தக் காரர்களுக்கு இருப்பது போன்று தயாராக இருக்கும். வரவேற்று உபசரித்து அனுப்புவார்கள். கரிசல் காட்டு முது கிழவர் கி.ரா அப்படிப்பட்டவர் என்று கேள்விப்பட்டதுண்டு. ஒரு நூற்றாண்டின் கதையை சொல்லும் கரிசல் நிலத்தின் கதை சொல்லி; யதார்த்தத்தில் ஒருவர் புத்தகத்தில் வேறு ஒருவர் என்று கிடையாது.

கி ராவை கதைகளில் கண்டு வியந்திருந்தாலும் கரிசல் எழுத்தின் முன்னத்தி ஏராக விளங்கிய பெரியவராக எழுத்தாளர் சொ. தர்மன் மூலம் மட்டுமே தெரியும். ”கரிசல் இலக்கியம் என்று உருவாகி இத்தனை பேர் எழுத்தாளர்கள் என்று இருக்கிறோம் என்றால் அதற்கு எங்க நைனா தான் காரணம்” என்பார் தர்மன். இதுவரை நேரில் அவரை சென்று பார்த்ததில்லை. காரணம் அவர் வாழ்ந்த ஒரு நூற்றாண்டின் இறுதி முனையில் இருந்து வேறொரு நூற்றாண்டை நோக்கி நகரும் புதிய தலைமுறை நாம். அவருக்கும் நமக்குமான இடைவெளி காலத்தால் நீண்டது. அவரை நம்மோடு இணைக்கும் ஒரே சரடு நம்மோடு இன்று ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் வாழும் எழுத்தாளர்கள் மாத்திரமே. இருப்பினும் கி. ராவைப் போன்றும் சுராவைப் போன்றும் இன்று நம்மை அவர்களது கூட்டுக்குள் வைத்து வளர்த்தெடுக்க ஆளில்லையே என்றிருக்கிறது. ஐய்யோ சென்றடைய கூடு இல்லையே.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...