Friday, May 28, 2021

கடல்புரத்தில்: தீரா தாகத்தை தணிக்க முயலும் வாழ்க்கை என்னும் கடல் நீர்


நாவல் ஒன்றின் சிறப்பம்சம் என்பது தனக்கென அது கொண்டிருக்கும் வலுவான கதை சொல்லியின் குரல் என்று சொல்லலாம். எந்த அளவிற்கு கதை சொல்லியின் குரல் கதையோட்டத்தில் வளமாக தொனிக்கிறதோ அந்த அளவிற்கு கதையின் இசை நாதம் ரசிக்க கூடியதாக இருக்கும். எழுத்தில் மற்ற எந்த கலை வடிவத்திற்கும் இல்லாத சிறப்பம்சம் நாவலில் இந்த கதை சொல்லியின் குரல் என்று சொல்லலாம். இந்த கதை சொல்லியை ஆண் என்றோ பெண் என்றோ, எழுத்தாளன் என்றோ வகை பிரித்து அடையாளம் கண்டு பெயர் வைக்க முடியாது. இசையில் நாதத்திற்கு ஆண் பால், பெண் பால் என்று திணை பாகுபாடுகள் கிடையாது. கேட்கும் போது அது தரும் மொழி வகைப்படுத்த முடியாத உயிருக்கு மிக நெருக்கமான ஒன்று. வாசிப்பில் நாவல் வடிவம் என்பது வாசகனுக்கு அது இசைக்கப்படும் இசையின் குரல். அது தனித்த குரல். வேண்டுமென்றால் வசதிக்காக அதற்கு ஆண் எழுத்தாளர் என்றோ, பெண் எழுத்தாளர் என்றோ பெயர் வைத்துக் கொள்ளலாம். வண்ணநிலவனின் கடல்புரத்தில் கிளாசிக் நாவலை வாசிக்கும் போது இசை குறித்த இந்த பிரக்ஞை ஏற்படுகிறது. அல்லது கதை சொல்லியின் வளமான ’குரலின்’ தொனியை கண்டு “இது என்ன வகையான கதை சொல்லல்? யாருடைய குரல் இது? எப்படிப்பட்ட கதை சொல்லி இவர்? முன் மதிப்பீடுகள் எதையும் உருவாக்காமல் ஒரு கடலோர கிராமத்தின் வாழ்க்கையை அழகியல் ததும்ப கவிப்பூர்வமாக எவ்வாறு இங்கு கதையாக சொல்ல முடிகிறது?” என்று விடை காணா பல கேள்விகளை இந்நாவல் எழுப்புகிறது. இவைகளுக்கு எல்லாம் ஒரே பதிலாக வண்ணநிலவன் என்ற எழுத்தாளர்தான் அவைகள் அனைத்தும் என்ற ஒற்றை பதிலைக் கொண்டு விசாரத்தை முடித்துக் கொள்ள முடியாது. விடை காணா இந்த அருவமான கேள்விகளுக்கு ஒரே ஒரு பதிலாக இதனை இசையோடு பொருத்திப் பார்க்கும் போது நாவல் பற்றின ரசனையின் பாராட்டுதலாகவும் அது இருக்கும்.   

முன்பு சொன்னது போல கதை வாசிப்பில் வாசகனை யதார்த்த வாழ்க்கைக்குள் அதன் அழகியலில் நடத்தி செல்வது நாம் ஆசிரியன் என்று நினைத்து கொண்டிருக்கும் கதை சொல்லி. நாவலின் கதையோட்டத்தில் நம்மை அறியாமல் நாம் பின்பற்றி செல்லும் அந்த குரல் ஒரு வேளை நம்முடைய குரலாகவே கூட இருக்கலாம். நம்முடைய சிந்தனையின் எண்ண ஓட்டம் கச்சிதமாக அந்த கதை சொல்லலில் சென்று இரண்டறக் கலந்து விடுகிறது. வாசித்து முடிக்கிற வரையில் அது வாசிப்பில் நம்முடைய சிந்தனையின் எண்ண ஓட்டமாக மறிவிடுகிறது. அது உண்டாக்கும் மதிப்பீட்டின் படியே நாவலில் உள்ள வாழ்க்கைக்குள்ளும், சித்தரிக்கப்படும் யதார்த்த மனிதர்களுக்குள்ளும் பயணம் செய்கிறோம் மதிப்பிடுகிறோம். இன்னொரு கவனிக்க வேண்டிய விசயம் ஒன்று இருக்கிறது. இந்த கதை ஒட்டத்தில் உள்ள வாசகன் நிஜ உலகத்தில் இருக்கும் மனிதனே அல்ல அவன். கதைக்குள் இருக்கும் வரையில் அவன் வேறொருவன். உதாரணத்திற்கு; சாவதற்காக கத்திருக்கும் கதைசொல்லியான Scheherazadeவும் அவளைக் கொல்ல தயாராக இருக்கும் அரசனும் ஆயிரத்து ஒரு இரவுகள் கதைக்குள் செல்லும் வரையில் பரிதாபம் மற்றும் கொடுமையின் பிரதிநிதிகளாக அவர்கள் இருக்கிறார்கள். ஆயிரத்து ஒரு இரவுகள் கதையில் நுழைந்த உடன் அவர்களும் அவர்களின் உலகமும் வேறு. கடல்புரத்தில் நாவல் காட்டும் மீனவ சமுதாயமும் அதன் கதை மாந்தர்களும் நிஜ உலகில் பார்த்த அல்லது கேள்விப்பட்ட உலகமோ மனிதர்களோ கிடையாது. நாம் பார்த்திராத கேள்விப் பட்டிராத கடல்புரத்தின் (மணப்பாடு) வாழ்க்கயை கதை சொல்லி நம் முன் வைக்கிறார். ஒரு வேளை இந்த வாழ்க்கையை நாவலின் வழியே அல்லாது ஒரு ஆவணமாக செய்தித்தாளிலோ அல்லது வேறொரு எழுத்து வடிவிலோ வாசித்தால் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கும் சரி தவறு என்ற ஒழுக்க மதிப்பீடுகளைக் கொண்டு அந்த வாழ்க்கையை பார்த்திருக்க முடியும்.

இந்நாவலின் கதை சொல்லியை பின்பற்றி சென்று பிலோமினாலின் வாழ்க்கையை பார்க்கும் போது அது நம் கண்ணால் கண்டு, காதால் கேட்ட வதந்திகளான ஊர்கதையாக இருப்பதில்லை. ஊர் பேசும் கதைகள் அவதூறு செய்யும் கதைகள். நாவலுக்கு வெளியே இருந்து பார்த்தால் பிலோமியின் வாழ்க்கையும் ஒழுக்கம் கெட்ட பெண்ணின் கதையாக வதந்திக் கதையாகத்தான் சித்தரிக்கப்படும். நாவல் எவரும் சென்று அறியாத பிலோமியின் வாழ்க்கையை கண் முன் விரிக்கிறது. அது நாவலின் கதைசொல்லியை பின் தொடருவதினால் சாத்தியமாகிறது. ஒட்டு மொத்தமாக கடல்புரத்தில் ஒருவர் கூட தான் விருப்பப்பட்ட இன்னொருவருடன் வாழ்வதே இல்லை. பிலோமியின் தோழி ரஞ்சி பிலோமியின் அண்ணன் செபஸ்தியை விரும்பியும் அவனுடன் வாழ முடியவில்லை. பிலோமியின் அம்மா மரியம்மாள் வயது சென்ற பின்பும் அந்த ஊர் வாத்தியாரை மறக்க முடிவதில்லை. இளம் வயதில் இருந்து தொடரும் ஸ்நேகம் அது. பிலோமியின் அப்பா குரூஸ்மிக்கேல் தன் மனைவிக்கு வாத்தியருடன் நட்புறவு இருப்பது தெரிந்தும் எதுவும் செய்யாமல் அவள் மீது கொண்ட தீரா கதலின் பொருட்டு அமைதியாக இருக்கிறான்.

சிநேகிதி ரஞ்சி வழ்க்கையை வாழ ஆரம்பித்தவள். விதியே என்று தன் காதலை மறந்துவிடுகிறாள். மரியம்மை இளமையின் காதலை தொலைத்துவிட்டு மீட்க முடியாத ஒன்றை வாழ்க்கையின் மீதியாக இருக்கும் சுகபோக வாழ்க்கையான பெருந்தீனியிலும், சினிமாவிலும், பெருந்தூக்கத்திலும் சாயங்காலத்தில் வாத்தியாருடன் நேரம் போவது தெரியாமல் பேசுவதிலும் கண்டடைய விரும்புகிறாள். மரியம்மாள் வாத்தியாரை எந்த அளவிற்கு நேசிக்கிறாளோ அதைவிடவும் குரூஸ்மிக்கேல் அவளை நேசிக்கிறான். அதற்காக மரியம்மையாள் அந்த நேசத்திற்கு பிதிலாக குரூஸை நேசிக்க முடியாது. இரண்டு காந்தத்தின் நேர் துருவங்கள் சந்திக்கும் போது ஒன்று சேர முடியாமல் விலகிச் செல்லும் வாழ்க்கையாக அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. குடி போதையில் மரியம்மை கால் இடறி விழுந்து சாகும் போது குரூஸ்ஸின் வாழ்க்கையும் முடிந்து விடுகிறது. மனைவி போன இழப்பில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மனம் இல்லாமல் வல்லத்தை விற்றுவிடுகிறான். எல்லாம் போன பிறகு பழயது எல்லாம் மறந்து ஞாபகம் இழந்து போகிறான். விரும்பியது எதுவும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.

 இவர்கள் தொலைத்த வாழ்க்கையின் அனைத்தும் பிலோமிக்கு இப்போது கண் முன் வசப்படுவதாக இருக்கிறது. வாழ்க்கைக்குள் அவள் இன்னும் நுழையவேயில்லை. எனினும் எதிர்காலம் சாமிதாஸ் வடிவில் வரவேற்று வாழ வைக்க தயாராக நின்று கொண்டிருக்கிறது. சாமிதாஸ் ரஞ்சியின் அண்ணன். சாமிதாஸ் பிலோமிக்காகவும் பிலோமி சாமிதாசுக்காகவும் பிறந்திருப்பது போன்று கதை தொடருகிறது. இது எல்லாமே அந்தரங்கத்தின் வாழ்க்கை. புறம்பாக சமூகம் அப்படி அந்தரங்கத்தில் மனிதர்கள் தாங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையை வாழ விடுவதில்லை. சாமிதாஸ் அவன் அப்பாவுக்கு பயந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயாராகிறான். ஒருவேளை குரூஸ்மைக்கேலுக்கு நல்ல வசதி இருந்திருந்தால் அவர்கள் திருமணம் சாத்தியப்பட்டிருக்கும். எதிர்பார்த்திருந்த வாழ்க்கை பிலோமிக்கு அமையவில்லை. யாரும் எதிர்பார்த்திராக வழியில் அவள் பயணிக்கிறாள். இதுவரையில் யாரை வெறுத்து வந்தாலோ அவர் அவளது வாழ்க்கையின் நம்பிக்கைக்கு உரியவர் ஆகிறார். வாத்தியாருடன் அவளது நட்பு வளுப்படுகிறது. அவர் மீது அவளுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. அந்த நம்பிக்கையை அவள் அதற்கு முன்பு முசல்மான் தரகக்காரரிடம் உணர்ந்திருக்கிறாள். மீன்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு போகும் முசல்மான் கடல்புரத்திற்கு உரியவர் அல்ல என்றாலும் அவர் அம்மக்களோடு முக்கியமாக குரூசோடு மிக நெருங்கிய உறவினர் போன்று இருக்கிறார்.

இந்த உறவு சிக்கல்களுக்கு வெளியே தனி நபர்களாக ரொசாரியா ஐசக்கு கதை கடல்புரத்தின் முக்கிய கதையாக விளங்குகிறது. ரொசாரியாவின் லாஞ்சியில் ஐசக்கு அவன் மனைவியையும் பாதிரியாரையும் பற்றி தொடர்பு படுத்தி ஏறுக்கு மாறாக கரியினால் எழுதிவைத்து விடுகிறான். இருவருக்குள்ளும் சண்டை மூளுகிறது. பின்பு அலையில் அசைவாடிக்கொண்டிருக்கும் லாஞ்சிகளில் ஐசக்கின் லாஞ்சி தீ பற்றி எரியத் தொடங்குகிறது. தீ வைத்தது ரொசாரியாதான் என்று முடிவுக் கட்டி அவனை தேடி கள்ளுக்கடைக்கு போகிறான் ஐசக்கு. தன் லாஞ்சியைக் கொளுத்தியதற்காக ரொசாரியாவுடைய நரை முடிகளடர்ந்த வலது பாரிசத்தில் கத்தியால் ஐசக்கு குத்திவிடுகிறான். “அன்றைக்கு மணப்பாட்டுக் கோயில் துக்கமணி நாற்பத்தி இரண்டு தடவை மெதுவாக அடித்தது” என்று ரொசாரியாவின் மரணம் அறிவிக்கப்படுகிறது. ஆத்திரத்தில் நிலை தவறி ரொசாரியாவை கொலை செய்ததினால் ஐசக்கு பைத்தியமாகி விடுகிறான். ஐசக்கு தன்னிலை அற்று கடல்புரத்தை பைத்தியமாக சுற்றி திறிய ஆரம்பிக்கிறான்.

மூன்றாவது அடுக்காக கதையில் உதிரி மனிதர்களாக பவுல் பாட்டனார், பெரிய மாமியா போன்ற பாத்திரங்கள் அவர்களுக்கே உரிய வயது மூப்பின் முதிர்ச்சியின் அனுபவங்களை இளைய தலைமுறைக்கு கடத்திக் கொண்டு செல்கிறார்கள். பவுல் பாட்டனார் வாழ்வின் அனுபவம் தந்த பாடங்கள் அனைத்தும் ஒன்று சேர தன் சொல் கேட்டு கட்டுபடும் மணப்பாடு கிராம மக்களின் குடி தலைவனாக இருக்கிறார். பெரிய மாமியா உடலின் இச்சைகள் அனைத்தையும் இளமையின் துடிப்புள்ள நாட்களில் அனுபவித்துவிட்டு இனி பெற்றுக் கொள்ளவோ கொடுக்கவோ எதுவும் தன்னிடத்தில் இல்லை என வயது மூப்பில் வற்றிய உடலாய் வாழ்வின் இறுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

பிலோமி இன்னும் வாழ்க்கைக்குள் ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை. தன் முன் உள்ள வாழ்க்கையின் அனைத்து சுகம் துக்கங்களை அனுபவிக்க வேண்டிய வயதும் இளமையும் இன்னும் அதிகம் அவளிடம் நிறம்பிக் கிடக்கிறது. அவைகள் அனைத்தையும் சாமிதாஸ் ஒருவனால் மாத்திரமே தீர்த்து நிறைவளிக்க முடியும். சாமிதாஸ் இல்லையெனில் வேறொருவனை மணந்து கொண்டால் வாழ்க்கை அனைத்தும் அவள் முன்பு வாழ்வதற்கு இருக்கும் ஆனால் அதனை அவளால் ஏற்று திருப்தியடைய முடியாது. அவள் அம்மையைப் போன்று.

கதையின் இறுதியில் வாத்தியாருடன் இருக்க அவள் எடுக்கும் முடிவு எந்த விதத்திலும் அவள் தன் இளமையை வாழ்ந்து தீர்க்கும் வாழ்க்கையாக இருக்க போவதில்லை. சாமிதாஸ் இல்லாத வாழ்க்கை விடாய் தீராத வாழ்க்கை. அதில் பிலோமிலாலோ அல்லது வாத்தியாரோ; நட்பு, காதல், சிநேகம் என்று எந்த பெயரில் அந்த தீரா தாகத்தை தீர்த்துக் கொள்ள முயன்றாலும் அள்ளி பருகி தீர்ந்து போக முடியாத அந்த கடல் நீரை பருகுவதைப் போன்றுதான் அந்த வாழ்க்கை இருக்கும். அவர்கள் ஒரு போதும் நிறைவடையவே மாட்டார்கள். வாழ்க்கை என்னும் அந்த கடல் நீர் அவர்களின் தீரா தாகத்தை தணித்து வைக்கவே முடியாது.   


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...