Friday, June 4, 2021

மஞ்சு: வாழ்வின் மீது படியும் இமைப் பொழுதின் பெரும் பாரம்

 


இமயமலை பகுதியில் உறைந்திருக்கும் பனியைப் போன்று சிலரது வாழ்க்கையில் காலம் என்னும் பெரும் பொழுது வினாடி என்ற மணித்துளிக்குள் உறைந்து விடுகிறது. நிமிடங்கள், மணி நேரம், பொழுது என்ற பெரும் கால வெளியாக அது விரிந்து நதியாக பிரவாகிப்பதில்லை. நகர்வுகள் எதுவும் அற்ற நேரமோ அல்லது வாழ்க்கையோ அர்த்தமற்ற ஒன்று. அது சாபத்தின் உறைநிலை. அர்த்தமற்ற அந்த வாழ்க்கை ஒருவருக்கு சாபமாக அருளப்படுமானால் அதனினும் அபத்தம் வேறொன்று இருக்குமா என்பது கேள்விக்குறியது. நடைமுறை வாழ்க்கையில் அது ரசிக்கக் கூடியது அல்ல. அதுவே இலக்கியமாக கதையில் புனையப்படுமானால் அதைவிட வேறெந்த வாழ்க்கையும் பேரழகு கொண்ட வாழ்க்கையாக இருந்து விட முடியாது. நடைமுறையில் காணப்படும் இந்த அபத்தம் புனைவில் பேரிலக்கியமாக மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட பேரிலக்கியங்கள் எண்ணிக்கையில் மிகச் சில என்று சொல்லலாம். அவைகள் பக்கங்களின் அளவிலும்  அடர்த்தி குறைவுதான்.  மேலும் இது போன்ற வாழ்வின் அபத்தத்தைக் முதன்மைப் படுத்தும் பேரிலக்கிய படைப்புகள் ஒரு மொழியில் வாய்க்கப் பெறுவது அது அம்மொழிக்கான வரம். மலையாளத்தில் எம். டி. வாசுதேவன் நாயரின் மஞ்சு நாவலில் உறைந்து போன மூடு பனி என்னும் வாழ்க்கையின் அபத்தத்தை அவர் உரைநடையில் கவிதையாக புனைந்திருப்பது அம்மொழிக்கான விலைமதிப்பற்ற பரிசு.

இமயமலையின் மூடு பனிக்கு கூட காத்திருப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. உறைந்த அந்த பனி, பருவம் மாறியவுடன் கரைந்து உருகி பெரும் நதியாக பயணிக்க ஆரம்பிக்கிறது. நாவலின் கதையில் சிலருக்கு உறைந்து போன அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து எந்த வித விடுதலையும் இல்லை. அர்த்தமற்று யாரோ ஒருவருக்காக அல்லது ஏதோ ஒன்றிற்காக காத்திருக்கிறார்கள். எதிர்பார்த்திருக்கிற அந்த நபரோ வாழ்வின் வசந்தமோ அவர்களை சந்திக்க வரப்போவதில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். கதையை வாசிக்கிற நமக்கு நன்றாக தெரியும் அவர்களின் காத்திருப்பு அபத்தமானது என்று. அவர்களுக்கோ அந்த காத்திருத்தல் ஒன்று மட்டுமே வாழ்க்கை. அவர்களை சந்திக்க யாரும் வருகை தர போவதில்லை.

விமலா டீச்சர், புத்து, சௌக்கிதார் அமர்சிங், சர்தார்ஜி ஆகியோர் கதையில் யாரும் அற்றவர்களாக தனித்து காலத்தின் ஒவ்வொரு வினாடியையும் கணக்கிட்டு அந்த ஒரு மணித்துளிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கோல்டன் நூக் விடுதியின் சௌக்கிதாரான அமர்சிங் யாருக்காகவும் காத்திருக்கவில்லைதான். எனினும் ஒரு வாட்ச்மேன் வேலையின் காத்திருப்பு என்பது வித்தியாசமான காத்திருப்புதான். வெறுமனே எதுவும் செய்யாமல் கவனமாக அவர் எதையோ கண்காணித்துக் கொண்டிருக்கிறார் அல்லது வெறுமனே காத்திருக்கிறார். காத்திருப்பை அவர் ஒரு வேலையாக செய்வதால் அதற்கு அர்த்தம் கூடிவிடுகிறது. சர்தார்ஜி நுரையீரல் புற்று நோய் காரணமாக வாழ்வின் இறுதியில் கொஞ்சம் காலம் ஓய்வெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மரணத்திற்காக அவர் காத்திருக்கிறார். இமயமலையின் அழகிய சூழலில் வாழ்க்கையை வாழ இன்னும் நான்கு மாதங்கள் கூடுதளாக அவருக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் எதையோ ஒன்றை நோக்கி அல்லது ஏதோ ஒன்றிற்காக தனிமையில் வாழ்வின் பெரும் பொழுதை வினாடி என்னும் சிறிய மணித்துளிக்குள் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அல்லது அலுப்படைய செய்யும் ஒரு மணித்துளியாய் வாழ்க்கை அவர்களுக்கு மாறிவிடுகிறது. சிறு மணிதுளி நேரத்தை  அவர்கள் பெரும் பாரமாக வாழ்க்கை முழுவதும் சுமந்து திரிகிறார்கள். அவர்கள் உணருவது  நாட்களையோ, மாதங்களையோ அல்ல நேரத்தின் மிக சிறிய துளியான வினாடிகளை.

புத்துவோ, விமலா டீச்சரோ அப்படி அல்ல. அவர்களின் காத்திருப்பு பொருள் அற்றது. புத்து சுற்றுலாவிற்க்காக வந்த வெள்ளைக்காரர் ஒருவருக்கு பிறந்தவன். அவன் அம்மா வெள்ளைக்காரருடைய புகைப்படத்தை அவனிடம் காட்டி இதுதான் உன் அப்பா என்று சொல்லியிருக்கிறாள். அவனும் அந்த புகைப்படத்தைக் வைத்துக் கொண்டு ஒரு நாள் எப்படியும் தன் அப்பாவை சந்தித்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் அவருக்காக காத்திருக்கிறான். தன்னுடைய இந்த எதிர்ப்பார்ப்பைப் பற்றி பகிர்ந்து கொள்ள அவனுக்கு இருக்கும் ஒரே நபர் அங்கு அடிக்கடி படகு சவாரிக்கு வரும் விமலா டீச்சர் மட்டுமே. ஏரியில் சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிக் கொண்டு சுற்றிக் காண்பிக்கும் வேலையில் அவன் அங்கு இருக்கிறான். தன் படகில் விமலா டீச்சர் பயணிக்கும் போது தன் அப்பாவைப் பற்றி பேச ஆரம்பிக்கிறான். வெகுளியாகவெள்ளக்காரங்க நாட்டைவிட்டுப் போயிட்டாங்கன்னு சொல்றாங்க, நெஜமா?” என்று அவன் டீச்சரிடம் கேட்கிறான். ”அவன் முகத்தில் பதற்றத்தைப் பார்த்ததும் பொங்கிவந்த சிரிப்பைவிமலா அடக்கிக் கொள்கிறாள். தன் தந்தையின் புகைப்படத்தை டீச்சருக்கு காண்பிக்கிறான்.

எண்ணிக்கையற்ற அத்தனை வெள்ளைக்காரர்களுக்கு மத்தியில் என்றோ ஒரு நாள் இங்கு வந்து சென்ற ஒருவர் மீண்டும் இங்கு திரும்ப வரப்போவதில்லை என்பது விமலாவுக்கு நன்றாக தெரியும். புத்து அவருக்காக காத்திருப்பது வீண் என்பதும் அவளுக்கு தெரியும். விமலா டீச்சர் பார்வையில் புத்துவின் காத்திருப்பு நிச்சயம் அர்த்தம் அற்ற அபத்த நாடகம். அந்த அபத்த கதை அவளுக்கு சிரிப்பை உண்டாக்குகிறது. ஆனால் புத்துவுக்கு அந்த ஒற்றை நம்பிக்கை மாத்திரமே வாழ்க்கை மீதான வலுவான பிடிமானம். அதை அவன் விட்டுவிட்டால் வேறென்ன அவனுக்கு வாழ்க்கையில் எஞ்சி இருக்கிறது. பிடிமானம் அகன்றுவிட்டால் பொருளற்ற அந்த வாழ்க்கை ஒன்றுமற்ற இன்மைக்குள் சென்றுவிடும்.

புத்துவின் வாழ்க்கையை கண்டு சிரிக்கும் விமலாவின் வாழ்க்கைதான் உண்மையில் மிகவும் பரிதாபகரமான அபத்த கதை. ஒன்பது வருடங்களில் அதே இடத்தில் அவள் இருக்கிறாள். இருபதுகளின் தன் யவ்வனம் முழுவதையும் யாருடனும் தொடர்பு அற்று உறவுகள் நீங்கி அங்கே அவள் வீணடித்துக் கொண்டிருக்கிறாள். அந்த பள்ளியோ, விடுதியோ ஒருவர் நிரந்தரமாக தங்குவதற்கான இடம் அல்ல. மாணவிகள் வருகிறார்கள் படிப்பு முடிந்த உடன் சென்றுவிடுகிறார்கள். சக ஆசிரியர்களும் தங்களுக்கென்று விதிக்கப்பட்ட காலத்தில் அங்கு வேலை செய்துவிட்டு அவ்விடம் விட்டு கடந்து சென்று விடுகின்றனர். ஒன்பது வருடங்களில் அவள் இங்கு கோல்டன் நூக்கில் வார்டனாக தங்கியிருந்த நாட்களில் நண்பர்கள் சக ஆசிரியர்கள் மாணவிகள் என எத்தனையோ பேர் அவளை கடந்து சென்றிருக்கின்றனர். எந்த மாற்றமும் இன்றி ஒன்பது வருடங்களாக அதே இடத்தில் தனித்திருப்பது விமலா மாத்திரமே. அந்த இடம் நிரந்தரமாக யாருக்கும் தங்கி வாழ சொந்தமானது அல்ல. அப்படியே வாழ்க்கையை அங்கே தொடர்ந்தாலும் அது வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு மாத்திரமே சாத்தியம்

இந்த ஒன்பது வருட தனிமையில் அவள் தொலைத்தது தன் இளமையை, உறவுகளை. தற்போது தன்னுடைய முப்பத்து ஓராவது வயதில் இனி வசந்ததின் பருவம் வரும் என்று அவள் எதிர்பார்ப்பதும் வீண். இந்த ஒன்பது வருட வீணடிப்புக்கு காரணம் ஒன்று இருக்கிறது. தன் அப்பா நோயுற்று படுத்த படுக்கையாக கிடக்கிறார். அந்த நிலையில் அவள் அம்மா வேறொருவருடன் சிநேகம் கொண்டிருக்கிறாள். இத்தனையும் சகிக்க முடியாமல் வீட்டை விட்டு அவள் வெளியேறுகிறாள். மேலும் அங்கேயே வாழ்க்கையை தொடர்ந்தால் அது அவளால் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. வீட்டை விட்டு வெளியேறி இங்கு வந்து டீச்சர் வேலையை ஒன்பது வருடங்களாக தொடர்கிறாள். இருப்பினும் யாரோ ஒருவருக்காக காத்திருப்பதாக அவள் நம்பிக் கொண்டிருக்கிறாள். அல்லது அந்த தனிமையின் அறையில் ஜன்னல் வழியே மூடிபனியை வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். சில நேரங்களில் கண்ணாடி முன் தன்னையே நெடு நேரம் பார்த்து கொண்டிருக்கிறாள். வெளியில் இருக்கும் மூடுபனியோ, கண்ணாடியில் தன் சொந்த உருவமோ கண்டு ரசிப்பதற்கானவைகள் அல்ல. அர்த்தமற்று அபத்தமாக ஏதோ அவள் அவைகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறாள். அவளது இளமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறது. மற்ற மூன்று பேரைக் காட்டிலும் விமலா டீச்சரின் காத்திருத்தல் பொருளற்ற அபத்தமான காத்திருப்பாக இருக்கிறது. எந்த நோக்கமும் இன்றி தன் எதிர் காலம் முழுமையையும் இந்த கோல்டன் நூக்கிலும், ஏரியில் படகு சவாரி செய்வதிலும், பாடம் நடத்துவதிலும் அர்த்தமின்றி கழியப்போகிறது. விடுமுறை நாட்களில் கூட அங்கிருந்து அவளால் வெளியேற முடியவில்லை. நாவலின் இந்த முழு கதையும் ஒரு விடுமுறை சீசனில்தான் நடக்கிறது. கதை ஆரம்பிக்கும் போது ரஷ்மி என்னும் மாணவி ஒருத்தி தன் ஊருக்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு வெளியில் கிளம்புகிறாள். அவள் விடுமுறைக்கு வீட்டுக்கு செல்லவில்லை தன் காதலனுடன் விடுமுறையைக் கொண்டாடத்தான் செல்கிறாள் என்ற ரகசியம் விமலா டீச்சருக்கு நன்கு தெரிந்திருந்தும் அவளை வெளியில் செல்ல அனுமதிக்கிறாள். அவள் ரஷ்மியை அனுமதித்தது ஒருவேளை தன் கடந்த கால இளமையாகக் கூட இருக்கலாம். கடந்த காலத்தின் தன் இளமையை வெளியில் அனுப்பி வைத்து விட்டு தன் அறைக்கு திரும்பும் போது அங்கு அவளுக்கு என்று மீதமிருப்பது: அலங்கோலமான அறையும், மடித்து வைக்காமல் குவிந்து கிடக்கும் புடவைகளும், இரவும் பகலும் மேற்கூரையில் இருந்தும் மேஜையின் மீதும் தரையின் மீதும் விழும் வெண் துகள்களும், நிறமிழந்து உருக்குலைந்த காகித மலர்களும், ஏப்ரல் பதினொன்று ஆகியும் ஜனவரி மாதத்தை காட்டிக் கொண்டிருக்கும் காலண்டரும்தான். அவளுக்கு, “புதிய ஆண்டு அசையாமல் மரத்துப்போய் நிற்கிறது.”       

விமலாவின் வாழ்க்கை அநேகமாக அந்த சுற்றுலா நிலத்தைப் போன்றது. பருவங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது புதிய சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். அந்த இடத்தின் மீது படியும் பனியும் கரைந்து அவ்விடம் விட்டு உருகி ஓடுகிறது. ஆனால் அந்த இடம் மாத்திரம் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தனித்து இருக்கிறது. விமலாவைப் போன்று. அந்த இடத்தை எவ்வளவு கண்டு ரசித்தாலும் சரி அது தன்னளவில் அந்த ரசனைக்கு எந்த பதிலும் கொடுக்காமல் அதன் நிலையில் அப்படியே அசைவற்று இருக்கிறது. சர்தார்ஜி வலிய வந்து அவளுடன் நட்பு பாராட்ட முயற்சி செய்கிறார். புத்தகங்களை இரவலாக வாங்குவதன் மூலம் அவளுடன் உரையாடலை தொடர விரும்புகிறார். அவரிடம் புத்தகங்களுக்கு குறைவு இல்லை. எனினும் இந்த இரவல் அவளுடன் கொஞ்சம் பேசுவதற்கான முகாந்திரம் அவ்வளவுதான். நான்கு நாவல்களையும், ஓவியன் ஒருவனின் வாழ்க்கை வரலாற்றையும், ஒரு ஹாலிவுட் நடிகனின் உண்மை விளம்பல்கள் என ஆறு புத்தகங்களை அவருக்கு இரவல் அளிக்கிறாள். அவருடைய தனிமைக்கு இந்த ஆறு புத்தகங்கள் போதுமானதாக இல்லை போலும். சீக்கிரம் படித்துவிட்டு திரும்ப கொடுத்துவிடுகிறார். அவளுடன் நடை போகும் போது அவள் விருப்பம் இன்றி அவர் அவளுடன் செல்கிறார். மலையின் மீது நடந்து செல்லும் போது அவர்களுடைய உரையாடலும் தொடர்கிறது. வலிய பேசுவது அவர்தான். விருப்பம் இன்றி விமலா அவர் உரையாடளுக்கு ஆம், இல்லை, இருக்கலாம் என்று தன்னை உரையாடலில் உட்படுத்திக் கொள்ளாமல் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறாள். அவள் அப்பா இறந்த பின்பு தத்துவார்த்தமான வரி ஒன்றை ஆறுதலுக்காக அவளுக்கு சொல்கிறார், “மரணம் மேடைப் பிரக்ஞை இல்லாத ஒரு கோமாளி, இல்லையா டீச்சர்.” நாவலில் இந்த வரி சர்தார்ஜியுடைய வரிகளே ஆயினும் அதனை எம் டி வியின் அதி உண்ணத கவிதையாக பாவித்துக் கொள்ளலாம். வெகு சீக்கிரத்தில் சர்தார்ஜியும் அங்கிருந்து சென்றுவிடுகிறார். இப்போது விமலாவின் வாழ்க்கையில் நண்பர்கள் என யாரும் இல்லை. ஒருவேளை எதிர்காலத்தில் பலர் நண்பர்கள் என்ற பெயரில் அங்கு வந்த வண்ணம் இருப்பார்கள். (ஏன் சர்தார்ஜிக்கு கூட அவரது scresophenia மனநிலையில் ஒரு பாதுகாவலர் துணையாக இருக்கிறார்.)  விமாலாவின் வாழ்க்கையில் அவர்கள் வெறுமனே கடந்து போகும் அந்த வேறுபட்ட பருவங்களைப் போன்றுதான் இருப்பார்கள். அவளுடைய காத்திருப்பு என்ற அபத்தம் மாத்திரமே அவளுக்கு சொந்தமான ஒன்று.  அது யாருக்காகவோ எதிர்நோக்கியிருக்கிற எதிர்பார்ப்பு அல்ல. அது தனக்காகவே தன்னில்தானே வெறுமனே காத்திருத்தல் என்ற உணர்வு நிலையில் இமைப்பொழுது என்ற சிறு பனிதுளியை பெரும் பாரமாக சுமந்த சூனியத்தில் உழன்று கொண்டிருக்கம் சாபத்தின் உறைநிலை.   

எம். டி. வாசுதேவன் நாயர். “மஞ்சு”. மொழிபெயர்ப்பு ரீனா ஷாலினி. காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்: நாகர்கோவில், 2018


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...