Saturday, March 28, 2020

நாலுகெட்டு: புதிய தாயத்தின் பாரதக்கதை



இந்த அகண்ட பாரதத்தின் ஒரு சிறிய பகுதியாக கேரளம் தன்னைத்தானே கதையாக எழுதிக் கொண்டது “நாலுகெட்டு” என்று M T Vயின் நாவலை சொல்லலாம். நாலு கெட்டு வீட்டின் பாகப்பிரிவினை மண்ணின் பெருங்கதை. இந்த நாவலை எம். டி. வாசுதேவன் நாயர் ஒரு வட்டாரத்தின் நாவலாக எழுதியிருக்கலாம். ஆனால் நாவல் விரிந்த மண்ணின் கதையாக மாறுகிறது. வட்டாரத்தோடு பாரதத்தின் கதையும் நாவலோடு சேர்த்து நெசவு செய்யப்படுகிறது. இங்கு பாரதம் என்பது தேசம் என்று பொருள் கொள்ள முடியாது. தேசம் என்பது மிக சமீபத்தில் உருவான கருத்தியல். அதற்கு நூறு வருடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அகண்ட பாரதம் அதற்கு முன்பிருந்தே விரிந்த நிலமாக ஒரு மாபெரும் கதையால் தன் இருப்பை மக்கள் மனதில் எழுதிக் கொண்டே இருக்கிறது. பாரதக் கதை மக்கள் மனதில் புவியியல் எல்லைக் கோட்டைக் கொண்டு வரையப்பட்ட பெருங்கதை என்று சொல்லலாம்.
இம்மண்ணின்  எந்த வட்டாரமும் இந்த பாரதக் கதையோடு தன் கதையையும் இணைத்து நெசவு செய்து கொள்ளும் போது அவ்வட்டாரம் பரந்துவிரிந்த நிலப்பரப்பின் பகுதியாக மாறிவிடுகிறது. எம் டி வாசுதேவன் நாயரின் நாலுகெட்டு நவீனத்தின் உள்ளடக்கமான Indian Literature என்பதை விட மகாபாரத்தத்தின் மீண்டுமான கதைசொல்லல் வடிவம் என்று சொல்ல வேண்டும்.
 உருட்டப்பட்ட தாயக் கட்டையே அந்த கதையின் வீரியம். தாயக் கட்டை இல்லை எனில் பாரதக் கதை இல்லை. தாயக் கட்டை உருளும் போது பாரத கதை மீண்டும் ஒருமுறை நிகழ்த்தப்படுகிறது. நாலுகெட்டு தாயம் உருட்டப்படுவதினால் உருபெற்ற நாவல். எம் டி வாசுதேவன் நாயரின் கதை சொல்லலே இந்த தாயம் உருட்டல் என்று சொல்ல வேண்டும். தாயம் உருண்டு நிற்பதற்கு முன்பு முடிவு என்ன என்பதை யாராலும் கணித்து சொல்ல முடியாது. ஆனால் சகுனியின் தாயம் அவனுடைய கணித்தலுக்கு உட்பட்டது. விளைவு என்ன என்பதை அவன் அறிவான்.
நாவலின் முடிவை யாராலும் கணிக்க முடியாது. எழுத்தாளர்களே அதன் முடிவை தங்களால் கணிக்க இயலாது என்கிறார்கள். நாவல் அது தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது என்கிறார்கள். தாயக்கட்டையைப் போன்று. அது உருண்டு என்ன பதிலோடு நிற்கிறது என்பது அதற்கே தெரிந்த ஒன்று. வேடிக்கை மாத்திரம் பார்க்க வேண்டும். ஆனால் எம் டி வாசுதேவன் நாயரின் கதையாடல் என்னும் தாயம் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அவர் என்ன முடிவை கணிக்கிறாறோ அதுவே விளைபயன். பாரதத்தின் தாயம் மாபெரும் யுத்தத்தை விளைவித்தது. அது சகுனியின் நோக்கம். நாலுகெட்டு நாவலின் தாயம் அழிவுக்கு மத்தியில் நம்பிக்கையையும், மன்னிப்பையும், மறுவாழ்வையையும் விளைவிக்கிறது. கதையின் நாயகன் அப்புண்ணி அழிவில் இருந்து புதிதாக முளைக்கும் நப்பிக்கையாக இருக்கிறான். அழிக்கக்கூடிய ஆற்றல் இருந்தும் கதையின் இறுதியில் மன்னிப்பை அளிக்கக் கூடியவனாக அப்புண்ணி இருக்கிறான்.  
கதையில் கோந்துண்ணி நாயர் தாயம் ஆடுவதில் வல்லவர். அவர் தாயம் அவருக்கு மாத்திரமே கட்டுப்பட்ட மந்திரக் கட்டை. ஊரில் அவர் மீது இதனால் பொறாமைக் கொண்டவர்கள் அதிகம். செய்தாலிக்குட்டி நாயருக்கு உற்ற நண்பன். தாயம் உண்டாக்கிய பகையால் அவன் நாயருக்கு விருந்து கொடுத்து உணவில் விஷம் வைத்துவிடுகிறான். இளம் மனைவி, சின்னஞ்சிறு மகன் இருவரையும் அனாதைகளாக விட்டுவிட்டு இறந்துவிடுகிறார் கோந்துண்ணி. அவரின் இறப்பு தாயக் கட்டை செய்த சதி. நண்பர்களுக்கு மத்தியில் பகைமையைக் கொண்டுவந்த சதியின் கட்டை அது. தாயத்தின் கதை நகருகிறது. தன் உதிரத்தில் இருந்து எடுத்து உருவாக்கிய மற்றுமொரு தாயக்கட்டையாக தன் மகன் அப்புண்ணி பகடைக் காயாக மாறப்போகிறான் என்பது அவருக்கு தெரிந்திருக்காது. தாயம் உருளும் போது பிரிவினை ஊண்டாகும், பகைமை உண்டாகும். முடிவில் அது சாவைக் கொண்டுவரும். தாயம் ஒருபோதும் சமாதானத்தைக் கொண்டுவருவதே இல்லை.
 அப்புண்ணி என்னும் தாயக் கட்டை புதிரான ஒன்று. கதையின் தொடர்ச்சியில் அவன் செல்லும் இடம் எல்லாம் பிரிவினை பகைமை எல்லாம் உண்டாகிறது. வீடும் இரண்டுபடுகிறது. ஆனால் இறுதியில் பகைமை நட்பாகிறது. இரண்டுபட்ட வீடு ஒன்றுபடுகிறது.  
முதலில் அது தன் அம்மாவிடமிருந்தே ஆரம்பிக்கிறது. கணவன் இல்லாத பார்வதி குட்டிக்கு சிவராமன் நாயர் சில உதவிகளை செய்கிறார். ஊரில் அது தவறாகக் புரிந்து கொள்ளப்பட்டு புரளிப் பேசப்படுகிறது. சிவராமன் நாயர் வீட்டுக்கு வருவது அப்புண்ணிக்கு பிடிக்கவில்லை. இருவரும் ஒன்றாக நடந்து செல்லும் போது ”அப்பாவும் மகனும் போகிறார்கள்” என்று ஒருவன் ஏளனம் செய்கிறான்.  அதனை அப்புண்ணியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்பா கோந்துண்ணியின் இடத்தில் அம்மா பாருக்குட்டியுடன் வேறு ஒருவரை வைத்து பார்க்க அவனுக்கு சகிக்கவில்லை. ஊர் சொல்லும் புரளியை நம்பி அம்மாவை வெறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
தாயக்கட்டையின் முதல் ஆட்டம் அது. கட்டை மீண்டும் உருள ஆரம்பிக்கிறது இம்முறை முதல் பகை சமாதானமாகிறது. யார் அவன் அப்பாவுக்கு விஷம் வைத்து கொன்றானோ அந்த செய்தாலிக்குட்டியே அப்புண்ணிக்கு வாழ்க்கைக்கான வழியைக் காட்டுகிறான். வீட்டை விட்டு வெளியேறி தனியாக அமர்ந்திருக்கும் அப்புண்ணியிடம் மூன்று கோரிக்கைகளை செய்தாலிக்குட்டி வைக்கிறான். ஒன்று அவன் தன் அம்மாவிடமே திரும்பி செல்வது. இரண்டாவது அது பிடிக்கவில்லை என்றால் தன்னுடன் வருவது. அதுவும் பிடிக்கவில்லை என்றால் நாலுகெட்டு வீட்டுக்கு செல்வது. அங்கு அவனுக்கு பாத்தியதை இருப்பதால் அவன் அங்கு செல்லலாம். அது கொஞ்சம் சிரமமான காரியம்.
முன்பொரு முறை நாலு கெட்டு வீட்டில் தனக்கு உரிமை இருக்கிறது என்ற நம்பிக்கையில் அங்கு துள்ளளுக்கு சென்றான். அவன் பெரிய மாமா அவனைக் கண்டவுடன் தெரு நாயைப் போன்று அடித்து வெளியே தள்ளினார். அந்த அவமானமும், பயமும் இன்னும் அப்புண்ணிக்கு இருக்கிறது. பாருக் குட்டி நாலுகெட்டு வீட்டுக்கு உரியவள். அங்கிருந்து பாருக்குட்டியை கோந்துண்ணி நாயர் களவாடிச் சென்று திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் பாருக்குட்டி நாலுகெட்டு வீட்டுக்கு வேற்றாளாக ஆகிவிட்டாள். கோந்துண்ணி இறந்த பின்பு நம்பூதிரிகளின் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரப்பெண்ணாக வீட்டு வேலைகளை செய்து கொண்டு வருகிறாள்.
ஒரு ஆண்மகனாக நாலுகெட்டுக்கு உரிமையுடன் தைரியமாக போ என்று செய்தாலிக் குட்டி சொல்கிறான். தாயம் இப்போது பழைய பகையை நட்பாக மாற்றிவிடுகிறது. அப்புண்ணி நாலுகெட்டுக்கு போகிறான். இந்த தருணத்தில் அப்புண்ணி என்னும் தாயம் நாலுகெட்டு வீட்டை இரண்டாக்கப் போகிறது. அவன் சென்றவுடன் சின்ன மாமாவுக்கும், பெரிய மாமாவுக்கும் பல நாட்களாக மூண்டிருந்த பகை நெருப்பாக பற்றி எரிய ஆரம்பிக்கிறது. நாலு கெட்டு வீடு இரண்டாக உடைகிறது. பகைமையின் நடுவில் அதே வீட்டில் தன் பாட்டியின் ஆதரவில் தன் பள்ளிப் படிப்பையெல்லாம் முடிக்கிறான் அப்புண்ணி.
பள்ளிப்படிப்பை முடித்தவுடன் என்ன செய்வது எங்கு வேலைக்கு செல்வது என்று குழம்பியிருக்கும் அப்புண்ணிக்கு மீண்டும் வழிகாட்ட செய்தாலிக்குட்டு வருகிறான். நாலு கெட்டு வீட்டில் இருந்து அப்புண்ணி செய்தாலிக்குட்டியாள் விடுவிக்கப்படுகிறான்.
நல்ல வேலையில் அமர்ந்து கைநிறைய சம்பாத்தித்துவிட்டு மீண்டும் நாலுகெட்டுக்கு வீடுதிரும்புகிறான். ஐந்து வருடங்களில் அனைத்தும் மாறிவிடுகின்றன. செய்தாலிக்குட்டிக்கு பக்கவாதம் வந்து ஒருபக்கம் உடல் செயலற்று போகிறது. அது ஆரம்பத்தில் தான் செய்த பாவத்திற்கான பலன் என்று சொல்லி அப்புண்ணியிடம் மன்னிப்பு கேட்கிறான். அவன் ஊருக்கு போகும் அப்புண்ணியிடம் வேண்டுகோள் ஒன்றையும் வைக்கிறான். அந்த வேண்டுகோள் தன் அம்மாவை மீண்டும் தன்னுடன் சேர்த்து கொள்ள வேண்டும் என்பது. அதை மனதில் வைத்துக் கொண்டு ஊருக்கு வரும்போது நாலு கெட்டு பெரிய மாமாவின் கைவசம் சென்றுவிட்டது என்பது தெரியவருகிறது. பெரிய மாமாவுக்கு முன்பு இருந்த கோபத்தின் வீரியம் இப்போது இல்லை. முதுமை அவரை மிகவும் நொடிந்து போக செய்துவிட்டது. நாலு கெட்டு மீது இருக்கும் கடனை அப்புண்ணி செலுத்த தீர்க்க வேண்டும் என்று பெரிய மாமா அவனிடம் விண்ணப்பம் வைக்கிறார். கடனை திருப்பி செலுத்த முடியாது வேண்டுமென்றால் நாலுகெட்டை தானே வாங்கிக் கொள்வதாக சொல்கிறான் அப்புண்ணி. பெரியமாமா அதற்கு இசைகிறார்.
வீட்டை வாங்கியவுடன் கடைசியாக ஒரு கடன் பாக்கி இருக்கிறது என்கிறான் அப்புண்ணி. பாருக்குட்டியை வீட்டுக்கு திரும்பவும் அழைத்துவருவது தான் அந்த கடன். நீண்ட நாட்களாக நாலுகெட்டுக்கு உரிமை அற்று பிரிந்து இருந்த பாருக்குட்டு தன் மகன் மூலம் இப்போது உரிமையுடன் அந்த வீட்டுக்குள் நுழைகிறாள்.
முன்பு கோந்துண்ணியாரின் தாயம் உருண்ட போது பகைமை உண்டானது. நாலுகெட்டுவில் இருந்து பாருக்குட்டி உரிமைபறிக்கப்பட்டவள் ஆனால். அவர் உயிரும் நஞ்சிட்டு கொலையுண்டது. ஆனால் தன் உதிரத்தில் வார்த்தெடுத்த தாயம் இப்போது அனைத்தையும் பழைய நிலைக்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டது. நாலு கெட்டு புதிய தாயத்தின் பாரதக் கதையாக மாறிவிட்டது. இந்த அகண்ட தேசத்தின் பழைய பாரதத்தின் தாயக்கட்டை மாபெரும் யுத்தத்தைக் கொண்டுவந்து ஒருவரையும் மிச்சம் விடாமல் அழித்தொழித்தது. ஆனால் எம் டி வாசுதேவன் நாயரின் நாலு கெட்டு என்னும் பாரதம் வீழ்ச்சியின் மத்தியில் பெரும் நம்பிக்கையை கொண்டுவருகிறது. அது மன்னிப்பின் பொருள் என்னவென்று போதிக்கிறது. M T V யின் தாயம் நம்பிக்கையின் தாயம்.     


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...